TNPSC Thervupettagam

சென்னையில் தொடர்மழை உணர்த்தும் பாடங்கள்

November 8 , 2021 911 days 397 0
  • சென்னையில் கடந்த சனிக்கிழமையன்று இரவு தொடர்ந்து பெய்த மழையால் மாநகரத்தின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சில இடங்களில், தேங்கி நிற்கும் தண்ணீரில் கழிவுநீரும் கலந்துள்ளது.
  • சில பகுதிகளில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சாலையில் தேங்கி நிற்கும் நீரால் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுவிட்டன.
  • பொழுது விடிவதற்குள் சென்னையின் முன்னாள் மேயரும் இந்நாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் கூவம் ஆற்றின் கரையோரப் பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார்.
  • முதல்வர் மு.க.ஸ்டாலினும் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
  • நிலைமை சீராவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்று ஆறுதல்கொள்ள நேர்ந்தாலும், பருவநிலை மாற்றங்களின் எதிர்பாராத பாதிப்புகள் குறித்து இன்னும் நாம் போதுமான அளவில் திட்டமிடவும் செயல்படவும் இல்லை என்பதையே இந்த ஒருநாள் இரவு பெய்த மழை உணர்த்தியிருக்கிறது.
  • 2015-க்குப் பிறகு, சென்னையில் பெய்திருக்கும் பெருமழை இது என்று கூறப்படுகிறது. நுங்கம்பாக்கம் உள்ளிட்ட சில இடங்களில் 20 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்துள்ளது.
  • அதே நேரத்தில், சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் அதே அளவு கனமழை பொழிய வில்லை. பல இடங்களில் தொடர்ச்சியான தூறலும் லேசான மழையும்தான் பெய்துள்ளன.
  • தண்ணீர் தேங்கியிருப்பதற்கான முக்கியமான காரணங்களில், மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்பதும் வாய்க்கால்களின் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை என்பதும் உள்ளடக்கம்.
  • பருவமழைக் காலம் என்று முன்கூட்டியே திட்டமிட்ட காலமெல்லாம் அநேகமாக முடிந்து விட்டது. எதிர்பாராத பெருமழைகளை ஆண்டின் எந்த மாதத்திலும் சந்திக்க நேரிடலாம் என்பதையே கேரளம் தொடங்கி, உலகளாவிய இயற்கைப் பேரிடர்கள் அனைத்தும் உணர்த்துகின்றன.
  • ஆனாலும், நம்முடைய திட்டமிடல்கள் பருவமழைக் காலங்களை மட்டுமே கருத்தில் கொள்வதாகவும் எதிர்பாராத பெருமழைகளைக் கருத்தில் கொள்ளாததாகவுமே இருக்கின்றன.
  • மாறிமாறி எந்த அரசு வந்தாலுமே பாதாளச் சாக்கடைகளையும் மழைநீர் வடிகால்களையும் பராமரிப்பதில் மேல்பூச்சான வேலைகள்தான் நடக்கின்றனவேயொழிய அடைப்புகள் முழுமையாக நீக்கப்படுவதும் பணிகள் முழுமையாக நடைபெறுவதும் இல்லை என்பதுதான் உண்மை.
  • சென்னைக்குக் குடிநீர் ஆதாரங்களாக இருக்கும் ஏரிகள் தங்களது கொள்ளளவை எட்டிவிட்டன. அதன் காரணமாக, முன்னறிவிப்புடன் நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.
  • அறிவிப்புகள் இன்றி மாநகர எல்லைக்குள் ஓடும் ஆறுகளில் தண்ணீரை வெளியேற்றி, அதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளான அனுபவங்கள் இனி எப்போதும் அமையாது என்று நம்புவோம்.
  • ஆனால், ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும்போது, குடியிருப்புப் பகுதிகளிலிருந்து செல்லும் மழைநீர் வடிகால்களிலிருந்து தண்ணீர் ஆற்றுக்குள் இறங்குவதில்லை. எனவே, தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுவது மேலும் சிக்கலாகிறது.
  • தண்ணீர் தேங்கி நிற்பதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்குவதோடு சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டு தொற்றுநோய்கள் பரவும் அபாயங்களும் காத்திருக்கின்றன.
  • அரசின் பல்வேறு துறைகளும் ஒன்றிணைந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் நிலைமை ஒன்றிரண்டு நாட்களில் சரியாகிவிடும். என்றாலும், அரசின் திட்டமிடல்கள் எதிர்பாராத பெருமழைகளையும் எப்போதும் கணக்கில்கொள்ள வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (08 - 11 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories