TNPSC Thervupettagam

தமிழ்நாடு என்று என் மாநிலத்தை அழையுங்கள்

January 16 , 2023 477 days 344 0
  • சி.என்.அண்ணாதுரை: துணைத் தலைவர் அவர்களே!
  • நான் அபூர்வமாகத்தான் என்னுடைய நண்பர் புபேஷ் குப்தாவுடன் முழுதாக உடன்படுகிறேன்; ஆனால், இன்றைக்கு அவரை முழு மனதுடன், முழுமையாக, மனப்பூர்வமாக ஆதரிக்க எழுந்து நிற்கிறேன். அவர் முன்மொழிந்துள்ள மசோதாவில் உள்ள ஒரே குறை, இது அரசால் கொண்டுவரப்படாத ‘தனிநபர் மசோதா’ என்பதுதான்.
  • தமிழ்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான தமிழர்களுக்கு நெஞ்சம் நிறைந்த திருப்தியைத் தரும் வகையில், மிகவும் அவசியமான - மிகவும் எளிதான - மசோதாவை அரசு சார்பில் கொண்டுவரப்படுவதையே மிகவும் விரும்புகிறேன். இந்த மசோதாவுக்கு ஆதரவாகத் தெரிவிக்கப்பட்ட கருத்துகளைவிட, எதிரான கருத்துகள் - அதுவும் மசோதாவைக் கொண்டுவருகிறவரின் ‘அரசியல் சாயம்’ கருதி தெரிவிக்கப்பட்டவையே - அதிகம். “சென்னை மாநில அரசு கேட்டுக்கொள்ளாமலேயே (புபேஷ் குப்தா) இந்த மசோதாவைக் கொண்டுவந்திருக்கிறார்” என்று ஓர் உறுப்பினர் பேசியிருக்கிறார்.
  • நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக, சில அடிப்படை அம்சங்களை விளக்குவது அவசியமாகிறது என்பதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். தன்னுடைய சார்பில் அதிகாரபூர்வமற்ற மசோதாவைக் கொண்டுவாருங்கள் என்று எந்த உறுப்பினரையும் சென்னை மாநில அரசால் எப்போதும் கேட்டுக்கொள்ள முடியாது; இப்படியொரு மசோதா வருவதை சென்னை மாநில (காங்கிரஸ்) அரசு விரும்பியிருந்தால், அந்தக் கட்சியின் பிரதிநிதிகள் இந்த அவையிலேயே இடம்பெற்றிருக்கின்றனர், அவர்கள் மூலமே அதைச் செய்திருக்க முடியும்.
  • எனவே, தங்களுடைய கட்சியோ, மாநில அரசோ இதை ஆதரிக்குமாறு தங்களிடம் கூறவில்லை என்பதால் மசோதாவை எதிர்க்கிறோம் என்பதுதான் அவர்களுடைய கருத்தாக இருக்கிறது. அவர்களுடைய மனங்களில் எழுந்துள்ள பூகம்பத்தை உணர்கிறேன், ஆனால் அது மசோதாவுக்கு எதிரான வாதமாக இருந்துவிட முடியாது. சென்னை மாநிலம் என்பதைத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் கொண்டுவரப்படும் இந்த மசோதாவுக்கு ஆதரவாகப் பேசியவர்களின் கருத்துகளுக்கு, மசோதாவை எதிர்ப்பவர்களால் எந்தப் பதிலையும் சொல்ல முடியவில்லை.
  • ஷீல் பத்ரயாஜி: நான் சொல்லியிருக்கிறேனே!
  • சி.என்.அண்ணாதுரை: நீங்கள் பேசியது எனக்குப் புரியவில்லை. உங்கள் மொழியை எப்போதாவதுதான் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உங்களுடைய வாதத்தில் தர்க்கமும் அர்த்தமும் இருந்ததா என்று என்னால் கூற முடியவில்லை. ஆனால், முன்வைக்கப்பட்ட சில வாதங்கள் பொருத்தமாக இல்லை என்று என்னால் கூற முடியும்.

யார் மனதில் ஏற்படும் நடுக்கம்

  • தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி பேசுவோரும், மலையாளம், கன்னடம் பேசுவோரும் வாழ்வதால் – ‘மெட்ராஸ்’ என்பதைத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றினால் அவர்களின் உள்ளங்களில் நடுக்கம் ஏற்படும் என்று ஓர் உறுப்பினர் கூறினார். இத்தகைய வாதங்கள் ஏற்கெனவே தவிடுபொடியாக்கப்பட்டுவிட்டன என்பதை இந்த அவைக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். பகுத்தறிவு, தர்க்கம் ஆகியவற்றைக் கொண்டு அலசினால் இந்த வாதங்கள் நிலைத்து நிற்காது. 
  • காங்கிரஸ் கட்சிக்குப் பகையாளியான திமுகவோ அல்லது அதைப் போன்ற கட்சியைச் சேர்ந்தவரோ அல்லாத – பிரஜா சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த – ஓர் உறுப்பினர் இதே போன்ற பெயர் மாற்ற மசோதாவைத் தமிழக சட்டமன்றத்திலே கொண்டுவந்தார். அதன் மீது சில நாள்களுக்கு விவாதம் நடந்தது. இறுதியில் 1961 பிப்ரவரி 24இல் சட்ட மன்றத்தில் பேசிய நிதியமைச்சரும் பேரவையின் முன்னவருமான சி.சுப்பிரமணியம், “சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றக் கோரும் இத்தீர்மானத்தை, அதன் உணர்வுக்காகப் பகுதியளவு ஏற்றுக்கொள்கிறேன்; இனி மெட்ராஸ் மாநிலத்தின் எல்லா அரசு வெளியீடுகளிலும் ‘தமிழ்நாடு அரசு’ என்றே குறிப்பிடப்படும்” என்று அறிவித்தார்.  
  • அன்றிலிருந்து தமிழ்நாடு அரசின் வெளியீடுகள் அனைத்திலும் ‘தமிழ்நாடு’ என்று குறிப்பிடப்பட்டே அச்சிட்டு வழங்கப்படுகிறது. சென்னை மாநில சட்டமன்றத்தில் நிதியமைச்சர் மேற்கொண்ட வரலாற்றுப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகு அடுத்த நாளும் பேசிய நிதியமைச்சர், “நேற்று நான் செய்த அறிவிப்புக்கு இணங்க, ‘தமிழ்நாடு’ அரசின் வரவு - செலவுத் திட்டத்தை இந்த அவையில் இன்று தாக்கல் செய்கிறேன்” என்று அடுத்த நாள் மீண்டும் அறிவித்தார்.
  • ஆகையால், மாநிலத்தின் பெயரை மாற்றினால் தெலுங்கு பேசுவோர், மலையாளம் பேசுவோர், கன்னடம் பேசுவோர் கொதித்தெழுவார்கள் என்கிற வாதம் அடிபட்டுப்போகிறது, ஏனென்றால், இது மாநில அரசாலேயே ஏற்கப்பட்டுவிட்டது. இப்போது எஞ்சியிருப்பதெல்லாம் ‘மெட்ராஸ்’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டு ‘தமிழ்நாடு’ என்ற வார்த்தையை இட்டு நிரப்புவதுதான். ஆனால், இதையும் இந்த அவையில் ஏற்கவில்லை. தமிழர்களின் உணர்வோடு கலந்த இந்த கோரிக்கையை, வாதங்களை மத்திய அரசாலும் ஏற்க முடியவில்லை, ‘மெட்ராஸ்’ காங்கிரஸ் தலைவர்களாலும் ஏற்க முடியவில்லை. இந்த மசோதாவுக்கு எதிராகப் பேசியவர்கள் எந்த அளவுக்கு விவரங்கள் தெரியாமல் இருக்கிறார்கள் என்பதை அறிந்தபோது எனக்கு வியப்பே ஏற்படுகிறது. 

பழந்தமிழ் இலக்கியங்களில் தமிழ்நாடு இல்லையா?

  • ஓர் உறுப்பினர், ‘கொள்ளேகால் தமிழ்நாட்டில் இருக்கிறது’ என்று பேசியிருக்கிறார். இன்று அவர் அவைக்கு வரவில்லை. அவருக்கு நான் சொல்லிக்கொள்வேன் – இங்கிருக்கும் அவருடைய நண்பர்களும் அவருக்குச் சொல்ல வேண்டும் – கொள்ளேகாலம் இப்போது மைசூரு மாநிலத்தில் சேர்ந்துவிட்டது. ஒருங்கிணைந்த ‘மதறாஸ்’ மாகாணத்தில் இருந்த கொள்ளேகால், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு மைசூர் மாநிலத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது.
  • கொள்ளேகால் பற்றியே இந்த அளவுக்கு விவரம் தெரியாமல் அவர் பேசியிருப்பதால், பழந்தமிழ் இலக்கியங்களில் ‘தமிழ்நாடு’ என்ற பெயரே கிடையாது என்று பேசிய அவருடைய அறியாமையைக் குறித்து எனக்கு வியப்பேதும் ஏற்பட்டுவிடவில்லை. தமிழ்நாட்டுடன் இருந்து பிறகு மைசூர் மாநிலத்துடன் சேர்ந்துவிட்ட கொள்ளேகாலம் குறித்தே தெரியாதவர், தமிழ் இலக்கியங்களில் நல்ல தேர்ச்சி பெற்றவராக இருப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. அந்த உறுப்பினரும், இந்த அவையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சங்கத் தமிழ்ப் பாடல்களில் ‘தமிழ்நாடு’ என்ற சொல் இடம் பெற்றிருப்பது குறித்து சில தகவல்களை இங்கே கூற விரும்புகிறேன்.
  • நான் குறிப்பிடும் நூல்கள் அனைத்தும் இன்றைக்கு 1,800 அல்லது 2,000 ஆண்டுகளுக்கு முன்னால் இயற்றப்பட்டவை. இந்த நூல்களின் பெயர்களை நான் தமிழில் குறிப்பிடுகிறேன்; ‘தமிழ்நாடு’ என்ற பெயர் சங்க காலப் பாடல்களில் இடம்பெற்றிருக்கவில்லை என்று குறிப்பிட்ட உறுப்பினரும் தமிழர்தான் என்பதால் அவரால் புரிந்துகொள்ள முடியும். மதிப்புக்குரிய துணை அமைச்சரும் தமிழர் என்பதால் அவராலும் புரிந்துகொண்டு, அந்த நண்பருக்குச் சொல்ல முடியும். அந்த நூல்களின் பெயர்கள் ‘பரிபாடல்’, ‘பதிற்றுப்பத்து’; அவற்றைவிட அதிகம் பிரபலமானவை ‘சிலப்பதிகாரம்’, ‘மணிமேகலை’.
  • இவையெல்லாம் தமிழ்நாட்டின் தொன்மையான இலக்கியங்கள். இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இயற்றப்பட்டவை. ‘பரிபாடல்’ நூலில், “தண்டமிழ் வேலி தமிழ் நாட்டு அகமெல்லாம்” என்ற வரி இடம்பெற்றுள்ளது. இதற்குப் பொருள், “மூன்று பக்கங்களும் கடல் சூழ்ந்த இனிய தமிழ்நாடு!” 1,800 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட ‘பதிற்றுப்பத்து’ பாடலில் “இமிழ் கடல் வேலி தமிழகமா” என்றுள்ளது. இதன் பொருள், “கடலையே தன் எல்லையாகக் கொண்ட தமிழ்நாடு!” தமிழ்நாட்டை ‘சிலப்பதிகார’த்தில் ‘தென் தமிழ் நன்னாடு’ என்று வர்ணித்துள்ளனர். இதன் பொருள், “நல்ல தமிழ்நாடு!” ‘மணிமேகலை’யில், “சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்” என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை ‘சம்புத்தீவு’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
  • மாண்புமிகு அவை உறுப்பினர்களுக்கு மேலும் சான்றுகள் வேண்டுமென்றால் கம்பன், சேக்கிழார் இயற்றிய நூல்களைப் படித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவற்றில் பல இடங்களில் தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. அதற்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்ற மூன்று பெரும் அரசுகள் தோன்றியுள்ளன. இந்தப் பெயர்கள் தமிழ்நாட்டின் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாடு என்ற பெயர் தமிழின் பழமையான இலக்கியங்களில் விளங்குவதே! பழமையான அந்த இலக்கியங்களில் செழுமையான கருத்துகளுக்குக் குறைவே இல்லை. இந்த இலக்கியங்களைப் படிக்க என்னுடைய நண்பருக்கு நேரமோ, எண்ணமோ இல்லாமல் போய்விட்டதால் இதை அவர் அறிந்திருக்கவில்லை.

விளம்பரம் வேண்டாத கட்சி ஒன்று உண்டா?

  • இந்த மசோதாவுக்கு எதிராக இன்னொரு வினோதமான வாதம் முன்வைக்கப்பட்டது, “விளம்பரம் பெறும் நோக்கில் கம்யூனிஸ்ட் கட்சி இதைக் கொண்டுவருகிறது” என்று! அரசியல் சூழலை உணர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டால் நாம் ஏன் அதை பாராட்டக் கூடாது? விளம்பரம் வேண்டும் என்று நினைக்காத அரசியல் கட்சிகள் உண்டா? விளம்பரம் பெறுவதென்ன கடுமையான குற்றமா? ஐந்தாண்டு திட்டம் தொடர்பாக ஏன் அறிக்கைகளைப் பிரசுரிக்கிறீர்கள்? அது மக்கள் பணத்தில் செய்துகொள்ளப்படும் விளம்பரம் இல்லையா?
  • அரசியல் விளம்பரத்துக்காக இவற்றையெல்லாம் செய்வதாக ஏனைய கட்சிகளைக் குற்றஞ்சாட்டுகிறீர்களே? இந்த மசோதாவை நீங்கள் தோற்கடித்தாலும் அவருக்கு விளம்பரம் கிடைத்துவிட்டது. இனி உங்களால் புபேஷ் குப்தாவுக்குக் கிடைக்கும் புகழைப் பறித்துவிட முடியாது. தமிழ்நாட்டுக்கு வந்து தமிழர்களைச் சந்திக்கும்போது அவர் மிக எளிதாகச் சொல்லிவிடுவார், “உங்களுடைய மாநிலப் பெயர் மாற்றத்துக்கு பாடுபட்டேன்; ஆளும் காங்கிரஸ் கட்சி மசோதாவைத் தோற்கடித்து உங்களுடைய விருப்பம் நிறைவேறாமல் தடுத்துவிட்டது” என்று.
  • உங்களையும் அறியாமல் நீங்கள் புபேஷ் குப்தாவின் பொறியில் சிக்கிக் கொண்டீர்கள். “இந்தத் தனி நபர் மசோதாவைக் கொண்டுவராதீர்கள், நாங்களும் இதில் அக்கறை உள்ளவர்கள்தான், நாங்களே அரசு சார்பில் மசோதா கொண்டுவருவதாக இருக்கிறோம்” என்று அரசுத் தரப்பிலிருந்து அவரிடம் கூறியிருந்தீர்கள் என்றால் நான் அதைப் பாராட்டியிருப்பேன்.
  • சென்னை மாநகரை மாநிலத் தலைநகரமாகத் தக்கவைக்கக் கடுமையாகப் போராட வேண்டியதாக கனம் சந்தானம் குறிப்பிட்டார்; “பல பேருடன் போராட வேண்டியிருந்தது, போராடி தக்கவைத்துக்கொண்டோம்” என்றார். அந்தப் பெருமையில் எனக்கும் சொந்தம் இருக்கிறது காரணம் நாங்களும் அதில் இணைந்து போராடினோம், போராட்டத்தின் உச்சத்தில் இருந்தபோது பார்த்தேன், சந்தானத்தை என் பக்கத்தில் காணவில்லை.
  • அக்பர் கான்: ஆந்திரம் கொடுத்த ‘விலை’ அது.
  • சி.என்.அண்ணாதுரை: ஆந்திரர்களின் ஒப்புதலுடன்தான் பெறப்பட்டது என்று என்னால் சொல்ல முடியும். இப்போதும்கூட எல்லைப்புறங்களில் தெலுங்குக் கலாச்சாரத்தைக் காப்பாற்றவும் தெலுங்கு மொழி கற்பிக்கப்படவும் இப்போதைய அரசு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மதறாஸ் நகரைத் தமிழர்கள் எடுத்துக்கொண்டாலும் ஆந்திரர்களுடன் விரோதம் ஏதுமில்லை. மிகவும் போராடிப் பெற்றதால் மதறாஸைத் தக்கவைக்க விரும்புவதாக சந்தானம் கூறினார்.

குஜராத்தை அகமதாபாத் மாநிலம் என்று கூறுவீர்களா?

  • மதறாஸை வைத்திருப்பது அல்லது கொடுத்துவிடுவதல்ல கேள்வி; மதறாஸைத் தமிழ்நாட்டுக்குள் வைத்துக்கொண்டு, மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டும் என்பதுதான் கோரிக்கை. மதறாஸ் என்பது தமிழ்நாட்டின் தலைநகரம், அகமதாபாத் குஜராத்துக்குத் தலைநகரமாக இருப்பதைப் போல; சண்டிகர் பஞ்சாபுக்குத் தலைநகரமாக இருப்பதைப் போல; தலைநகரின் பெயர்தான் மாநிலத்துக்கு இருக்க வேண்டும் என்பதை ஏற்பதாக இருந்தால் கேரளத்தின் பெயர் திருவனந்தபுரம் மாநிலமாக இருக்க வேண்டும், ஆந்திர மாநிலத்தை ஹைதராபாத் மாநிலமாக்க வேண்டும், பஞ்சாபை சண்டிகர் மாநிலமாக்க வேண்டும், குஜராத்தையே அகமதாபாத் மாநிலம் என்றுதான் அழைக்க வேண்டும்.
  • புபேஷ் குப்தா: வங்காளத்தையும் கல்கத்தா மாநிலம் என்று அழைக்க வேண்டும்.
  • சி.என்.அண்ணாதுரை: என்னுடைய அரசு - அதாவது மதறாஸில் உள்ள என்னுடைய காங்கிரஸ் அரசு - எல்லாவற்றுக்கும் இரண்டு மொழிகளில் பெயர்கள் வேண்டும் என்று விரும்புகிறது. ‘இந்தியா – பாரத்,’ ‘ஜன கண மன – வந்தே மாதரம்’. இங்கிருந்து கொஞ்சம், அங்கிருந்து கொஞ்சம். எனவே தமிழர்கள் பேசவும் அழைக்கவும் தமிழ்நாடு; அனைத்திந்திய அளவில் அழைக்க மதறாஸ். இது இரட்டை வேடம். அதனால்தான் என் நண்பர் புபேஷ் குப்தா காங்கிரஸ்காரர்கள் அவையில் ஒரு மாதிரியாகவும் - வெளியில் ஒரு மாதிரியாகவும் பேசுவதாகக் கூறுகிறார். எந்த காங்கிரஸ்காரராலும் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் மக்களைப் பார்த்து மாநிலத்துக்கு மதறாஸ் என்றுதான் பெயர் இருக்க வேண்டும் என்று கூற முடியாது என்று சவால் விடுக்கிறேன்;
  • டி.எஸ். பட்டாபிராமன்: தமிழரசுக் கழகத்தின் போராட்டத்தின்போது நாங்கள் அதை எதிர்கொண்டிருக்கிறோம், அதை நண்பரும் அறிவார். அவர் சொல்வது உண்மையைக் கேலிக்கூத்தாக்குவது. 
  • சி.என்.அண்ணாதுரை: போராட்டத்தைப் பட்டாபிராமன் எப்படி எதிர்கொண்டார் என்று நான் அறிவேன், அதை நான் கூறமாட்டேன். இந்த விஷயத்தை நாம் - காங்கிரஸ், திமுக என்று - கட்சி அடிப்படையில் எதிர்கொள்ள வேண்டாம். மாநிலத்துக்குப் பெயர் சூட்டுவது தொடர்பாக நாம் இருவரும் தமிழ் மக்கள் முன் செல்வோம். 51% தமிழர்கள் உங்களுடைய தரப்பை ஏற்றுக்கொண்டால் நான் தலைவணங்கி அதை ஏற்கிறேன். இது கட்சிகளுக்கு இடையிலான விவகாரம் அல்ல. மதறாஸ் என்ற மாநிலப் பெயரை தமிழ்நாடு என்று மாற்றுவதை கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, பிரஜா சோஷலிஸ்ட் கட்சி – ஏன், உங்களுக்கு வியப்பாகக்கூட இருக்கலாம் – சுதந்திரா கட்சியின் மதறாஸ் மாநிலக் கிளைகூட ஏற்றுக்கொண்டுள்ளது.
  • டி.எஸ்.பட்டாபிராமன்: நீங்கள் கூறிய ஒரு கட்சிகூட அதைத் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதில்லை.
  • சி.என்.அண்ணாதுரை: திமுகவின் தேர்தல் அறிக்கையின் நகலை அவருக்கு நாளை தருவேன். பட்டாபிராமனுக்குத் தமிழ் தெரியும் என்று நம்புகிறேன். தமிழ்நாட்டில் கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக இது பெரிய விவாதப் பொருளாகியிருக்கிறது. தமிழரசுக் கழகம் மட்டும்தான் இந்தப் பெயர் மாற்றத்துக்காகப் போராடிவருகிறது என்று அவர் கூறினார். இது ஓரளவுக்கே உண்மை. பெயர் மாற்றம் ஒன்றுக்காகவே போராட்டம் தொடங்கியது தமிழரசுக் கழகம். மற்றைய அரசியல் கட்சிகளும் மிகப் பெரிய அளவில், உள்ளம் ஒன்றிய நிலையில் இதில் ஆர்வம் காட்டுகின்றன. அவர்கள் அனைவரும் தேர்தல் அறிக்கையில் அதை இடம்பெறச் செய்துள்ளனர். அரசியல் மேடைகளில் விளக்கியுள்ளனர்.

தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்தின் வழி அடையப்போவது என்ன?

  • சென்னை மாநிலம் என்பதைத் தமிழ்நாடு என்று மாற்றம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றாமல் திமுகவின் மாவட்ட மாநாடுகள் முடிந்ததில்லை. திடீரென உந்தப்பட்டு இந்தக் கோரிக்கை குறித்து நான் பேசவில்லை. என்னுடைய வருத்தமெல்லாம் இந்த விவகாரத்துக்காக நான் கிளப்பியிருக்கக்கூடிய சூட்டை, புபேஷ் குப்தா பெற்றுவிட்டார் என்பதுதான். இருந்தாலும் இது தமிழ்நாட்டுக்கு மிக முக்கியமான பிரச்சினை என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன். புபேஷ் குப்தாவின் ஒரு கேள்விக்கு யாரும் பதில் அளிக்கவில்லை; சென்னை மாநிலம் என்பதைத் தமிழ்நாடு என்று அழைப்பதன் மூலம் நீங்கள் எதை இழக்கப்போகிறீர்கள் என்று கேட்டார்? யாருமே பதில் சொல்லவில்லை.
  • என்.எம்.லிங்கம்: தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதன் மூலம் நீங்கள் அடையப்போவது என்ன?
  • சி.என்.அண்ணாதுரை: நான் எதை அடைவேன்? பார்லிமென்ட் என்பதை லோக்சபா என்று மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்? கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் என்பதை ராஜ்ய சபா என்று மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்? பிரசிடென்ட் என்பதை ராஷ்டிரபதி என்று மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்? நான் உங்களைத் திருப்பிக் கேட்கிறேன்; தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதால் நீங்கள் எதை இழக்கிறீர்கள்?
  • நீங்கள் எதையாவது பெரிதாக இழப்பதாக இருந்தால் இந்தக் கோரிக்கையை நாங்கள் வலியுறுத்தவில்லை. அடிப்படையான எதையும் நீங்கள் இழக்காதபோது இக்கோரிக்கையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். உங்களுக்கு என்ன லாபம் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. உணர்வுபூர்வமாக நாங்கள் திருப்தி அடைவோம். பழந்தமிழ்ச் சொல் ஒன்று கோடிக்கணக்கானவர்களின் நாவிலும் மனங்களிலும் இடம்பெறுகிறது என்று மகிழ்ச்சி அடைவோம். பெயர் மாற்றம் என்ற சிறிய செயலுக்கு இது போதுமான, மிகப் பெரிய ஈடு இல்லையா? பெயர் மாற்றத்துக்கு எதிராக நீங்கள் வைக்கும் அனைத்து வாதங்களும் தவிடுபொடியாகின்றன.  மாநில அரசு இந்த கோரிக்கையை முன்வைத்தால் நாங்கள் ஏற்றிருப்போம் என்று அரசுத் தரப்பில் கூறுகிறார்கள்.
  • சென்னை மாநில சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைப் பலத்துடன் இருந்தாலும் அதன் அமைப்பு எப்படிப்பட்டது என்று எல்லோருக்கும் தெரியும். சென்னை மாநிலம் என்பதற்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் கோரும் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தால் ‘விருப்பப்படி வாக்களியுங்கள், கொறடா பிறப்பிக்கப்பட மாட்டாது’ என்று கூறுவீர்களா, விருப்பப்படி காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களிக்க அனுமதிப்பீர்களா, மாட்டீர்கள். 
  • டி.எஸ்.பட்டாபிராமன்: உங்களுடைய கட்சி உறுப்பினர்கள் பெயர் மாற்றம் தொடர்பாகத் தீர்மானம் கொண்டுவந்து சட்டமன்றத்தில் அதை நிறைவேற்றிக்கொண்டிருக்கலாமே? கடந்த ஏழு அல்லது எட்டு ஆண்டுகளாக அதை ஏன் செய்யவில்லை
  • சி.என்.அண்ணாதுரை: நான் அதற்கு வருகிறேன். சென்னை சட்டமன்றத்திலே நாங்கள் தீர்மானத்தைக் கொண்டுவந்தால், பெயர் மாற்றம் செய்வதாக இருந்தால் அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும், அரசியல் சட்டத்தைத் திருத்துவதாக இருந்தால் நாடாளுமன்றத்தால்தான் முடியும். எனவே, நாடாளுமன்றத்துக்குச் செல்லுங்கள் என்று சொல்வார்கள்.
  • டி.எஸ்.பட்டாபிராமன்: நான் தீர்மானத்தைப் பற்றித்தான் கூறுகிறேன், மசோதா பற்றியல்ல. தீர்மானம் கொண்டுவரலாமே?
  • சி.என்.அண்ணாதுரை: பிரஜா சோஷலிஸ்ட் கட்சி கொண்டுவந்த தனிநபர் மசோதா மீதான விவாதத்தில் நாங்கள் இந்த அம்சத்தை வலியுறுத்தினோம். இந்தக் கோரிக்கைக்காக நாங்கள் வெளிநடப்பும் செய்தோம். திமுக, கம்யூனிஸ்ட் கட்சி இரண்டுமே வெளிநடப்பு செய்தன. எங்களுடைய கட்சி பலத்துக்கு அவ்வளவுதான் செய்ய முடிந்தது. அந்த மசோதா மீதான விவாதத்தின்போது நாங்கள் அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவருமாறு அரசைக் கோரினோம். அதை நாடாளுமன்றத்தில்தான் கொண்டுவர முடியும் என்றார்கள். நாடாளுமன்றத்தில் அதே கோரிக்கையை வைத்தால், சட்டமன்றத்துக்குப் போங்கள் என்கிறீர்கள்!

நீதி அல்ல; பெரும்பான்மைப் பலமே உங்களிடம் இருக்கிறது

  • தர்க்கரீதியாக உங்களுடைய வாதத்தில் வலு இருக்கிறது என்பதால் அல்ல, உங்களுடைய தரப்பில் நீதி இருக்கிறது என்பதால் அல்ல, தமிழக சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் உங்களுக்குப் பெரும்பான்மை வலு இருக்கிறது என்பதனாலேயே இப்படிக் கூறுகிறீர்கள்.
  • ஜி.ராஜகோபாலன்: நாங்கள் பெரும்பான்மையாக இருக்கிறோம் என்றால் மக்கள் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதால். தேர்தல் நேரத்தின்போதுகூட இதுபற்றி விவாதித்திருக்கிறோம். பெயர் மாற்றத்துக்காகப் பல உண்ணாவிரதங்கள்கூட நடந்தன, உண்ணாவிரதத்தில் ஒருவர் இறந்திருக்கிறார். இவ்வளவுக்கும் பிறகு நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றோம். இது இப்படியே தொடர வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள், பெயர்களை மாற்றச் சிலர் விரும்புகிறார்கள் என்பதைத் திருப்திப்படுத்துவதற்காக அல்ல.
  • சி.என்.அண்ணாதுரை: அவைத் துணைத் தலைவர் அவர்களே, விவாதம் சுவாரசியமாகிக்கொண்டிருக்கிறது. பெயர் மாற்றத்துக்கான உண்ணாவிரதத்துக்கும் திமுகவுக்கும் தொடர்பு இல்லை என்று அவைக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். அரசியல் கட்சியைச் சாராத ஒருவர், மதறாஸ் முதலமைச்சருடைய உறவினர், சங்கரலிங்க நாடார் என்பவர் உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரதம் இருந்தவர் இறந்த பிறகும்கூட பெயரை மாற்றவில்லை என்பது நீங்கள் எவ்வளவு கருணையுள்ளவர்கள் என்பதைக் காட்டுகிறது. இது அங்கே விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் பேசுங்கள் என்று அங்கே கூறினார்கள். இங்கே பேசும்போதோ, சட்டமன்றத்தில் பேசுங்கள் என்கிறீர்கள். இரண்டு இடத்திலும் நீங்கள் சொல்லும் ஒரே பதில், மக்கள் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பது. இது உண்மைதான், சோகமான உண்மைதான். 
  • ஜி.ராஜகோபாலன்: நீங்கள் இருந்தும்கூட இப்படியொரு சோகம் நிகழ்ந்திருக்கிறது.
  • டி.எஸ்.பட்டாபிராமன்: இந்த சோகம் நிரந்தரம் என்று அவர் கூறுகிறார். ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் பெரும்பான்மையைப் பெறும் சோகம் நிகழும் என்கிறார். உங்களை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.
  • சி.என்.அண்ணாதுரை: (காங்கிரஸ் ஆளும்கட்சியாக நீடிக்கும்) துயரம் நிரந்தரம் என்கிறார் என் நண்பர்; இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எனது அனுதாபங்கள். இதை மட்டும்தான் என்னால் சொல்ல முடியும். நாடாளுமன்றத்தால் மட்டும்தான் பெயரை மாற்ற முடியும் என்பதால் இதை அரசியல் சட்டத்தைத் திருத்துவதன் மூலம் செய்யுங்கள் என்று கோருகிறேன். அதற்காகத்தான் நாடாளுமன்றத்தை அணுகியிருக்கிறோம். இது தொடர்பாக எந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டாலும் அல்லது இந்த விவகாரத்தை மக்களிடம் கொண்டுசென்று ஆதரவு திரட்டுங்கள் என்று யோசனை கூறினாலும் அதைச் சவாலாக ஏற்க நாங்கள் தயார். இதைத் தேர்தல் பிரச்சினையாக ஏற்க நீங்கள் தயாரா என்று நான் கேட்க மாட்டேன், அஞ்ச வேண்டாம். இது மக்களிடம் கொண்டுசெல்லப்பட்டு அவர்கள் ஆதரிக்கிறார்களா இல்லையா என்று கேட்கப்பட வேண்டிய விவகாரம். இது உங்களுடைய அரசுகளைப் பாதித்துவிடாது. யாரும் அப்படி நினைக்கவில்லை. நீங்கள் ஆட்சியில் தொடரலாம்.
  • நம்முடைய கட்சிகள் எப்படிப்பட்டவை என்று அலசி ஆராய்வது பற்றிய கேள்வியல்ல இது; குறிப்பிட்ட பொதுப் பிரச்சினை மக்களால் தீர்மானிக்கப்பட விடப்பட வேண்டுமா இல்லையா என்பது பற்றியது. அதற்கு நீங்கள் தயாரா? இதைத்தான் நாங்கள் கேட்கிறோம். நீங்கள் அதற்குத் தயார் இல்லை என்றால் நான் என்ன சொல்ல முடியும்?
  • என்.எம்.அன்வர்: நண்பர் அண்ணாதுரை மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் கொண்டிருக்கிறேன். உலகம் முழுவதும் பிரபலமாகியிருக்கிற மெட்றாஸ் என்ற பெயரை மாநிலத்துக்குத் தொடர்ந்து தக்கவைப்பதால் என்ன தீங்கு நேரப்போகிறது என்பதை அவர் விளக்குவாரா என்று கேட்க விரும்புகிறேன். இதை அப்படியே தக்கவைப்பதில் என்ன சிரமம்?
  • சி.என்.அண்ணாதுரை: அன்பு நண்பர் அன்வருக்கு நான் கூற விரும்பும் ஒரே பதில் இதுதான். தொன்மையான எங்களுடைய நிலப் பெயரை எங்களுடைய மாநிலம் தாங்குகிறது என்ற மன நிறைவையும் மட்டற்ற மகிழ்ச்சியையும் அடைவோம். சென்னையில் சைனா பஜார் என்கிற இடத்தின் பெயரை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலை என்று மாற்றினோம். பெயர் மாற்றத்துக்குப் பிறகு தெருவில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் எண்ணத்தில், உணர்வில் ஒரு பெருமிதம். நாடி, நரம்புகளில் உணர்ச்சிப் பெருக்கு என்று கண்டோம். மெட்றாஸ் என்று தொடர்வதில் தவறில்லை என்றாலும் தமிழ்நாடு என்ற பெயர் தரும் உணர்வுக்காக, தனித்தன்மைக்காக, அந்த வார்த்தையில் உள்ள தொன்மைக்காக பெயர் மாற்றக் கோருகிறோம்.
  • என்.எம்.அன்வர்: தமிழ்நாடு என்று அழைப்பதில் உணர்வு ஏற்படுகிறது என்பதை உணர்கிறோம். உலகம் முழுவதும் அறியப்பட்ட மெட்றாஸ் என்ற பெயர் ஏன் வேண்டாம் என்று அறிய விரும்புகிறேன்.
  • சி.என்.அண்ணாதுரை: மெட்றாஸ் என்ற பெயர் நீடித்தால் அது மாநிலத்தைக் குறிக்கிறதா, தலைநகரத்தைத் குறிக்கிறதா என்ற சந்தேகம் வந்துகொண்டே இருக்கும். தமிழ்நாடு என்று மாநிலத்தின் பெயரை மாற்றிவிட்டால் தமிழ்நாடு மாநிலம், மெட்றாஸ் அதன் தலைநகரம் என்று தெளிவாகி குழப்பங்கள் நீங்கிடும். இந்தக் காரணத்துக்காக அவை முன்வைக்கப்பட்ட பெயர் மாற்ற முன்வரைவான இம்மசோதாவை முழு மனத்துடன் வழிமொழிந்து, அவைக்கு என் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி: அருஞ்சொல் (16 – 01 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories