TNPSC Thervupettagam

தடுப்பூசி அறிவியல்

May 7 , 2021 1106 days 572 0
  • டிசம்பர் 2019-ல் கரோனா தலைகாட்ட ஆரம்பித்தது. ஜனவரி 2020-ல் அதன் மரபுக் கட்டமைப்பு அறியப்பட்டது. அடுத்த 10 மாதங்களில் தடுப்பூசிகள் தயாராகிவிட்டன.
  • இம்மாதிரி உயிர் காக்கும் மருந்துகள் மக்களைச் சென்றடைவதில் ஒரு சிக்கல் இருந்துவருகிறது. மருந்து நிறுவனங்கள் புதிய மருந்துகளைக் கண்டறியப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்கின்றன.
  • ஆய்வு வெற்றியடையும்போது நிறுவனங்கள் மருந்தின் கலவையையும் செய்முறையையும் பகிர்ந்துகொள்வதில்லை. எனவே, மருந்துகள் அதீத விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க முடிவதில்லை.
  • 1995-ல் உலக வணிக அமைப்பு உருவாக்கிய ஒப்பந்தம் இவர்களின் நலனைக் காக்கிறது. அறிவுசார் சொத்துரிமையில் வணிகம் தொடர்பான சட்டங்கள் (டிரிப்ஸ்) என்பது அந்த ஒப்பந்தத்தின் பெயர்.
  • டிரிப்ஸ் சட்டத்துக்கு ஆதரவாகச் சொல்லப்படும் வாதம், சிலர் பாடுபட்டு உருவாக்கிய அறிவுசார் சொத்து பகிர்ந்துகொள்ளப்பட்டால், நிறுவனங்களுக்குத் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபடும் ஆர்வம் இராது என்பதாகும்.
  • சில பொருளியல் அறிஞர்கள் இதற்கு ஒரு மாற்றை முன்வைக்கின்றனர். மனித குலத்துக்கு அவசியமான மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்குத் தக்க பரிசும் பணமும் பாராட்டும் வழங்கி அந்த அறிவைப் பொதுவுடைமை ஆக்கிவிட வேண்டும்.
  • அப்போது எல்லா நிறுவனங்களாலும் அந்த மருந்தைத் தயாரிக்க இயலும். ஆனால், அப்படி எதுவும் நடந்துவிடவில்லை.
  • இந்த முறை தடுப்பூசி ஆய்வுகள் தொடங்கியதிலிருந்தே அரசுப் பணத்தைப் பல நாடுகள் தாராளமாகச் செலவு செய்தன.
  • இதுவரை உலக அளவில் ரூ.7 லட்சம் கோடி பொதுப் பணம் செலவிடப்பட்டிருப்பதாக ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. ஆனாலும், இந்தத் தடுப்பூசிகளின் உரிமம் நிறுவனங்களின் கைகளில்தான் இருக்கிறது. எப்படி?

நிறுவனங்களும் உரிமமும்

  • மாடர்னா என்கிற தடுப்பூசியை உருவாக்குவதில் அந்த நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்ட நை-எய்ட், பார்டா ஆகிய ஆய்வு நிறுவனங்கள் அமெரிக்க அரசின் நிறுவனங்கள். எல்லாச் செலவையும் அரசே ஏற்றுக்கொண்டது. ஆனால், உரிமம் மாடர்னாவிடமே இருக்கிறது.
  • பைசர் அமெரிக்க நிறுவனம். அதனுடன் இணைந்து பணியாற்றிய பயோ-என்-டெக் என்கிற ஜெர்மானிய நிறுவனம், சீனாவிடமிருந்தும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும் நிதியுதவி பெற்றது.
  • எனினும் உரிமம் பைசரிடமே இருக்கிறது. ரஷ்யத் தடுப்பூசியான ஸ்புட்னிக் அரசு ஆதரவில்தான் உருவாகியது. இப்போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் இரண்டு தடுப்பூசிகளில் ஒன்று கோவிஷீல்ட்.
  • ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரஜெனகா என்கிற பிரிட்டிஷ் நிறுவனமும் இணைந்து உருவாக்கியது. இந்த உருவாக்கத்தில் 97% செலவினம் அரசால் ஏற்கப்பட்டது.
  • ஆனால், அதன் உரிமம் ஆஸ்ட்ரஜெனகாவிடம்தான் இருக்கிறது. தனது உரிமத்தை அது பல அயல்நாட்டு நிறுவனங்களுக்கு விற்றது.
  • அப்படித்தான் புனேயில் உள்ள இந்திய நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட், கோவிஷீல்டின் உரிமத்தைப் பெற்றது. சீரம் தனது மருந்தை ஒன்றிய அரசுக்கு ரூ.150-க்கு விற்றுவருகிறது. அதை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு இலவசமாக வழங்கிவருகிறது.

நாடு பயனுற வேண்டும்

  • ஏப்ரல் 19 அன்று ஒன்றிய அரசு ஒரு கொள்கை முடிவை அறிவித்தது. அதன்படி, 18 முதல் 44 வயதினருக்கான மருந்தை மாநிலங்களும் தனியார் மருத்துவமனைகளும் நேரடியாகக் கொள்முதல் செய்துகொள்ள வேண்டும்.
  • இப்போது சீரம் நிறுவனம் மாநிலங்களுக்கு ரூ. 300, தனியாருக்கு ரூ.600 என்று விலை வைத்திருக்கிறது. பிரிட்டிஷ் அரசின் முதலீட்டில், ஒரு பல்கலைக்கழகத்தில் உருவான தொழில்நுட்பம், இன்று இந்தியச் சந்தையில் ஒரு முதலாளிக்கு லாபம் ஈட்டித்தருகிறது.
  • இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் இன்னொரு தடுப்பூசி கோவேக்சின். இதன் தயாரிப்பாளர் பாரத் பயோடெக் எனும் ஹைதராபாத் நிறுவனம்.
  • இந்த மருந்தின் உருவாக்கத்தில் இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்துக்கு (ஐ.சி.எம்.ஆர்) கணிசமான பங்கு இருக்கிறது. இந்திய அரசின் நல்கையும் இருக்கிறது.
  • ஆனால், மேலை நாடுகளைப் போல அரசின் பங்கு எவ்வளவு என்பது பொதுத்தளத்தில் அறியக் கூடவில்லை. இந்த நிறுவனம், ஏப்ரல் 19-க்குப் பிறகு மாநிலங்களுக்கு ரூ.400, தனியாருக்கு ரூ.1,200 என்று புதிய விலைப்பட்டியலை அறிவித்திருக்கிறது.
  • கூடுதல் விலையானாலும் பரவாயில்லை, அவற்றை வாங்கி மக்களுக்கு இலவசமாகச் செலுத்துவோம் என்று தமிழகம், கேரளம், மஹாராஷ்டிரம் முதலான வளர்ந்த மாநிலங்கள் அறிவித்திருக்கின்றன.
  • ஆனால், சந்தையில் மருந்து இல்லை. ஒன்றிய அரசு இரண்டு உள்நாட்டு நிறுவனங்களுக்கும் ரூ.4,500 கோடி வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது.
  • அதைப் பயன்படுத்தி நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரிக்கும். ஆனால், அவை சந்தைக்கு வரத் தாமதமாகும். போதுமான அளவிலும் இருக்காது. மேலும் எந்த மாநிலங்களுக்கு வழங்குவது என்பதை நிறுவனங்களே முடிவு செய்யுமா என்பதும் தெரியவில்லை.
  • இந்தச் சூழலை எப்படி நேரிடுவது? பல வல்லுநர்கள் அரசுக்கு ஆலோசனை வழங்கிவருகின்றனர்.
  • இன்றளவும் பிள்ளைகளுக்கு அம்மை, காசநோய், போலியோ, நிமோனியா, நாய்க்கடி, மஞ்சள் காமாலை முதலிய நோய்களுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகளை ஒன்றிய அரசுதான் மொத்தமாகக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்குகிறது.
  • அதைப் போலவே இந்த கரோனா தடுப்பூசி மருந்தையும் ஒன்றிய அரசே நேரடியாக வாங்கி, மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும். ஏனெனில், ஒன்றிய அரசிடம்தான் நிதி, நிபுணத்துவம், அதிகாரம், அயலுறவு எல்லாம் இருக்கிறது.
  • இதைத் தாண்டி, மாநில அரசுகள் தடுப்பூசியை வாங்க விரும்பினால் அதற்கான சுதந்திரமும் அவற்றுக்கு இருக்க வேண்டும்.
  • மேலும், அரசு கோவிஷீல்டு முதலான மேலை நாட்டு மருந்துகளின் காப்புரிமையை வாங்கி, நமது பொதுத் துறை, தனியார் துறை மருந்து நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும்.
  • கோவேக்சினின் காப்புரிமையையும் கையகப்படுத்தி இன்னும் பல உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும்.
  • இந்தப் பெருந்தொற்றை எதிர்கொள்ள மக்களின் பணத்தில் அறிவியலர்கள் தடுப்பூசிகளை உருவாக்கியிருக்கிறார்கள்.
  • ஆனால், அவை வியாபாரிகளின் கைகளில் சிக்கிக்கொண்டிருக்கின்றன. இந்த மருந்துகளால் நாடு பயனுற வேண்டும். அதை நமது அரசுகளால் செய்ய முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (07 - 05 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories