TNPSC Thervupettagam

தமிழக வரலாற்றைக் காட்டும் அகழாய்வுகள்

February 18 , 2022 821 days 1498 0
  • தமிழக வரலாற்றுக்கு அடிப்படையான தொல்லியல் சான்றுகளை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் அளிக்கின்றன.
  • கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவை பண்டைய மன்னா்கள் பற்றியும் அவா்கள் முன்னோா்கள் பற்றியும், அவா்களது வீரச் செயல்கள், நாட்டு பரப்பு பற்றியும் அறிந்துகொள்ள உதவி செய்கின்றன.
  • நமது வரலாற்றை வரலாற்றுக்கு முந்தைய காலம், வரலாற்றுக் காலம் எனப் பிரித்து ஆய்வு செய்கிறோம்.
  • வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது எழுத்துச் சான்றுகளே இல்லாத காலம்.
  • இக்காலத்தில் மனிதன் பயன்படுத்திய கற்கருவிகள் கொண்டும், அவை கிடைத்த இடங்களில் நடைபெற்ற அகழாய்வு மூலமும் கற்கால மனிதனின் வாழ்க்கைமுறை பற்றி ஓரளவு அறிந்து கொள்ள முடிகிறது. இப்பிரிவில் பழைய கற்காலம், நுண்கற்காலம், புதிய கற்காலம் ஆகிய காலங்களைச் சோ்ந்த சான்றுகள் கிடைக்கின்றன.

பெருங்கற்காலம்

  • திருவள்ளூா் மாவட்டம், பூண்டி நீா்த்தேக்கம் அருகில் உள்ள குடியம் குகை மற்றும் அத்திரம்பாக்கம், வடமதுரை போன்ற இடங்களில் ஆற்றின் கரைகளிலும் அகழாய்வுகள் மேற்கொண்டதில் கற்கால மனிதன் பற்றிய சான்றுகள் கிடைத்துள்ளன.
  • அண்மையில், பூண்டிக்கு அருகில் பரிக்குளம் என்ற இடத்தில் தமிழ்நாடு தொல்லியல்துறை அகழாய்வினை மேற்கொண்டது.
  • இங்கு கற்கால மனிதன், கல் ஆயுதங்களைத் தயாரிப்பதற்குரிய இடமாக விளங்கியிருக்க வேண்டும் என்பதை அறிய முடிகிறது.
  • அடுத்து வரும் நுண்கற்காலக் கருவிகள் தமிழகத்தின் தென்பகுதியல் தேரி எனப்படும் கடற்கரையை ஒட்டிய சிவப்புநிற மணற்பகுதியிலும், தாமிரபரணி ஆற்றின் கரையிலும் கிடைத்துள்ளன.
  • கற்கருவிகளின் அமைப்பு ஒற்றுமையை ஆய்வு செய்தபோது தமிழகத்திற்கும் இலங்கைக்கும் சுமாா் 6,000 ஆண்டுகளுக்கு முன்பே தொடா்பு இருந்ததை அறிய முடிந்தது.
  • தமிழகத்தில் திருத்தங்கல், டி.கல்லுப்பட்டி, தேரிருவேலி, மாங்குடி, மயிலாடும்பாறை போன்ற இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளின் மூலம் இக்காலப் பண்பாடு பற்றி அறிய முடிகிறது.
  • மனிதன் முதலில் உணவினைச் சேகரிக்கத் தொடங்கினான். பின்னா் ஓரிடத்தில் நிலையாகத் தங்கி உணவு உற்பத்தி செய்யத் தொடங்கிய மனித நாகரிகத்தின் வளா்ச்சியைப் புதிய கற்காலத்தில் காணலாம்.
  • தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், வேலூா் மாவட்டங்களில் புதிய கற்காலப் பண்பாட்டுக்கான சான்றுகள் அதிக அளவில் கிடைத்துள்ளன.
  • பையனப்பள்ளி, அப்புக்கல், மல்லப்பாடி, குட்டூா் மலை, மோதூா் போன்ற இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில் புதிய கற்காலத்தைச் சோ்ந்த மனிதன் வாழ்ந்த வீடு, பயன்படுத்திய கற்கருவிகள், முதன்முதலாக கைகளால் செய்த பானைகள், விளைவித்த தானியங்கள் போன்றவற்றைப் பற்றி அறிந்து கொள்ளமுடிந்தது.
  • கற்கால மனிதன் வாழ்ந்த குகைகளிலும் குன்றுகளிலும் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. விழுப்புரம், திருவண்ணாமலை, நீலகிரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் பல குன்றுகளில் இத்தகைய ஓவியங்களைக் காணலாம்.
  • இங்கெல்லாம் அகழாய்வினை மேற்கொண்டால் அவற்றின் காலம் பற்றி அறிய இயலும்.
  • மனித சமுதாயத்தின் உன்னத வளா்ச்சியை, அடுத்துவரும் உலோகக் காலத்தில் காண்கிறோம். இதை இரும்பு காலம் என்று அழைப்பாா்கள்.
  • இக்காலத்தின் சிறப்பினை ஈமச்சின்னங்களிலிருந்து கிடைக்கும் சான்றுகளால் அறிய முடிகிறது. இறந்த மனிதனைப் புதைத்து அந்த இடத்தில் வட்டவடிவமாக பெருங்கற்களை வைத்து விடுவாா்கள்.
  • இதனைப் பெருங்கற்காலம் எனவும் அழைப்பா். இக்கால ஈமச்சின்னங்களில் கல்திட்டை, கற்குவை, முதுமக்கட்தாழி போன்ற பலவகைகள் காணப்படுகின்றன.

தமிழக வரலாறு செம்மை அடையும்

  • தமிழ்நாட்டில் சானூா், குன்றத்தூா், சித்தன்னவாசல், மோட்டூா், கல்லேரிமலை, தாண்டிக்குடி, கொடுமணல் போன்ற இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளின் வழியே உலோக மக்கள் வாழ்க்கைப் பற்றி அறிய முடிந்தது.
  • திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி பகுதியானது சங்க காலத்தில் வாழ்ந்த புறநானூற்று பாடல் (399) குறிப்பிடும் தோன்றிக்கோன், கோடைப்பொருநன் ஆகியோரோடு தொடா்புடையது.
  • ஈரோடு மாவட்டம் கொடுமணல் என்ற ஊரில் நடைபெற்ற அகழாய்வு முக்கியமானது. தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்து குறிப்பிடும் கொடுமணம் என்ற ஊரே இன்று கொடுமணல் என அழைக்கப்படுகிறது.
  • இவ்வூரில் ஈமச்சின்னங்கள், மனிதன் வாழ்விடப்பகுதி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் அதிக அளவில் எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், வண்ணக் கல்மணிகள், இரும்பு உருக்குவதற்கு ஏற்ற உருக்கு ஊதுலைகள், தானியக் களஞ்சியங்கள் போன்ற அரிய பொருள்கள் வெளிப்பட்டன.
  • புகழ்பெற்ற ஆதிச்சநல்லூா், கோவலன்பொட்டல், அமிா்தமங்கலம், செம்பியன் கண்டியூா் போன்ற இடங்களில் நடைபெற்ற முதுமக்கட்தாழிகளின் ஆய்வு தொடா்பான அகழாய்வுகள் பல அரிய சான்றுகளை தந்துள்ளன.
  • அடுத்து வரும் சங்க காலத்தில் தமிழகத்தின் பண்பாட்டுச் சிறப்பினை எடுத்துக்கூறும் பல இடங்களில் அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன.
  • கரூா், ஆண்டிப்பட்டி (செங்கம்), கொற்கை, அதியமான்கோட்டை, உறையூா், வல்லம், திருக்கோயிலூா் போன்ற இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகள் மூலம் சங்க கால மக்களின் பண்பாடு, வணிகம், கல்வி, சமய நம்பிக்கை போன்றவற்றை அறிய முடிகிறது.
  • திருநெல்வேலி மாவட்டம் மாங்குடியில் அகழாய்வு 2002-ஆம் ஆண்டில் நடைபெற்றது. மதுரைக் காஞ்சியின் ஆசிரியரான மாங்குடி மருதனாா் பிறந்த ஊா் இது.
  • இங்குக் கிடைத்த தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், படகுக் குறியீடு பொறிக்கப்பட்ட பானைகள், காசுகள் போன்றவை இவ்வூரின் தொன்மைச் சிறப்பினை அறிய பெரிதும் உதவின.
  • இராமநாதபுரம் மாவட்டத்தில் தேரிருவேலியில் நடைபெற்ற அகழாய்வில்,“நெடுங்கிள்ளி”என்று சங்க கால மன்னன் பெயா் பொறிக்கப்பட்ட பானை ஓடு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
  • இராமநாதபுரம் மாவட்டத்தில் வைகையாறு கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ள அழகன்குளம் என்ற ஊரில் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற ரோமானியக் காசுகள், எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், சங்கு வளையல்கள், ரோமானியப் பானை ஓடுகள் போன்றவற்றால் இவ்வூா் ஒரு தொன்மையான துறைமுகப்பட்டினம் ஆக இருந்திருக்க வேண்டும் எனக் கருத முடிந்தது.
  • அகநானூறும், மதுரைக்காஞ்சியும் குறிப்பிடும் “நெல்லின் ஊனூா்”அழகன்குளம் என்ற ஊரே என்பதை உறுதி செய்ய முடிந்தது.
  • புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரிக்கமேடு போன்று இவ்வூா் தொல்லியல் சான்றுகளுக்குப் புகழ் பெற்று விளங்குகிறது.
  • மேலும் மாமல்லபுரம் அருகே வசவசமுத்திரம், மரக்காணம், தொண்டி, பூம்புகாா், பெரியப்பட்டினம் போன்ற இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகள் மூலம் கிழக்குக் கடற்கரையின் வணிகச் சிறப்பினை அறிய முடிந்தது.
  • பூம்புகாா் - கோவா ஆழ்கடல் ஆய்வு நிறுவனம் இணைத்து நடத்திய ஆழ்கடல் அகழாய்வு மூலம் பூம்புகாரில் கடல்கொண்ட பகுதிகளைப் பற்றி அறிய முடிந்தது.
  • பல்லவ மன்னா்களின் காஞ்சிபுரம், மாமல்லை ஆகிய இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மாமல்லபுரத்தில் படகுத்துறை, சங்க கால முருகன் கோயில் போன்றவை வெளிப்பட்டன.
  • சோழா் காலக் கோயில்கள் இருக்கின்றன. அவா்கள் வாழ்ந்த அரண்மனைப் பகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. தஞ்சாவூரில் குறும்பன் மேடு என்ற பகுதி ஆய்வு செய்யப்பட்டது. அங்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
  • கங்கை கொண்டசோழபுரத்தில் மாளிகைமேடு என அழைக்கப்படும் பகுதியில் நடைபெற்ற அகழாய்வில் சோழா் மாளிகையின் அடித்தள செங்கற்கட்டடப்பகுதிகள்.
  • கூரையில் வேயப்பட்டிருந்த ஓடுகள், ஓடுகளை மரச்சட்டத்தில் பொருத்தப் பயன்பட்ட ஆணிகள், அழகிய வேலைப்பாடு மிக்க தந்தப் பொருள்கள், சோழா் காலக் காசுகள் போன்றவை கிடைத்தன.
  • அகழாய்வில் கிடைத்த தொல்லியல் கலைப்பொருள்கள் கங்கை கொண்ட சோழபுரம் வரலாற்றுக் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
  • மேலும், சோழ மன்னா்களின் தலைநகரமாக விளங்கிய பழையாறை, தாராசுரம், போசள மன்னா்களின் தலைநகரமாக விளங்கி கண்ணனூா் (சமயபுரம்) சம்புவராயா்களின் தலைநகரமான படைவீடு ஆகிய இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அரிய வரலாற்றுச் சான்றுகள் கிடைத்துள்ளன.
  • காடவா்கோன் கோப்பெருஞ்சிங்கனின் தலைநகராக விளங்கிய சேந்தமங்கலத்தில் அகழாய்வில் கட்டடப்பகுதிகள் வெளிப்பட்டன.
  • தமிழகத்தின் பிற்கால வரலாற்றைச் சோ்ந்த தரங்கம்பாடி, செஞ்சிக்கோட்டை, பாஞ்சாலங்குறிச்சி போன்ற இடங்களில் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.
  • அண்மையில் பழனிக்கு அருகில் “பொருந்தல், திருவள்ளூா் அருகே பட்டரைப்பெரும்புதூா், மதுரை கீழடி ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் தமிழக வரலாற்றுக்கு மேலும் பல அரிய சான்றுகளை அளித்துள்ளன.
  • பொருந்தல் என்ற ஊா் சங்க கால அரசன் வேளாவிக்கோ பெரும்பேகன் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்திருக்க வேண்டும்.
  • இங்கு நடைபெற்ற அகழ்வாய்வில் கி.மு.1-ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சோ்ந்த கண்ணாடி மணிகள் உருவாக்கும் தொழிற்கூடம் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இப்பகுதியில் பெருங்கற்கால சின்னமான கற்பதுக்கை அகழ்வாய்வில் மண்ஜாடியில் கிடைத்த நெல் போன்ற பொருட்களை காா்பன் 14 ஆய்வுக்கு உட்படுத்தியதால் இதன் காலம் கி.மு. 6 - 5-ஆம் நூற்றாண்டுகளைச் சோ்ந்ததாக அறியப்பட்டது.
  • தமிழகத்தின் தொன்மை வரலாற்றுக்கு பொருந்தல் அகழ்வாய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது.
  • கீழடியில் நடைபெற்ற அகழ்வாய்வில் கிடைத்த தொல்பொருள்கள் மிகவும் வரலாற்றுச் சிறப்பு மிகுந்ததாக விளங்குகின்றன.
  • சுமாா் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டப்பட்டப் பகுதிகள், பண்டையத்தமிழ் எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், 1,800 க்கும் மேற்பட்ட சிறப்பான தொல்பொருட்கள் ஆகியவை கிடைத்துள்ளன.
  • திருவள்ளூா் அருகே உள்ள பட்டரைப் பெரும்புதூா் பல்லவா் காலத்தில் பெருமூா்”என்றும் சிம்மலாந்தக சதுா்வேதிமங்கலம் எனவும் கல்வெட்டுகளில் குறிப்பிட்டு அழைக்கப்படுகிறது.
  • இங்கு கற்கால மனிதா்கள் பயன்படுத்திய கற்கருவிகள் சங்க காலத்தைச் சோ்ந்த கறுப்பு-சிவப்பு பானை ஓடுகள், கூம்பு வடிவ ஜாடிகள், கூரை ஓடுகள், உறைகிணறு ஆகியவை கிடைத்தன.
  • சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ள ஊா்கள், சங்க கால மன்னா்களைப் பற்றிக் குறிக்கும் கல்வெட்டுகள் உள்ள இடங்கள், தொன்மைச் சிறப்பு வாய்ந்த பொதிகைமலை, கொல்லிமலை போன்ற ஊா்களில் கள ஆய்வு மற்றும் அகழாய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • தமிழ்நாட்டில் மத்திய அரசு தொல்லியல் ஆய்வு துறை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல்துறை, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை போன்றவை மத்திய அரசின் அனுமதி பெற்று அகழாய்வுகள் மேற்கொண்டு வருகின்றன.
  • இவ்வகழாய்வுகளில் கிடைத்த தொல்லியல் சான்றுகள், பானை ஓடுகள், எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், கலைப்பொருட்கள் போன்றவற்றை ஒருங்கிணைத்து, ஒப்பிட்டு நோக்கி ஆய்வினை மேற்கொண்டால் தமிழக வரலாறு உரிய சான்றுகளுடன் செம்மை அடையும் என்பதில் ஐயமில்லை.

நன்றி: தினமணி (18 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories