TNPSC Thervupettagam

ஜிஎஸ்டி தொடர்பான தீர்ப்பின் முக்கியத்துவம்

June 14 , 2022 698 days 477 0
  • ஜிஎஸ்டி தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்துவந்த உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஜிஎஸ்டி ஆணையத்தின் அதிகாரம் தொடர்பான விவாதத்தை உருவாக்கி இருக்கிறது. “ஜிஎஸ்டி ஆணையத்தின் பரிந்துரைகள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது” என்று தீர்ப்பு அளித்தது உச்ச நீதிமன்றம். இதற்கு வந்த எதிர்வினைகள்தான் மக்களிடத்தில் இந்தத் தீர்ப்பை எப்படிப் புரிந்துகொள்வது என்ற கேள்வியை உருவாக்கின.
  • தீர்ப்பு வந்தவுடன் ஒன்றிய அரசின் வருவாய் துறைச் செயலர் கருத்து தெரிவித்தார். “ஜிஎஸ்டி தொடர்பான அரசமைப்புச் சட்டம் மற்றும் சட்டங்களை மீண்டும் வலியுறுத்தி உள்ளது இந்தத் தீர்ப்பு. ஆக, இதுவரை செயல்பட்டதுபோலவே இனியும் ஜிஎஸ்டி ஆணையம் செயல்படும்” என்றார். ஆனால், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் இந்தத் தீர்ப்பு ஜிஎஸ்டி ஆணையத்தின் அதிகார மீறலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதாகவும், இது மாநில அரசுகளுக்கும், கூட்டாட்சிக்கும் கிடைத்திருக்கும் வெற்றி” என்றும் குறிப்பிட்டன.

ஒன்றிய அரசின் வாதம்

  • வெளியாகியிருக்கும் தீர்ப்பு தங்களுடைய நிலைப்பாட்டுக்கு இணக்கமானதுபோல கருத்துகளை வெளியிட்டது ஒன்றிய அரசு. ஆனால், அதற்கு மாறாகவே இந்த வழக்கின் விசாரணையில் அதன் வாதங்கள் இருந்தன.
  • ஒன்றிய அரசுக்காக வாதாடிய கூடுதல் சொலிசிடர் ஜெனரல், “ஜிஎஸ்டி தொடர்பான சட்டங்களை யார் இயற்றினாலும் ஜிஎஸ்டி ஆணையத்தின் பரிந்துரைகளுக்குக் கட்டுப்பட வேண்டும்” என்றார். அரசமைப்புச் சட்டம் 246ஏ பிரிவின்படி, ஒன்றிய, மாநில அரசுகள் நாடாளுமன்றம் / சட்டமன்றம் வழி ஜிஎஸ்டி சட்டங்களை இயற்றும் அதிகாரத்தைப் பெறுகின்றன. ஏதோ ஒன்றிய அரசும் மாநில அரசும் சமமான அதிகாரத்தைப் பெற்றிருப்பதான பார்வையை மேலோட்டத்தில் இது தந்தாலும், உண்மை சூழல் அதுவல்ல. ஜிஎஸ்டி ஆணையத்தின் பரிந்துரைகளை ஒன்றிய / மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்கிற நிலையானது, நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் ஆகியவற்றைக் காட்டிலும் மேம்பட்ட ஒரு நிலைக்கு ஜிஎஸ்டி ஆணையத்தை உயர்த்திவிடுகின்றன. இந்தச் சூழலே நிலவ வேண்டும் என்று நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதிட்டது. மேலும், அசாதாரணமான சூழலில் மட்டுமே ஜிஎஸ்டி குழுவின் பரிந்துரைகள் மீறப்படலாம் என்று ஒன்றிய அரசின் வழக்குரைஞர் வாதிட்டார். நீதிமன்றமோ தன் தீர்ப்பின் வழி அதை மறுத்திருக்கிறது!

பாரபட்சமான ஜிஎஸ்டி அமைப்பு

  • அரசமைப்புச் சட்டப் பிரிவு 246, ஜிஎஸ்டி தொடர்பான சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சமமாகக் கொடுப்பதால், இந்த இரண்டு அரசுகள் இயற்றும் சட்டங்களில் எது ஒன்றைக் காட்டிலும் எது ஒன்றும் மேலானது என்று சொல்ல முடியாது. அதேபோல, பிரிவு 279, ஜிஎஸ்டி ஆணையம் உருவாவதற்கும், அதன் செயல்பாடுகளுக்கும் வழிவகுக்கிறது.  இதன்படி ஒன்றிய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து கூட்டுறவாகச் செயல்பட ஏற்படுத்தப்பட்ட ஒரு மேடைதான் ஜிஎஸ்டி ஆணையம் ஆகும்.
  • ஆனால், நடைமுறையில் ஜிஎஸ்டி ஆணையம் மறைமுகமாக ஒன்றிய அரசின் விருப்பத்துக்கேற்ப ஆணையம் இயங்கும் வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது.  ஆணையத்தில் ஒன்றிய அரசுக்கு 33% வாக்குகள் உள்ளன. மற்ற 67% வாக்குகள் மாநிலங்களுக்கு இடையே சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.  ஜிஎஸ்டி ஆணையத்தில் ஒரு முடிவை உறுதிசெய்ய 75% வாக்குகள் வேண்டும். எனவே, எல்லா மாநிலங்களிலும் ஒப்புக்கொண்டாலும், ஜிஎஸ்டி ஆணையத்தின் முடிவை ஒன்றிய அரசு தன்னிச்சையாக வீழ்த்த முடியும்.
  • ஆக, இந்த வாக்கு முறையானது, ஜிஎஸ்டி ஆணையமானது ஜனநாயக முறையில் முடிவெடுப்பதைக் கடினமாக்குகிறது, மேலும், எல்லா மாநிலங்களுக்கும் சமமான வாக்குரிமை இருப்பதால், சிறிய மாநிலங்களின் வாக்குகளை – அவை தங்களுடைய அன்றாட இயக்கத்துக்குப் பெருமளவில் ஒன்றிய அரசின் மானிய உதவிகளைச் சார்ந்திருப்பதால் - எளிதாக ஒன்றிய அரசால் திரட்டிவிட முடியும், இதனாலும் ஜிஎஸ்டி ஆணையத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவது கடினமாகிறது.
  • பல நேரங்களில் ஜிஎஸ்டி ஆணையத்தின் வரிவிதிப்பில் உள்ள பொருளாதாரக் காரணங்கள் அல்லாமல் அரசியல் காரணங்களுக்காக வாக்குகள் சிதறி ஒருமித்த முடிவை எட்ட முடியாமல் செய்துவிடுகிறது.
  • ஒன்றிய அரசுக்கு எதிராக உள்ள கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பல சிக்கல்களையும் ஆணையக் கூட்டங்களில் எழுப்பும்போது, அந்தப் பிரச்சினைகளை ஒன்றிய அரசுக்கு ஆதரவான மாநிலங்கள் மௌனமாகப் புறந்தள்ளுகின்றன.  கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஜிஎஸ்டி வரியில் வருவாய் குறைவுக்கு ஈடுசெய்வதில் தொடங்கி, பல சிக்கல்களுக்கு பாஜக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மற்ற மாநிலங்கள் காணும் தீர்வுக்கான ஒத்துழைப்பைக் கொடுப்பதில்லை.

வழிகாட்டும் நீதிபதிகள்

  • ஜிஎஸ்டி தொடர்பான சட்ட வரைவை ஆராய 2013இல் நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழு கூடியது. அப்போதே, ஜிஎஸ்டி குழுவின் அதிகாரம் என்பது நாடாளுமன்றம் / சட்டமன்றம் ஆகியவற்றின் சட்டம் இயற்றும் அதிகாரத்தைக் குறைக்காதா?’ என்ற கேள்வி எழுந்தது. அப்போதைய ஒன்றிய அரசின் முதன்மை வழக்குரைஞர் “நிதி தொடர்பான நாடாளுமன்றம் / சட்டமன்றம் ஆகியவற்றின் அதிகாரங்கள் புனிதமானவை; அவற்றை ஜிஎஸ்டி ஆணையத்தால் குறைத்துவிட முடியாது!” என்ற கருத்தைத் தெரிவித்தார். ஆனால், ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு வந்த பிறகு, சூழலோ தலைகீழாக இருந்தது.
  • ஜிஎஸ்டி ஆணையமானது ஒன்றிய, மாநில அரசுகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும்போது, அந்த முடிவுகள் உடனடியாக ஏற்புடையதாகவும், செயல்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். எனவே, ஜிஎஸ்டி ஆணையத்தின் பரிந்துரைகளைக் கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்பது, அக்குழுவிற்கு வரிச் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை மறைமுகமாக வழங்கும் வழிமுறையாகும்.
  • இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், நாடாளுமன்றம் / சட்டமன்றம் போன்று மக்கள் பிரதிநிதிகள் கொண்ட ஜனநாயக அதிகாரம் உடைய அமைப்பாக ஜிஎஸ்டி ஆணையத்தை எடுத்துக்கொள்ள முடியாது.  ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் சமமான வாக்கு முறை இல்லாத ஜிஎஸ்டி ஆணையத்துக்கு வரி சட்டம் இயற்றும் அதிகாரத்தை மறைமுகமாக வழங்குவதுகூட ஜனநாயகத்திற்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது என்பது ஆகும்.
  • உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களுடைய 152 பக்க தீர்ப்பில் 50 பக்கங்களுக்கு மேல், ஜிஎஸ்டியின் அதிகாரம் தொடர்பில் விவாதித்துள்ளனர். இத்தீர்ப்பின் மூன்றாம் பகுதியானது, ஜிஎஸ்டி சட்டங்கள் உருவாகிய வரலாறு, ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உள்ள சமமான அதிகாரங்கள் என்று ஒரு நெடிய ஆராய்ச்சிக் கட்டுரையைப் போலவே வந்திருக்கிறது.
  • ஜிஎஸ்டி ஆணையத்தின் தீர்மானங்களைச் செயல்படுத்த வேண்டிய கட்டாயம் நாடாளுமன்றம் / சட்டமன்றம் ஆகியவற்றுக்கு இல்லை; ஒன்றிய, மாநில அரசுகள் சமமான அதிகாரத்துடன் ஜிஎஸ்டி வரிச் சட்டங்களை இயற்ற முடியும்; எனவே ஜிஎஸ்டி ஆணையமானது பரிந்துரைகளை வலியுறுத்த முடியுமே தவிர, பரிந்துரைகளைச் செயல்படுத்த கட்டாயபடுத்த முடியாது என்று அது உறுதிபட தெரிவிக்கிறது. மேலும், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் இடையே உள்ள சிக்கல்களைத் தீர்க்கத்தான் ஜிஎஸ்டி ஆணையம் என்ற மேடை தேவைப்படுகிறது என்றும் அது தெரிவிக்கிறது.
  • இதில் மிக முக்கியமான இன்னொரு விஷயம் என்னவென்றால், மக்கள் தங்களுடைய தனிச் சுதந்திரத்தைக் குறைத்துக்கொண்டு, சமூகச் சுதந்திரத்திற்கான சட்டங்களை இயற்றும் அதிகாரத்தைத் தங்கள் பிரதிநிதிகள் மூலம் நாடாளுமன்றம் / சட்டமன்றம் இரண்டுக்கும் அளித்துள்ளனர். இவ்வாறு மக்களிடமிருந்து நாடாளுமன்றம் / சட்டமன்றம் பெற்ற சட்டம் இயற்றும் அதிகாரத்தை இந்த அமைப்புகள் இன்னொரு அமைப்புக்குக் கையளிக்க முடியாது என்பதே இந்தத் தீர்ப்பு உள்ளடக்கியிருக்கும் அந்தச் செய்தியாகும்! இந்தத் தத்துவத்தை ஏற்றுக்கொண்டால், ஜிஎஸ்டி குழுவின் பரிந்துரைகள் ஒன்றிய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த முடியாது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

நன்றி: அருஞ்சொல் (14 – 06 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories