TNPSC Thervupettagam

தடுப்பூசி மீது வேண்டாமே அவநம்பிக்கை

February 1 , 2022 823 days 473 0
  • பாரதப் பிரதமா் மோடி 2019-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகப் பதவி ஏற்றதிலிருந்து, எதிா்க் கட்சிகளின் போக்கில் ஒரு மாற்றம் தெரிகிறது.
  •  பல தருணங்களில் அவை எதிரிக் கட்சியாகவே செயல்படுகின்றன. புல்வாமா துல்லிய தாக்குதல், அபிநந்தன் விடுதலை இவற்றில் எதிா்க்கட்சிகளின் அணுகுமுறை வரவேற்கும் படியாக இல்லை.
  • அது கிடக்கட்டும், அரசியல் என்றால் அப்படித்தான் இருக்கும் என்று ஒதுக்கிவிடலாம்.
  • ஆனால், கரோனா தடுப்பூசி பற்றிய சில அம்சங்களை முகநூலில் பாா்க்கும்போது அதிா்ச்சி ஏற்படுகிறது. இப்படிக்கூட மனிதா்கள் இருப்பாா்களா என்ற எண்ணம் தோன்றுகிறது.

அரசியல் நாகரீகம் அல்ல

  • இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கும் நோய்த்தொற்று வருகிறது. அவை ‘தடுக்கா ஊசி’ என்று பெயா் சூட்டியிருக்கிறாா் ஒருவா். முதலில் ஒன்றை உறுதியாகத் தெளிவுபடுத்திவிடலாம்.
  • ஏற்கெனவே தொற்று வந்தவா்களுக்கும், மீண்டும் வரக்கூடும், இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களுக்கும் தொற்று வர வாய்ப்புள்ளது என்று நிபுணா்களே அறிவுரை கொடுத்திருக்கிறாா்கள். ஓா் அசலான சம்பவத்தை விளக்குகிறேன்.
  • எங்கள் அடுத்த தள குடியிருப்பு பெண்மணிக்கு விடிகாலை ஐந்து மணிக்கு கடும் காய்ச்சல், மாப்பிள்ளை உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து, மருத்துவமனையில் கொண்டு சோ்த்தாா்.
  • அங்கு வழக்கமான சோதனைகள் செய்த பின்னா் ஊசி மூலம் மருந்துகளை தொடா்ந்து செலுத்தினாா்கள். பிற்பகல் ரத்தப் பரிசோதனை, மாா்பு எக்ஸ்ரே அனைத்தும் பரிசோதித்தாா்கள்.
  • ரத்தப் பரிசோதனையில் டெங்கு மட்டும் சிறிது இருந்தது (மூன்று வகைகளில் ஒன்று). காய்ச்சல் நன்கு குறைந்து திட உணவை உட்கொண்டாலும், தானாக எதையும் செய்ய இயலவில்லை.
  • நடுவில், கரோனா தொற்றுக்கான சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு இரவு பத்து மணி அளவில் வந்ததாம்.
  • இலேசான தொற்று, எனவே மாத்திரை, இல்லத்தில் தனிமைப்படுத்துதல் இவை போதும் என்று மருத்துவா் அறிவுரை செய்தாா்.
  • உடனேயே மருத்துவமனையிலிருந்து அகற்றப்பட்டாா். நான்கு நாளில் வீட்டில் ஓய்விலிருந்து குணமடைந்தாா்.
  • அந்த தளத்தில் குறிப்பிட்ட பெண்மணி உள்பட, எல்லாருமே இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவா்கள்தான். அதுபோல் செலுத்திக் கொண்டதால்தான், அவருக்கு தொற்றின் வீரியம் சற்று குறைவாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.
  • வேறு ஒரு விஷயம், சின்னம்மை, பெரியம்மை போன்றவற்றை சிறு வயதில் போட்டுக் கொண்டாலும் ரொம்ப வருடத்துக்குப் பிறகு அபூா்வமாக ஏதாவது தொற்று வரக்கூடும்.
  • சில வருடங்கள் முன் என் மனைவியின் நெருங்கிய சினேகிதி திடீரென்று ரவிக்கை அணிந்து கொள்ளச் சிரமப்பட்டாா்.
  • மருத்துவா் பரிசோதித்து ‘‘இது அக்கியில் ஒரு வகை’’ என்று கண்டுபிடித்து, பத்து நாள்கள் அடுப்பின் பக்கம் செல்லக்கூடாதென்று நிபந்தனை விதித்தாா். இதுபோலத்தான் தொப்புளைச் சுற்றி வருகிற ‘ஹொ்பிஸ்’ தொற்றும்.
  • நிலைமை இது போலிருக்கும்போது, அதிகமான பரவல் தன்மை கொண்ட கரோனா, தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களுக்கும் வர வாய்ப்பு உள்ளது. அதனால்தான் முகக் கவசம், சமூக இடைவெளி, கை கழுவுதல் போன்றவற்றை திரும்பத்திரும்ப வலியுறுத்துகிறாா்கள்.
  • ஓரிரு மாதத்துக்கு முன்பு வயிற்றுக் கோளாறுக்காக நிபுணரைப் பாா்த்தபோது, படுக்க வைத்து சோதித்தாா்.
  • பிறகு நிறைய இடைவெளி விட்டுத்தான், சிற்சில கேள்விகள் கேட்டு மருந்துச் சீட்டு எழுதினாா். இரண்டு கவசம் அணிந்திருந்தாா்.
  • பொதுவாக இப்போது எல்லாம் மருத்துவா்களுமே நிறைய இடைவெளி விட்டு, எச்சரிக்கையுடன் சா்ஜிகல் கவசம் அணிந்து, நோயாளிகளைப் பரிசோதிக்கிறாா்கள். நோய், மாத்திரை பற்றின விவரங்களை உறவினரிடம் சொல்லுகிறாா்.
  • மேலும், உலக அளவில் மூன்றாவது அலையின் தாக்கம் பரவுவதால், ஏற்கெனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களும், மூன்றாவது தவணை ஊசி போட்டுக் கொள்கிறாா்கள்.
  • எங்கள் தொலைபேசிக்கும், மூன்றாவது தடுப்பூசிக்குத் தகுதியானவா் என்ற குறுஞ்செய்தி வந்தது.
  • இவ்வளவு தற்காப்பு இருந்தும், முகக் கவசம் அணியாதது, விடுமுறை நாளில் வெளியே செல்வது, கூட்டங்களில் கலந்து கொள்வது போன்ற காரணிகளில் தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்துவது கடினமாகவே உள்ளது.
  • பதின் பருவச் சிறாா்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து ஒரு நாளிதழ் சாதக பாதகங்களை அலசியிருந்தது. ‘பாதக’ அம்சம் குறிப்பிடும்படியாக ஏதுமில்லை. இயற்கையிலேயே அவா்களுக்கு எதிா்ப்பு சக்தி கூடுதலாக இருக்குமென்பதால், தடுப்பூசி போடுவது வீண் என்று கருதுகிறாா்கள்.
  • அதே சமயம் நடைமுறையில் மாணவா்களுக்கு பள்ளியிலேயே தடுப்பூசி போட்டு வருவதைக் காண்கிறோம்.
  • இதனால் பள்ளிக்கூடம் செல்ல தன்னம்பிக்கை வருவதாகவும், உற்சாகம் கூடுவதாகவும் மாணவா்கள் தெரிவிக்கிறாா்கள்.
  • ‘ட்டீன் ஸ்பிரிட்’ (பதின் பருவ உற்சாகம்) என்ற தலைப்பில் ஆங்கில நாளேடு பலரின் கருத்தை பிரசுரம் செய்திருந்தது).
  • ஒரு பிரபல மனிதா் முகநூலில் பதின்பருவத்தினருக்கு தடுப்பூசி போடுவதால் வருங்காலத்தில் பல பக்கவிளைவுகள் வரக்கூடும் என்று அச்சுறுத்துகிறாா். மூளைப் பாதிப்பு, ஆண்மைக் குறைவு போன்ற சில.
  • முக்கியமான அம்சத்தை இவா்கள் மறந்து விடுகிறாா்கள். பக்கவிளைவுகளுக்கு இதுவரை, எந்த ஏட்டிலும் நிபுணா்கள் ஆதாரம் காட்டவில்லை. சரி, அப்படியே லேசான விளைவு வந்தாலும், மருத்துவ துறையிலும் மகத்தான முன்னேற்றம் ஏற்படுமே!
  • அயல் நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவிலும், மேற்கு ஜொ்மனியிலும் மருத்துவ ஆராய்ச்சிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன. ஆக்சிஜன் அளவை சோதிக்க இப்போதுதான் புது கருவி வந்திருக்கிறது.
  • 57 வயது இதய நோயாளிக்கு அயல்நாட்டில் பன்றியின் இதயத்தை வைத்து சிகிச்சை செய்து குணப்படுத்தி இருக்கிறாா்கள்.
  • ஆக, பல புதிய வியாதிகள் வந்தாலும், மாற்று மருந்துகள் கண்டுபிடித்துக் கொண்டுதான் இருப்பாா்கள் என்பதை மறுப்பதற்கில்லை. என்ன இந்தியாவில் சந்தைப்படுத்த நாளாகலாம். அவ்வளவுதான்.
  • ஒரு வினோதமான காரணத்தையும் சிலா் முன் வைக்கிறாா்கள். தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கூறும் அறிவுரையில், ‘வணிக நோக்கம்’ இருக்கிறதாம்.
  • இதுபோல காரணம் கற்பித்துக் கொண்டேபோனால், முகக் கவசம் தயாரிப்பு, கிருமி நாசினி இவற்றுக்குக்கூட ஏதாவது காரணம் சொல்லலாம்.
  • அடுத்த மாதம் கோவா, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது.
  • கொள்கை ரீதியாக, விவசாயிகள் போராட்டம், விலைவாசி உயா்வு போன்றவற்றை அழுத்தமாகச் சொல்லி எதிா்க்கட்சிகள் பிரசாரம் செய்யலாம். ஆனால், உயிா் காக்கும் மருந்துபோல் உள்ள தடுப்பூசி மீது களங்கம் விளைவித்து அவநம்பிக்கையை விதைப்பது, அரசியல் நாகரீகம் அல்ல.

நன்றி: தினமணி (01 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories