TNPSC Thervupettagam

தமிழ் வளர்ச்சித் திட்டங்களில் அறிஞர்களை ஆதரிப்பதும் ஒரு பகுதியாக இருக்கட்டும்!

July 1 , 2021 1032 days 458 0
  • தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பிரதமரைச் சந்தித்துவிட்டு, சென்னை திரும்பியவுடன் கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு மேற்கொண்ட ஆய்வுப் பயணமானது, தமிழ் வளர்ச்சியிலும் நூலக மேம்பாட்டிலும் அவர் காட்டிவரும் அக்கறையை எடுத்துரைப்பதாக அமைந்தது.
  • அதற்கடுத்த இரண்டாவது நாளில், ஆளுநரின் உரையோடு சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
  • அண்ணா நூலகக் கட்டிடத்தில் நிரந்தரமாக இடம்பிடித்துவிட்டிருந்த கதண்டுகளின் கூடுகள், அங்கு செல்லும் வாசகர்களை நீண்ட காலமாகத் துன்புறுத்தியும் அச்சுறுத்தியும் வந்த நிலையில், முதல்வரின் ஆய்வுப் பயணத்துக்கு முன்பாக அவை இரவோடு இரவாக அகற்றப்பட்டன.
  • வாசகர்களின் நீண்ட நாள் வேதனைக்கு ஒரே நாளில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.
  • முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி முதல்வர் அறிவித்தபடி, மதுரையில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் ஏழு தளங்களில் நவீன வசதிகளுடன் கலைஞர் நினைவு நூலகம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.
  • மேலும், ஆண்டுதோறும் தமிழ் எழுத்தாளர்கள் மூவருக்கு இலக்கிய மாமணி விருதுகள், தேசிய அளவிலும் மாநில அளவிலும் இலக்கியத்துக்காக விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு அவர்கள் விரும்பும் மாவட்டங்களில் கனவு இல்லம் ஆகிய அறிவிப்புகளும் அதே நாளில் அறிவிக்கப்பட்டன.
  • இந்தச் சூழலில், தமிழ் வளர்ச்சித் துறையிடமிருந்து சமீபத்தில் வெளிவந்துள்ள இரண்டு அறிவிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
  • கடந்த ஆண்டு வெளிவந்த சிறந்த புத்தகங்களுக்கான பரிசுக்குப் புத்தகங்கள் அனுப்பக் கோருவது ஒன்று.
  • அகவை முதிர்ந்த தமிழறிஞர்களிடம் ஓய்வூதியத்துக்கான விண்ணப்பங்கள் வேண்டுவது மற்றொன்று.
  • 2016-ல் வெளிவந்த நூல்களுக்கான தமிழ் வளர்ச்சித் துறை பரிசுகளே 2020 டிசம்பரில்தான் வழங்கப்பட்டன. இடைப்பட்ட ஆண்டுகளுக்கான பரிசுகளும் விரைந்து அளிக்கப்பட வேண்டியது அவசியம்.
  • கடைசியாக ஓய்வூதியம் அறிவிக்கப்பட்ட தமிழறிஞர்களுக்கு நான்கு மாதங்களாகியும் இன்னும் அது கிடைக்கவில்லை என்பதும் கவனத்துக்குரியது.
  • மூத்த தமிழறிஞர்களுக்கான ஓய்வூதியம் என்பது மாதம் ரூ.3,500 என்பதாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
  • ஆண்டு வருமானம் ரூ.72,000-க்குள் இருப்பவர்கள் மட்டுமே இந்த ஓய்வூதியத்தைப் பெறத் தகுதியானவர்கள்.
  • எழுத்தாளர்களுக்குக் கனவு இல்லம் போன்ற செலவு பிடிக்கும் திட்டங்களை அறிவிக்கும் தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்த்த அறிஞர்களுக்கான ஓய்வூதியத்தையும் வருமான வரம்பையும் இன்னும்கூட உயர்த்தலாம்.
  • தற்போது வழங்கப்பட்டுவரும் ஓய்வூதியமானது, அவர்களது அடிப்படைச் செலவுகளுக்கு உதவலாமே தவிர புத்தகங்கள், பத்திரிகைகள் வாங்கப் போதுமானதாக இருக்காது.
  • குறைந்தபட்சம், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான ஓய்வூதியத்தையும் மருத்துவப் படியையும் இருமடங்காக உயர்த்தலாம்.
  • வாழும் காலத்தில் மேலும் அவர்களிடமிருந்து தமிழுக்குக் கூடுதல் பங்களிப்புகள் கிடைக்கும். தமிழுக்கு மட்டுமின்றி முதல்வருக்கும் அது பெருமை சேர்க்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (01 - 07 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories