TNPSC Thervupettagam

செல்வத்தைப் பகிர்ந்திடும் ஜப்பான் திட்டம் எடுபடுமா?

October 22 , 2021 938 days 433 0
  • ஏழைகள் மேலும் ஏழைகளாகவும், பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாகவும் மாறுவதைத் தடுக்க புதிய திட்டத்தை முன்மொழிந்திருக்கிறார் ஜப்பானின் புதிய பிரதமர் ஃபியூமியோ கிஷிடா. இப்படி செல்வ வளத்தை, அதிகம் வைத்திருப்போரிடமிருந்து, தேவைப்படுவோருக்குப் பகிர்ந்தளிப்பதற்காகவே ‘தேசிய மறுபங்கீட்டு பேரவை என்ற அமைப்பையும் ஏற்படுத்தியிருக்கிறார்.
  • இதை ‘ஜப்பானின் புதிய வடிவ முதலாளித்துவம் என்று குறிப்பிடுகிறார் ஃபியூமியோ கிஷிடா. அமெரிக்காவில் துணை அதிபராக இருந்த அல் கோர் முன்னர் கூறி, உலக அளவில் பிரபலமாகிவிட்ட ஆப்பிரிக்கப் பழமொழியை நினைவுகூர்ந்தபடி இந்த அறிவிப்பை வெளியிட்டார் ஃபியூமியோ கிஷிடா. “வேகமாகப் போக விரும்பினால் தனியாகப் போ, நீண்ட தொலைவு போக விரும்பினால் துணையோடு போ! 

ஏன் இந்த அறிவிப்பு?

  • எல்லா நாடுகளுக்கும் ஒரே நீதிதான். தேர்தலை விரைவில் எதிர்கொள்கிறது ஜப்பான். விளைவாகவே இந்தப் புரட்சிகரமான அறிவிப்பை வெளியிட்டார் ஃபியூமியோ கிஷிடா. அதேசமயம், ஜப்பான் இதை அமலாக்கும்பட்சத்தில் உலகளாவிய தாக்கத்தை இது உண்டாக்கலாம்.

திட்டத்தின் சூட்சமம் என்ன?

  • பெருநிறுவனங்களிடம் அபரிமிதமாகக் குவியும் வளத்தை நாட்டு மக்கள் இடையே வழங்கி, அவர்களை மேலும் வலிமையுள்ளவர்களாக்குவதே இத்திட்டத்தின் சூட்சமம். இதுகுறித்து யோசிப்பதற்கான பிரதமர் தலைமையிலான குழுவில் ஜப்பானிய அமைச்சர்களும், தனியார் துறையைச் சேர்ந்த தொழில்துறைப் பிரதிநிதிகளும் இடம்பெறுகிறார்கள். இத்திட்டம் 30 லட்சம் கோடி யென் தொகையில் தீட்டப்படுகிறது.
  • குழந்தைகள் - பெண்களுடன் உள்ள குடும்பங்கள், முழு நேர வேலையில்லாத தொழிலாளர்களின் குடும்பங்கள், பள்ளி - கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் உள்ள குடும்பங்கள் ஆகியவற்றை அடையாளம் கண்டு நிதியுதவி வழங்கி, அவர்களைப் பொருளாதாரரீதியாக உயர்த்துவது இத்திட்டத்தின் முக்கியச் செயல்பாடாக இருக்கும். 

நிதியைத் திரட்ட வழி என்ன?

  • பெரும் பணக்காரர்களுக்குக் கிடைக்கும் வருவாய் மீது 20% வரி விதிக்கப்பட்டு அந்தத் தொகையை இதற்குப் பயன்படுத்த திட்டமிடுகிறார் ஃபியூமியோ கிஷிடா. ஜப்பானியர்களின் வருவாய் உயராமல் தேக்க நிலையில் இருப்பது குறித்துக் கவலைப்படும் அவர் இதற்காகவே முப்பது லட்சம் கோடி யென் மதிப்பிலான திட்டத்தை வகுத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார். 1960-ல் பிரதமர் ஹயாடோ இகேடா அறிவித்துச் செயல்படுத்திய ஊதியத்தை இரட்டிப்பாக்கும் திட்டத்தை அடியொற்றி தன் திட்டத்தைச் செயல்படுத்த அவர் முடிவுசெய்திருக்கிறார். அதேவேளையில் அரசின் வருவாயைவிட செலவு அதிகமாக இருப்பதால் ஏற்படும் பற்றாக்குறையைச் சரிக்கட்ட வரிகளை உயர்த்தவோ, புதிதாக வரிகளைப் போடவோ விரும்பவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

என்ன விளைவுகள் உண்டாகும்?

  • ஃபியூமியோ கிஷிடா சொல்வது அப்படியே செயலுக்கு வந்தால், பெரிய சாதனைதான் அது. ஜப்பான் நாட்டின் பொருளாதாரச் சுழற்சியில் பெரும் மேம்பாடு உண்டாகும். பெரும் பணக்காரர்களும், பெருநிறுவனங்களும் கண்டிப்பாக இதை எதிர்பார்கள். அதைத் தாண்டி இதை அவர் சாதிக்க வேண்டும். செல்வத்தைப் பங்கிடும் ஜப்பானின் இந்தத் திட்டம் பிற நாடுகளும் பின்பற்றத்தக்கதா என்ற கேள்விக்கு இதன் வெற்றி, தோல்விதான் பதில்.

நன்றி: அருஞ்சொல் (22 – 10 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories