TNPSC Thervupettagam

தயங்குவானேன்

May 12 , 2021 1101 days 521 0
  • ஐந்து நாள்களாகத் தொடர்ந்து நான்கு லட்சத்துக்கும் அதிகமாக இருந்து வந்த தினசரி கொவைட் 19 நோய்த்தொற்று பாதிப்பு, திங்கள்கிழமை முதல் குறையத் தொடங்கியிருப்பது ஆறுதல் அளிக்கும் செய்தி.
  • கடந்த மார்ச் மாத மத்தியிலிருந்து ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்று ஏறுமுகத்திலிருந்த பாதிப்பு குறைந்திருப்பது இடைக்கால நிலைமையா அல்லது பாதிப்பில் ஏற்பட்டிருக்கும் தளர்வா என்பது போகப் போகத்தான் தெரியும்.
  • நேற்றைய நிலவரப்படி தேசிய அளவிலான பாதிப்பு 2,29,92,517, உயிரிழப்பு 2,49,992. தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்து 38,509; உயிரிழப்பு 16,178.
  • மகாராஷ்டிர மாநிலத்தில் மிக அதிக அளவிலும், அதைத் தொடர்ந்து கர்நாடகத்திலும், கேரளத்திலும் நோய்த்தொற்றுப் பரவல் கடுமையாகக் காணப்படுகிறது.
  • தமிழ்நாடு, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரம், சத்தீஸ்கர், குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் பாதிப்பு எண்ணிக்கையையும் சேர்த்தால் அது தேசிய அளவிலான பாதிப்பில் 73.91%.
  • நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், தடுப்பூசிகள் மூலம் நோய்த்தொற்றின் பாதிப்பிலிருந்து கூடியவரை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது உறுதிப்பட்டிருக்கிறது.
  • இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட தடுப்பூசித் திட்டம், உலக அளவில் வேறு எந்த நாட்டையும்விட மிக அதிகமாக 17 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
  • திங்கள்கிழமை காலை நிலவரப்படி 114 நாள்களில் 17,01,76,603 தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன. சீனா இந்த இலக்கை எட்ட 119 நாள்களும், அமெரிக்கா 115 நாள்களும் எடுத்துக் கொண்டன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
  • எத்தனையோ இடர்ப்பாடுகளுக்கு இடையிலும், திட்டமிடல் குளறுபடிகளுக்கு நடுவிலும் தடுப்பூசித் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படுகிறது என்பது ஆறுதலான செய்தி.

தடுப்பூசித் திட்டம்

  • தடுப்பூசித் திட்டம் ஓரளவுக்கு வெற்றிகரமாகச் செயல்படுகிறது என்றாலும்கூட, அரசின் அணுகுமுறையில் பல தவறுகள் இருப்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
  • தனியார்மயத்தின் தவறா அல்லது தனியார் நிறுவனங்களைப் பகைத்துக்கொள்ள விரும்பாத அரசின் துணிவின்மையா என்று தெரியவில்லை, தடுப்பூசிக் கொள்கையில் தடுமாற்றம் தெரிகிறது.
  • உலகில் தடுப்பூசிகளுக்கான இரண்டாவது பெரிய சந்தையாக இருப்பது இந்தியாதான்.
  • தடுப்பூசி ஆராய்ச்சியில் நாம் முன்னிலை வகிக்காவிட்டாலும், உலகில் மிக அதிகமாக தடுப்பூசி தயாரிக்கும் நாடாக இருப்பதும் இந்தியாதான்.
  • அப்படியிருந்தும்கூட, இந்தியாவில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு காணப்படுகிறது. தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவியிருக்க வேண்டிய அவசியமே இல்லை என்பது மட்டுமல்ல, பல அண்டை நாடுகளுக்கு நாம் தடுப்பூசிகள் வழங்கி உதவியிருக்கவும் முடியும்.
  • நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அரசு ரத்தக்குழாய் அடைப்புக்குப் பயன்படுத்தப்படும் "ஸ்டென்ட்' விலையைத் துணிந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
  • அதற்கு எதிராக மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும், "ஸ்டென்ட்' தயாரிப்பாளர்களும், விற்பனையாளர்களும் அரசுக்குக் கடுமையான அழுத்தத்தைத் தந்தனர். ஆனால், அரசியல் துணிவுடன் சாமானியர்களுக்கும் இதய சிகிச்சை சாத்தியமாக வேண்டும் என்கிற நோக்கில் அரசு செயல்பட்டபோது, அதை வியந்து பாராட்டாதவர்களே கிடையாது.
  • அதே துணிவு இப்போது தடுப்பூசி தயாரிப்பாளர்களிடம் அரசால் ஏன் காட்டப்படவில்லை என்கிற கேள்வியை எழுப்பத் தோன்றுகிறது.
  • மே, ஜூன், ஜூலை மாதங்களில் அரசுக்கு வழங்குவதற்கான 11 கோடி "கோவிஷீல்ட்' தடுப்பூசி குப்பிகளுக்கு முன்பணமாக மத்திய அரசு, அதன் தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு ரூ.1,732.5 கோடியை அண்மையில் வழங்கியிருக்கிறது.
  • அதேபோல, ஐந்து கோடி "கோவேக்ஸின்' தடுப்பூசிக் குப்பிகளுக்கு ரூ.787.5 கோடியை முன்பணமாக அதைத் தயாரிக்கும் "பாரத் பயோடெக்' நிறுவனத்துக்கு அரசு வழங்கியிருக்கிறது.
  • ஒரு தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதித்த ரூ.150 வழங்கப்பட்டாலே, தடுப்பூசி நிறுவனங்கள் பெரும் லாபத்தை ஈட்ட முடியும்.
  • அப்படி இருக்கும்போது, தடுப்பூசி விற்பனையில் மத்திய அரசுக்கு ரூ.150, மாநில அரசுகளுக்கு "கோவிஷீல்ட்' ரூ. 300, "கோவேக்ஸின்' ரூ.400 என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு அதுவே ரூ.600, ரூ.1,200 என்றும் அரசே அனுமதித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
  • நோய்த்தொற்றுக் காலத்தில் அதைப் பயன்படுத்தி, கொள்ளை லாபம் ஈட்ட முற்படுபவரைத் தடுக்க வேண்டிய அரசு, அந்த மருந்து நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வழிகோலுவது வியப்பையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது.
  • அவர்களது அழுத்தத்திற்கு உடன்படாவிட்டால், அரசுக்குத் தடுப்பூசிகள் வழங்க மறுத்துவிடுவார்களோ என்கிற அச்சம் காரணமாக இருக்குமானால் அது அரசின் அரசியல் துணிவின்மையை காட்டுகிறது.
  • "கோவேக்ஸின்' தடுப்பூசி மருந்து என்பது "பாரத் பயோடெக்'கும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து உருவாக்கியது.
  • அந்தத் தடுப்பூசியை உருவாக்குவதற்கு மக்களின் வரிப்பணம் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நிலையில் "கோவேக்ஸின்' தடுப்பூசி தயாரிப்புக்கான உரிமத்தை ஏனைய பல தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கு வழங்கி, பலரும் தடுப்பூசி தயாரிக்க வழிகோலுவதன் மூலம் இந்தியாவின் தடுப்பூசி தேவையை ஈடுகட்ட முடியும். அரசு தயங்குவானேன்?

நன்றி: தினமணி  (12 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories