TNPSC Thervupettagam

தற்சார்புப் பொருளாதாரத்தை நோக்கி

February 14 , 2022 811 days 448 0
  • பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்துள்ளார்.
  • நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசத் தொடங்கிய நிர்மலா சீதாராமன், "இந்தியக் குடியரசு அதன் தற்போதைய வடிவத்தில் 73 ஆண்டு கால சமநிலையை நிலை நிறுத்தியுள்ளது; அது பிரமிடு வடிவிலான மூன்றடுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதித்துவ அமைப்பைக் கொண்டிருப்பது நம் மக்களுக்கு பெருமை சேர்க்கிறது.
  • ஏப்ரல்-7, 1860ஆம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது; ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த அரசியல்வாதியும் பொருளாதார நிபுணருமான - ஜேம்ஸ் வில்ஸன் பிரிட்டிஷ் அரசிடம் அந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அன்றிலிருந்து இது தொடர்கிறது.
  • சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் 1947ஆம் ஆண்டு நவம்பர் 26-இல் தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் அந்த புனிதமான பணியைத் தொடங்கி வைத்தார்.
  • அவரைத் தொடர்ந்து இந்திய அரசின் பல்வேறு நிதியமைச்சர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்து மக்களின் பாராட்டுக்கும், விமர்சனத்திற்கும் ஆளாகியிருக்கின்றனர் என்பது நீண்ட வரலாறு.
  • "இந்த அமைப்பில் இன்று 30 லட்சத்துக்கும் அதிகமான தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளனர். அவர்களில் 10 லட்சம் பேர் பெண்கள். இந்த ஏழு தசாப்தங்களில் நம் அரசியலமைப்புச் சட்டம் நமக்குச் சிறப்பாக சேவையாற்றியுள்ளது; ஏகாதிபத்தியத்திற்குப் பிந்தைய காலத்தில் பல குடியரசுகள் தங்கள் முந்தைய அரசியலமைப்பை நிராகரித்து புதியவற்றை சோதித்துள்ளன.
  • எனவே, குடியரசை வலுவாகவும், உயிர்ப்போடும் வைத்திருக்க மக்களால் முடியும்' என்பதை நிதியமைச்சர் ஆணித்தரமாக கோடிட்டு காட்டியிருக்கிறார்.

தற்சார்பு பொருளாதாரம்

  • "முதலீட்டுக்கான திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு அறிவித்திருப்பது, பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும். மாநிலங்களுக்கான ஒரு லட்சம் கோடி வட்டியில்லாக் கடன் 50 ஆண்டு தவணை - மாநிலங்களில் புதிய முதலீடுகளை ஊக்கப்படுத்தும். கிராமப்புற வேளாண் நிதி, கிராமப் பொருளாதாரத்தை உயர்த்தும், நேரடி கொள்முதல், குடிநீர் வசதி, பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், போன்றவை தொழிலுக்கு உதவியாக இருக்கும். நாடு முழுவதும் 100 சரக்கு முனையங்கள், 25 ஆயிரம் கி.மீ.க்கு தேசிய நெடுஞ்சாலைப் போன்றவை கட்டமைப்பை மேம்படுத்தும்' - என தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கத்தின் (சீமா) தலைவர் கே.வி.கார்த்திக் சொல்லியிருக்கிறார்.
  • ""புதிதாக தொடங்கப்படும் - "ஸ்டார்ட் அப்' உற்பத்தி நிறுவனங்களுக்கான ஊக்க சலுகையை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கச் செய்துள்ளது, புதிய முதலீடுகளை அதிகரிக்கும். தொழில் நுட்பங்கள் உதவியுடன் விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது. சுலப வணிக திட்டமிடல் - தொழில் நிறுவனங்களின் செயல் திறனை அதிகரிக்கும்'' - என இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபுதாமோதரன் தெரிவித்திருக்கிறார்.
  • ""உற்பத்தியோடு இணைந்த ஊக்கத் திட்டமான - "ஆத்மநிர்பர் பாரத்' வாயிலாக 60 லட்சம் புதிய வேலை வாய்ப்பும், 30 லட்சம் கோடிக்கும் கூடுதல் உற்பத்தியும் உருவாகிறது. கரோனா நெருக்கடியில் இருந்து சிறு, குறுந்தொழில் விடுபடுவதற்காக ரூ.6,000 கோடி மதிப்பிலான "ரேம்ப்' திட்டத்தால் தொழில் வளம் பெருகும். "ட்ரோன் சக்தி' திட்டம் மூலம் "ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் பயன்பெறும். பாலிசிலிகான் முதல் சோலார் பி.வி., மாடுயூல்ஸ் வரை உற்பத்தி செய்யும் ஒருங்கிணைந்த தயாரிப்பு நிறுவனங்களுக்கு முன்னுரிமை தரும் வகையில் 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
  • 20 ஆயிரம் கோடிக்கு புதுமையான நிதி முதலீடுகளை திரட்டுதல் வரவேற்புக்குரியது'' - என கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத் தலைவர் (கொடிசியா) எம்.வி.ரமேஷ்பாபு பெருமையோடு குறிப்பிட்டிருக்கிறார்.
  • ""பொருளாதார வளர்ச்சிக்கான நேர்மறையான அம்சங்களை பட்ஜெட் கொண்டுள்ளது. நவீன தொழில்நுட்பங்கள் உதவியுடன் பொருளாதாரத்தை எண்ம (டிஜிட்டல்) மயமாக்கும் அரசின் திட்டமும் பட்ஜெட்டில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம், எண்ம ரூபாய் என்ற திட்டம். இது மிகவும் வரவேற்கத்தக்கது. வருமான வரிவிதிப்பில் மாற்றமில்லை. அதேநேரம்.
  • "அப்டேட்டட் ரிட்டர்ன்' என்ற பெயரில் கூடுதலான ஒரு வாய்ப்பு வரி செலுத்துவோருக்கு வழங்கப்பட்டுள்ளது, வரவேற்கத்தக்கது'' என கோவை ஆடிட்டர் அரவிந்த் தங்கம் கூறியிருக்கிறார்.
  • ""புதிய வந்தே பாரத் ரயில்கள், சரக்கு முனையங்கள், நெடுஞ்சாலை விரிவாக்கம், உள்ளூர் வணிக மேம்பாட்டுக்கு ஒரு ரயில்வே நிலையம், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல், நதிகள் இணைப்புத் திட்டம், சிறப்பு பொருளாதார மண்டல சீரமைப்பு, மின் வாகன உற்பத்தி ஊக்குவிப்பு, ராணுவத் தளவாடங்கள் உள் நாட்டிலேயே உற்பத்தி உள்ளிட்டத் திட்டங்கள் திருப்தி அளிக்கின்றன'' - என தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனங்களின் அமைப்பு - டான்டியா, துணைத் தலைவர் சுருளிவேல் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
  • ""அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை கவனத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறைகளுக்கும் பயன்படும் விதத்தில் அமைந்துள்ளது. புதிய தொழில்நுட்பம் சார்ந்துள்ள தொழில்களுக்கும், புதிதாக தொடங்கப்பட உள்ள தொழில்களுக்கும் - பட்ஜெட் பயனளிக்கும்படி உள்ளது. எண்மக் கல்வி, மருத்துவம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் விதமாக பட்ஜெட் அமைந்துள்ளது'' - என இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) கோவை மாவட்டத் தலைவர் அர்ஜுன் பிரகாஷ் பாராட்டியிருக்கிறார்.
  • "நாட்டின் தற்போதைய வளர்ச்சியை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் மத்திய அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது. உள்கட்டமைப்பிற்கு அதிகமான நிதி, எண்ம மயமாக்கல், உள்நாட்டு தயாரிப்பு, நிலைத்தன்மை, கட்டுமானத் துறைக்கு ஊக்கம், இரட்டை இலக்க வளர்ச்சி ஆகியவற்றிற்கு முன்னுரிமை தந்திருப்பதன் மூலமாக' – ஒட்டு மொத்த இந்திய மக்களின் வளர்ச்சிக்கான, வாழ்வுக்கான, மேம்பாட்டுக்கான, விடியலுக்கான பட்ஜெட்டை பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டிற்கு தந்திருப்பது ஒரு வரப்பிரசாதம் என்று பலரும் புகழாரம் சூட்டி இருக்கின்றனர்.
  • ராணுவத்தை மேம்படுத்தும் தொலைநோக்குப் பார்வையுடன் பட்ஜெட் தயாரிக்கப் பட்டுள்ளது. ராணுவத் தளவாடங்களின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தவும், அவற்றை கொள்முதல் செய்யவும் பட்ஜெட்டில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • இறக்குமதியைக் குறைத்து ஆயுதப் படைகளுக்கான உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • இதனால், நம் நாட்டில் உள்ள தனியார் துறையினர் ராணுவத் தளவாட உற்பத்தியில் இறங்க மிகப்பெரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • ராணுவத்தை மட்டுமே மேம்படுத்தும் பட்ஜெட்டாக இல்லாமல், எதிர்காலத்தில் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பட்ஜெட்டாக உள்ளது'' - என ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் தியாகராஜன் கூறியிருக்கிறார்.
  • பெருந்தொற்று அச்சுறுத்தும் இந்தக் காலகட்டத்திலும், நம் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவிகிதமாக இருக்கும் என்பது நம் நாட்டு அளவிற்கு பெரிய பொருளாதாரங்களில், இது மிகப் பெரிய வளர்ச்சியாகும்.
  • வலுவான வரி நிர்வாகமும், அருமையான பொருளாதார வளர்ச்சியும் தான் ஜி.எஸ்.டி. வருவாயை அதிகரிப்பதற்கு அடிகோலியிருக்கிறது.
  • வரலாறு காணாத வகையில் வளர்ச்சித் திட்டங்களையும், மக்கள் நலத்திட்டங்களையும் நிதிநிலை அறிக்கை விவரிக்கிறது.
  • ஐந்து நதிநீர் இணைப்புகளைப் பற்றித் தீவிரமாகத் திட்டமிடப்போவதாக கூறிய இந்தியாவின் முதல் நிதிநிலை அறிக்கை இதுதான்.
  • "உலகம் எங்கும் வாழும் மக்கள் - இந்தியா வலிமையான, அதிகாரம் பெற்ற நாடாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதேபோல், இந்தியாவை அதிவேகத்துடன் வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று, பல்வேறு துறைகளில் வலிமையான நாடாக மாற்ற வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்கிறார்கள்.
  • இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறிவருகிறது. அது மட்டுமின்றி, தற்சார்பு இந்தியாவுக்கான அடித்தளத்தில்தான் நவீன இந்தியாவும் கட்டமைக்கப்பட்டுள்ளது.
  • ஏழை, நடுத்தர மக்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு அடிப்படை வசதிகளை அளிக்கும் வகையில் மத்திய நிதிநிலை அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
  • அடிப்படை வசதிகளை வழங்குவதில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு அரசு பாடுபட்டு வருகிறது - என்று "தற்சார்பு பொருளாதாரம்' தொடர்பாக பிப்ரவரி 2-ஆம் தேதி புது தில்லியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பிரகடனம் செய்திருக்கிறார்.

நன்றி: தினமணி (14 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories