TNPSC Thervupettagam

சுவீடன்: பள்ளிக்கல்வியில் அரசியல் பாடம்

November 27 , 2022 509 days 331 0
  • இந்தக் கட்டுரைத் தொடர் தொடங்கும்போது, ஃபின்லாந்து மட்டுமல்ல நோர்வே, சுவீடன், டென்மார்க் நாடுகளிலும் பள்ளிக்கல்வித் துறை மற்றும் சமூக அமைப்புகளில் பொது ஒற்றுமைத்தன்மை உண்டென விளக்கியிருந்தேன். அவைகளில், ஜனநாயக விழுமியங்களை உள்ளுணர்ந்தச் சமூக அமைப்பும் ஒன்று. காலனியாதிக்கத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பெரும்பாலுமான நாடுகள் இழந்தவற்றில் முதன்மையானது வெளிப்படையான சமூக ஜனநாயகக் கட்டமைப்பும் தாய்மொழி உணர்வும்!
  • நோர்வே நாடு, டென்மார்க் கட்டுப்பாட்டில் 400 ஆண்டுகளும், சுவீடன் கட்டுப்பாட்டில் 100 ஆண்டுகளும், அதேபோல ஃபின்லாந்து சுவீடன் கட்டுப்பாட்டில் 600 ஆண்டுகளும் ரஷ்யா கட்டுப்பாட்டில் 100 ஆண்டுகளும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தும் தங்களின் தாய்மொழியையும் சமூகத்தின் ஜனநாயக அமைப்பையும் கட்டிக்காத்து உள்ளதை 15 ஆண்டுகளாக நேரில் கண்ட தருணங்களில் எல்லாம் கல்வித் துறைக்கும் இவற்றுக்குமான தொடர்புகளைத் தேடியதன் விளைவே எனது முந்தைய நூலான ‘தாய்மொழிக் கல்வி’யை எழுதியிருந்தேன்.
  • இந்தக் கட்டுரையில், கல்வித் துறையில் இந்நாடுகள் பின்பற்றும் ஜனநாயகக் கருத்துருவாக்கப் பாடங்கள் குறித்தான செய்திகளைக் காண இருக்கிறோம். மிகச் சமீபத்தில் எங்கள் மூத்த மகன் 6ஆம் வகுப்பு பயிலும் பள்ளியில் நடந்த தேர்தல் ஒன்றினைக் காண்போம். தொடக்கப் பள்ளியில் 6ஆம் வகுப்பு வரை இருக்கும். அதன்பிறகு, அடுத்த படிநிலை வகுப்பிற்காக நடுநிலைப் பள்ளிக்குச் செல்வார்கள். 
  • பள்ளிக்கல்விக் காலங்களில் அரசியல், சமூகம், உலக ஓட்டங்கள் சார்ந்த பல்வேறு செய்திகளைக் குழந்தைகளுக்கு எளிதாக புரியும் வண்ணம் நோர்டிக் நாடுகளில் செய்முறைப் பயிற்சிகளை வழங்குவார்கள். அதன்படி, தேர்தல் அரசியல் கட்சிகள் சார்ந்தும் பயிற்சிகளின் வழியே கற்றுக்கொடுக்கிறார்கள்.

சுவீடன் பள்ளியில் அரசியலும் தேர்தலும்

  • தேர்தல் பிரச்சாரங்களின்போது வணிக வளாகங்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் அரசியல் கட்சிகள் தங்கள் பிரதிநிதிகளை நிறுத்தி தொடர்ந்து பிரச்சாரங்களை மேற்கொள்வர். அப்போது எங்கள் மகனின் வகுப்பில் உள்ளவர்களை வீதி உலா அழைத்துச் சென்று, அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மக்களிடம் பழகும் விதம், பிரச்சாரங்கள் மேற்கொள்ளும் விதம், என்னென்ன அரசியல் பேசுகிறார்கள் என்பதைக் கவனிக்க வைத்திருக்கின்றனர்.
  • அதன் பிறகு தொடக்கப் பள்ளியில் இறுதி ஆண்டு படிக்கும் 6ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்குள் கட்சிகளை உருவாக்கியுள்ளனர். எங்கள் மகனும் அவன் வகுப்பு நண்பர்களும் சேர்ந்து உருவாக்கிய கட்சி, விளையாட்டுக் கட்சி என்று சொன்னார். அவரது வகுப்புத் தோழர்கள் உருவாக்கிய ஏனைய கட்சி, உணவுக் கட்சி, பள்ளி வளாகக் கட்சி, நிர்வாகக் கட்சி. ஒவ்வொரு குழுவும் தங்களுக்குள் விவாதித்து, பள்ளியில் இருக்கும் ஏனைய தொடக்கப் பள்ளி மாணவ மாணவிகளிடம் ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சிக்கு வாக்களித்தால் என்னென்ன செயல்பாடுகளைப் பள்ளி நிர்வாகத்திற்குக் கொண்டு செல்வோம் என்பதை விளக்கம் கொடுத்து பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.
  • விளையாட்டுக் கட்சி, விளையாட்டுகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் தொடர்பான பள்ளிகளின் செயல்பாடுகள் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும் உணவுக் கட்சி பள்ளியில் வழங்கப்படும் உணவுகள் தொடர்பாகவும் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்தும் பள்ளி வளாகக் கட்சி வகுப்பறைக்கு வெளியே ஆசிரியர் ஆசிரியர்களின் செயல்பாடுகளில் வர வேண்டிய மாற்றங்கள் குறித்தும் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டு மோதிக்கொண்டன, நிர்வாகக் கட்சி தங்கள் பள்ளி நிர்வாகத்தைத் தாங்கள் நடத்தினால் எதனையெல்லாம் செய்வார்கள் என்றும் விவாதித்ததாக எங்கள் மகன் விளக்கிக் கூறினார்.
  • அடுத்த கட்டமாக, தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்து தேர்தலும் நடந்திருக்கிறது. முடிவைப் பற்றி நாங்களும் கேட்கவில்லை, அதனை இங்கே சொல்லப்போவதும் இல்லை. நோர்டிக் நாடுகளில் ஜனநாயகம் கற்றுக்கொடுக்கும் விதம் தொடர்பான பேச்சு திசை மாறி, சுவீடனின் பள்ளிக் குழந்தைகள் எதனை விரும்பி வாக்களித்தார்கள் என விவாதம் மாறிவிடுமோ என்ற அச்சமும் காரணம்.
  • இந்த ஜனநாயகம் எத்தகையதாக வளர்ந்த தலைமுறையினரிடம் உள்ளது என்பதற்கான எனது நேரடி அனுபவம் நான் பணியாற்றிய சால்மர்ஸ் பல்கலைக்கழகத்தில் எங்கள் வேதியியல் பிரிவில் கண்டேன்.

சுவீடன் பல்கலைக்கழக ஜனநாயகம்

  • 2018, நான் சுவீடனில் சால்மர்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிக்குச் சேர்ந்திருந்தத் தொடக்கம் அது. சுவீடன் பல்கலைக்கழகமோ, நிறுவனங்களோ பெரும்பாலும் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையும் காலை 08:30 மணிக்கு குழு செயற்பாடுகள் குறித்தான விவாதம் நடக்கும். அவை நடக்கும் விதம் குறித்தான சீராய்வினை மேற்கொள்ளப் போகிறோம் என மின்னஞ்சல் வந்தது. குழுவின் பொதுக்கணக்கிற்கு வந்த அந்த அழைப்பில், முக்கியக் குறிப்பாக, ஆய்வுக் குழுத் தலைவர்கள், ஆய்வுத் திட்டத் தலைவர்கள், மூத்தப் பேராசிரியர்கள், மூத்த ஆராய்ச்சியாளர்கள் யாரும் கலந்துகொள்ளக் கூடாது எனவும் முதுநிலை ஆய்வு மாணவ, மாணவியர்கள், இளநிலை ஆராய்ச்சியாளர்கள், மற்றும் முனைவர் பட்ட ஆய்வு மாணவ, மாணவியர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம் என்றும், என்னைப் போன்று சமீபத்தில் இணைந்த முதுமுனைவு ஆராய்ச்சியாளர்கள் விருப்பப்பட்டால் கலந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
  • மூத்தப் பேராசிரியர்களும், குழுத் தலைவர்களும் சிறிய கலந்துரையாடல் கூட்டமே நடத்தினாலும் அதனை சீராய்வினை இளநிலை மாணவ, மாணவியர்கள் மேற்கொள்ளலாம் என்ற அளவிலான ஜனநாயகத்தன்மை அன்றைய பொழுதில் பெரிதும் ஈர்த்தது. அதுவும், அனைவருக்கும் தெரிந்தே, ஆய்வுக் குழுவின் கூட்ட அரங்கில், அலுவல் நேரத்தில் முறைப்படி அறிவிக்கப்பட்டு நடந்தது சிறப்பான செய்தியினை எனக்கு வழங்கியது.
  • அடுத்த வாரம், எங்கள் வாரந்திரக் கூட்டத்தில், ஆய்வுக் குழுத் தலைவர் சிரித்துக்கொண்டே, “எங்களுக்கு எதிராக என்னவெல்லாம் குண்டு இன்று வெடிக்கப்போகிறது” என வினவித் தொடங்கிவைத்தார். சீராய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினை முனைவர் பட்ட ஆய்வு மாணவி ஒருவர் வாசித்தார், அதற்கு விவாதம் தேவைப்பட்டால், தாராளமாக முதலில் குழுத் தலைவர்களும் பேராசிரியர்களும் தனியேக் கூடிப் பேசிவிட்டு, அனைவரோடும் கலந்து விவாதிக்க நாள், நேரம் குறித்துச் சொல்லலாம் என்றும் அம்மாணவி முடிவுரை வழங்கினார்.
  • இளநிலை ஆராய்ச்சியாளர்களும் மாணவ, மாணவிகளும் கலந்துகொண்ட சீராய்வுக் கூட்டத்தின் முடிவில் முக்கியமான தீர்மானம், “குழுத் தலைவர் தலைமை தாங்கி நடத்தும் வாராந்திரக் கூட்டம் நேரம் ஒழுங்கின்மையோடு நடக்கிறது” என்ற குற்றச்சாட்டும் இருந்தது. அதற்கு, தலைமை பேராசிரியர் ஒருவர் வாராந்திரக் கலந்துரையாடல் கூட்டத்தினை அடுத்தடுத்த வாரங்களில் நடத்தலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டது.

ஜனநாயக மதிப்பினை வழங்கும் அடிப்படைக் கல்வி

  • பல்வேறு மொழி, இன, பண்பாட்டுப் பின்னணியில் இருந்து சுவீடன், ஃபின்லாந்து, நோர்வே, டென்மார்க் நாடுகளுக்குக் கல்விப் பயிலவரும் குழந்தைகளுக்கு இடையேயான தொடர்பாடலைச் சமத்துவப்படுத்துவதன் வழியாகவும், உரையாடல்கள், விவாதங்களை வளர்ப்பதன் வழியாகவும், அவரவர் கருத்தினை பிறர் மீது திணிக்காத வகையிலும் எவர் ஒருவரின் எதிர் கருத்தையும் உள்வாங்கும் நிதானத்தையும் கற்றுக்கொடுப்பதற்கு என களமாக பள்ளியினை வரையறுத்து, அதற்கேற்ற வகையிலான ஆசிரியர் பயிற்சிகளையும், குறிப்பாக, சமூகக் கட்டமைப்பு சார்ந்த கோட்பாட்டு வடிவிலான பாடங்களோடு, கள ஆய்வுச் செயற்பாடுகளையும் நிறைவுசெய்திருத்தல் வேண்டும்.
  • எங்கள் மூத்த மகனிடம் அவரது வகுப்பறைகளின் செயற்பாடுகளைப் பற்றி வினவியபோது, அவர் சொன்னவற்றைத் தொகுத்தால், ‘ஒரு வகுப்பறையின் குழந்தைகள் பல்வேறு மாறுபட்ட சமூகப் பின்னணியில் இருந்து வந்திருக்க வாய்ப்புள்ளதால், அவர்களுடனான உரையாடலைத் தொடர்ந்து நிகழ்த்துவதோடு, ஆசிரியரின் முன்னிலையில் குழந்தைகள் பல்வேறு விவாதங்களை மேற்கொள்ளும் வகையில் வகுப்பறையை அமைத்துக்கொள்கிறார்கள்’ என்பது எனக்கு புலனாகியது.
  • தொடர்ந்து ஒரே ஆசிரியர் ஒவ்வொரு பள்ளி ஆண்டிலும் அதே குழுவினரோடு தொடர்ந்து இயங்கும்போது, ஆசிரியர் - மாணவப் பிணைப்பினால், தனிப்பட்ட ஒவ்வொரு குழந்தைகளின் உளவியலையும் ஓர் ஆசிரியர் கற்று அதற்கேற்ற வகையில் வாத-விவாதக் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, வகுப்பறை ஜனநாயகத்தை நிலைநாட்டுகிறோம் என பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பில் என் கேள்விக்கு எங்கள் குழந்தைகளின் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
  • பல்வேறு கலாச்சாரக் குழந்தைகளின் சமத்துவமாக மதிப்பதின் வழியாகவும் வகுப்பறை ஜனநாயகச் செயற்பாடுகளின் வழியாக மட்டுமே கல்வி ஜனநாயகத்தை (Educational Democracy) உணரவைத்து, சமூக ஜனநாயகத்தை (societal democracy) நிலைநாட்ட முடியும் என சுவீடன் பள்ளிக்கல்வியின் ஜனநாயகப் போக்குக் குறித்தான் ஆய்வறிக்கைகளும் பள்ளிக்கல்விச் சட்டங்களும் ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றன.

நன்றி: அருஞ்சொல் (27 – 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories