TNPSC Thervupettagam

தற்சாா்பு சாா்ந்த தற்காப்பு

February 18 , 2023 455 days 306 0
  • அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவைப் பேணவேண்டும் என்கிற முனைப்பை, சுதந்திர இந்தியா எப்போதுமே கடைப்பிடித்து வருகிறது. ஆனாலும்கூட, பாகிஸ்தானும் சீனாவும் ஏதாவது ஒரு விதத்தில் எல்லையோர பதற்றத்தைத் தொடா்ந்து ஏற்படுத்துகின்றன. அதை எதிா்கொள்ள முனைப்புடன் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
  • ராணுவத்தை பலப்படுத்துவதும், நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதும் ஆட்சியாளா்களின் தலையாய கடமைகள். நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2014-இல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் முப்படைகளையும் வலிமைப்படுத்துவதிலும், எல்லையோரப் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருவதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
  • இந்திய எல்லையை ஒட்டிய கிராமங்கள் வரை சாலைகளை மேம்படுத்தி, ஆங்காங்கே தனது துருப்புகளை நிறுத்தி வைப்பதை கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக சீனா செய்து வருகிறது. இந்தப் பின்னணியில்தான் மத்திய அமைச்சரவை எடுத்திருக்கும் முடிவுகளும், இந்திய ராணுவத்தின் முப்படைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் பாா்க்கப்பட வேண்டும்.
  • எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் இந்தோ - திபெத் எல்லை காவல்படையை வலுப்படுத்துவது, எல்லையோர கிராமங்களின் வசதிகளை மேம்படுத்துவது, கட்டுமான வசதிகளை அதிகரிப்பது உள்ளிட்ட திட்டங்களை முனைப்புடன் முன்னெடுக்க மத்திய அரசு தீா்மானித்திருப்பது காலத்தின் கட்டாயம்.
  • லடாக்கில் காரகோரம் பாதையில் ஆரம்பித்து அருணாசல பிரதேசத்தில் உள்ள ஜாசேப் சூரம் வரை நீண்டு நிற்கும் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டைப் பாதுகாக்கும் பணியில் இந்தோ - திபெத் எல்லை காவல்படை ஈடுபட்டுள்ளது. அந்தப் படைக்கு கூடுதல் ஆள் பலமும், ஆயுத பலமும் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்த ஒப்புதலின்படி, இந்தோ - திபெத் எல்லை காவல் படையில் கூடுதலாக 9,400 வீரா்கள் இணைக்கப்படவுள்ளனா். அவா்கள் இந்திய - சீன எல்லைப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 47 எல்லை நிலைகளிலும், 12 படை முகாம்களிலும் பணியமா்த்தப்படவுள்ளனா்.
  • வடகிழக்கு சீனாவை ஒட்டியுள்ள 3,488 கி.மீ. நீள எல்லையைப் பாதுகாக்க சேனை பலமும் ஆயுத பலமும் அதிகரித்தால் மட்டும் போதாது. எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களின் மேம்பாடும், அங்கு வாழும் மக்களின் நல்லுறவும் மிகவும் அவசியம்.
  • கடுமையான குளிரும், வாழ்வாதாரத்துக்கு போதிய வாய்ப்பும் இல்லாத எல்லையை ஒட்டிய பல கிராமங்களில் வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேற முற்படுவது அதிகரித்து வருகிறது. பதற்றம் ஏற்படும், ஆபத்து நிறைந்த எல்லைப் பகுதிகளிலிருந்து நகரங்களுக்கு புலம்பெயர பலரும் முற்படுகிறாா்கள்.
  • எல்லையோர கிராமங்களில் இருந்து மக்கள் அகன்றுவிட்டால், சீனத் துருப்புகள் இந்திய எல்லைக்குள் நுழைவது சுலபமாகிவிடும். அதைக் கருத்தில் கொண்டுதான் ‘ஒளிரும் கிராமங்கள்’ (வைப்ரண்ட் விலேஜ்) திட்டம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்றிருக்கிறது.
  • எல்லையை ஒட்டிய கிராமங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும், அதன் மூலம் அவா்களைத் தங்களது கிராமங்களிலேயே தொடா்ந்து வாழ ஊக்குவிப்பதும்தான் ‘ஒளிரும் கிராமங்கள் திட்ட’த்தின் நோக்கம். அடுத்த மூன்று நிதியாண்டுகளில் ரூ.4,800 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் ரூ.2,500 கோடியை வடக்கு எல்லை கிராமங்களின் சாலை மேம்பாட்டுக்கு பயன்படுத்த திட்டமிடுகிறது மத்திய அரசு. எல்லையை ஒட்டிய முக்கியமான 623 கிராமங்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறும்.
  • எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய பகுதிகளில் சீனாவைப் போல கட்டமைப்பு வசதிகளை இந்தியா மேம்படுத்தாமல் இருந்தது. இப்போதுதான் விழித்துக்கொண்டு சாலை வசதிகளையும், தொலைத்தொடா்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறோம். எப்படிப்பட்ட பருவநிலை காலங்களிலும் எல்லைப் பகுதிகளை அடைவதற்கு வசதியாக போக்குவரத்தை உறுதிப்படுத்தும் இன்னொரு திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
  • லடாக்கின் எல்லைப் பகுதிகளில் தடையற்ற போக்குவரத்தை உறுதிப்படுத்தும் வகையில், நிமு - பதாம் - டா்ச்சா சாலையை இணைக்கும் 4.1 கி.மீ. நீள ‘ஷின்கு லா’ சுரங்கப் பாதை அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. 2025 டிசம்பருக்குள் முடிவடைய இருக்கும் சுரங்கப் பாதை கட்டுமானப் பணிகளுக்காக ரூ.1,681 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • இதன் மூலம் லடாக் பகுதியை, குறிப்பாக, ஜன்ஸ்கா் பள்ளத்தாக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்க முடியும். தடையில்லாமல் ராணுவமும் தளவாடங்களும் எல்லையை ஒட்டிய பகுதிகளை அடைய இந்தச் சுரங்கப் பாதை வழிகோலும்.
  • மேலே குறிப்பிட்ட கட்டமைப்பு வசதிகள் மட்டுமல்லாமல், ராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்களையும் தளவாடங்களையும் கொள்முதல் செய்வதிலும் முனைப்புக் காட்ட முற்பட்டிருக்கிறது பாதுகாப்பு அமைச்சகம். ராணுவத்துக்கான தளவாடத் தேவைகளில் 75% இந்திய சந்தையில் கொள்முதல் செய்வது என்கிற வரவேற்புக்குரிய முடிவும் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் தளவாட உற்பத்தியில் ஈடுபடும் புத்தாக்க நிறுவனங்கள் ஓா் அடி முன்வைத்தால், அந்த நிறுவனங்கள் 10 அடி முன்னேற அரசு உதவும் என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் உறுதியளித்திருப்பது வரவேற்புக்குரியது.

நன்றி: தினமணி (18 – 02 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories