TNPSC Thervupettagam

திசைமாறிச் செல்லும் சிறார்கள்

February 9 , 2022 816 days 1122 0
  • பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகள் நல்லொழுக்கத்துடன் கல்வி கற்று, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற உணர்வுடன் குழந்தைகளை வளர்க்கின்றனர்.
  • ஆனால், இன்றைய சமுதாய சூழல் பல நேரங்களில் குழந்தைகளைத் தவறான வாழ்க்கை பாதையில் பயணிக்க வைத்து விடுகிறது.
  • புது தில்லியில் அண்மையில் நிகழ்ந்த ஒரு கொலை வழக்கில் கண்காணிப்பு கேமராக்கள் உதவி கொண்டு காவல்துறையினர் குற்றவாளிகளை அடையாளம் கண்டறிந்தனர்.
  • அக்கொலையைச் செய்த மூன்று சிறார்களைப் பிடித்து, அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய புலன்விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
  • "புஷ்பா' என்ற திரைப்படத்தைப் பார்த்த அந்த மூன்று சிறார்கள் வித்தியாசமான முறையில் சிந்தித்தனர். யாரையாவது கொலை செய்து, அந்த கொலை சம்பவத்தை விடியோ எடுத்து, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தால், உடனடியாகப் பிரபலமாகி விடலாம் என திட்டமிட்டனர்.
  • சாலையோரக் கடை ஒன்றில் உதவியாளராக வேலை பார்த்துவந்த ஒருவரை அச்சிறார்கள் கத்தியால் குத்தி, படுகாயங்களை ஏற்படுத்தினர். அவர்களில் ஒருவர் இச்சம்பவத்தை கை பேசியில் விடியோ காட்சியாக பதிவு செய்துள்ளார் படுகாயம் அடைந்த நபர் உயிரிழந்தார்.
  • புலன்விசாரணையின் பொழுது அச்சிறார்களிடம் இருந்து கைப்பற்றிய கைபேசியில் கொலை சம்பவ விடியோ காட்சிகளின் பதிவுகள் இருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
  • பதினெட்டு வயது பூர்த்தியடையாத அச்சிறார்கள் மூவரும் தற்பொழுது புது தில்லியில் உள்ள "கூர்நோக்கு இல்லம்' ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
  • அச்சிறார்கள் செய்த கொலை வழக்கின் முடிவு என்னவாகும்? அச்சிறார்கள் சீர்திருத்தப் பட்டு, நல்ல குடிமகன்களாக சமுதாயத்தில் இணைந்து விடுவார்களா? கொடுங் குற்றச் செயல்களில் சிறார்களின் ஈடுபாடு நம் நாட்டில் எப்படி இருக்கிறது?
  • வளரும் பருவத்திலுள்ள சிறார்கள் சிறு குறும்புகள் செய்வதும், பெற்றோர்களும், உறவினர்களும், ஆசிரியர்களும் அவர்களைக் கண்டித்து நல்வழிப்படுத்துவதும் சமுதாயத்தில் தொடர்ந்து நிகழும் சம்பவங்கள்.
  • சிறு குறும்புகளைச் செய்யாத சிறார்களை மந்த புத்தி உடையவர்கள் என்று கூறுவதும் உண்டு.
  • ஆனால், இன்றைய சிறார்கள் பலரிடம் சிறு குறும்புகள் வெளிப்படுவதில்லை. மாறாக கொலை, கொலை முயற்சி, வழிப்பறி போன்ற கொடுங் குற்றச்செயல்களில் துணிச்சலுடன் ஈடுபடுகின்றனர்.
  • நம் நாட்டில் கரோனா பெருந்தொற்றின் முதல் அலையைக் கட்டுக்குள் கொண்டுவர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு, பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் அவரவர் வீட்டில் முடங்கிக் கிடந்த 2020-ஆம் ஆண்டில் 29,768 குற்ற வழக்குகளில் சிறார்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும், அவ்வழக்குகளில் சம்பந்தப்பட்ட 35,352 சிறார்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.
  • அவ்வறிக்கையின்படி, 842 கொலை வழக்குகள், 981 கொலை முயற்சி வழக்குகள், 9,287 திருட்டு, களவு, வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள், 937 பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகளில் சிறார்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற புள்ளி விவரம், சிறார்கள் திசைமாறிப் பயணிக்கின்றார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் கொடுங்குற்ற வழக்குகளில் தமிழ்நாட்டு சிறார்களின் பங்களிப்பு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் முன்னணியில் இருப்பதாக ஆய்வுகள் வெளிப் படுத்துகின்றன.
  • தமிழ்நாட்டில் 2016 முதல் 2020 வரையிலான ஆண்டுகளில் முறையே 48,53,75,92,104 கொலை வழக்குகளில் சிறார்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற புள்ளிவிவரம் இரண்டு முக்கிய கருத்துகளை வெளிப்படுத்துகிறது.
  • கடந்த ஐந்தாண்டுகளில் சிறார்கள் நிகழ்த்திய கொலை வழக்குகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் சற்று அதிகமாக உயர்ந்துள்ளதும், ஆண்டுதோறும் சிறார்கள் நிகழ்த்திய கொலை வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இம்மாதிரியான நிலை கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழவில்லை.
  • தமிழ்நாட்டில் 2019-ஆம் ஆண்டைக்காட்டிலும் 2020-ஆம் ஆண்டில் குறைவான கொலைகள் நிகழ்ந்துள்ளன.
  • ஆனால், சிறார்கள் செய்த கொலைகளின் எண்ணிக்கை 2019-ஆம் ஆண்டைக்காட்டிலும் 2020-ஆம் ஆண்டில் கணிசமாக உயர்ந்துள்ளது.
  • சிறார்கள் மோட்டார் வாகனங்களை இயக்க சட்டம் இடமளிக்காத நிலையில், 2000-ஆம் ஆண்டில் மோட்டார் வாகனங்களை சிறார்கள் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதும், நம் நாட்டில் சிறார்கள் நிகழ்த்திய விபத்துகளில் 22% விபத்துகள் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சிறார் குற்றங்கள்

  • இந்தியாவில் உள்ள 19 பெருநகரங்களில் 2019, 2020-ஆம் ஆண்டுகளில் "சிறார் குற்றங்கள்' அதிகமாக நிகழ்ந்த பெருநகரங்கள் பட்டியலில் சென்னை இரண்டாம் இடம் பெற்றுள்ளது எனவும், கடந்த மூன்று ஆண்டுகளில் சிறார் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த ஒரே பெருநகரமாக சென்னை விளங்குகிறது எனவும் ஆய்வு வெளிப்படுத்துகிறது.
  • கல்வி, விழிப்புணர்வு, வாழ்க்கைத் தரம் போன்றவற்றில் முன்னேறிய மாநிலங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டில் "சிறார் குற்றங்கள்' தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையைக் காண முடிகிறது.
  • தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சிறார் குற்றங்கள் மற்றும் சட்டத்திற்கு முரணான சிறார்களின் செயல்பாடுகள் குறித்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சில முக்கிய கருத்துகள் தெரியவந்துள்ளன.
  • குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்களில் பலர் போதை பழக்கம் உடையவர்கள் என்றும், கைபேசி திருட்டில் அதிகம் ஈடுபடுகின்றனர் என்றும், கையும் களவுமாகப் பிடிபடும் சிறார்கள் மீது பல நேரங்களில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்றும், அந்தந்த பகுதியிலுள்ள முக்கிய குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்து கொண்டு, அவர்களின் வழிகாட்டுதலின்படி கொடுங் குற்றங்களில் சிறார்கள் ஈடுபடுகின்ற சூழல் நிலவுகிறது என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் 16 முதல் 18 வயது உடையவர்கள்.
  • இந்த வயதுடைய சிறார்கள் கொலை, வழிப்பறி உள்ளிட்ட கொடுங் குற்றங்களில் ஈடுபட்டிருந்தாலும், "இளைஞர் நீதிக் குழுமம்' என்ற அமைப்பு அனுமதி அளித்தால் மட்டுமே, அச்சிறார்கள் மீதான குற்றத்தை குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி விசாரணை நடத்த முடியும் என இளைஞர் நீதிச் சட்டம் கூறுகிறது.
  • சிறார் குற்றங்கள் தொடர்பான ஆய்வில், ஓரிரு குற்றங்கள் மட்டுமே குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி விசாரணை நடத்த இளைஞர் நீதிக் குழுமம் அனுமதி வழங்குகிறது.
  • பெரும்பாலான சிறார் குற்றங்களை இளைஞர் நீதிக் குழுமமே விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
  • தண்டனைக்குரிய குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறார்கள் கூர்நோக்கு இல்லங்களில் தங்க வைக்கப் படுகிறார்கள்.
  • அவர்கள் மீதான விசாரணையை மேற்கொள்ளும் இளைஞர் நீதிக் குழுமம், மிகக் குறைவான எண்ணிக்கையிலான சிறார்களை சிறப்பு இல்லத்திற்கு அனுப்பவும், ஏனைய சிறார்களை கூர்நோக்கு இல்லத்தில் இருந்து விடுவிக்கவும் ஆணை வழங்குகிறது.
  • கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆடு திருடிய சிறார்களைப் பிடித்த திருச்சி சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனை வெட்டிக் கொலை செய்த இரண்டு சிறார்கள் ஒன்றரை மாதத்திற்குள் கூர்நோக்கு இல்லத்திலிருந்து வெளியே அனுப்பப்பட்டு விட்டனர். அச்சிறார்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து, மனம் திருந்திவிட்டார்களா என்பது புதிராகவே உள்ளது.
  • தண்டனைக்குரிய குற்றச் செயல்கள் புரிந்ததற்காக ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் மூன்று ஆயிரத்திற்கும் சற்று அதிகமான சிறார்கள் காவல்துறையினரிடம் பிடிபடுகின்றனர்.
  • கூர்நோக்கு இல்லங்களில் தங்கவைக்கப்படும் அச்சிறார்களில் பலர் ஓரிரு மாதங்களில் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் பொறுப்பில் ஒப்படைக்கப் படுகின்றனர்.

கூர்நோக்கு இல்லங்களில் இருந்து வெளியே வந்த சிறார்கள் சமுதாயத்தில் எப்படி வாழ்கின்றனர்?

  • ஒவ்வொரு காவல்நிலையத்திலும் ரெளடித்தனம் செய்பவர்களைக் கண்காணிக்க, ஒவ்வொரு ரெளடிக்கும் "ரெளடி ஷூட்' எனப்படும் போக்கிரி சரித்திரப் பதிவேடு பராமரிக்கப் படுகிறது.
  • வடசென்னை பகுதியில் சரித்திரப் பதிவேடு பராமரிக்கப்பட்டு, காவல்துறையின் கண்காணிப்பில் இருந்து வரும் ரெளடிகளில் 25-க்கும் மேற்பட்ட ரெளடிகள் சிறார் குற்றங்களில் ஈடுபட்டதற்காக கூர்நோக்கு இல்லங்களில் தங்கவைக்கப்பட்டவர்கள் என்பது கள ஆய்வில் தெரிய வருகிறது.
  • குற்றச் செயலில் ஈடுபடும் சிறார்களை சிறைகளில் அடைத்து வைக்காமல், கூர்நோக்கு இல்லங்கள் மற்றும் சிறப்பு இல்லங்களில் தங்கவைத்து, அவர்களை நல்வழிப்படுத்தி, சமுதாயத்தில் இணைந்து வாழ வழி செய்ய வேண்டும் என்பதே இளைஞர் நீதிச் சட்டத்தின் நோக்கமாகும்.
  • இந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட கூர்நோக்கு இல்லங்கள் மற்றும் சிறப்பு இல்லங்கள் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. அதன் விளைவுதான் கூர்நோக்கு இல்லங்களில் தங்கியிருந்த சிறார்கள் காலப்போக்கில் ரெளடிகளாக உருவெடுக்கின்றனர்.
  • தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட ஒன்பது இடங்களில் சமூக பாதுகாப்புத் துறையின் கண்காணிப்பில் கூர்நோக்கு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன.
  • அதிகரித்து வரும் சிறார் குற்றங்களைக் கருத்தில் கொண்டு, மூன்று புதிய கூர்நோக்கு இல்லங்கள் அமைக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி, சமூக பாதுகாப்புத் துறை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசுக்கு அனுப்பிய கருத்துரு நிலுவையில் இருந்து வருகிறது.
  • அரசு துறையின் கீழ் இயங்கி வரும் கூர்நோக்கு இல்லங்கள் மற்றும் சிறப்பு இல்லங்களின் செயல்பாடுகளை மேன்மைபடுத்துவதும், தேவைக்கேற்ப புதிய கூர்நோக்கு இல்லங்கள் அமைப்பதும், சிறார்களை வசியப்படுத்தும் போதைப் பொருள்களின் விற்பனையைத் தடை செய்வதும் சமுதாயத்தில் நிகழும் சிறார் குற்றங்களைக் குறைக்க பெரிதும் துணை புரியும்.

நன்றி: தினமணி (09 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories