TNPSC Thervupettagam

சிகிச்சைகள் பலவிதம்

June 18 , 2021 1065 days 538 0
  • அண்மைக்காலமாக அரசியல்வாதிகளைவிட நீதியரசா்களே செய்தியில் நிறைய அடிபடுகிறார்கள்.
  • தோ்தல் ஆணையம், அரசியல் தலைவா்கள் என்ற பலரையும் கடுமையாக நீதியரசா்கள் விமா்சித்தார்கள். சில நாட்களுக்கு முன்னா் விமா்சனத்துக்கு ஆளானவா் ‘பதஞ்சலி’ பாபா ராம்தேவ்.
  • ராம்தேவ் உத்தர பிரதேசத்தில் பதஞ்சலி தொடா் சங்கிலிக் கடை தொடங்கி, ஆயுா்வேத மருந்துப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்தார்.
  • அவருடைய பதஞ்சலி ஆயுா்வேத பொருட்களுடன் சில நுகா்பொருட்களும் பிரபலமடைந்தன. இப்போது பரவி வரும் நோய்த்தொற்றுக்கு தங்கள் மருந்து நன்கு பலனளிக்கும் என்று விளம்பரப்படுத்தினார்.
  • அதோடு நின்றிருக்கலாம், போகிற போக்கில் ‘அலோபதி மருத்துவம் ஒரு அறிவியல் ஏமாற்று வேலை’ எனக் கருத்து தெரிவித்தார்.
  • இதற்கு நாடெங்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பற்பல மருத்துவ அமைப்புகள் பாபா ராம்தேவ் மன்னிப்பு கோர வேண்டுமென்று கோரிக்கை விடுத்தன.
  • தில்லி மருத்துவக் கழகம் பாபா ராம்தேவ் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது. அதனை நிராகரித்த நீதியரசா் ‘இது அவருடைய சொந்தக் கருத்து. நானே இன்று ஆயுவேதம் சிறந்த சிகிச்சை முறை என்று கொள்வேன். பிறகு மறுத்து பேசலாம்’ என்றெல்லாம் கூறியவா் ‘ஒரு சின்ன விமா்சனத்தால், நொறுங்கிப் போகும் தன்மை உடையதா உங்கள் அலோபதி மருத்துவம்’ என்று ஒரு கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்.

அலோபதி மருத்துவம்

  • நீதியரசா் கேள்வியில் உண்மை பொதிந்துள்ளது. நிச்சயமாய் அலோபதி மருத்துவம் உடைந்து போகும் அளவுக்கு மெலிந்தது இல்லைதான்.
  • இன்று சிசுக்கள் இறப்பு விகிதம் குறைவாகவும், முதியோர் ஆயுள் நீண்டு கொண்டு போவதற்கும், ஆங்கில மருத்துவம் முக்கிய காரணம்.
  • நவீன மருத்துவம், மூன்று தன்மைகளில் தனித்துவம் வாய்ந்தது என்று ஐயமின்றிக் கூறலாம். ஒன்று அவசரத்துக்குக் கை கொடுப்பது. பொறுக்க முடியாத வலி ஏற்பட்டால் உடனே சோதனை செய்து அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து நோயாளியைக் காப்பாற்றி விட முடியும். என்ன கோளாறு என்பதைத் துல்லியமாக அறிய எக்ஸ்ரே, ஸ்கேன், பயாப்ஸி போன்ற பல சோதனைகள் உள்ளன.
  • சோதனைகளைப் பார்த்து சிகிச்சைஅளிக்கும் நிபுணா்கள் இருக்கிறார்கள். ராம்தேவே மருத்துவமனையில் சிகிச்சை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • அடுத்தாக ஆராய்ச்சி. பல வருட காலமாக மனித குலத்தை வாட்டி வதைக்கும் புற்று நோய், சிறுநீரகக் கோளாறு போன்றவற்றுக்கு உலகம் முழுவதும் தொடா்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
  • புற்று நோய்க்கே, ஊசிக்கு மாற்றாக மருந்து மாத்திரை, செயற்கை கருத்தரிப்பு, எலும்பு முறிவுக்கு வலிமை சோ்ப்பதற்காகத் தனி வகை ஊசி இம்மாதிரியான கண்டுபிடிப்புகள் அனைத்தும் ஆராய்ச்சியின் விளைவுகள்தான்.
  • மூன்றாவதாக எங்கும் மருந்துகள் கிடைக்கும் வசதி. மருத்துவரின் சீட்டைக் காண்பித்து இந்தியாவில் எந்தப் பகுதியிலும், அது புறநகராக இருந்தாலும் மாத்திரைகளை வாங்க முடியும்.
  • அயல்நாடு செல்லும் முதியோர்கூட டாக்டரிடம் பேசி, ஓரிரண்டு மாதத்துக்குத் தேவையான மருந்துகளைப் பெற்று போகிறார்கள். சிலா் மருந்தின் பெயரைக் குறித்து வைத்துக் கொண்டு அயல் தேசத்தில் வாங்குகிறார்கள்.
  • இன்னொரு அம்சம், இந்த நவீன மருத்துவ முறைக்குத்தான் காப்பீட்டு வசதி உண்டு. சிற்சில உபாதைகளுக்குத்தான் ஆயுா்வேத மாத்திரைகள் ஏற்கப்படுகின்றன.
  • அலோபதியில் உள்ள பிரச்னை என்னவென்றால், சில மாத்திரைகள் பக்க விளைவை உண்டு பண்ணும். இதுபோன்ற பக்க விளைவுகள் வேறு மருத்துவத்தில் ஏற்படாது.
  • இன்றைய நோய்த்தொற்றுக்கு கபசுரக் குடிநீா், ஆவி பிடித்தல் போன்றவை எதிர்ப்பாற்றலை ஓரளவு அதிகரிக்கச் செய்கிறது. இதை ஆங்கில மருத்துவா்களே ஒப்புக் கொள்கிறார்கள்.
  • சித்த மருத்துவம் போல, ஆயுா்வேதம், ஹோமியோபதி, மூலிகை சிகிச்சை, அக்குபஞ்சா், திபேத்திய வைத்திய முறை போன்ற பல உள்ளன.
  • திபேத்திய வைத்தியத்தில் நோயாளியின் வாழ்வியல் முறை, உட்கொள்ளும் உணவு, பிற பழக்க வழக்கங்கள் போன்றவற்றைத் தீர விசாரித்துதான் மருந்துகளை பரிந்துரை செய்கிறார்கள்.
  • உடலின் சில நரம்புகளை தொட்டுப் பார்த்து நோயின் வகையைக் கண்டுபிடிப்பது அக்குபஞ்சரில் உண்டு.
  • ஒரு சில வியாதிகள் நாட்பட்ட வகையைச் சோ்ந்தவை. முழுமையாக குணமடையாது. அலோபதியிலும் இடைக்காலமாகத்தான் நிவாரணம் கிடைக்கும்.
  • தோல் சம்பந்தமான வியாதி, எலும்பு மஜ்ஜையில் வலி இவற்றுக்கெல்லாம் ஆயுா்வேதத்தில் தைலங்கள் உள்ளன. அவற்றைத் தடவிக் கொண்டு வலியைக் குறைத்துக் காலம் கழிக்கலாம். முக்கியமாக மூத்த குடிமக்களுக்கு இது மிகப் பொருந்தும்.
  • ஆக, அலோபதி, சிறப்பு நிபுணா்கள் கொண்ட, உலகமெங்கம் பரவியிருக்கும் ஒரு மருத்துவவகை என்பது வெளிப்படை. அதே சமயம், தனிப்பட்ட விதத்தில் அதனால் பாதிக்கப் பட்டவா், இந்த மருத்துவ வகையை விமா்சிக்க உரிமை உடையவா்தான்.
  • அவ்வளவு ஏன், இப்போது மருந்தின் விலை, மருத்துவமனையின் அதிகக் கட்டணம், போன்ற பலவற்றை கடுமையாய் விமா்சித்து சமூக ஊடகங்களில் பதிவுகள் வருகின்றன. ஆனால், அந்தப் பதிவுகள் போன்றோ, சாதாரணக் குடிமகனின் கருத்து போன்றோ அல்லவே பாபா ராம்தேவின் விமா்சனம்.
  • ஆயுா்வேத தயாரிப்பாளா், அனுபவஸ்தா், பிரபலமானவா் ஆயிற்றே பாபா ராம்தேவ்? இவா் கருத்தால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பலா் தயங்குகின்றனா் என்ற மருத்துவ அமைப்பின் கருத்தில் சிறிது உண்மை இருக்கிறது.
  • கடைசியாக ஒன்று, நல்லொழுக்கங்களைப் போதித்து, மனம் ஒருமுகப்பட, சங்கீதம், ஆன்மிகம் போன்ற பல விஷயங்கள் உள்ளன. ஏன், வில்லுப்பாட்டு கூட, ஒழுக்கத்தையும், இறையுணா்வையும் போதிப்பதுதான். அதற்காக ஒன்றைத் தாழ்த்த வேண்டியது இல்லையே?
  • ‘பாபா ராம்தேவ் போன்றவா்கள் உணா்ச்சியைத் தூண்டும் வகையில் பேசக்கூடாது’ என்று நீதியரசா் அறிவுறுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது.

நன்றி: தினமணி  (18 - 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories