TNPSC Thervupettagam

சீனாவைச் சுற்றிவரும் வதந்தி

September 30 , 2022 568 days 338 0
  • தமிழ் மொழியின் சங்கப் பாடல்களின் தொகுப்பைப்  போன்றது சீன மொழியின் ‘ஷிழ் சிங்’ (Shi Jing). அது பழம் பாடல்களின் தொகை நூல். அதில் ஒரு பாடலில் பழி கூறும் நிந்தனையாளர்கள் பரிகசிக்கப்படுவார்கள். அவர்களுக்குச் சாணி வண்டுகள் உவமையாகக் கூறப்படும். ஏனெனில், சாணி வண்டுகள் எங்கும் நுழைய முயல்வன. சூரிய ஒளி படாத இடங்கள் அவற்றுக்கு உகந்தவை.
  • சென்ற வாரம் சீனாவைப் பற்றியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கைப் பற்றியும் ஒரு வதந்தி சமூக ஊடகங்களில் தீயாகப் பரவியது. சீனா அந்த வதந்தியைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அதன் வெளியுறவு அமைச்சகம் யாதொரு மறுப்பையும் வெளியிடவில்லை. ஒருவேளை அப்படி ஒரு மறுப்பு வெளியாகி இருந்தால், அதில் ஷிழ் சிங் பாடல் மேற்கோள் காட்டப்பட்டிருக்கக்கூடும். ஏனெனில், வதந்தியாளர்கள் ஆதாரங்களுக்கு அவசியமில்லாத இணையவெளியின் கதகதப்பில் தங்கள் பரப்புரையை நிகழ்த்தினார்கள், சாணி வண்டுகளைப் போல்.

வதந்தி என்ன?

  • சீனாவின் ஆட்சிக்கட்டிலை ராணுவம் கைப்பற்றிக்கொண்டது. சீன அதிபர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். இதுதான் வதந்தி. இவ்வாண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தானில் நடந்தது. நமது பிரதமர் மோடி உட்பட பல உலகத் தலைவர்கள் கலந்துகொண்டனர். கரோனாவால் போக்கும் வரவும் முடங்கிய பிறகு, சீன அதிபர் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயம் இது. மாநாட்டை முடித்துக்கொண்டு செப்டம்பர் 17 அன்று நாடு திரும்பினார் அவர். பிறகு அவர் பொது நிகழ்வில் கலந்துகொண்டது செப்டம்பர் 27 அன்று.
  • இடைப்பட்ட பத்து நாட்களில் அவரைப் பொது நிகழ்வுகளில் காணக்கூடவில்லை. சாணி வண்டுகளுக்கு அந்த இடைவெளி போதுமானதாக இருந்தது. ராணுவத் துருப்புகள் பாசறையிலிருந்து வெளியேறி தலைநகர் பெய்ஜிங்கில் ரோந்து வருவதாக ஒருவர் எழுதினார். இன்னொருவர் 6,000 பயணி விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுவிட்டதாக எழுதினார். இன்னார்தான் அடுத்த அதிபர் என்று வேறொருவர் எழுதினார்.

என்ன நடந்திருக்கும்?

  • சீனா மிகக் கடுமையான கோவிட் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றிவருகிறது. கோவிட்- சுழியம் (Zero Covid) என்பது அந்தக் கொள்கையின் பெயர்.  கோவிட் பாதிக்கப்பட்ட பல பெருநகரங்கள் முற்று முழுதாக அடைக்கப்பட்டதும், அதனால் சீனாவின் உற்பத்தியும் விநியோகமும் பெருமளவில் பாதிக்கப்பட்டதும், கடந்த ஈராண்டுகளில் பல முறை நிகழ்ந்தன. அந்தக் கொள்கையின் அடிப்படையில், வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட அதிபர், நாடு திரும்பியதும் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கலாம். தவிர, சீனாவின் மூத்த அரசியலர்கள் நாட்கணக்கில் ஊடக வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியிருப்பது இது முதல் முறை அல்ல.

வரலாறு முக்கியம்

  • இந்த வதந்தியைக் குறித்து இணைய வெளியிலும் அச்சு ஊடகங்களிலும் செய்திக் கட்டுரைகள் வெளியாகின. ‘இப்படி நடந்திருக்கக் கூடாதா?’ என்று விரும்பியவர்கள், ட்விட்டரில் அவர் சொன்னார், இன்ஸ்டாகிராமில் இவர் சொன்னார், முகநூலில் உவர் சொன்னார், என்கிற ரீதியில் எழுதினார்கள். ‘இப்படி நடந்திருக்க முடியாது’ என்று கருதியவர்கள் இந்த வதந்திகள் நம்பத்தகுந்தவை அல்ல என்று எழுதினார்கள். சீனாவின் இரும்புத்திரைதான் இப்படியான வதந்திகளுக்கு இடமளிக்கிறது என்றார்கள். இரு சாரரும், நான் படித்த வரையில், ஒரு முக்கியமான கண்ணியைக் கவனத்தில் கொள்ளவில்லை. அது சீனாவின் வரலாறு. அதைத் திரும்பிப் பார்த்தால்தான் இப்படி ஒரு சம்பவம் ஏன் சீனாவில் நடக்க முடியாது என்று புரிந்துகொள்ள முடியும்.
  • சீன கம்யூனிஸ்ட் கட்சி 1921 ஜூலை 1இல் நிறுவப்பட்டது. அப்போது ஆட்சியிலிருந்த கோமிங்டாங் கட்சியைத் தீவிரமாக எதிர்த்தது. அதற்கு ஆயுதம் தாங்கிய புரட்சி அவசியம் என்று கருதிய கம்யூனிஸ்ட் கட்சி, தனக்கான ராணுவத்தைக் கட்டியது. 1927 ஆகஸ்ட் 1இல் மக்கள் விடுதலை ராணுவம் உதயமானது. இந்த ராணுவம் ஜப்பானியப் படைகளோடும் கோமிங்டாங்கின் அரசப் படைகளோடும் அடுத்தடுத்து மோதியது. இறுதியில் வென்றது. 1949 அக்டோபர் 1 அன்று கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி அமைக்கப்பட்டது. இந்த வரலாற்று வரிசை முக்கியமானது.
  • அதாவது, 1921இல் கட்சி உருவானது. 1927இல் ராணுவம் கட்டப்பட்டது. 1949இல் ஆட்சி வசமாகியது.  சீனாவில் ஆட்சியைவிட ராணுவத்திற்கும், ராணுவத்தைவிட கட்சிக்கும் முக்கியத்துவம் உண்டு. ஜி ஜின்பிங் மூன்று பதவிகளை வகிக்கிறார். அவர்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், ராணுவத்தின் தலைவர், மக்கள் சீனக் குடியரசின் அதிபர். சீனக் கட்டமைப்பில் கட்சிச் செயலர்தான் அதிபரைக் காட்டிலும், ராணுவத் தலைவரைக் காட்டிலும் அதிகாரம் உள்ளவர். கட்சியின் பொதுச் செயலரை ராணுவத்தின் தளபதிகளால் சிறைப்பிடித்துவிட முடியாது.

புவியியல்

  • இந்த இடத்தில் ராணுவம் ஆட்சிபுரிந்த நாடுகளை ஒப்பிட்டுப் பார்ப்பது பயன் தரும். பல ஆசிய நாடுகள் ராணுவ நுகத்தடியின் கீழ் பாரம் இழுத்திருக்கின்றன. பாகிஸ்தான், வங்கதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, சிரியா முதலான ஆசிய நாடுகள் எண்பதுகளுக்குப் பின்னாலும் ராணுவ ஆட்சியின் கீழ் இருந்தவை. இப்போது ராணுவ ஆட்சி நடக்கும் ஒரே ஆசிய நாடு மியன்மார். ஐரோப்பாவிலும் ஆப்பிரிக்காவிலும் பல நாடுகள் ராணுவ ஆட்சியின் கீழ் இருந்தவை. சூடான், மாலி, கெனீவா முதலிய ஆப்பிரிக்க நாடுகளில் இப்போதும் ராணுவம்தான் கோலோச்சுகிறது. இந்த நாடுகளில் எல்லாம் ஆட்சி-அதிகாரமும் ராணுவமும் தனித்தனியாக இயங்குபவை. ராணுவங்களால் ஆயுத பலத்தைப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற முடிந்ததும் அதனால்தான்.
  • இந்தியாவிலும் இவை தனித்தனியாவைதான். ஆனால், இந்தியா உலகின் ஆகப் பெரிய ஜனநாயக நாடு. எத்தனை குறைகள் இருந்தாலும், அதன் பலனைத் துய்த்துவரும் மக்கள் ராணுவ ஆட்சிக்கு இணங்க மாட்டார்கள் என்று நம்பலாம். மேலும், நமது அமைப்பானது ராணுவத்தைக் கூடுமானவரை நல்ல தூரத்திலும் வைத்திருக்கிறது.
  • முக்கியமாக, நமது ராணுவ வீரர்கள் பல மொழிகள் பேசுபவர்கள், பல தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள். இந்தியாவின் நாடாளுமன்றம் எல்லா தேசிய இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ராணுவ ஆட்சியால் அதைச் செய்ய முடியாது. ஆகவே, தளபதிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட எல்லையைக் கடந்து, ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டால், அதற்கு ராணுவ வீரர்களின் ஒத்துழைப்பு இராது. ஆகவே, இந்தியாவில் ராணுவ ஆட்சி சாத்தியமில்லை. சீனாவிலும் சாத்தியமில்லை. காரணங்கள் வேறு.
  • சீனாவில் நடப்பது ஒரு கட்சி ஆட்சி. அங்கே கட்சியும், ராணுவமும், ஆட்சியும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கின்றன. அவற்றின் படிநிலைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, இரண்டாவது இடத்தில் இருக்கும் ராணுவம், முதல் இடத்தில் இருக்கும் கட்சிக்கு எதிராக, மூன்றாம் இடத்தில் இருக்கும் ஆட்சியைக் கைப்பற்றாது.

எதிர்காலம்

  • ஜி ஜின்பிங்கைச் சுற்றி ஏன் இத்தனை வதந்திகள்?
  • அடுத்து வரும் அக்டோபர் மாதம் 16ஆம் நாளன்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழு அல்லது பேராயத்தின் (காங்கிரஸ்) கூட்டம் நடைபெற இருக்கிறது. நாடெங்கிலுமிருந்து 2,300 உறுப்பினர்கள் பங்கெடுப்பார்கள். இவர்கள் கட்சியின் செயற்குழு அல்லது பொலிட்பீரோவிற்கு 200 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். முக்கியமாக, அடுத்த பொதுச் செயலரையும் அதிபரையும் தேர்ந்தெடுப்பார்கள். இந்தப் பதவிகளுக்கு மீண்டும் ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்படுவார். அதற்கான கிரணங்கள் தெளிவாகத் தெரிகின்றன. இதற்காகப் பல ஆண்டுகளாக அவர் காய்களை நகர்த்தி வருகிறார்.
  • ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராகப் போகிறார். மா சேதுங்கின் காலத்திற்குப் பிறகு, ஒருவர் இரண்டு முறைதான் அதிபராக முடியும். அப்படித்தான் சீனாவின் அரசமைப்புச் சட்டம் இருந்தது.
  • ஜியாங் ஜெமின் 1993 முதல் 2003 வரையும், ஹூ ஜின்டாவ் 2003 முதல் 2013 வரையும் பதவி வகித்தார்கள். ஜி ஜின்பிங் 2013இலும், மீண்டும் 2018இலும் தெரிவானார். அவரது பதவிக்காலம் 2023இல் முடியும். முந்தைய சட்டத்தின்படி அவரால் 2023க்குப் பிறகு பதவி வகிக்க முடியாது. ஆனால், அந்தச் சட்டம் ஏற்கனவே திருத்தப்பட்டுவிட்டது. ஜி ஜிங்பிங்கின் அகவை 69. அவர் நான்காவது முறைகூட அதிபராகலாம். கண்ணுக்கெட்டிய தொலைவில் அவருக்கு கட்சியில் எதிரிகள் இல்லை.

இந்தியா தகவமைப்பு

  • இது நமக்கு என்ன விதமான பாதிப்பை உண்டாக்கும்?
  • ஜி ஜின்பிங் கடுமையான போக்கைக் கடைப்பிடிக்கிறார். கடந்த இரண்டாண்டுகளாக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டிய சீனத் துருப்புகள், பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரும் முழுமையாகப் பின்வாங்கவில்லை. இந்திய வணிகம் சீனப் பொருட்களைப் பெருமளவில் சார்ந்திருக்கிறது. ஆகவே, ஜி ஜிங்பிங் போன்ற எதேச்சதிகாரத் தலைவர் இன்னும் ஒரு தசாப்த காலம் சீனாவிற்குத் தலைமை ஏற்கப்போவது இந்தியாவிற்கு சவாலாகத்தான் இருக்கும்.
  • ஆனால், சீனாவை நேரிட நாம் அமெரிக்காவையும் ஜப்பானையும் ஆஸ்திரேலியாவையும் நாடுவதால் பலன் இருக்கப்போவதில்லை. இந்தியாவும் சீனாவைப் போல் மனிதவளம் மிக்க நாடு. நமது மக்கள் திரளுக்கு கல்வியையும் ஆரோக்கியத்தையும் வழங்கி, அதன் மூலம் நாட்டை உற்பத்தி மையமாகவும், நமது மக்களை வலிமை மிக்கவர்களாகவும், நமது நாட்டை வளம் மிக்கதாகவும் மாற்ற வேண்டும்.
  • சீன அதிபரைப் பற்றிய வதந்தி, இந்திய இணைய வெளியில்தான் அதிகமும் சுற்றில் இருந்தது. அது அந்த வதந்தியைப் பரப்பியவர்களின் விருப்பமாக இருக்கலாம். ஆனால், சாணி வண்டுகளால் நிலத்திற்கு மேல் பறக்க முடியாது. வதந்திகளைப் பரப்புவதால் பிரச்சினைகளை நேரிட முடியாது. நாம் நம்மையும் நமது நாட்டையும் தகவமைத்துக் கொள்வதன் மூலமே ஒரு வலிமையான அயல் வீட்டுக்காரரை நேரிட முடியும்.

நன்றி: அருஞ்சொல் (30 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories