TNPSC Thervupettagam

சாதியக் கொடுமைகள்: தீர்வை நோக்கிய பயணம்

January 25 , 2023 429 days 274 0
  • முதுகுளத்தூர், வெண்மணி, மேலவளவு, தாமிரபரணி, குண்டுப்பட்டி, வீரளூர், திண்ணியம் எனப் பல்வேறு ஊர்ப் பெயர்களால் அறியப்படும் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளின் வரிசையில், தற்போது புதுக்கோட்டை வேங்கைவயல் இணைந்திருக்கிறது.
  • இங்கு தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் கொட்டப்பட்ட அநாகரிகத்திற்கு எதிராகப் பலரும் எதிர்வினை ஆற்றிவருகிறார்கள். சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இவ்வழக்கை விசாரிக்கத் தொடங்கியுள்ளது. சட்டமன்றத்தில் தமிழ்நாட்டு முதல்வர் இவ்வன்கொடுமைக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு, குற்றவாளிகள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.

அதிகரிக்கும் அநீதி

  • இந்தியா முழுவதும் 2018 - 2020 காலகட்டத்தில் மட்டும் 1,38,825 வன்கொடுமைகள் தலித் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ளதாக சமூக நீதி - அதிகாரப்படுத்தும் அமைச்சகத்தின் சார்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 3,831 வன்கொடுமைகள் பதிவாகியிருக்கின்றன. 2021இல் இவ்வன்கொடுமைகள் 9.3% அதிகரித்துள்ளன. ஒவ்வொரு முறையும் அவை நிகழ்த்தப்பட்ட பிறகே எதிர்வினைகள் எழுகின்றன. ஆனால், அவை நிகழாமல் தடுப்பதற்கான செயல்திட்டம் சமூகத்திடமும் அரசிடமும் இல்லை.
  • ஒவ்வொரு முறையும் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிர்வினையாற்றுகின்ற நாம், அவ்விளைவுகளுக்குக் காரணமான சமூகப் பாகுபாடுகளுக்கு எதிராக எதிர்வினையாற்றுவதில்லை. பன்னெடுங்காலமாக இங்கு நிரந்தரமாக நீடித்துவரும் சாதிய சமூகப் படிநிலை அமைப்பும், அதில் - பிறப்பின் காரணமாக - கடைசிப் படிநிலையில் தலித் மக்கள் நிறுத்தப்பட்டிருப்பதும்தான் பாகுபாடுகளுக்கு வித்திடுகின்றன. தீண்டாமையும் இம்மக்கள் மீதான வன்கொடுமைகளும் அண்மைக் காலத்தில் உருவான ஒன்றல்ல.
  • தீண்டத்தகாதவர்கள் யார்? அவர்கள் ஏன் தீண்டத்தகாத மக்களாக ஆக்கப்பட்டனர்?’ என்ற தனது ஆய்வு நூலில், தீண்டாமை தோன்றி சுமார் 1,500 ஆண்டுகள் இருக்கும் என டாக்டர் அம்பேத்கர் வரையறுக்கிறார். 19ஆம் நூற்றாண்டில் பிறந்த அம்பேத்கரையும் தீண்டாமை பதம் பார்த்தது.
  • இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த தீண்டாமைக் கொடுமைகளைப் பட்டியலிட்ட அம்பேத்கர், தமிழகத்தில் நடைபெற்ற அன்றைய தீண்டாமைக் கொடுமைகளையும் பட்டியலிடத் தவறவில்லை. தற்போது வேங்கைவயலில் நடைபெற்றது போன்ற ஒரு செயல், 71 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை ஆட்டுக்குளம் ஊராட்சியில் நடைபெற்றுள்ளதை அம்பேத்கர் மேற்கோள் காட்டியுள்ளார்:

அமைப்புக்கு எதிர்ப்பு

  • கீழவளவு என்ற கிராமத்தில் ஹரிஜனங்கள் (அம்பேத்கர் இச்சொல்லைப் பயன்படுத்தவில்லை; ஓர் அறிக்கையிலிருந்து அப்படியே மேற்கோள் காட்டுகிறார்) ஓர் அழுக்கடைந்த குட்டையிலிருந்து தண்ணீர் எடுக்கிறார்கள். அதில் மனிதர்கள் குளிக்கிறார்கள்; மாடுகளும் குளிப்பாட்டப்படுகின்றன. ஹரிஜனங்கள் பொது ஊருணியில் போய்த் தண்ணீர் எடுக்குமாறு அவர்களுக்குத் தைரியம் கொடுக்கப்பட்டது.
  • ஆனால், அவர்கள் அவ்வாறு தண்ணீர் எடுக்கச் சென்றபோது, சாதி இந்துக்கள் அவர்களைத் திட்டி மிரட்டினார்கள். அதனால் ஹரிஜனங்கள் ஊருணியில் தண்ணீர் எடுக்கத் துணியவில்லை. கீழவளவில் காவல் நிலையம் ஒன்று இருக்கிறது. ஆனால், அங்குள்ள காவலர்கள் ஹரிஜனங்களின் இத்துயரங்களை அலட்சியப்படுத்துகின்றனர். ஆட்டுக்குளம் என்ற இடத்தில் நாங்கள் கூறியபடி பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுத்த ஹரிஜனங்களைச் சாதி இந்துக்களால் தடுக்க முடியவில்லை. அதனால், சாதி இந்துக்கள் அந்தக் கிணற்றில் மலத்தைப் போட்டனர்.’’ (டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 5; பக்கம்: 118).
  • இங்கு நாம் கவனப்படுத்த வேண்டிய முக்கியச் செய்தி, தன் வாழ்நாளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளைக் கண்டதோடு, தமக்கு எதிராக இழைக்கப்படும் அவமானங்களையும் பாகுபாடுகளையும் அனுபவித்த அம்பேத்கர், அவ்விளைவுகளுக்கு எதிர்வினையாற்றுவதற்கு மாறாக, அதற்குக் காரணமான சாதிய சமூக அமைப்பையும் அச்சமூக அமைப்பை அங்கீகரிக்கும் மதத்தையுமே தம் வாழ்நாள் முழுவதும் கடும் கண்டனத்திற்கு உள்ளாக்கினார்.
  • பிறவிப் ‌பாகுபாடுகளுக்கு வித்திடும் சாதிய சமூக அமைப்புக்கு எதிராக அரசமைப்புச் சட்டத்தின் துணைகொண்டு - ஒரு மனிதன்; ஒரு மதிப்பு; ஒரு வாக்கு - என்ற உன்னதக் கோட்பாட்டின் மூலம் சமூகத்தை ஜனநாயகப்படுத்தி, பாகுபாட்டுக் கொள்கையை மதிப்பிழக்கச் செய்தார். படிநிலைப்படுத்தப்பட்ட சமூக அமைப்பில் ஒருவர் - கல்வி கற்பதாலோ, செல்வத்தை ஈட்டுவதாலோ, திறமையை வளர்த்துக்கொள்வதாலோ - ஒரு படிகூட முன்னோக்கிச் செல்லவே முடியாது என்பதைக் கண்டறிந்த அம்பேத்கர், அதற்குக் காரணமான மதத்தையே நிராகரித்தார்.

அடையாளம் துறத்தல்

  • பாகுபாடுகளையும் அவமானங்களையும் சந்தித்துக்கொண்டு, ஊரில் தாங்கள் வசிக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் ஒதுக்குப்புறமான குடியிருப்பிலிருந்து வெளியேறி, தங்களுடைய மத, பண்பாட்டு அடையாளங்களை மாற்றிக்கொண்டவர்கள், எத்தகைய கெளரவமான நிலையை எட்டியிருக்கிறார்கள் என்பது குறித்த ஆய்வுகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.
  • அவ்வாறு முன்னேறிய கணிசமான எண்ணிக்கையிலான தலித் மக்களைத் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் காண முடியும். இப்பகுதியில் இன்றளவும் ஊரின் ஒதுக்குப்புறமான பகுதியில் வாழ்ந்துவரும் தலித் மக்களின் குடியிருப்பிற்கு - ஊர்த் தெருவெங்கும் கொண்டுசெல்லப்படும் - சாமி ஊர்வலங்கள் வருவதில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்புவரை ஒட்டுமொத்த ஊரின் மனிதக் கழிவுக் கிடங்காகவே இப்பகுதி பயன்படுத்தப்பட்டுவந்தது. அவ்வூர் சாதி இந்துக்கள் இன்றளவும் இப்பகுதியைத் தீண்டத்தகாத பகுதியாகவே பார்க்கின்றனர்.
  • ஆனால், அரை நூற்றாண்டுக்கு முன்னால் இப்பகுதியிலிருந்து வெளியேறி, ஆம்பூரின் மற்றொரு பகுதியில் குடியேறத் தொடங்கிய தலித் மக்கள், வியக்கத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர். அப்பகுதியில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு (1921) உருவான பெதஸ்தா மருத்துவமனையால் சிகிச்சையும் வேலைவாய்ப்பும் பெற்ற தலித் மக்கள், அப்பகுதியைச் சார்ந்து குடியமரத் தொடங்கி, இன்று பெத்லகேம் என்றொரு மதிப்புமிக்க நகரமே உருவாகியிருக்கிறது.
  • இங்கு நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், அயல்நாடுகளில் பணிபுரிவோர் என இம்மக்கள் சுயமரியாதையோடும் தற்சார்புடனும் ஒரு கெளரவமான வாழ்க்கையை வாழ்ந்துவருகின்றனர். சாதி இந்துக்கள் இப்பகுதியில் தொழில் தொடங்கவும் குடிபெயரவும் தயங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏனெனில், பெத்லகேம் பகுதி தலித் மக்கள் இன்று சாதிய சமூகப் படிநிலையின் ஓர் அங்கமாக இல்லை. எனவே, பிற மதத்தினரோடு உறவாடுவதில் சாதி இந்துக்களுக்குப் பிரச்சினையும் இல்லை.
  • தலித் மக்கள் மீது திணிக்கப்படும் வன்கொடுமைகளும் அவமானங்களும் தற்செயலானவை அல்ல; சீர்திருத்தவே முடியாமல் ஈராயிரமாண்டு காலமாகப் புரையோடிப்போன ஓர் இறுக்கமான சமூக அமைப்பின் தொடர்ச்சியான செயல்திட்டங்களே அவை. எனவே, அவமானங்களையும் இழிவுகளையும் சகித்துக்கொண்டிருக்கும் தலித் மக்கள், தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அடையாளங்களிலிருந்து விடுபட்டேயாக வேண்டிய தேவை எழுந்துள்ளது.
  • அது மட்டுமே சுயமரியாதை மிக்க வாழ்க்கையை வாழ வழிவகுக்கும். ‘‘தீண்டத்தகாத மக்கள் தங்களுடைய மனித மாண்பை மீட்டெடுப்பதற்காகப் போராடுகின்றனர்’’ என்றார் அம்பேத்கர். அது, சாதிய சமூக அமைப்பின் கடைநிலையிலிருந்து முதல் நிலைக்குச் செல்வதற்கான போராட்டம் அல்ல; இத்தகைய சமூக அமைப்பையே இல்லாமல் செய்வதற்கான போராட்டம்!

நன்றி: தி இந்து (25 – 01 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories