TNPSC Thervupettagam

தளர்வுகள் அவசியம்!

June 2 , 2021 1068 days 536 0
  • ‘இன்று நீ – நாளை நான்’ இது பல ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான தமிழ்த் திரைப்படம். இப்போது கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளைப் பார்க்கும்போது, மனது இதையே சொல்கிறது.
  • இதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். தொற்று தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் சாதாரண மக்களைக் கணக்கில் கொண்டதாகவும் அமைய வேண்டும்.
  • மக்களைப் பெருந்தொற்றிலிருந்து காக்கத்தான் இப்படி முடிவெடுக்கிறார்கள் என்றாலும், அவற்றில் காணப்படும் முரண்களைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
  • மருந்து-மாத்திரைகளுக்காக மருந்துக் கடைகளையும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளையும் திறக்க அனுமதித்தவர்கள் சக்கர நாற்காலிகள், தள்ளுவண்டிகள், நோயாளிகளுக்கான சிறப்புப் படுக்கைகள் என மருத்துவச் சாதனங்கள் விற்கும் கடைகளைத் திறக்க ஏன் அனுமதிக்கவில்லை?
  • வீடுகளைத் தூய்மைப்படுத்த உதவும் ரசாயனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஏன் விதிவிலக்கு தரவில்லை?
  •  மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் அல்லாத வாகனங்களில் செல்ல முடிந்தவர்களுக்காக டாக்ஸிகளையும் ஆட்டோக்களையும் அனுப்பலாம் என்று ஏன் தீர்மானிக்க வில்லை?
  • பெரும்பாலானவர்கள் இந்தப் பற்றாக்குறையைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலிக்கிறார்கள்; சாதாரண மக்கள் ஏன் தேவையில்லாமல் மருத்துவமனைக்குச் செல்லவே ஆயிரக்கணக்கில் செலவிட வேண்டும்? சில ஆட்டோக்கள் ஆம்புலன்ஸாகப் பயன்படுத்தப்படும்போது, சாத்தியமுள்ள பிற வாகனங்களுக்கும் அந்த வாய்ப்பைக் கொடுத்தால் கட்டணமும் பாதிப்புகளும் குறையும்தானே?
  • கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர, பிற வகை நோயாளிகளும் திண்டாடுகிறார்கள்.
  • ரொட்டி, பன், பிஸ்கட் விற்கும் பேக்கரிகளுக்கு ஏன் தடை? ஹோட்டல்கள் பூட்டியிருப்பதால் பன்-பட்டர்-ஜாம் 15 ரூபாய்க்குச் சாப்பிட்டு ஒரு டீயோடு ஒருவேளை உணவைச் சுருக்கமாக முடித்துக்கொள்வார்களே சாமானிய ஏழைகள், அவர்களை ஏன் பட்டினி போட வேண்டும்? அரசும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் எல்லோருக்கும் உணவு அளித்துவிட முடியுமா?
  • சலவையகங்கள், முடிதிருத்தகங்கள், நகை செய்யும் பட்டறைகள், தச்சர்கள், கொல்லர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள் போன்றோருக்கும் சுகாதார நடைமுறைகளில் பயிற்சி அளித்துத் தொழில்களைத் தொடங்குமாறு ஊக்குவிக்க வேண்டும்.
  • முடக்கம் பலருடைய குடும்பங்களை நிரந்தரமாக முடக்கிவிடும். அரசு ஊழியர்களைப் போல மாதக்கணக்காக வேலையில்லாவிட்டாலும் உயிர் வாழ அவர்களால் முடியாது. அரசு தரும் உதவித்தொகை கொஞ்சம்கூடப் போதாது. அச்சத்தை விதைக்காமல், நம்பிக்கையை விதையுங்கள்.
  • மின்சாதனம் பழுதுபார்ப்போர், குடிநீர்க் குழாய் தொடர்பான வேலைகளைச் செய்வோர், கணினி-மடிக்கணினி பழுதுபார்ப்போர், செல்பேசி விற்பனை செய்வோர், இதர பழுதுபார்ப்போர் ஆகியோருக்கு இப்போது தேவை மிகுந்துவருகிறது.
  • இந்தச் சேவையாளர்களை முடக்குவதன் மூலம் நோயாளிகள் உட்படப் பலரும் தவிப்புக்கு உள்ளாகின்றனர். பிள்ளைகளை விட்டுத் தனியாகப் பிரிந்திருக்கும் வயதான பெற்றோர்களுக்கு இவர்களுடைய தேவை அவசியமாகிறது.
  • பெட்ரோல் பங்குகள் திறந்திருந்தாலும் காற்றுப் பிடிக்கவும் பஞ்சர் ஒட்டவும் டயர் மாற்றவும் முடியாமல் பலர் அவதிப்படுகிறார்கள். இவர்களில் பலர் உயிர் காக்கப் போராடும் தன்னார்வலர்கள், நோயாளிகளின் உறவினர்கள்.
  • எல்லாவற்றுக்கும் காவல் துறையையே அழைத்துத் தொல்லை தர முடியாது. வீடுகளுக்கு நேரடியாகப் பால் கறந்து தரும் பால்காரர்கள் மாடுகளுக்குப் பொட்டு, பிண்ணாக்கு, தவிடு போன்றவை தீர்ந்துவிட்டதால் அவதிப்படுகிறார்கள். கால்நடைகளுக்கான உணவுத் தேவைகளையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • காய்கறிகள், பழங்கள், பூக்களை விற்க முடியாமல், அழுகிய பிறகு அழுதுகொண்டே கொட்டும் நிலை தொடர்கிறது. வேளாண் விளைபொருட்களை அந்தந்தப் பருவத்தில்தான் பெற முடியும் என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியும்.
  • இவற்றை வீணாக்காமல் பயன்படுத்த பெருந்திட்டம் அவசியம். ஒருபுறம் பற்றாக்குறை, மறுபுறம் தேவைகள் நிறைவேறாமை தொடரக் கூடாது. இது இரட்டை இழப்பு.
  • ஊரடங்கு இன்னும் ஒரு வாரத்துக்கு நீளும் நிலையில், அதில் மேலும் தளர்வுகள் அவசியம் செய்யப்பட வேண்டும்.
  • இல்லாவிட்டால், துயரங்கள் மேலும் தொடரவே செய்யும். அரசு நிபுணர்கள் அனைவரும் பெருந்தொற்றையே இப்போதுதான் முதன்முறையாகப் பார்க்கிறார்கள்.
  • ஆகவே, பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம், அதனால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டியது. நிபுணர்களின் எந்தவொரு முடிவும் கீழே இருப்பவர்களை மனதில்கொண்டே எடுக்கப்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (02 - 06 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories