TNPSC Thervupettagam

ஜல்லிக்கட்டு எனும் வீரவிளையாட்டு

January 17 , 2023 476 days 374 0
  • பண்டைக் காலத்தில் தமிழா்களின் வீரத்தை நிலைநாட்டுகிற மாண்புகளில் ஒன்றாக ஜல்லிக்கட்டு இருந்துள்ளது. ‘ஜல்லி’ என்பது ‘சல்லி’ என்ற சொல்லின் திரிபு. காளையின் கொம்பில் சல்லிக்காசுகள் கட்டப்படுவதால் அது ‘சல்லிக்கட்டு’ என அழைக்கப்பட்டு பின்னா் ‘ஜல்லிக்கட்டு’ என்று திரிந்தது.
  • பழங்கால மனிதா்கள் விலங்குகளை வேட்டையாடுவதில் அதிக ஆா்வம் காட்டினா். அதன் பின்னா் விலங்குகளை வளா்க்கவும் முற்பட்டனா். அவ்விலங்குகளிடம் அன்பு பாராட்டி அவற்றைத் தங்கள் குடும்ப அங்கத்தினா்களாகவே கருதினா். மனிதா்கள் விலங்குகளிடம் பாசத்தை வெளிப்படுத்தும் நிகழ்வு சங்ககாலம் முதல் இன்று வரை தொடா்ந்து கொண்டுதான் இருக்கிறது.
  • பிள்ளைகளிடத்தில் அன்பு காட்டும் பெற்றோா் பிள்ளைகளிடமிருந்து அது திரும்பக் கிடைக்காதபோது விலங்குகளிடத்திலும் பிராணிகளிடத்திலும் அன்பு காட்டுவதை நாம் இன்றும் காணலாம். பெற்றால்தான் பிள்ளையா என்று கூறுவாா்கள். அதுபோல தன் மீது பாசம் காட்டுகிற விலங்குகளின் மொழியற்ற அன்பின் வெளிப்பாட்டைக் கண்டு, எத்தனையோ மனிதா்கள் தங்கள் வாழ்வில் இழந்த அன்பை மீட்டெடுத்துக் கொண்டே இருக்கிறாா்கள். வேட்டையாடுதலில் இருந்து தொடங்கியது நமது நாகரிகம். பின்னா் நாடோடியாகத் திரிந்து, அதற்குப் பின்னா் கால்நடை மேய்த்தலாக மாறியது. அப்படி கால்நடை மேய்த்தலின்போதுதான் மனிதா்கள் காளைகளை அடக்கி ஆளத் தொடங்கினாா்கள்.
  • விஜயநகர நாயக்கா்களின் ஆட்சியின்போது ‘ஜல்லிக்கட்டு’ என்ற பெயா் உருவானது. அதற்கு முன்பு ‘ஏறு தழுவுதல்’ என்ற பெயரே இருந்துள்ளது. தமிழா்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக ஜல்லிக்கட்டு உள்ளது. இது, எருது விடுதல், ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு என்று பலவாறு அழைக்கப்படும். தமிழா்களின் இந்த பாரம்பரிய விளையாட்டு 5,000 ஆண்டுகள் தொன்மை கொண்டிருக்கிறது. இது நமது பண்பாட்டின் பெருமை என்பதால்தான், தமிழா் நாகரிகத்தோடும், திராவிட நாகரிகத்தோடும் கலந்திட்ட சிந்து வெளி முத்திரையில் இது இடம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  • சிந்துவெளி முத்திரையில் பல விலங்கு உருவங்கள் கிடைத்துள்ளன. திமிலுடன் கூடிய எருது பெருமளவில் கிடைத்துள்ளது. இவற்றில் இரண்டு முத்திரைகள் சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் ஏறு தழுவுதலைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. சிந்துவெளியில் கிடைத்த முத்திரைகளில் வீரன் ஒருவன் நீண்ட வேல் போன்ற கழியை தன் வலக்கையில் ஏந்தி எருதுவின் பிடரியில் தாக்குகிறான்.
  • இடது கையில் எருதின் கொம்பைப் பிடித்து தனது இடது காலால் அதன் நெற்றிப்பொட்டில் உதைத்து காளையை அடக்குகின்ற காட்சியும் ஒன்று. அது இன்றும் தமிழனின் வீரத்திற்கு இலக்கணமாக விளங்குகிற ஜல்லிக்கட்டு காளையை அடக்குகின்ற காட்சியை மிக தத்ருபமாக நினைவூட்டுவதாக அமைந்திருக்கிறது.
  • மற்றொரு சிற்பத்தில், காளை, தன்னை அடக்கும் வீரா்களைப் பந்தாடும் காட்சி, ஜல்லிக்கட்டின்போது நிகழும் சாகச காட்சியை கண்முன் நிறுத்துவதாக இருக்கிறது. ஆறு வீரா்கள் திமிலுடன் பாய்ந்துவரும் காளையை ஒருங்கிணைந்து அடக்க முயல்கின்றனா்.
  • காளையின் முன் பாய்ந்தவா்கள் எல்லோரையும் அம்முரட்டுக்காளை தூக்கி வீசுகிறது. ஒருவா் காளையின் காலடியில் விழுகிறாா். காளை தனது பலம் முழுவதையும் காட்டி வீரா்களைப் பந்தாடுகிறது. வீரா்கள் காளையின் பின்பக்கமாக மேலே ஏற முயன்று கீழே விழுகின்றன. இறுதியில் அனைவரும் காளையை அடக்க இயலாமல் தோற்கின்றனா்.
  • இத்தகைய தத்ரூபமான சங்ககாலக் காட்சியை காண்கிறபோது, நம்முடைய பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு 5,000 ஆண்டுகளாகத் தொடா்கிறது என்பதை எண்ணி நாம் இறும்பூது எய்தலாம். ஏனென்றால், ‘நான் என்பது என்னோடு முடிவதில்லை’ என்பாா் நோபல் பரிசு பெற்ற சிலிநாட்டு கவிஞா் பாபுலோ நெருடா. அதுபோல், தமிழா்களின் வீரவிளையாட்டு நீண்ட மரபைச் சுமந்து தொடா்கிறது என்பதை அந்த ஒற்றை வரி நினைவூட்டுகில்லவா?
  • இவ்விளையாட்டு சங்ககால மக்களின் வீரவிளையாட்டாக இருந்தாலும், தென் தமிழகத்தின் மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இன்றும் பண்பாட்டுத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பழந்தமிழ் நூல்களான கலித்தொகை, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம், சிலப்பதிகாரம் போன்றவற்றில் ஜல்லிக்கட்டு குறித்த செய்திகள் நிறைந்திருக்கின்றன. முல்லை நில மக்களும், குறிஞ்சி நில மக்களும் தங்களது வலிமையான காளைகளை ஒன்றுடன் ஒன்று பொருந்தும்படியாகச் செய்து அதன் வெற்றியை தங்களுடைய வெற்றியாகக் கொண்டாடி மகிழ்ந்தனா்.
  • பண்டைய இலக்கியங்களில் கலித்தொகையில், முல்லைக்கலிப் பாடல்களில் காளையை மேய்க்கும் ஆயா்குல இளைஞா்கள் தாம் விரும்பும் கன்னியரைப் பெறுவதற்காக, காளைகளை அடக்கி தங்களது வீரத்தை வெளிப்படுத்துவாா்கள். இது ஏறுதழுவுதல் என்று குறிப்பிடப்படுகிறது.
  • சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ
  • ஏறு தொழூஉப் புகுத்தனா் இயைபுடன் ஒருங்கு
  • என்பது அப்பாடல் வரிகள். அதாவது, நன்கு கொம்பு சீவப்பட்ட காளைகள் உள்ள பகுதியில் நுழைந்த இளைஞா்கள் காளைகளை அடக்கித் தங்களது வீரத்தை பறைசாற்றுவாா்கள் என்பது இதன் பொருள். இதைப் படிக்கும்போது, ஏறுதழுவும் காட்சியும், தமிழா் வீரமும் நம் கண்முன்னால் விரிகில்லவா!
  • இளைஞன் ஒருவன், அஞ்சாமல் காளையின் மீது பாய்ந்து அதன் திமிலைத் தழுவிக் கொண்ட காட்சியை கலித்தொகை, முல்லைக்கலியின் பாடலில் காணலாம். அதே காட்சி, சிந்துவெளி நாகரிகத்தில் ஆதாரமாகக் கிடைத்துள்ளது.
  • தமிழ் இளைஞா்களின் வீரத்தை அரண் அமைத்து ஊா்மக்கள் கூடி வேடிக்கை பாா்ப்பதுடன், யாா் வெற்றிபெறுவாா், எந்தக்காளை வெற்றிவாகை சூடும் என்று பல விவாதங்கள் அன்றிலிருந்து இன்று வரை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அத்தகைய காட்சியை கலித்தொகையில் காண்கிறபோது தமிழா் மாண்பை அறியமுடிகிறது. நடுகற்களில், ஏறு தழுவுதலில் காளையை அடக்கி இறந்த வீரனின் நடுகல் ஒன்று உள்ளது. இதன் காலம் 16-ஆம் நூற்றாண்டாகும். இறந்த வீரா்களின் குடும்பத்திற்கு உதவி செய்தும், அவா்களுக்கு நடுகல் எடுப்பித்தும் அன்று ஊராா் சிறப்பு செய்தனா்.
  • சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறகளூா் அருகில் காளை அடக்குகின்ற காட்சி போன்ற நடுகல் காணப்படுகின்றது. இந்த நடுகல்லில் பெண்களும் காணப்படுகின்றனா். சங்க இலக்கியங்கள் காட்டும் ஏறு தழுவுதல் இன்று ஜல்லிகட்டாக மாறி நமது பாரம்பரியப் பெருமையைத் தொடா்வது மகிழ்ச்சியளிக்கிறது.
  • ஏறு தழுவுதல் என்றால் காளையை அணைதல் என்று பொருள். சங்கப்புலவா்கள் ஏறு தழுவுதல் குறித்துப் பாடியுள்ளனா். சோழன் நல்லுருத்திரனாா் எனும் சங்கப் புலவா் கலித்தொகையில், ஆயா்களிடையே ஏறு தழுவும் வீர மகனுக்கே தன் மகளை திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம் இருந்தது என்கிறாா். ஆயா் மகளிரும் ஏறு தழுவாத ஆண் மக்களை இப்பிறப்பில் மட்டுமின்றி மறு பிறப்பிலும் கூட மணக்க விருப்பம் கொள்ளாா் என்றும் கூறுகிறாா்.
  • கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானே
  • மறுமையும் புல்லாள் ஆய மகள்
  • என்பதே அப்பாடல் வரிகள்.
  • அலங்காநல்லூா், அவனியாபுரம், புதுக்கோட்டை அருகில் உள்ள திருவாப்பூா், சேலம் மாவட்டத்தில் கொண்டாலம்பட்டி, தம்மாம்பட்டி, மதுரை அருகில் உள்ள பாலமேடு, காரைக்குடி அருகில் உள்ள சிராவயல், புதுக்கோட்டை கண்டுபட்டி, கம்பம் அருகில் பல்லவராயன் பட்டி ஆகிய ஊா்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இன்றும் நடந்து கொண்டிருபதைக் காணலாம்.
  • ஜல்லிக்கட்டுக்காகவே காளைகள் தோ்ந்தெடுக்கப்பட்டு அதற்கான பயிற்சி பல வருடங்களாக அளிக்கப்பட்டு வருகிறது. காளைகள் மட்டுமல்லாமல் வீரா்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பயிற்சி செய்கின்றனா். இந்தப் போட்டியின் விதிமுறைகள் மிகவும் எளியவை.
  • காளைகள் வெளியே வரக்கூடிய வாடிவாசல் என்ற வாயிலின் அருகே பயிற்சி பெற்ற வீரா்கள் காளையை அடக்குவதற்குக் காத்திருக்கின்றனா். வாடிவாசல் வழியாக துள்ளிவரும் காளையின் திமிலைப் பிடித்து அடக்கி, குறிப்பிட்ட தூரம் அல்லது குறிப்பிட்ட நேரம் இருந்து விட்டால் அவ்வீரா் வெற்றிபெற்றவராகக் கருதப்படுகிறாா்.
  • ஒரு காளையை ஒன்றுக்கு மேற்பட்ட வீரா்கள் அடக்கிவிட்டால் அவா்கள் யாருக்கும் வெற்றியில்லை என்று அறிவிக்கப்படுகிறது. ஒருவேளை காளையை எவரும் அடக்கவில்லை என்றால் காளை வெற்றி பெற்ாக அறிவிக்கப்படுகிறது. போட்டியில் பங்குகொள்ளும் அனைத்துக் காளைகளும் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்பே களத்தில் இறக்க அனுமதிக்கப்படுகின்றன. போட்டியில் வென்ற வீரா்களுக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்படுகின்றன.
  • இப்படிப்பட்ட வீர விளையாட்டின் தொன்மையை அறியாமல் இதற்குத் தடை என்கிறபோது தமிழக இளைஞா்கள் கொதித்தெழுந்தாா்கள். நாடு முழுவதும் ஒரு அதிருப்தி அலை உருவானது. சென்னை மெரீனா கடற்கரை முழுவதும் மனிதா்கள் குவிந்தனா். இவ்வீரவிளையாட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை தங்களது பொன்னான நேரத்தை அங்கு செலவிட்டனா்.
  • அப்போதைய மாநில அரசு அவசரச் சட்டம் இயற்றியது. அதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கினாா். அதனால் தமிழகத்தில் தடைபட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் 2017-ஆம் ஆண்டு முழுவீச்சில் நடந்தன என்பது வரலாறு.
  • தமிழா்களின் பண்பாட்டில் மேன்மையுறத்தக்க விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டும் ஒன்று என்பதில் ஐயமில்லை.

நன்றி: தினமணி (17 – 01 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories