TNPSC Thervupettagam

சாமானியர்களே இலக்கு

September 26 , 2019 1684 days 913 0
  • நீண்டகாலமாக உள்நாட்டுச் சண்டை நடந்துவரும் இராக், ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகள் பெற்ற சர்வதேச கவனத்தை யேமன் பெற்றதில்லை. இத்தனைக்கும் மேற்கண்ட நாடுகளைவிட யேமனில் மிக மோசமான நிலை நிலவுகிறது.
  • கடந்த சில தினங்களுக்கு முன்னர், சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் ஆளில்லா சிறுரக விமானங்கள் மூலம் தாக்கப்பட்டன.
  • யேமனில் செயல்பட்டுவரும் ஹூதி அமைப்பினர் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்தே தீவிரமான கவனத்தை  யேமன் பெறத் தொடங்கியிருக்கிறது.

யேமனில்….

  • மேற்கு ஆசியாவில் அரேபிய தீபகற்பத்தின் தெற்கு எல்லையில் உள்ள ஏழ்மையான நாடான யேமனில் என்னதான் நடக்கிறது? அரபு வசந்தம் எனப்படும் அரசுக்கு எதிரான போராட்டத்தின் இறுதியாக, யேமனில் 33 ஆண்டுகள் அதிபராக இருந்த அலி அப்துல்லா சலே, 2011-இல் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.
  • அவரைத் தொடர்ந்து, துணை அதிபராக இருந்த அப்தரப் மன்சூர் ஹாதி அதிபராகப் பொறுப்பேற்றார். ஆனால், நாட்டில் ஊழல், வேலைவாய்ப்பின்மை, பொருளாதார முடக்கம் என ஒரே நேரத்தில் பூதம்போல கிளம்பிய பல்வேறு பிரச்னைகளைச் சமாளிக்க முடியாமல் அவர் திணறத் தொடங்கினார்.
  • இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிறிது சிறிதாக வலுப்பெறத் தொடங்கியது ஹூதி இயக்கம்.
  • ஷியா முஸ்லிம் பிரிவினரைக் கொண்ட இந்த இயக்கத்துக்கு பிராந்தியத்தில் வலுவான சக்தியாக உள்ள ஈரான் உதவுவதாகக் குற்றச்சாட்டு உள்ளது.
  • சவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மீதான தாக்குதலில்கூட ஹூதி இயக்கத்துக்கு ஏவுகணைத் தொழில்நுட்பத்தையும், ஆளில்லா சிறுரக விமானங்களான டிரோன்களையும் வழங்கியது ஈரான்தான் என சவூதி அரேபியா குற்றஞ்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளநாட்டுப் போர்

  • இந்த ஹூதி இயக்கப் படைகள் 2015-இல் தலைநகர் சனாவை கைப்பற்றியதுவரை யேமனில் நடந்தது உள்நாட்டுப் போராகத்தான் இருந்தது. அதன்பிறகு அதிபர் ஹாதி வேண்டுகோளின்படி ஹூதி படைகளை ஒடுக்குவதற்காக சவூதி அரேபியா தலைமையிலான நாடுகள் தலையிட்டதைத் தொடர்ந்து யேமனில் ஒரு சர்வதேசப் போரே நடைபெற்று வருகிறது.
  • ஹூதி படைகள் மூலமாக யேமனில் ஈரான் ஆதிக்கம் செலுத்திவிடக் கூடாது என்கிற நோக்கமும் சவூதி அரேபியாவுக்கு உண்டு. சவூதி தலைமையிலான கூட்டணிக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளும் ஆதரவு தெரிவித்து உதவி வருகின்றன. 
  • அப்போதுமுதல் இன்றுவரை யேமன் தொடர்ந்து போர்க்களமாகத்தான் காட்சியளிக்கிறது. இந்தக் காலகட்டத்தில் பொதுமக்கள் 7 ஆயிரம் பேர் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
  • இதில் 80 சதவீதம் பேர் சவூதியின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பலியானவர்களின் எண்ணிக்கை இதைவிட மிக அதிகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

பொருளாதாரம்

  • போரால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவால் வேலைவாய்ப்பின்மை, உணவு, தண்ணீர்ப் பற்றாக்குறை, மருத்துவ வசதி கிடைக்காமை என மோசமான சூழலை யேமன் மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.
  • நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 80 சதவீதம் பேர், அதாவது 2.4 கோடி பேர் உயிர் வாழவே உதவி தேவைப்படும் சூழ்நிலையில் உள்ளனர்.
  • "குழந்தைகளுக்கான பூலோக நரகம் யேமன்' என ஐ.நா. சபையின் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப் வேதனை தெரிவித்துள்ளது.
  • 20 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதும், 2015-18 காலகட்டத்தில் இக்குறைபாட்டால் 85 ஆயிரம் குழந்தைகள் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுவதுமே இதற்குக் காரணம்.
  • நீண்டகாலத்துக்குப் பின்னர் அண்மையில் ஐ.நா. பாதுகாப்பு சபை முன்வைத்த அமைதித் திட்டமும் செயல்படுத்த முடியாத வகையில் உள்ளது. ஏனெனில், யேமனில் அரசுப் படைகள், ஹூதி படைகள், முன்னாள் அதிபர் சலேயின் விசுவாசப் படைகள், தெற்கு யேமன் பிரிவினைவாத அமைப்பு, ஐ.எஸ்., அல்-காய்தா என பலமுனைத் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
  • அமைதிப் பேச்சுவார்த்தையின் அம்சங்களை அனைத்துத் தரப்பினரையும் ஏற்கவைப்பது சவாலாக உள்ளது.
  • ஹூதி படையினரின் வசம் உள்ள ஹொதைதா துறைமுகம், ஒட்டுமொத்த யேமனுக்கும் நுழைவு வாயிலாக உள்ளது.  
  • இந்தப் பகுதியில் சண்டைநிறுத்தம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டால் யேமனில் அமைதி திரும்புவதற்கான வழிகள் ஏற்படும். அந்த முயற்சியைத்தான் ஐ.நா. மேற்கொண்டுள்ளது. 
  • ஹூதி படைகளின் ஏவுகணைகள் சவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி நிலையங்களைக் குறிவைக்கின்றன; சவூதியின் ஏவுகணைகள் ஹூதி படைகளின் நிலைகளைக் குறிவைக்கின்றன.
  • ஆனால், இதன் மறைமுகமான இலக்குகள் யேமனின் சாமானிய மக்கள்தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

நன்றி: தினமணி (26-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories