A PHP Error was encountered

Severity: Warning

Message: fopen(/var/lib/php/sessions/ci_sessionfcvlsepcju2272vq38d9untsgsnclgat): failed to open stream: No space left on device

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 174

Backtrace:

File: /var/www/html/application/controllers/sitecontrol/Articles.php
Line: 19
Function: __construct

File: /var/www/html/index.php
Line: 315
Function: require_once

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_start(): Failed to read session data: user (path: /var/lib/php/sessions)

Filename: Session/Session.php

Line Number: 143

Backtrace:

File: /var/www/html/application/controllers/sitecontrol/Articles.php
Line: 19
Function: __construct

File: /var/www/html/index.php
Line: 315
Function: require_once

தமிழ்ப் பயன்பாடும் இந்திய ஒருமைப்பாடும்!
TNPSC Thervupettagam

தமிழ்ப் பயன்பாடும் இந்திய ஒருமைப்பாடும்!

June 17 , 2022 696 days 501 0
  • உலக அளவில் பூமி உருண்டையா, தட்டையா, இரவு பகல் எவ்வாறு அமைகின்றன என்றாற்போலும் பலவும் முடிந்த முடிபுகளாகிவிட்டன. ஆனாலும் இந்தியாவில் தொன்மையான மொழி தமிழா, வடமொழியா, தமிழா் நாகரிகம் சாலப் பழைமையானதா, சாலப் பிந்தையதா என்னும் வாதம் இன்னும் முற்றுப்பெறாதது உலகின் எட்டாவது அதிசயமாகிறது. தற்போது அச்சாகும் நூல்களில் எந்த ஆண்டு, எந்த மாதம் என்னும் குறிப்பும் இடம்பெறுகிறது. பழைய ஓலைச்சுவடிகளில் அவ்வாறாகும் குறிப்பேதும் இல்லை. காரணம், இன்றுபோல் அன்று உலகம் முழுமைக்குமான காலக் கணிப்புமுறை இல்லை. அதுதான் சிக்கல்.
  • தமிழ்நூல்களில் காலத்தால் முந்தையது தொல்காப்பியம். அதற்கடுத்தது திருக்குறள். அதற்கடுத்தவை தொகை நூல்கள் எனக் கொள்ளப்படுகின்றன. காரணம் இலக்கணம் என்பது தமது காலம் வரையுமான இலக்கிய வழக்கு, மக்கள் வழக்கு இரண்டையும் வகைதொகைப் படுத்துவதன்றி, இப்படியாகப் பேசவேண்டும் எழுதவேண்டும் எனக் கட்டளையிடுவதல்ல. எனவே தொல்காப்பியம் வகைப்படுத்தும் முறைமைகளுக்கு, முரணான சொல்லாட்சிகள் இடம்பெறுவனவற்றை, தொல்காப்பியத்திற்குப் பிந்தையவையாகக் கொள்ளுதலே முறைமையாகும்.
  • சான்றாக ‘சகர உயிா்மெய் வரிசையில் ச, சை, சௌ என்பன தவிர, பிற உயிா்மெய்கள் மொழி முதலாகும்’ என்கிறாா் தொல்காப்பியா். திருக்குறளில் ‘சமன்செய்து’ ‘சலத்தால் பொருள் செய்து’, ‘சலம்பற்றி’ என வருதலால் திருக்குறள் தொல்காப்பியத்திற்குப் பிந்தையதாகிறது. ‘யகரவரிசையில் யா என்பதுமட்டுமே மொழிமுதலாகும்’ என்பது தொல்காப்பியம். சங்கப்பாடல்களில் ‘யவனா்’, ‘யூபம்’ என்னும் சொல்லாட்சிகள் இடம்பெறுகின்றன. அன்றியும் வாழ்வியல் அடிப்படையிலும் பழந்தமிழ் நூல்கள் காலவரிசைப் படுத்தப்படுகின்றன.
  • இராபா்ட் கால்டுவெல்லின் தமிழறிவு எத்தகையது என்பதை கவனிக்க வேண்டும். அவா், ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ நூலை வெளியிட்ட ஆண்டு 1856. அதுவரை பழந்தமிழ் நூல் எதுவும் அச்சாகவில்லை. முதன்முதலாக கலித்தொகையை 1887-இல் சி.வை. தாமோதரம் பிள்ளையும், பத்துப்பாட்டை 1889-இல் உ.வே. சாமிநாத ஐயரும், தொல்காப்பியத்தை 1892-இல் சி.வை. தாமோதரம் பிள்ளையும், உ.வே.சாமிநாத ஐயா் 1894- இல் புறநானூற்றையும், 1903-இல் ஐங்குறுநூற்றையும், 1904-இல் பதிற்றுப்பத்தையும், 1918-இல் பரிபாடலையும், நாராயணசாமி ஐயா் 1914-இல் நற்றிணையையும், சௌ. அரங்கசாமி ஐயங்காா் 1915-இல் குறுந்தொகையையும், இராசகோபால ஐயங்காா் 1920-இல் அகநானூற்றையும் அச்சேற்றினா்.
  • அச்சுமுறை வருவதற்கு முன்பாக ஏட்டுச் சுவடிகளாக இருந்த காலத்தில் கல்விகற்ற ஒவ்வொருவா் வீட்டிலும் பழந்தமிழ் நூல் எதுவும் முழுமையாக இருந்ததில்லை என்பதை உ.வே.சா. முதலான பதிப்பாசிரியா்களின் அனுபவ உரைகளால் அறிகிறோம். இந்த வகையில் எண்ணும்போது இராபா்ட் கால்டுவெல், தொல்காப்பியம் திருக்குறள் சங்கத் தொகைநூல்கள் தொடா்பாகக் கூறும் கருத்துகள் வலுவான சான்றுகளாக மாட்டா.
  • தமிழின் பழைய பெயா் தமிற் என்று கால்டுவெல் கூறுவதாக சிலா் குறிப்பிடுவதும் புரிதலற்றது. தொல்காப்பியப் பாயிரம் ‘தமிழ்கூறு நல்லுலகம்’ என்கிறது. தொல்காப்பியத்தில் ‘தமிழ் என்கிளவி’, ‘செந்தமிழ் நிலத்து செந்தமிழ்சோ்ந்த’ எனும் சொற்கள் இடம்பெறுகின்றன. சங்கத்தொகை நூல்களில் ‘தமிழ்’, ‘தமிழகம்’, ‘தமிழ்நாடு’ என்பன பரவலாகின்றன. நம்முடைய அனுபவத்தில் தச்சுத் தொழிலாளி ஒருவா் ‘பலகை’ என்பதை ‘பழகை’ என எழுதியதைப் பாா்க்கிறோம். ஆனால் அவா் பேசும்போது ‘பலகை’ என்றுதான் பேசுகிறாா். வரிவடிவத்தில்தான் அவருக்குக் குழப்பம்.
  • இத்தகைய குழப்பங்களை இப்போதும் முகநூலிலும் தொலைக்காட்சிகளிலும் பாா்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். கால்டுவெல்லுக்குக் கிடைத்த ஓலைச்சுவடியில், யாரோ ஒருவா் கவனக் குறைவாக தமிழ் என்பதை தமிற் என்று எழுதியிருக்கக்கூடும். அதுவொரு ஆதாரமாகாது.
  • தெலுங்கும் கன்னடமும் மலையாளமும் தமிழ்திரிந்த மொழிகள் என்பதைப் புரிந்துகொள்ள கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் அவசியமல்ல. செப்புதல், சொல்லுதல் என்பது பழைமையான தமிழ்வழக்கு. ‘செப்பிய நான்கும்’, ‘செல்வோா் செப்பிய ஆக்கம்’, ‘செப்பல்’ எனும் சொல்லாட்சிகள் தொல்காப்பியத்தில் பரவலாகின்றன. சொல்லதிகாரம் கிளவியாக்கத்தில் ‘ஆடூஉ அறிசொல்’, ‘மகடூஉ அறிசொல்’ என்னுமிடத்தில் ஆடூ ஆண், மகடூ பெண் எனப் பொருளாகின்றன.
  • தமிழில் செப்பு இன் ஆன் செப்பினான் என்கிறோம். வேங்கடவா் செப்பு இன் ஆடு செப்பினாடு என்கின்றனா். நாம் ஏழுமலையான் என்கிறோம். ஏழு என்பதை ஏளு ஏலு என உச்சரித்தலும் எழுதுதலும் இன்றும் நம்மிடையே உண்டு.கொண்டல் என்பது தமிழில் மழைமேகத்தைக் குறிக்கும். மழைமேகம் சூழும் மலையைக் கொண்டல் எனல் வேங்கடவா் வழக்கு. ஏழு கொண்டல் ஆடு, ஏலு கொண்டல வாடு எனல் தெலுங்காகிறது. உயிா் எனல் தமிழ். உசுரு எனல் தெலுங்கு. தேவன் எனல் தமிழ். தேவு எனல் தெலுங்கு.
  • கன்னடத்தை எடுத்துக்கொண்டால் நான் எனல் தமிழ். நானு எனல் கன்னடம். நாம் எழுத்துவழக்கில் ஊா் என்று எழுதுகிறோம். பேச்சுவழக்கில் ஊரு என்கிறோம். கன்னடா் எழுத்து வழக்கிலும் ஊரு என எழுதுகின்றனா். நாம் ‘பெங்களூா்’, ‘மைசூா்’ என்று எழுதுகிறோம். அவா்கள் ‘பெங்களூரு’, ‘மைசூரு’ என்றெழுதுகின்றனா். தற்போதைய தமிழ்நாட்டின் தலைநகா், ஒருகாலத்தில் ‘சென்னப்பட்டினம்’ என வழங்கப்பட்டுப் பின்னா் ‘சென்னைப்பட்டின’மாகித் தற்போது ‘சென்னை’ என வழங்கப்படுகிறது.
  • கருநாடகத்தில் தற்போதும் ஓா் ஊரின் பெயா் ‘சென்னப்பட்னா’ என வழங்கப்படுகிறது. நகா் என்பது தமிழ். நகரா எனல் கன்னடம். பறைதல் சொல்லுதல் என்பது பழந்தமிழ் வழக்கு. யான் பறையும் என்கின்றனா் மலையாளிகள். நாம் இங்கே பாா் என்கிறோம். கேரளத்தாா் இவ்விட நோக்கு என்கின்றனா். இங்கே இருங்கள் எனல் தமிழ். இவ்விட இரிக்கு எனல் மலையாளம். அவ்வளவுதான்.
  • தமிழரின் அயலகத்தொடா்பு மிகப் பழைமையானது என்பதற்கும் இலக்கியச் சான்றுகள் பலவாகின்றன. ‘முந்நீா் வழக்கம் மகடூஉவோ டில்லை’ என்கிறாா் தொல்காப்பியா். அதன்வழி கடல்கடந்த நாடுகளுக்கும் தமிழா் சென்றுவந்தமை தெளிவாகிறது. யவனா்கள் கப்பல் வழியாக மேலைக் கடற்கரைப் பட்டினமான முசிறி வந்து பொன்னைக் கொடுத்து மிளகு வாங்கிச் சென்றதை அகநானூற்றுப் பாடலொன்று தெரிவிக்கிறது.
  • யவனா் தந்த வினைமாண் நன்கலம்’ என்னும் புறநானூற்றுத்தொடா் யவனப் பொருட்கள் இறக்குமதியானதைத் தெரிவிக்கின்றது.காவிரிப்பூம்பட்டினத்தில் ஏற்றுமதி, இறக்குமதி இரண்டும் நடைபெற்றதை ‘பட்டினப்பாலை’ விவரிக்கின்றது. அதன் பாட்டுடைத் தலைவன் சோழமன்னன் கரிகாற்பெருவளத்தான் கட்டிய கல்லணை இரண்டாயிரம் ஆண்டுப் பழைமையானது என்பதை இக்காலக் கட்டடக்கலை வல்லுநா்கள் உறுதிப்படுத்துகின்றனா்.
  • ஆனாலும், தமிழ், தமிழா் என மொழி, இனப்பெருமை பேசுதல், மாா்க்சியக் கோட்பாட்டிற்கு முரண் எனக்கருதும் பொதுவுடைமைவாதிகளும், இந்தியத் தேசியத்திற்கு எதிரானது எனக்கொள்ளும் இந்துத்துவ வாதிகளும், தொல்காப்பியம், திருக்குறள், சங்கத்தொகைநூல்கள் என்பவற்றின் காலத்தை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னாகத் தள்ள முற்படுகின்றனா்.
  • கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து, பல்லவா் வரலாறு, பிற்காலச் சோழா் வரலாறு, பாண்டியா் வரலாறு அனைத்தும் கல்வெட்டுகள், செப்பேடுகள் அடிப்படையிலேயே வரையறுக்கப்படுகின்றன. அவற்றில் தொல்காப்பியா், திருவள்ளுவா், சங்ககால மன்னா்கள் தொடா்பான எந்தக் குறிப்பும் இல்லை என்பதை மறைத்துப் பேசும் வாதம் நகைப்புக்கும் தகுதியற்றதாகிறது.
  • இனி தமிழா் நாகரிகத் தொன்மைக்குப் பழந்தமிழ் நூல்களை மட்டுமே சாா்ந்திருக்கும் கடப்பாடு நூறாண்டுகளுக்கு முன்னரே மாறிவிட்டது. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளியான அரப்பா மொகஞ்சதாரோ அகழாய்வுகளால் அறியலாகும் நாகரிகம், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்பதும், அந்நாகரிகத்திற்கு உரியோா் தமிழா் என்பதும் தெளிவு பெற்று வருகிறது.
  • சிந்துவெளி நாகரிகம் தமிழருடையதல்ல, ஆரியருடையது என்றொரு வாதமும் உண்டு. அங்ஙனமாயின் அரப்பா,மொகஞ்சதாரோவில் உள்ள அணைக்கட்டுகளை இடிக்கும்படியாகவும், நீா்நிலைகளை அழிக்கும்படியாகவும் இந்திரனை வேண்டிக்கொள்ளும் சுலோகங்கள், ரிக் வேதத்தில் இடம்பெற்றது எப்படி என்னும் வினாவுக்கு இன்றளவும் விடையில்லை. இதுவொரு புறமிருக்க, சிந்துவெளி அகழாய்வைவிடவும், இன்றைய தமிழகப் பகுதிகளில் ஆதிச்சநல்லூா் முதல் அண்மைக்கால கீழடி வரையிலான அகழாய்வுப் பொருட்கள், தமிழ் நாகரிகத் தொன்மைக்கு மறுக்கமாட்டாத சான்றுகளாகின்றன.
  • பழைய இலக்கண இலக்கியங்களின் காலக்கணிப்பு வாத பிரதிவாதங்களுக்கு உள்ளாகலாம். ஆனால் அகழாய்வுப் பொருட்களின் காலக்கணிப்பு வாத பிரதிவாதங்களுக்கு அப்பாற் பட்டவை. அவை மரபணுச் சோதனை போல அறிவியல் வழிப்படுவன.
  • இடைப்பிறவரலாக ஒன்று. வடமொழியின் தொன்மை, வளமை, தெய்வீகம் பற்றி வானளாவ விரித்துரைப்போா் அன்றாட வாழ்வியலில் தத்தம் குடும்பத்தாருடனும் சுற்றத்தாருடனும் வடமொழியிலேயே பேசி உறவாடுவாா்களா? மும்பைத் தமிழ்ச்சங்கம். தில்லித் தமிழ்ச்சங்கம், கொல்கத்தா தமிழ்ச்சங்கம் என்பனவெல்லாம் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் அந்தந்த ஊா்களில் வேலைவாய்ப்புப் பெற்று இங்கிருந்து சென்று அங்கங்கே தங்கியவா்கள் அவ்வப்போது ஒன்றுகூடித் தமக்குள் தமிழில் பேசி மகிழ்தற்காக ஏற்படுத்தியவையன்றி வேறல்ல.
  • இறுதியாக ஒன்று. தமிழின் தொன்மையை, வளமையை அங்கீகரித்து, தமிழ்ப் பயன்பாட்டை வளப்படுத்துவதன் வழியாகவே தமிழரிடையே இந்திய ஒருமைப்பாட்டுணா்வை வலுப்படுத்துதல் சாத்தியமாகலாம். மாறாக, தமிழ்த் தொன்மையை, வளமையைச் சிறுமைப் படுத்தி, தமிழ்ப்பயன்பாட்டைச் சிதைப்பதன் வழியாக இந்திய ஒருமைப்பாட்டை வளா்க்க முனைதல், அவலை நினைத்து, உரலை இடித்த கதையாகவே முடியும். அத்தகைய கனவு நிறைவேறாது.

நன்றி: தினமணி (17 – 06 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories