TNPSC Thervupettagam

சீனா தமிழக உறவு இந்தியாவுக்கு ஒரு பாலம்!

October 11 , 2019 1653 days 1149 0
  • மாமல்லபுரம் முதல் நாகப்பட்டினம் வரை கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே சீனாவுக்கும் தமிழகத்துக்கும் இடையில் உறவு இருந்ததற்கு வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன. முற்காலச் சோழர்கள் அவைக்கு சீனாவிலிருந்து தூதர் ஒருவர் அனுப்பப்பட்டிருக்கிறார்.
  • சீன அறிஞர் பான் கு ‘ஹான் வம்சத்தின் புத்தகம்’ என்ற நூலில் குவாங்க்ட்சி என்ற நகரத்தைப் பற்றியும் அதன் அரிய பொருட்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார். அது காஞ்சி நகரமே.
  • முற்காலச் சோழர்களின் ஆளுகையில் காஞ்சி இருந்தபோது, சீனாவுக்கும் அதற்கும் இடையே வணிக உறவு இருந்திருக்கிறது. சீனாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே வணிக உறவு இருந்திருப்பதற்கான ஆதாரமாகப் பல்வேறு ஊர்களிலிருந்தும் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
  • பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஓலைக்குன்னத்திலும் மன்னார்குடிக்கு அருகிலுள்ள தளிக்கோட்டையிலும் சீன நாணயங்கள் ஏராளமாகக் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றன.
  • கி.பி. எட்டாம் நூற்றாண்டில் சீன வணிகர்களுக்காக புத்த ஸ்தூபி ஒன்றை நாகப்பட்டினத்தில் இரண்டாம் நரசிம்ம பல்லவன் அமைத்திருக்கிறார் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மாமல்லபுரத்தில் சீனப் பிரதமர் சூ என் லாய்
  • 1956-ல் அப்போதைய சீனப் பிரதமர் சூ என் லாய் இந்தியா வந்திருந்தார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நட்புறவு துளிர்த்திருந்த காலம் அது. இந்தியாவுக்கு வந்திருந்த சூ என் லாய் மாமல்லபுரத்தைக் காண வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். மாமல்லபுரத்துக்கு அவருடன் சீனத் துணைப் பிரதமர் ஹோ லுங்கும் வந்திருந்தார்.
  • இந்தியாவின் சார்பில் இவர்களுடன் மாமல்லபுரத்துக்குச் சென்றவர் சீனாவுக்கான அப்போதைய தூதர் ஆர்.கே.நேரு. மாமல்லபுரத்தில் சூ என் லாய் இரண்டு மணி நேரம் செலவிட்டார்.
  • சிற்பங்களைப் பார்த்து அவற்றின் விவரங்களைக் கேட்டறிந்தார். கடற்கரைக் கோயிலையே நீண்ட நேரம் பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறார்.
  • பிறகு, மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக் கூடங்களில் சிற்பிகள் சிலை செதுக்குவதைப் பார்வையிட்டிருக்கிறார்.
‘இந்தியா - சீனா பாய் பாய்!’
  • சென்னை விமான நிலையத்தில் சூ என் லாய் வந்து இறங்கியதிலிருந்து, ராஜ் பவனுக்குச் செல்லும் வரையிலும் வழியெங்கும் பள்ளிச் சிறுவர்கள் நின்றபடி வாழ்த்து முழக்கமிட்டனர். ‘இந்திய - சீன நட்புறவு வாழ்க’ என்றும் ‘சூ என் லாய் வாழ்க’ என்றும் பதாகைகள் ஏந்தியபடியும் கோஷமிட்டபடியும் சிறுவர்கள் நின்றிருந்தார்கள்.
  • அப்போது புகழ்பெற்ற முழக்கங்களில் ஒன்றாக இருந்த, ‘இந்தியா - சீனா பாய் பாய்’ (இந்தியாவும் சீனாவும் சகோதரர்கள்) தமிழ்நாட்டிலும் ஒலித்தது.
  • மாமல்லபுரம் வருகை முடிந்த பிறகு அப்போதைய கார்ப்பரேஷன் விளையாட்டரங்கில் பெரிய வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் அப்போதைய மெட்ராஸ் மேயர் கே.என்.சீனிவாசன் சூ என் லாய்க்கு அசோக ஸ்தூபி சிற்பத்தைப் பரிசளித்தார்.
  • அன்றைய முழக்கமும் நம்பிக்கையும் சீனா தொடுத்த போரால் கரைந்துபோனது.
  • அந்நிலை மீண்டும் வராத வண்ணம் இந்திய - சீன உறவு வளர்த்தெடுக்கப்பட வேண்டும். சீனா இதை மனதில் கொள்ள வேண்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (10-11-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories