TNPSC Thervupettagam

தமிழ் ஓணம் ஆகுமா பொங்கல்

January 16 , 2023 476 days 266 0
  • விடிவதற்குச் சற்று முந்தைய பொழுதில் வானிலிருந்து பனித்தூறல்போலப் புதிய கனவுகள் இறங்கும் நாட்களில் பண்டிகைகளை மக்கள் உருவாக்குகிறார்கள். தமிழர்களுக்குத் தைப் பிறப்பு அப்படித்தான். கனவுகளோடு பின்னப்பட்ட பொங்கல் பண்டிகைக்கு அறுவடைப் பண்டிகை எனும் அர்த்தத்தைத் தாண்டி கூடுதல் அர்த்தப்பாடுகளைத் தரும் கனவும் அப்படித்தான் தமிழ் மக்களிடம் தொடர்கிறது.  
  • இந்தியத் துணை கண்டத்தின் பல பகுதிகளிலும் வெவ்வேறு பெயர்களில் பொங்கல் போன்ற பண்டிகைகள் இருக்கின்றன. சூரியனோடும் அறுவடைத் தருணத்தோடும் இணைந்த நாட்டார் மரபுக் கொண்டாட்டங்கள் அதிகம். தமிழ்நாட்டில் அது கூடுதல் விமரிசை பெறுவதற்குக் காரணம், ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற மூத்தோர் கூற்று இன்றளவும் உயிர்ப்போடு இருப்பது ஆகும்.
  • அதிகம் தொழில்மயமாகிவிட்ட மாநிலம், நகர்மயமாகிவிட்ட மாநிலம் என்றாலும் நாம் காணும் செழிப்பான தமிழ்நாட்டின் அடித்தளம் வேளாண்மையால் கட்டப்பட்டிருக்கிறது. பெருந்தொகையான மக்கள் கிராமப்புறப் பொருளாதாரத்தோடு பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். கிராமப்புறப் பொருளாதாராமானது நகர்ப்புறப் பண்பாட்டோடும் கிராமப்புறப் பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்திருக்கிறது.
  • தை மாதப் பிறப்பானது தமிழர்கள் பொருளாதாரத்துடனான பண்பாட்டின் மிக முக்கியமான கண்ணி. விளைவாகவே தமிழர்களின், தமிழ்நாட்டின் இயல்பான முதன்மைப் பண்டிகையாகப் பொங்கல் அமைந்தது. 

அண்ணா முயற்சித்த அர்த்தப்பாடு

  • சமூகத்தின் பொருளாதாரம் வளரும்போது பல பண்டிகைகளும் வளர்வது இயல்பானது. பண்டிகைகளில் பொங்கல் அளவுக்கு எளிமையான ஒன்று இல்லை.  கால் நூற்றாண்டுக்கு முன்பு வரையிலும்கூட வீட்டில் ஒரு பண்டிகைக்கே புத்தாடையுடனான கொண்டாட்டம்; அது பெரும்பாலும் பொங்கல் கொண்டாட்டம் என்பதாகவே தமிழ்நாட்டின் பெரும்பான்மை வழக்கம் இருந்தது.
  • தீபாவளி கொண்டாடுபவர்கள் பலகாரங்கள், பட்சணங்கள், விஷேச காய்கறி அல்லது ஆட்டுக்கறி; வசதியுள்ளவர்கள் மட்டுமே பட்டாசு, புத்தாடை என்று கொண்டாடினார்கள். பிற்பாடு தமிழ் மக்களின் இரண்டு பெரிய பண்டிகைகளாக தீபாவளியும் பொங்கலும் உருவெடுத்தன. இந்த இரண்டிலும் சமூகத்தில் பல்வேறு தரப்பினராலும் கொண்டாடப்படும் பண்டிகையாகப் பொங்கலே நீடிக்கிறது. 
  • அண்ணா இதைச் சரியாக அடையாளம் கண்டார். தமிழ்ப் பண்பாட்டில் ஆழ வேரூன்றிய பொங்கல் திருநாளை சாதி, மத, வைதீகப்  பின்புலத்துக்கு வெளியே ஓர் அர்த்தப்பாட்டைப் பொங்கல் பண்டிகைக்குக் கொடுக்க அவர் விழைந்தார். 
  • அண்ணா ‘காஞ்சி’ பொங்கல் மலருக்காக 6.1.1969 அன்று, தன் தம்பியருக்கு எழுதிய கடைசிக் கடிதம் பொங்கல் பண்டிகையை ஏன் ஒவ்வொரு தமிழரும் கொண்டாட வேண்டும், பொங்கல் பண்டிகையை எப்படி பார்க்க வேண்டும் என்பது தொடர்பாகவே அமைந்தது.
  • தமிழர்களின் பண்பாட்டு பெருமைகளையும் தனித்துவத்தையும் பேசும் அண்ணா, பண்டிகையை வெறும் கொண்டாட்டமாக மட்டும் அல்லாமல், எதிர்காலத்தைக் கட்டமைக்கும் கடமைகளைப் பொறுப்பேற்கும் நாளாகவும் ஆக்குகிறார். கட்டுரையின் மிக முக்கியமான அம்சம், “சமதர்ம சமுதாயம் அமைய உறுதியேற்க வேண்டும்” என்ற அவருடைய அறைகூவல். தமிழ் நிலத்துக்குத் தமிழ்நாடு எனும் பெயர் வந்தமைந்த நாள் அந்தப் பொங்கல் நாள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது ஆகும்.
  • அடுத்து, கருணாநிதி பொங்கலுக்கு ஓர் அர்த்தம் கொடுக்க முற்பட்டார்; தை முதல் நாளே ‘தமிழ்ப் புத்தாண்டு’ எனும் அவரது அறிவிப்பு தமிழ்நாட்டைத் திமுக ஆளும் காலகட்டத்தில் மட்டும் அரசின் நடைமுறைகளில் பிரதிபலித்தது. சமூகத்தில் இவையெல்லாம் பெரிய தாக்கங்களை உண்டாக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 
  • அது எப்போதுமே அப்படிதான். பண்பாட்டுத் தளத்தில் ஏற்பட வேண்டிய மாற்றங்களை அரசியல் தலைவர்கள் அல்லது ஆட்சியாளர்கள் அறிவிப்புகளின் வழி மட்டுமே கொண்டுவர முடியாது.

மக்களிடமிருந்து எழும் மாற்றம்

  • சுவாரஸ்யமாக, இப்போது சில ஆண்டுகளாக மக்களிடம் இருந்து பேச்சுகள் உருவாகின்றன. ‘நம் அண்டை மாநிலமான கேரளத்தின் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தைப் பார்க்கும் தமிழர்கள் ’ஏன் நமக்கும் இப்படி ஒரு கொண்டாட்டத்தை உருவாக்கிக்கொள்ளக் கூடாது?’ என்கிற விவாதம் உருவாகியிருக்கிறது.  
  • புராண மரபிலிருந்து ஓணம் பண்டிகைக்கு ஒரு கதையும் வைதீக மரபும் இருந்தாலும் இன்று மலையாளிகள் ஓணம் பண்டிகைக்கு ஒரு புதிய அர்த்தபாட்டை உண்டாக்கி இருக்கிறார்கள். கேரளத்தில் சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு எல்லா மக்களாலும் இணைந்து கொண்டாடப்படும் பண்டிகையாக ஓணம் திகழ்கிறது. மிக முக்கியமாக மொழிசார் கொண்டாட்டமாக அது அமைந்திருக்கிறது. 

புதிய அடையாளம் உருவாகுமா?

  • தமிழர்களால் ஓணம் போன்று ஒரு பண்டிகையை மொழி சார்ந்து உருமாற்றிக்கொள்ள முடியும் என்றால், அதற்கு அவர்களுக்கு இயல்பான தேர்வாகப் பொங்கல் பண்டிகையே அமைகிறது. “நாம் பொங்கல் பண்டிகையை வழக்கமான மரபுசார் வழிபாட்டுக்கு வெளியில் கொண்டுசெல்ல வேண்டும்” என்றும், “அவரவர் நம்பிக்கைகளுக்கு ஏற்ப கொண்டாட்டத்துக்குப் புதிய வடிவம் கொடுக்கலாம்” என்றும் பேசுகிறார்கள். 
  • இதற்கு எதிர் குரல்களும் எழாமல் இல்லை. “இந்துக்கள் பண்டிகையை எதற்காக சமய வட்டத்துக்கு வெளியே கொண்டுசெல்ல வேண்டும்?” என்று இந்தப் பக்கம் ஒரு பகுதியினரும், “இந்துக்கள் பண்டிகையை எதற்காக நாம் கொண்டாட வேண்டும்?” என்று அந்தப் பக்கம் ஒரு பகுதியினரும் பேசுகின்றனர். “பொங்கல் பண்டிகைக்கு என்று தனி வரலாறு இருக்கிறது. கூடவே ஏனைய பிராந்தியங்கள் கொண்டாடும் அறுவடைப் பண்டிகையிலிருந்து எப்படி இதைத் தனித்து பார்க்க முடியும்?” என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
  • இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு தமிழ் மக்கள் மெல்ல பொங்கல் பண்டிகைக்குத் தனித்த ஓர் அடையாளத்தை உருவாக்குகிறார்கள். தமிழ்நாட்டில் இந்துக்கள் மட்டுமல்லாது முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும்கூட தங்கள் வீட்டில் பொங்கல் வைத்து பல கூட்டுக் கறியுடன் விருந்துண்ணுவது எனும் மரபு ஏற்கெனவே இருந்து மறைந்தது இன்று நினைவுகூரப்படுகிறது. அதை மீட்டெடுக்கும் முயற்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கின்றன. தமிழ்நாட்டில் பல கிறிஸ்தவ, முஸ்லிம் பெரும்பான்மைக் கிராமங்களில் சென்ற ஆண்டு பொங்கல் பண்டிகை புதிய எழுச்சியுடன் கொண்டாட்டப்பட்டதைக் காண முடிந்தது.

ஏன் கூடாது என்கிறீர்கள்?

  • மலையாளிகளுக்கு ஓர் ஓணம்போல, தமிழர்களுக்கு மொழிசார் கொண்டாட்டமாகவும் பொங்கல் நாள் அமையுமா?

அமைந்தால் நல்லது!

  • நாம் கடந்த காலத்தை முன்வைத்து விவாதிப்பதைவிட எதிர்காலத்தை முன்வைத்து விவாதிப்பது இத்தகைய அபிலாஷையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் என்று எண்ணுகிறேன். வெறுமனே அறுவடை தரும் மகிழ்ச்சியோடு ஒரு திருநாள் கொண்டாட்டத்தை நாம் முடித்துக்கொள்ளும்போது, ‘மகிழ்ச்சி - நன்றி - கூடுகை’ வெளிப்பாடுகளைத் தாண்டி அந்த நாளில் பெரிய விசேஷம் இல்லை. மாறாக, எதிர்காலத்தோடு தொடர்புபடுத்திக் கூடுதல் அர்த்தங்களைக் கொடுக்க விழையும்போது, ஒரு சமூகம் அப்படிக் கொடுக்க விழையும் உள்ளடக்கம் என்ன என்பது நம்முடைய ஆழ்ந்த கவனத்துக்கு உரியது. தமிழ் மக்கள் மொழியோடும் சமத்துவத்தோடும் பொங்கலை இணைக்க விழைகிறார்கள். பண்டிகையின் பன்மைத்துவ எல்லையை மேலும் விஸ்தரிக்கிறார்கள். கொண்டாட்டம் என்பதைத் தாண்டி சமூகத்தைப் பொறுப்பேற்பு நோக்கி ஒரு பண்டிகையின் வழி நகர்த்தக்கூடிய முனைப்பும் இது. அற்புதம்!
  • பண்டிகைகள், கொண்டாட்டங்களுக்கான கதைகள் ஏன் கடந்த காலத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்? மாறாக, ஏன் எதிர்காலத்தை நோக்கியதாக அவை அமையக் கூடாதுமனிதர்களால் உருவாக்கப்பட்ட எதுவும் மனிதர்களால் உருமாற்றப்படக்கூடியதும்தான்.
  • எல்லா வேறுபாடுகளையும் உடைக்கும் தமிழர்த் திருநாள் ஆகட்டும் பொங்கல்!

நன்றி: அருஞ்சொல் (16 – 01 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories