TNPSC Thervupettagam

சுகாதாரமே வாழ்வின் ஆதாரம்

April 7 , 2022 751 days 419 0
  • சில மாதங்களுக்கு முன் எங்களுக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் கடும் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • அங்கு அவருக்கு நரம்பு ஊசி செலுத்தினதன் மூலமும், செவிலியர்களின் கண்காணிப்பாலும் காய்ச்சல் மெல்ல மெல்லக் குறைந்தது.
  • ஆயினும், மருத்துவர்கள், டெங்கு காய்ச்சல், கரோனா நோய்த்தொற்று போன்றவற்றுக்கான சோதனைகளை மேற்கொண்டார்கள்.
  • டெங்கு காய்ச்சல் இல்லை என்பது உடனே உறுதியாயிற்று. ஆனால் கரோனா சோதனை முடிவு, இரவு ஒன்பது மணிக்கு வந்தது. மருத்துவர் அதைப் பார்த்துவிட்டு, நோயாளிக்கு கரோனா பாசிடிவ் என்றும், வீட்டிலேயே அவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும் கூறி சில மாத்திரைகளைப் பரிந்துரை செய்தார்.
  • காப்பீட்டு விதிகளின்படி 24 மணி நேரம் தொடர்ந்து மருத்துவமனையில் இல்லாததால் காப்பீட்டு நிறுவனம் தொகை தர இயலாது என்று கூறிவிட்டது. அப்பெண்மணி, குறை தீர்க்கும் மையத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
  • இங்கு வலியுறுத்தப்பட வேண்டிய அம்சம் என்னவெனில், மருத்துவமனை செலவில் பாதியளவு, மருந்து, மாத்திரைகளுக்கே ஆகி விட்டது. அப்பெண்மணிக்கு நீரிழிவு அளவு சற்று அதிகம்.
  • தற்போதெல்லாம் முதியவர்களுக்கு மருந்து மாத்திரை செலவு கூடுதலாகிறது என்பதை மறுப்பதற்கில்லை. சில கடைகளில் வழக்கமாக வாங்குகிறவர்களுக்கு ஐந்து சதவிகிதம் கழிவு தருகிறார்கள்.
  • இருந்தும் முதியோருக்கே உரிய, ரத்த அழுத்தம், நல்ல கொழுப்பு (எச்டிஎல்) இவற்றை சீராக வைத்துக் கொள்ளவும், வைட்டமின் மாத்திரைகளுக்குமே சுமார் இரண்டாயிரம் ரூபாய் ஆகிறது.
  • தலை சுற்றல், நீரிழிவு போன்ற நோய்கள் இருந்தால் இச்செலவு இரட்டிப்பாகும்.

சுகாதார நாள்

  • ஒருநாள் பிற்பகல் என் மனைவிக்கு திடீரென்று தலை சுற்றல் வந்தது. வீட்டில் யாருமே இல்லை. எப்படியோ மெதுவாக சமாளித்து நடந்து வந்து படுக்கையில் உட்கார்ந்து விட்டார்.
  • டாக்டரைப் பார்த்தபோது, "உங்களுக்கு ரத்த அழுத்தம் குறைவாக உள்ளது. அதனால்தான் தலை சுற்றல்' என்று சொல்லி வழக்கமாக சாப்பிடும் மாத்திரையின் 'வலிமை'யைப் பாதியாகக் குறைத்துவிட்டார் (40 எம்ஜிக்கு பதில் 20 எம்ஜி).
  • நல்ல காலமாக, தெரிந்த மருந்துக் கடையானதால் பண்டமாற்று செய்ய முடிந்தது. ஒரு சில சமயங்களில் மருத்துவர்கள், மாத்திரைகளை மாற்றி எழுதும்போது, "இருக்கிறதை முழுதுமாக பயன்படுத்திவிட்டு, பிறகு இதை எடுத்துக் கொள்ளலாம்' என்பார்கள்.
  • எங்கள் பகுதியிலேயே உள்ள மருந்துக் கடையில், மிகப் பிரபலமான எங்கும் இருக்கக் கூடிய மாத்திரை (தலை சுற்றலுக்கானது) கிடைக்கவில்லை.
  • வேறொரு வைட்டமின் மாத்திரையைக் கேட்டபோது, முன்பே பதிவு செய்ய வேண்டுமென்று பதில் அளித்தார்கள்.
  • மத்திய அரசு தொடங்கியுள்ள "மக்கள் மருந்தகம்' அனைத்து இடங்களிலும் பரவலாக இருப்பதில்லை. அங்கு கிட்டத்தட்ட 50% கழிவு தருகிறார்கள்.
  • ஆனால், பொதுவாக மருத்துவர் சீட்டில் குறிப்பிட்டிருக்கும் மாத்திரைகள் கிடைப்பதில்லை என்கிறார்கள்.
  • அதே மூலக்கூறு (ஜெனரிக்) கொண்ட வேறு மாத்திரைகள்தான் இருப்பிலிருக்கும். என் அலுவலக நண்பர்கள் சிலர் டாக்டரின் ஆலோசனையைக் கேட்டு பயனடைந்திருக்கிறார்கள்.
  • அதே சமயம் பெரும்பாலானோருக்கு அவர்கள் வழக்கமாக சாப்பிடுவதைத் தவிர வேறு பெயர் கொண்ட மாத்திரைகள் ஒத்துக் கொள்வதில்லை.
  • குடும்ப மருத்துவர்கள் சிபாரிசு செய்யும் மாத்திரைகளை உட்கொள்ளுவதில் ஒரு வசதி உண்டு.
  • உடனடியாக ஏதாவது கோளாறு ஏற்பட்டால், அவரிடமே உரிமையுடன் கைப்பேசியிலோ, மின்னஞ்சலிலோ ஆலோசனை கேட்டுத் தெளிவு பெறலாம்.
  • தற்செயலாக என் மகன் வலைதளத்தில் தேடியபோது இருபது சதவிகிதம் குறைவாக மருந்துகள் விற்கும் கடைகள் தென்பட்டன. ஆனால் அவை மொத்த வியாபாரிகளுக்கானவை.
  • எனவே அவற்றுக்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகள் உண்டு. சிறப்பு நிபுணர் பரிந்துரைத்த ஒரு மாதத் தேவைக்கான மருந்துகளை வாங்கியபோது, அது மிகவும் மலிவாக இருந்தது. அதாவது சுமார் 16% குறைவு.
  • இத்தகைய கடைகளில் மருந்துகளைப் பெறுவதற்கு ஒரு சில நடைமுறைகள் உண்டு. மருந்துச் சீட்டை நகலெடுத்து, நோயாளியின் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஓரிரு நாட்களில் மருந்துகள் வீட்டுக்கே வந்துவிடும்.
  • ஒரு கடையில், தொகை செலுத்திய மறுநாள், நாமே சென்று மாத்திரைகளைப் பெற வேண்டும். இவற்றில் முக்கியமான விதி என்னவெனில், விற்கப்பட்ட மாத்திரைகள் எக்காரணத்துக்காகவும் திரும்பப் பெற மாட்டாது.
  • மத்திய அரசின் "தேசிய மருந்துவிலை அதிகார மையம்' ஒன்று உள்ளது. அது நிர்ணயித்த பட்டியலில் சில "அத்தியாவசிய' மருந்துகள் உள்ளனவாம். அது சரிதான்.
  • ஆனால் எது அத்தியாவசியம் என்பதை யார் முடிவு செய்வது? இதய வால்வில் லேசான பிரச்சனை உள்ள ஒருவருக்கு தினம் இரண்டு வேளை உட்கொள்ள வேண்டிய மாத்திரையின் விலை அதிகம்தான்.
  • "தற்சார்பு இந்தியா என்று நாம் அடிக்கடி சொல்லி வருகிறோம். ஆனால் மருந்துகளின் மூலப்பொருளில் 70 சதவிகிதம் சீனாவிலிருந்துதான் பெறப்படுகின்றன.
  • இதைக் குறைக்க வழிமுறைகளைக் கண்டறிவதுதான் முக்கியம்' என்கிறார் ஒரு மருத்துவ நிபுணர்.
  • மருந்துகளின் விலையும், மொத்த விலைக் குறியீட்டு எண்ணுடன் இணைந்துள்ளது. இடுபொருள், மின்சாரம், போக்குவரத்து செலவு போன்றவற்றால் அண்மையில் மருந்துகளின் விலை மேலும் உயர்ந்துள்ளது.
  • மனிதரின் ஆரோக்கியத்துக்கு உடல் நலமும் மன நலமும் முக்கியம். மனநலம் பெரும்பாலும் குடும்பச் சூழலைப் பொறுத்தே அமைகிறது.
  • என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும், திடீரென்று உடல் நலிந்து போனால் மருத்துவர்களையும், மருந்துகளையும்தான் நாட வேண்டியிருக்கிறது.
  • பிறருக்கு இடைஞ்சல் அளிக்காமல் இயல்பாக நடமாடத் தேவையான மருந்துகளில், மூத்த குடிமக்களுக்கு சில சலுகைகள் தரலாமே? எல்லா மருந்துகளிலும் 15 சதவிகிதம் குறைத்து உதவினால், அது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாமாகவே அமையும்.
  • இன்று (ஏப். 7) உலக சுகாதார நாள்.

நன்றி: தினமணி (07 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories