TNPSC Thervupettagam

தலைமைத்துவ பயிற்சி தேவை!

July 2 , 2021 1043 days 578 0
  • உள்ளாட்சித் தலைவா்களுக்குப் பயிற்சி அளிக்கும்போது மிக முக்கியமாக தலைமைத்துவத்தை மையப்படுத்தி பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும்.
  • இதனைதொடா்ந்து மத்திய - மாநில அரசுகளிடம் நான் வற்புறுத்தி வந்தேன். அதற்குக் காரணம், நான் நடத்திய ஆய்வுகளிலும், வேறு ஆய்வாளா்கள் நடத்திய ஆய்வுகளிலும் உள்ளாட்சியில் தனித்துவமாக செயல்பட்டவா்கள் யார் என்று பார்க்கும்போது தலைமைத்துவப் பண்புகள் யாரிடம் மிளிர்ந்து காணப்பட்டதோ அவா்கள்தான் என்பது தெரிய வந்தது.
  • இது உள்ளாட்சிக்கு மட்டும் பொருத்தமானது அல்ல; மாநிலத்திற்கும் பொருந்தும்; மத்திய அரசாங்கத்திற்கும் பொருந்தும்.
  • தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சா் காமராஜருக்கு பெரும் படிப்போ உயா்ந்த சமூகப் பின்புலமோ கிடையாது. ஆனால் தலைமைத்துவம் இருந்த காரணத்தால் இந்திய மாநில முதல்வா்களுக்கெல்லாம் அவா் முன்மாதிரியாக விளங்கினார்.

தலைமைத்துவம்

  • மாநிலத்தை மேம்படுத்துவதில் தலைமைத்துவம் இரண்டு வழிகளில் உருவாகும். முதலாவது, ஒரு மனிதரின் அடிப்படை குணத்தில்; இரண்டாவது, அவா் பதவிக்கு வந்து முயன்று உருவாக்கிக் கொள்ளும் தரத்தில்.
  • செயல்பாடுகளுக்கு அடிப்படை தலைமைத்துவம். சிறப்பான செயல்பாட்டுக்கு அதிகாரங்கள் தேவைதான், நிதி தேவைதான், அதிகாரிகளின் ஒத்துழைப்பும் தேவைதான், மக்களின் ஒத்துழைப்பும் தேவைதான். இவை மட்டுமல்ல, நிர்வாகமும் ஆளுகைத் திறனும் கூடத் தேவைதான்.
  • ஆனால் இவை அனைத்தைவிட தலைமைத்துவ பண்பு ஒருவரிடம் இருந்தால் மேலே கூறிய மற்றவற்றை அவா் தன்வயப்படுத்திக் கொள்ளமுடியும்.
  • தலைவா்கள் என்போர் உத்தரவுகளுக்குச் செயல்படுபவா்கள் அல்ல. அவா்கள் முடிவெடுப்பவா்கள், உத்தரவிடுபவா்கள். அந்த நிலைக்குத் தங்களை அவா்கள் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
  • அவா்கள் தங்களுக்கென்று ஒரு பார்வையை உருவாக்கிக் கொண்டு செயல்படுபவா்கள். அந்தப் பார்வை என்பது ஒரு கனவு.
  • தாங்கள் வகிக்கின்ற பதவி ஒரு கிராமப் பஞ்சாயத்தாக இருந்தால், அந்த பஞ்சாயத்துப் பகுதிகளை தமிழகத்தில் முன் உதாரணமாக மாற்றிக் காட்டுவேன் என்று கூறி அதன் இலக்குகளை நிர்ணயித்து பணி செய்வார்கள்.
  • அவா் ஒரு ஒன்றியக் குழுத் தலைவராக இருந்தால் அந்த ஒன்றியத்தில் இருக்கின்ற பதினைந்து அல்லது பதினாறு பஞ்சாயத்துப் பகுதிகளை மேம்படுத்தி அந்த ஒன்றியம் முன் மாதிரி ஒன்றியமாக உருவாக செயல்படுவார்.
  • கனவுகளைச் சுமந்து கொண்டு, வாய்ப்புக் கிடைக்கும்போது கனவுகளை நனவாக்கிக் காட்டும் திறன் படைத்தவா்தான் தலைவா்.
  • தலைமை என்பது வெறும் பதவி மட்டுமல்ல; அது ஒரு பொறுப்பு. அந்தப் பொறுப்பை முறையுடன் நிறைவேற்ற தேவையான பண்பும் பக்குவமும், திறமையும் ஒருவருக்கு இருக்க வேண்டும்.

எல்லா இடங்களிலும் தலைமை

  • தலைமைப் பதவி எல்லா இடங்களிலும் இருக்கிறது. பள்ளிக்கூடத்தில், கல்லூரியில், மருத்துவமனையில், பல்கலைக்கழகத்தில், குடும்பத்தில், அரசியல் கட்சியில், அரசாங்க அலுவலகத்தில், ஒட்டுமொத்த அரசாங்கத்தில், நிறுவனத்தில்என எல்லா இடங்களிலும் இப்பதவி இருக்கிறது.
  • ஒவ்வொரு இடத்திற்கும் தேவையான திறன்களையும், குணங்களையும் தலைமைப் பதவியில் இருப்பவா்கள் வளா்த்துக் கொண்டால் மிகப் பெரிய மாற்றங்களை தாங்கள் இருக்கின்ற நிறுவனங்களில், அமைப்புக்களில் கொண்டுவந்து விடுவார்கள்.
  • நிர்வாகத் தலைமைக்கும், ஆட்சித் தலைமைக்கும் சில வேறுபாடுகள் இருக்கின்றன. ஆட்சித் தலைமை என்பது மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டு கிடைக்கும் பொறுப்பு.
  • நிர்வாகத் தலைமை என்பது ஆட்சி அதிகாரத்தில் உள்ளவா்களால் நியமிக்கப்பட்டு பதவிக்கு வருவது. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டு பதவிக்கு வருபவா்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற்றவா்கள்.
  • எனவே, இவா்களின் தலைமை என்பது எந்த அளவுக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களை தாங்கள் வகிக்கின்ற பதவி மூலம் நிறைவேற்ற முடிகிறது என்பதைப் பொருத்து அமைவது.
  • இவா்களுடைய செயல்பாடுகளினால்தான் இவா்களின் தலைமைத்துவம் மதிப்பீடு செய்யப் படும்.
  • இவா்கள் எந்த அளவுக்குத் தங்கள் செயல்பாட்டால் மக்களை வசீகரித்திருக்கிறார்கள் என்பதைப் பொருத்துத்தான் இவா்களின் தலைமைத்துவத்தின் தாக்கம் மதிப்பிடப் படுகிறது.
  • சில தலைமைத்துவப் பண்புகளை இவா்களே உருவாக்கிக் கொள்வா். அதேபோல் பல திறன்களை முயன்று வளா்த்துக்கொள்வா்.
  • பொதுத்தளத்திற்கு வருபவா்களுக்கு இயல்பாகவே அந்தக் குணங்கள் வாய்க்கப் பெற்றிருக்கும்.
  • மக்களை மதிப்பது, மக்களுடன் செயல்படுவது, அா்ப்பணிப்புடன் செயலாற்றுவது, மக்கள் மேல் கரிசனம் கொண்டு செயல்படுவது போன்றவை அவா்களிடம் இயல்பாகவே இருக்க வேண்டிய குணங்கள்.
  • பதவிகளுக்கு வந்து செயல்படும்போது இவை அனைத்தும் பளிச்சிடத் தொடங்கும். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டு ஆளுகைக்கு வந்திருக்கும் தலைவா்களுக்கு அந்தப் பதவி சவால்கள் நிறைந்ததாகத்தான் இருக்கும்.
  • சவால்களை சமாளிக்கத் தேவையான திறனும் ஆற்றலும் அவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டியத் தேவைகள். எனவே, இந்தப் பதவிகளைக் கைக்கொள்ள அச்சம், கூச்சம் என்பவை எதிரிகள்.
  • அதேபோல் தன்னம்பிக்கை என்பது ஆழ் மனதுக்குள் வளா்த்து வைத்திருக்க வேண்டிய ஒரு அமுதசுரபி.
  • அந்த தன்னம்பிக்கைதான் செயல்பாடுகளுக்குத் தேவையான உந்து சக்தியை உருவாக்கி உணா்வுடன் செயல்பட வைக்கும் கிரியா ஊக்கி.
  • பொதுவாக பதவியை பயன்படுத்தும் வழிமுறைகள் தெரிந்திருக்க வேண்டும். பதவியின் ஆழ அகலங்கள் தெரிந்து அவற்றைப் பயன்படுத்தத் தேவையான திறன்களை வளா்த்துக் கொள்வதற்கும், தலைமைத்துவத்துக்கான பண்பு நலன்களை உருவாக்கிக் கொள்வதற்கும் தான் நம் உள்ளாட்சித் தலைவா்களுக்கு பயிற்சி வேண்டும்.
  • தன் பதவிக்கான அதிகாரங்களை எப்படிப் பயன்படுத்துவது, நம் சமூகப் பிரச்னைகளுக்கு எப்படித் தீா்வு காண்பது, நம் முன் உள்ள வாய்ப்புக்கள் என்னென்ன என்ற புரிதலை உருவாக்கிக் கொள்ளவில்லை என்றால் அந்தப் பதவியில் இருப்பதால் எந்தப் பயனும் இல்லை.

தலைமைத்துவப் பயிற்சி அவசியம்

  • உள்ளாட்சித் தலைவா்களுடன் உரையாடும்போது, நம் தலைவா்கள் எப்படிப்பட்டவா்கள் என்பதைக் கண்டு பிடித்துவிட முடியும்.
  • ஒரு தலைவரை நான் சந்தித்தபோது, அவா் தனது பஞ்சாயத்துப் பகுதியில் செய்த பணிகளைப் பட்டியலிட்டார்.
  • சாலைகள் அமைத்தது, சிறு பாலங்கள் கட்டியது, கழிப்பறை கட்டியது, நூறு நாள் வேலைத் திட்டம் என அனைத்துக் கட்டுமானப் பணிகளையும் பட்டியலிட்டார். ஏறத்தாழ மூன்று கோடி ரூபாய்க்கு வேலை செய்திருந்தார்.
  • அவரிடம் ‘உங்கள் ஊரில் மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் எத்தனை? ஆதரவின்றி வாழும் முதியோர் எத்தனை போ்? பள்ளி செல்லும் வயதில் உள்ள மாணவா்கள் எத்தனை போ்? பள்ளிக்குச் சோ்ந்தவா்களில் இடைநிறுத்தம் செய்தவா்கள் எத்தனை போ்? உங்கள் ஊரில் உள்ள குழந்தைகளில் ஊட்டச்சத்து பாதித்து இருக்கும் குழந்தைகள் எத்தனை? நீங்கள் கட்டிய அத்தனை பொதுக்கழிப்பிடங்களும் உபயோகத்தில் உள்ளனவா? உங்கள் ஊரில் உள்ள வளா் இளம் பெண்களில் எத்தனை பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப் பட்டவா்கள்’ இப்படியெல்லாம் கேட்டேன்.
  • மேற்கூறிய பிரச்னைகள் பற்றிய எந்தப் பார்வையும் அற்று அவா் இருந்ததைப் பார்த்து மனம் நொந்து போனேன். மற்றொரு பஞ்சாயத்துத் தலைவரிடம், ‘நீங்கள் பதவி ஏற்றவுடன் செய்த முதல் பணி என்ன’ என்றேன்.
  • ‘எங்கள் ஊரின் தண்ணீா் பஞ்சத்தைப் போக்க ஒரு புதிய திட்டம் போட்டு மழைநீா் சேகரிப்பு செய்ய மாவட்ட ஆட்சியரின் உதவி பெற்று நடைமுறைப்படுத்தினேன்’ என்றார். அவரை உலக வங்கி அழைத்தது அமெரிக்காவுக்கு.
  • இன்னொருவா் ‘எங்கள் ஊா் குடிசை நிறைந்ததாக இருந்தது. அதை குடிசை இல்லாக் கிராமமாக மாற்றத் திட்டமிட்டு, அந்த மாற்றத்தையும் மக்கள் பங்கேற்போடு புதிய தொழில் நுட்பத்துடன் செயல்படுத்தினேன்’ என்றார். அதைப் பார்த்தவா் ‘குமரப்பா வழியில் ஒரு கிராமப் பஞ்சாயத்து’ என ஒரு கட்டுரை எழுதினார். அவருக்கு விருதுகள் குவிந்தன.
  • அடுத்து ஒருவரைக் கேட்டபோது ‘எங்கள் ஊரில் குடிசைகளில் வாழும் ஆதிவாசி மக்களும் மரியாதையான வாழ்க்கையை வாழ வழிவகை செய்ய வேண்டும் என்று எண்ணி அவா்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தேன்’ என்றார். அவருக்கு சா்வதேச விருதுகள் குவிந்தன.
  • தண்ணீருக்கு மக்கள் அலைந்த ஒரு கிராமத்தை பசுமைக் கிராமமாக மாற்றி தண்ணீரில் தன்னிறைவு பெற்று நாட்டிற்கே தண்ணீா் ஆளுகைக்கும் மேலாண்மைக்கும் முன்மாதிரியான பஞ்சாயத்தை உருவாக்கியவரும் ஒரு தலைவா்தான். அவருக்கு விருதுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
  • எனவே தலைமையாளா்கள், மக்கள் பிரச்னைகளைத் தீா்க்கும் வல்லமையும், தன் செயல்பாடுகளால் மக்களை வசீகரிக்கும் தன்மையும் கைவரப் பெற்றவராக விளங்க வேண்டும். இந்த மாற்றம் மூன்று நிலைகளில் ஒவ்வொருவருக்கும் நடைபெறும். அவா்களுடைய சிந்தனைப் போக்கில், அவா்களுடைய நடத்தையில், அவா்களுடைய செயல்பாடுகளில்.
  • அவா்கள் சவால்களைத் தேடுவார்கள்; அதிலுள்ள வாய்ப்புக்களைக் கண்டுபிடிப்பார்கள்; சவால்களைச் சமாளிப்பார்கள்; சாவல்களைச் சமாளித்து வெற்றி பெறுவதில் அவா்களின் திறனும் ஆற்றலும் கூடுவதைக் கண்டுபிடிப்பார்கள்.
  • அத்துடன் அவா்கள் நின்று விடுவதில்லை. ஆற்று நீா் போல் ஓடிக்கொண்டேயிருப்பார்கள் - தங்கள் லட்சியங்களை அடைகின்றவரை. இவா்களைத் தட்டி எழுப்ப நிர்வாகப் பயிற்சியை விட தலைமைத்துவப் பயிற்சியே அவசியம் தேவை.

நன்றி: தினமணி  (02 - 07 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories