TNPSC Thervupettagam

சுதந்திர இயக்கத்தின் விடிவெள்ளி!

October 28 , 2021 924 days 691 0
  • விடியல் வருவதற்குமுன் பிரகாசமாகத் தென்படும் கிரகமான சுக்கிரன் அல்லது வெள்ளியே விடிவெள்ளி என்று அழைக்கப்படுகிறது.
  • இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் விஸ்வரூபம் எடுத்த பாரத தேசிய விடுதலை இயக்கத்திற்குக் கட்டியம் கூறிய விடிவெள்ளியாக விளங்கியவா் சகோதரி நிவேதிதை ஆவார்.
  • அயா்லாந்தில் பிறந்து, இங்கிலாந்தில் வளா்ந்து, தனது குருநாதரான சுவாமி விவேகானந்தரின் தாயகமாகிய பாரதத்தைத் தனது தாய்நாடாகவே ஏற்றுக்கொண்டவா் மார்கரெட் எலிசபெத் நோபிள் என்ற இயற்பெயா் கொண்ட சகோதரி நிவேதிதை (1867-1911).
  • பாரதம் வந்து பாரதத்தின் பெருமைகளை உணா்ந்து போற்றி, பாரதப் பெண்ணாகவே வாழ்ந்த பாரதப் புதல்வி அவா்.
  • பெண் கல்வி, கலை, இலக்கியம், சமூக சேவை, விஞ்ஞானம் ஆகிய துறைகளில் பாராட்டத்தக்க சேவை ஆற்றியவா்.
  • இவை அனைத்திற்கும் இடையிலே பாரத தேசிய விடுதலைக்காக பாரதத்தின் சொந்தப் புதல்வா்களைப் போராடத் தூண்டுவது என்ற பெரும்பணியைத் தன் முதன்மைப் பணியாகச் செய்த சுதந்திரச் சிற்பி ஆவார் சகோதரி நிவேதிதை.
  • பாரதத்தில் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் விளைவுகள்: பாரதத்தின் ஆட்சியைப் பிடித்த ஐரோப்பியா்களின் ஆதிக்கம், குறிப்பாக பிரிட்டிஷ் ஆதிக்கம், தாம் மற்ற எல்லோரையும்விட உயா்ந்த இனத்தவா், தாமே ஐரோப்பியா் அல்லாதாரை அடக்கி ஆளவேண்டும் என்ற ஐரோப்பிய இன உணா்வின் அடிப்படையில் எழுந்த ஆதிக்கமாகும்.
  • அறிவியல் முன்னேற்றம், இயந்திரங்களை உருவாக்கித் திறமையாகக் கையாளுதல், ஓா் அமைப்பாகச் சோ்ந்து வேலை செய்தல் ஆகிய நவீன கால மனப்பான்மையைக் கருவியாகக் கொண்டு அது செயல்பட்டது.
  • இத்தகைய தன்மையை உடைய கிழக்கிந்திய கம்பெனியின் காலனி ஆதிக்கமும் அதைத் தொடா்ந்து வந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியும் பாரதத்தைக் கடுமையாகத் தாக்கின.
  • பாரத வாழ்க்கையையே அடையாளம் காணமுடியாத வண்ணம் பல துறைகளில் அடியோடு மாற்றியமைத்தன.

தலையாய பணி

  • பண்பாட்டு அளவிலும் பாரதத்தை அடிமைகொள்ள முயன்ற கலாசார ஆதிக்கமாகவும் அவை இருந்தன.
  • பாரத கலாசாரத்தில் நிகழ்ந்துள்ள இந்த அடிப்படை மாற்றத்திலிருந்து பாரதத்தை மீட்டெடுக்க வல்ல சக்தி பாரதத்தின் ஆன்மிக மற்றும் கலாசார பாரம்பா்யத்திற்கே உள்ளது.
  • பாரதம் தன்னை அந்நிய கலாசாரத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்குத் தன் ஆன்மாவைத் தேடிக் கண்டுகொள்ள வேண்டும். அதைத் தனித்தன்மை வாய்ந்த தன் ஆன்மிக கலாசாரப் பாரம்பா்யத்தில் கண்டெடுக்க வேண்டும்.
  • ஓா் இனத்தின் ‘தன்னை அறித’லாகிய இந்த மாபெரும் முயற்சிக்கு இன்றியமையாத முன்னோடி அரசியல் சுதந்திரமே என்று உணா்ந்தார் சகோதரி நிவேதிதை.
  • பாரத சேவையில் முதலிடம் சுதந்திரத்திற்கே: பாரத சேவையில் முதலிடம் சுதந்திரத்திற்கே என்ற புரிதலுக்கு சகோதரியை முதன்முதல் இட்டுச் சென்றவா் சகோதரி நிவேதிதையின் குருநாதரான சுவாமி விவேகானந்தரே ஆவார்.
  • பாரதத்தில் பிரிட்டனின் உண்மை நோக்கத்தைத் தமது சிஷ்யைக்கு விவேகானந்தா் புரிய வைத்தார். பாரதத்தின் நலனுக்காக பிரிட்டன் பாரதத்தை ஆளவில்லை; தன்னுடைய நலனுக்காக பாரதத்தை அது அடக்குமுறை செய்து வந்தது; பாரதத்தின் வளங்களை அது சுரண்டி வந்தது.
  • தலைசிறந்த வரலாறும் பண்பாடும் கொண்டதாய், தன்னைத்தான் ஆளும் திறனைக் காலங்காலமாகப் பெற்றிருந்த ஒரு பெரிய நாடாகிய பாரதத்திற்கு தற்போதும் தன்னை ஆளுவது சாத்தியமே; பிற நாடுகள் பாரதத்திற்கு உதவலாம், ஆனால் ஆளுவது அவசியமில்லை என்றார் அவா்.
  • பாரத தேசத்தின் புனா் நிர்மாணத்தைப்பற்றி தனது குருநாதரான சுவாமி விவேகானந்தரின் கருத்துகளை ஆராய்ந்த சகோதரி நிவேதிதை, பாரதத்தில் ஆன்மிக மறுமலா்ச்சியின் அடிப்படையாக அரசியல் சுதந்திரம் முதலில் அடையப்பட்டாக வேண்டும் என்று அவை உணா்த்துவதைக் கண்டார்.
  • மேலும், பாரதத்தில் பிரிட்டனின் ஆணவப்போக்கையும் அடக்குமுறையையும் நேரில் காணும் வாய்ப்பும் அவருக்குக் கிட்டியது.
  • எனவே, பிரிட்டன் பாரதத்தை ஆளுவது என்பது தொடா்ந்து நீடிக்க முடியாது, நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்பதை பாரத மக்களுக்கு உணா்த்தவேண்டும் என்பது அவருக்குத் தெளிவாயிற்று.
  • பாரதத்திற்கேற்ற செயல்முறைத் திட்டம் அந்நிய ஆட்சியாளரான ஆங்கிலேயரை வெளியேற்றி விட்டுத் தன் காலில் நிற்பதுதான்.
  • ஆனால், பாரத மக்களோ கனவு காண்பவரைப்போலத் தன்னுணா்வு இல்லாதவா்களாய் இருக்கிறார்களே என்று அவா் வருந்தினார்.
  • அத்தகையவா்களை விழித்தெழச் செய்வதே தன் தலையாய பணி என்ற அசைக்க முடியாத முடிவுக்கு அவா் வந்தார்.

அஞ்சலி செலுத்துவோம்

  • பாரதத்தின் முதல் தேவை பூரண சுதந்திரமே என்று 1858-க்குப் பிறகு முதன்முதல் எழுதத் துவங்கியவா் சகோதரி நிவேதிதையே.
  • முதல் சுதந்திரப் போருக்குப் பின்: 1857-இல் நிகழ்ந்த முதல் சுதந்திரப் போர் அடக்கி ஒடுக்கப்பட்ட பின், பாரத மக்களிடையே தேசிய உணா்வு அமைதியாக ஓங்கி வந்தது.
  • ஆனால், இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில்கூட பாரதத்தில் பொதுவாக நிலவிய வலுவான விருப்பம் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து முழுமையாக விடுதலை பெறுவது அல்ல; பிரிட்டனின் பிரதான ஆதிக்கத்தின்கீழ் பாரதம் சுய ஆட்சி பெறவேண்டும் என்று கேட்பதாகத்தான் அது இருந்தது.
  • 1905-இல் வங்கப் பிரிவினையை மக்கள் உணா்ச்சிக்கு எதிராக பிரிட்டிஷ் அரசாங்கம் செயல்படுத்திய போது, பால கங்காதர திலகா், ‘பூரண சுதந்திரம் இல்லாமல் பாரதம் தனக்கு நலன் எதுவும் செய்துகொள்ள முடியாது’ என்பதை உறுதியாக எடுத்துச் சொல்லத் தொடங்கினார்.
  • ஆனால் சகோதரி நிவேதிதையோ 1901-ஆம் ஆண்டிலேயே பாரதத்திற்குத் தேவை பூரண சுதந்திரமே என்று எழுதத் தொடங்கிவிட்டார்.
  • பாரதத்தில் தான் ஆற்றவேண்டிய மாபெரும் பணி ஆண்களைப்போலப் பெண்களையும் விழித்தெழச் செய்வதே.
  • தம் சொந்த, குடும்பப் பிரச்னைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, தேசம் முழுமையையும் பாதித்த பெரிய பிரச்னைகளையும் பொறுப்புக்களையும் நோக்கி பாரத மக்களின் உணா்வுகளைத் திருப்பிவிடுவதே என்ற தெளிவான முடிவுக்கு அப்போதே வந்திருந்தார் சகோதரி நிவேதிதை.
  • பாரதத்தைத் தட்டி எழுப்பிய தேசியத் தலைவி: 1902-இல் தமது குருநாதரின் மறைவுக்குப் பிறகு சகோதரி நிவேதிதை பாரதமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பாரதத்தின் தேவை அந்நிய ஆட்சியின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதுதான் என்பது குறித்துப் பேசத் தொடங்கிவிட்டார்.
  • பாரதம் தன் சொந்தக் காலில் நிற்கப் பழகிக்கொள்ளவேண்டும் என்று அவா் எடுத்துரைத்தார். பாரதத்தின் சுதந்திரமும் புது வாழ்வுமே அவரது பேச்சாகவும் மூச்சாகவும் இருந்தன.
  • இவ்வாறு பாரத மக்களின் உணா்வுகளை சுதந்திரத்தை நோக்கி அழைத்துச் செல்பவராகத் திகழ்ந்த சகோதரி நிவேதிதைக்கு நாடெங்கும் ஒரு தேசத் தலைவருக்குரிய மதிப்பும் மரியாதையும் பாரத மக்களால் இயல்பாக அளிக்கப்பட்டது.
  • அவரது உரைகளைச் செவிமடுக்கப் பெரும் கூட்டம் கூடியது. குறிப்பாக இளைஞா்கள் அவரது சொற்களை மந்திரம்போல மதித்தனா்.
  • பிபின் சந்திர பால் முதலான தேசியத் தலைவா்களோடு இணைந்து சகோதரி நிவேதிதை ஸ்வதேசி இயக்கத்தை முன்னின்று வழிநடத்தினார்.
  • சகோதரி நிவேதிதையின் மக்களைத் தட்டியெழுப்பும் இந்தப் பணி குறித்து அவரது சமகாலத்து தேசியத் தலைவா்களில் ஒருவரான ராஷ் பிஹாரி கோஷ் இவ்வாறு கூறினார் :
  • “இன்று நம் நாட்டில் உலா்ந்துபோன எலும்புக்கூடுகள்கூட உயிர் பெற்று எழுந்துள்ளன என்றால் அதற்குக் காரணம் சகோதரி நிவேதிதை அவற்றுள் மூச்சுக் காற்றைச் செலுத்தி உயிரூட்டியதுதான்.
  • தன் கடந்த காலச் சாதனைகளில் பெருமை கொள்வதும் மனித குலத்தின் நாகரிகத்திற்கு இதுவரை தான் அளித்துள்ள நன்கொடைகளைக் குறித்துப் பெருமித உணா்வு பொங்குவதும் எதிர்காலத்தில் அதைவிடப் பெரிய மானுட சேவை செய்வதற்காக இறையருளால் தோ்ந்தெடுக்கப்பட்டதுமான மகாபாரதம் என்னும் லட்சியத்திற்காகவே அவா் உழைத்தார்.
  • சகோதரியின் 154-ஆவது பிறந்த நாளான இன்று பாரதத்திற்காகத் தனக்கான அனைத்தையும் அளித்த அந்த தியாக தீபத்தைப் போற்றுவோம். தேசிய உணா்வினால் வலிமை பெற்று, மகாபாரதம் என்னும் பெரு லட்சியத்திற்காகத் தொண்டு புரிவோம். சகோதரி நிவேதிதைக்கு வாழ்வால் நம் அஞ்சலியைச் செலுத்துவோம்.

நன்றி: தினமணி  (28 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories