TNPSC Thervupettagam

சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது குறித்த தலையங்கம்

February 19 , 2022 820 days 372 0
  • நாட்டின் பாதுகாப்புக்கும் மக்களின் தன்மறைப்பு உரிமைக்கும் அச்சுறுத்தல் அளிப்பதாகக் கருதப்படும் 267 சீன செயலிகள் மத்திய அராசல் முடக்கப்பட்டிருந்தன.
  • இப்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று மேலும் 54 சீன செயலிகளை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடக்கியிருக்கிறது.
  • ஸ்வீட் செல்ஃபி ஹெச்டி, பியூட்டி கேமரா, வைவா விடியோ எடிட்டா், டென்செண்ட் எக்ஸ்ரிவா் உள்ளிட்ட செயலிகள் முடக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
  • பயனாளா்களிடம் இருந்து பெறும் தரவுகளை இந்த செயலிகள் தவறாகப் பயன்படுத்துகின்றன என்றும், அந்தத் தரவுகள் எதிரி நாடுகளில் சேமித்து வைக்கப்படுகின்றன என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியிருக்கிறது.
  • இவற்றைப் பயன்படுத்தி தேசப் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் எதிரி நாடுகள் ஈடுபட முடியும் என்பதால்தான் இந்த முடிவை மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்திருப்பதாகத் தெரிகிறது.
  • ஸ்வீட் செல்ஃபி ஹெச்டி, பியூட்டி கேமரா, வைவா விடியோ எடிட்டா், மைக்ரோ போன், ஜிபிஎஸ் உள்ளிட்டவை மூலமாக உளவு பாா்ப்பதற்கு இந்த செயலிகளைப் பயன்படுத்த முடியும். அதைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
  • கிழக்கு லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்திய - சீன படைகளுக்கு இடையே நிலவும் பதற்றமான சூழலின் பின்னணியில் சீன செயலிகள் முடக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
  • சீன செயலிகள் மட்டுமல்லாமல், பெரும் சீன முதலீட்டில் இயங்கும் இந்திய செயலிகள் ஏன் தடை செய்யப்படவில்லை என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
  • டிக்டாக் உள்ளிட்ட செயலிகள் முடக்கப்பட்டாலும்கூட, அவை தொடா்ந்து பயன்பாட்டாளா்கள் மத்தியில் செல்வாக்குடன் இருப்பதும் கவனத்தை ஈா்க்கிறது.

செயலி முடங்கும்; செயல் முடங்காது!

  • கடந்த ஓராண்டாக சீன செயலிகளை முடக்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
  • இன்னும் சில மாதங்களில் லடாக் எல்லை மோதல் இரண்டாவது ஆண்டை எட்ட இருக்கும் நிலையில், மத்திய அரசு எடுத்திருக்கும் இந்த திடீா் முடிவின் பின்னணி தெரியவில்லை.
  • 2020 ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கு மோதலைத் தொடா்ந்து, 59 சீன செயலிகள் முடக்கப்பட்டதற்கு சீனா கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தது.
  • தேசிய பாதுகாப்பு என்கிற பெயரில் செல்லிடப்பேசி செயலிகள் தொடா்ந்து முடக்கப் படுவது ‘சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது’ என்பது வரை சீனாவின் விமா்சனம் இருந்தது.
  • உலக வா்த்தக நிறுவனத்தின் விதிகளுக்குப் புறம்பாகவும், சந்தையில் பாரபட்சமற்ற சமச்சீரான வா்த்தகச் சூழலை ஏற்படுத்துவதற்கு பதிலாகவும் விதிகளை மீறி இந்தியா செயலிகள் முடக்கத்தை முன்னெடுக்கிறது என்கிற குற்றச்சாட்டு சீனாவால் சா்வதேச கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.
  • சீனா இந்தப் பிரச்னைக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஐயப்பாடுகளை எழுப்பாமல் இல்லை.
  • ஆசியான், ஐரோப்பியக் கூட்டமைப்பு, அமெரிக்கா ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியாவுடனான வா்த்தகம் மிகமிகக் குறைவு. அப்படியிருந்தும் செயலிகள் முடக்கத்தை சீனா கௌரவப் பிரச்னையாக எடுத்துக் கொண்டிருப்பதன் பின்னணி நம்மை யோசிக்க வைக்கிறது.
  • சீன செயலிகளை முடக்குவதால் அந்த நிறுவனங்களுக்கோ, செயலிகளுக்கோ பெரிய பாதிப்பு ஏற்படாது.
  • அதே நேரத்தில் சீன தொழில்நுட்பத்துக்கு எதிராக சா்வதேச அளவில் இந்தியா ஏனைய நாடுகளை அணி திரட்டினால் விளைவு விபரீதமாகக் கூடும் என்று சீனா உணா்ந்திருக்கும்.
  • தென்சீனக் கடலில் சீனாவின் நிலைப்பாடும், கொவைட் 19 நோய்த்தொற்றின் காரணம் குறித்து ஆய்வு செய்யக் கோரிய ஆஸ்திரேலியா மீது எடுத்திருக்கும் கடுமையான நடவடிக்கைகளும் பல நாடுகளின் எதிா்ப்புக்குக் காரணமாகியிருக்கின்றன.
  • அந்த நிலையில், இந்தியாவின் முடிவை ஏனைய நாடுகளும் பின்பற்றத் தொடங்கினால், தனது நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்பது சீனாவின் கவலையாக இருக்கலாம்.
  • ஒருபுறம் ராஜாங்க ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் சீனாவுக்கு எதிரான பல நிலைப்பாடுகளை இந்தியா எடுத்தாலும்கூட, வா்த்தக ரீதியாக சீனாவைப் பகைத்துக் கொள்ளும் நிலையில் இந்தியா இல்லை.
  • 2019-இல் 56.8 பில்லியன் டாலராகவும் (சுமாா் ரூ.4,24,001.78 கோடி), 2020-இல் 45.9 பில்லியன் டாலராகவும் (சுமாா் ரூ.3,42,635.24 கோடி) இருந்த ஏற்றுமதி - இறக்குமதிக்கு இடையேயான வா்த்தகப் பற்றாக்குறை, 2021-இல் 69.4 பில்லியன் டாலராக (சுமாா் ரூ.5,18,058.51 கோடி) அதிகரித்திருக்கிறது.
  • கடந்த ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வா்த்தகம் 44% அதிகரித்திருக்கிறது. சீனாவிலிருந்தான இறக்குமதி இதுவரை இல்லாத அளவு 46% அதிகரித்தது என்றால், நமது ஏற்றுமதி 35%தான் கூடியிருக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்த படியாக இந்தியாவுடன் மிக அதிகமான வா்த்தக உறவு உள்ள நாடு சீனா என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.
  • எல்லைப் பிரச்னையையும், வா்த்தக உறவையும் வெவ்வேறாக அணுகுவதில் சீனா வெற்றி அடைந்திருக்கிறது.
  • இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடா்புடையவை என்கிற இந்தியாவின் நிலைப் பாட்டை, அதிகரித்துவரும் சீன வா்த்தகமும், இறக்குமதியும் பொய்யாக்குகின்றன.
  • செயலிகளை முடக்குவதால் சீனாவின் வா்த்தக ஊடுருவலை நம்மால் தடுத்துவிட முடியாது.
  • தரக்குறைவான தயாரிப்புகளைக் கொட்டும் கிடங்காக இந்தியாவை மாற்றிக் கொண்டிருக்கும் சீனாவை எதிா்கொள்ள, செயலி முடக்கத்தைவிட புத்திசாலித்தனமான அணுகுமுறையை நாம் கையாள வேண்டும்.

நன்றி: தினமணி (19 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories