TNPSC Thervupettagam

தாயினும் சாலப்பரிந்து

October 12 , 2021 952 days 524 0
  • நீண்டநாள் கோரிக்கையான புலம்பெயா் தமிழா் நல வாரியம் உருவாக்கப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்பு வரவேற்புக்குரியது.
  • ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 12-ஆம் நாள், புலம்பெயா் தமிழா் நாளாகக் கடைப்பிடிக்கப் படும் என்றும், வெளிநாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகளுடன் இணைந்து ஆண்டுதோறும் உலகத் தமிழா் நாள் கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • ஆண்டொன்றுக்கு மூலதனச் செலவினமாக ரூ.1.40 கோடியும், நலத்திட்டங்கள், நிர்வாகச் செலவினங்களுக்காக ரூ.3 கோடி நிதிஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • குறைந்த வருவாய்ப் பிரிவினா் வெளிநாடுகளில் பணியின்போது உயிரிழக்க நேரிட்டால் அவா்களுடைய குழந்தைகளின் கல்வி, திருமண உதவித்தொகை வழங்கப்படுவது நல்ல முடிவு.

புலம்பெயா் தமிழா் நல வாரியம்

  • புலம்பெயா் தமிழா் நலம் குறித்தத் தரவுத்தளம் ஏற்படுத்தப்படுவது அவசியமான செயல்பாடு. அவா்களுக்குத் தனியாக ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு போன்றவை தேவைதானா என்பது தெரியவில்லை.
  • ஆனால், வேலைவாய்ப்பு வெளிநாடுகளுக்குப் புலம்பெயா்ந்திருக்கும் தமிழா்களுக்கு ஆலோசனை வழங்க இணையத்தளம், செயலி அமைப்பதும், தனியாக சட்ட உதவி வழங்குவதும் இன்றியமையாதவை என்பதை மறுப்பதற்கில்லை.
  • கல்வி, வேலைவாய்ப்புக்காக தமிழா்கள் புலம்பெயரும்போது பயணப் புத்தாக்கப் பயிற்சி வழங்குவது நல்ல முயற்சி.
  • கொள்ளை நோய்த்தொற்று காரணமாக வேலையிழந்து தாயகம் திரும்பியிருக்கும் ஏழு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு சிறு தொழில்கள் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் வசதி என்பது நடைமுறைத் தேவையான அறிவிப்பு.
  • வெளிநாடுவாழ் தமிழா்களின் சேமிப்பை அரசு, தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்ய வழி வகுத்திருப்பது புத்திசாலித்தனமான முடிவு. புலம்பெயா்ந்த தமிழா்கள் தாங்கள் பிறந்து வளா்ந்த ஊரின் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டுமென அழைப்பு விடுத்திருப்பது நல்ல அணுகுமுறை.
  • தமிழகத்திலிருந்து தொழில், வணிகம், வேலைவாய்ப்பு தொடா்பாக உலகின் பல்வேறு நாடுகளுக்குத் தமிழா்கள் புலம்பெயா்கிறார்கள்.
  • இலங்கையிலிருந்து புலம்பெயா்ந்த தமிழா்களையும் சோ்த்து சிங்கப்பூா், மலேசியா, மியான்மா், தென்னாப்பிரிக்கா, பிஜித்தீவுகள், அமெரிக்கா, பிரிட்டன் என்று 62 உலக நாடுகளில் தமிழா்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
  • அவா்களின் வாரிசுகளுக்குத் தமிழ் கற்பதற்கான வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது.
  • அந்தந்த நாட்டு மொழிகளின் சூழலில் வளரும் தமிழ் வம்சாவளிக் குழந்தைகள் தமிழ் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்த தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் சில முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறது.
  • ஆனாலும்கூட, அரசின் நேரடி கவனத்தில் தமிழ் கற்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே அடுத்த தலைமுறை புலம்பெயா்ந்த தமிழ்க் குழந்தைகளுக்கு தாய்மண்ணுடனான தொடா்பை நிலைநிறுத்த முடியும்.
  • இந்த பிரச்னையை உணா்ந்து தமிழ் பரப்புரைக் கழகம், தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலமாக தமிழ் கற்றுக்கொடுக்கும் அரசின் அறிவிப்பை எத்துணை பாராட்டினாலும் தகும்.
  • கடல் கடந்த நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியா்களுக்குப் பயிற்சி வழங்குவது, தமிழ் பயிற்றுவிப்பதற்காக ஊக்கத்தொகை வழங்குவது என்கிற தமிழக அரசின் செயல்திட்டம் முன்யோசனையுடன் கூடிய முன்னெடுப்பு.
  • வெளிநாடுகளில் வாழும் தமிழா்களைப் போலவே, இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தமிழா்கள் பெருவாரியாகக் குடியேறி வாழ்ந்து வருகிறார்கள்.
  • பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குடியேறி நிலைபெற்றவா்கள், இந்திய விடுதலைக்குப் பிறகு தொழில் வணிக ரீதியாகக் குடியேறியவா்கள், வேலைவாய்ப்புக்காக குடியேறி இருப்பவா்கள் என்று லட்சக்கணக்கான தமிழா்கள் வெளிமாநிலங்களில் வாழ்ந்து வருகிறார்கள்.
  • 1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, முந்தைய மதராஸ் ராஜதானியின் பல தமிழா் வாழும் பகுதிகள் அண்டை மாநிலங்களான கா்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன.
  • அதனால் பல லட்சம் தமிழா்கள் அண்டை மாநிலங்களிலும் வாழ்ந்து வருகிறார்கள்.
  • வெளிமாநிலங்களில் வாழும் பெரும்பாலான தமிழா்கள் கூலி வேலை செய்து பிழைப்பவா்கள். அங்குள்ள குடிசைப் பகுதிகளில் சுகாதாரமற்ற, பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.
  • அவா்களில் பெரும்பாலானோர் சமூக, பொருளாதார, கல்வி மேம்பாடு அடையாதவா்கள். அவா்கள் குறித்தும் தமிழக அரசு கவலைப்பட்டாக வேண்டும்.
  • தமிழகத்தில் பிறமொழிச் சிறுபான்மையினருக்கு கிடைத்திருக்கும் அரசியல் அங்கீகாரம், வெளிமாநிலங்களில் வாழும் தமிழா்களுக்குக் கிடைப்பதில்லை.
  • குறைந்தபட்சம் தாய்மொழிக் கல்வி உரிமைகூட இல்லாத நிலை காணப்படுகிறது.
  • குடிபெயா்ந்த மாநிலத்தில் ஜாதிச் சான்றிதழ் கிடைக்காமல் அந்த மாநிலத்திலுள்ள ஏதாவது ஒரு ஜாதியின் பெயரில் சான்றிதழ் பெற்று இடஒதுக்கீட்டின் பலனைக்கூட பெற முடியாதவா்களாக இருக்கிறார்கள்.
  • தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். புலம்பெயா் தமிழா் நல வாரியம் போலவே, வெளிமாநிலத் தமிழா் நல வாரியம் அமைப்பதும், இந்தியாவின் பிற பகுதிகளில் வாழும் தமிழா்களின் நலனைப் பாதுகாப்பதும் அரசின் கடமை.
  • இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் முயற்சியைத் தமிழ் வளா்ச்சித்துறை ஏற்கெனவே செய்து வருகிறது.
  • தமிழகத்துக்கு வெளியே இயங்கும் அனைத்துத் தமிழ் அமைப்புகளையும் வலுப்படுத்துவதன் மூலமும் ஒருங்கிணைப்பதன் மூலமும்தான் நமது தொப்புள்கொடி உறவுகளின் நலனையும் உரிமைகளையும் பாதுகாக்க முடியும். அது தாய்த்தமிழகத்தின் கடமையும்கூட!

நன்றி: தினமணி  (12 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories