TNPSC Thervupettagam

தனியார் துறையின் முதலீடு

September 22 , 2022 576 days 399 0
  • உலகப் பொருளாதார வல்லுநர்கள் இந்தியாவில் மிகப் பெரிய வளர்ச்சியை எதிர்பார்க்கிறார்கள். அந்நிய முதலீட்டாளர்களும் சரி, தொழில் நிறுவனங்களும் சரி தங்களுக்கு சாதகமான சந்தையாக இந்தியாவைக் கருதுகிறார்கள். சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களின் முதலாவது குறி இந்தியாவாகத்தான் இருக்கிறது. அதனால்தான் மோடி அரசு, ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்கு முன்னுரிமை வழங்கத் துடிக்கிறது.
  • மெக்கன்சி நிதி நிறுவனத்தின் தலைவர் பாப் ஸ்டெர்ன்ஃபெல்ஸ் சமீபத்தில் எழுதிய கட்டுரையில், இந்தியா குறித்த தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அடுத்த பத்து ஆண்டுகள் மட்டுமல்ல, நடப்பு 21-ஆம் நூற்றாண்டே இந்தியாவுடையது என்பது அவரது கணிப்பு. அதனால்தான், உலகப் பொருளாதாரம் மந்தநிலையில் தொடர்ந்தும்கூட, இந்தியாவுக்கு அந்நிய முதலீடுகள் வந்து கொண்டிருக்கின்றன.
  • அந்நிய முதலீடு தொடர்ந்து அதிகரித்து வந்தாலும்கூட, அதைப்போல உள்நாட்டு முதலீடுகள் அதிகரிக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம். இத்தனைக்கும், உள்நாட்டு உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. உற்பத்திசார் ஊக்குவிப்புத் திட்டம், வரிக் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் உள்நாட்டு நிறுவனங்களில் முதலீடுகளை அதிகரிக்கவும், ஈர்க்கவும் மேற்கொள்ளப்படுகின்றன. இருந்தும்கூட, உள்நாட்டு நிறுவனங்கள் புதிய தொழிற்சாலைகளிலும், உற்பத்திகளிலும் முதலீடு செய்யத் தயங்குகின்றன.
  • அதனால்தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனியார் துறையினர் மீது கோபப்படுகிறார். கடந்த பத்தாண்டுகளுடன் ஒப்பிடும்போது, முதலீட்டுக்கும், ஜிடிபிக்குமான விகிதம் 38%-லிருந்து 10%-ஆகக் குறைந்திருக்கிறது. ஜூன் 2022-இல் முடிவடைந்த காலாண்டில் புதிய முதலீடுகள் ரூ.3.57 லட்சம் கோடி. ஆனால், அதற்கு முந்தைய காலாண்டில் ரூ.5.91 லட்சம் கோடிக்கான புதிய முதலீட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. தனியார் துறை முதலீடுகள் ஏன் அதிகரிக்கவில்லை என்று நிதியமைச்சர் சமீபத்தில் நடந்த பொருளாதார மாநாட்டில்கூடக் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
  • உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் தயக்கம் காட்டுவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. அவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குத் தெரியாமல் இருக்காது. குறைந்த வட்டியும், அதிகரித்த அரசின் மூலதனச் செலவினங்களும் மட்டுமே தனியார் முதலீடுகளை ஈர்த்துவிடாது. மக்கள் மத்தியில் வாங்கும் சக்தி அதிகரித்து, கேட்பு அதிகரிக்கும்போதுதான் பொருளாதாரம் சுறுசுறுப்படையும். தடங்கலோ, தயக்கமோ இல்லாத சீரான வளர்ச்சி இருக்கும்போதுதான் தனியார் துறை துணிந்து முதலீடு செய்ய முற்படும் என்பது அனுபவம் கற்றுத்தந்திருக்கும் பாடம்.
  • இந்தியாவில் தனிநபர் வருவாய் கடந்த ஆண்டைவிடக் குறைந்திருக்கிறது. அதனால் வாங்கும் சக்தியும் குறைந்திருக்கிறது. போதாக்குறைக்கு, பணவீக்கம் விலைவாசி உயர்வைத் தூண்டி மக்களின் செலவழிக்கும் சக்தியை முடக்கி இருக்கிறது. அதிகரிக்கும் வட்டி விகிதம், தவணைகளை பாதித்து அன்றாடக் குடும்பச் செலவுகளைக் குறைக்கக்கூடும். அதன் விளைவாக, கேட்பு இல்லாமல் பொருளாதாரம் தேக்கமடையும்.
  • தனியார் துறையினர் முதலீடு செய்யவும், புதிய தொழில்கள் தொடங்கவும் ஏன் தயங்குகின்றனர் என்கிற கேள்வியை நிதியமைச்சர் தன்னிடமும், தனது நிதியமைச்சகத்திடமும் கேட்டிருக்க வேண்டும். அரசின் சுயபரிசோதனையில் அதற்கான மூல காரணம் வெளிப்படும். இந்தியாவின் மிகப் பெரிய பிரச்னை வேலையின்மை. அதற்குத் தீர்வு காண முடிந்தால், பொருளாதாரம் சுறுசுறுப்படைந்து முதலீடுகளும் அதிகரிக்கும்.
  • முதலீடுகள் இல்லாமல், புதிய தொழில்கள் தொடங்கப்படாததால்தான் வேலையில்லாத் திண்டாட்டம் காணப்படுகிறது என்கிற வாதம் பாதி சரி, பாதி தவறு. அது தகவல் தொழில்நுட்பத் துறையானாலும், நிதித்துறையானாலும், சேவைத் துறைகள் ஆனாலும் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், அந்த வேலைக்கேற்ற திறனும், தொழில்நுட்பமும் உள்ள இளைஞர்கள் நம்மிடம் இல்லை என்பது குறித்து மத்திய, மாநில ஆட்சியாளர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
  • கல்லூரிகள் அதிகரிப்பதும், பட்டதாரிகள் உருவாக்கப்படுவதும் அல்ல நம் தேவைகள். அந்தப் பட்டதாரிகள் எந்த அளவுக்குத் திறன்சார்ந்தவர்கள், தகுதியுடையவர்கள் என்பதுதான் முக்கியம். நமது கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கற்றுத் தரப்படும் கல்வியின் தரம் எத்தகையது என்பதுதான் கேள்வி.
  • இதற்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பதல்ல தீர்வு. உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களை, அரசின் எந்தவிதத் தலையீடும் இல்லாமல் சர்வதேசத் தரத்துக்கு உயர்த்துவதுதான் புத்திசாலித்தனம்.
  • நவீன பொருளாதாரத்தில், உழைக்கும் வர்க்கத்தின் உயர்கல்வித் திறன்தான் வளர்ச்சிக்கு ஊக்கசக்தி. உலகளாவிய நிலையில் திறமைசாலிகளை ஈர்ப்பதால்தான் அமெரிக்கா பொருளாதார வல்லரசாக இருக்கிறது. இத்தனை பொறியியல் கல்லூரிகள், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கியும்கூட, இன்னும் பல நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து பணி ஓய்வு பெற்றவர்களை வரவழைத்துக் கொண்டிருக்கின்றன என்பது நிதியமைச்சரின் கவனத்தைப் பெற வேண்டும்.
  • "ஸ்டார்ட் அப் இந்தியா', "மேக் இன் இந்தியா', "ஸ்கில் இந்தியா' போன்ற அறிவிப்புகள் மட்டுமே பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்திவிடாது. தொழில்துறையில் தேவைக்கேற்ற திறமைகளை உருவாக்காத கல்வித்துறை தொடரும்வரை, தனியார் முதலீடுகளும், வளர்ச்சியும் சாத்தியமல்ல.

நன்றி: தினமணி (22 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories