TNPSC Thervupettagam

தில்லி மேயர் தேர்தல் 3வது முறையாக ஒத்திவைப்பு

February 8 , 2023 451 days 252 0
  • கோவா, மணிப்பூர், கர்நாடகம், உத்தரகண்ட் பாணி அரசியல் நாடகம் தில்லியிலும் அரங்கேறுகிறதோ என்கிற ஐயப்பாட்டை எழுப்புகிறது, சமீபத்திய நகர்வுகள். தில்லி மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு, பெரும்பான்மை பலம் பெற்றிருந்தும் கூட இன்னும் மேயரைத் தேர்ந்தெடுக்க முடியாமலும், தனது தலைமையில் மாநகராட்சி நிர்வாகத்தை நடத்த முடியாமலும் ஆம் ஆத்மி கட்சி தவிக்கிறது.
  • தில்லி மாநகராட்சிக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்றது. 7-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டபோது, தொடர்ந்து 15 ஆண்டுகள் பாஜக-வின் கட்டுப்பாட்டில் இருந்த தில்லி மாநகராட்சியில் பெரும்பான்மையான இடங்களை ஆம் ஆத்மி கட்சி வென்றது. 250 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி மாநகராட்சியில் 134 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சியும், 104 வார்டுகளில் பாஜக-வும், வெறும் 9 இடங்களில் காங்கிரஸும் வெற்றி பெற்றிருந்தன. 3 பேர் சுயேச்சைகள்.
  • மாநகராட்சியின் முதல் கூட்டம் கூடியபோது இடைக்கால அவைத்தலைவராக பாஜக உறுப்பினர் சத்ய சர்மாவை துணைநிலை ஆளுநர் நியமித்தார். உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். பதவிப் பிரமாணம் முடிந்தவுடன் மேயரும் துணை மேயரும் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். ஆனால், உறுப்பினர்கள் மத்தியில் எழுந்த கூச்சல், குழப்பம் காரணமாக இடைக்கால அவைத்தலைவர் சத்ய சர்மா, அவையை ஒத்திவைத்தார். ஆம் ஆத்மிக்கு எதிராகவும், முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியபடி, பாஜக உறுப்பினர்கள் வெளியேறினர்.
  • ஜனவரி 24-ஆம் தேதி அவை மீண்டும் கூட்டப்பட்டது. மேயர் தேர்தலுக்கு பதிலாக, "அல்டர்மென்' என்று அழைக்கப்படும் 10 நியமன உறுப்பினர்கள் இடைக்கால அவைத்தலைவரால் நியமிக்கப்பட்டனர். மேயர் தலைமையில் மாநகராட்சி அமைந்த பிறகுதான் நியமன உறுப்பினர்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். தில்லி மாநகராட்சி சட்டத்தின்படி, "அல்டர்மென்'கள் மேயர், துணை மேயர், நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது. இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டபோது மீண்டும் அவையில் வாக்குவாதமும், குழப்பமும் ஏற்பட்டு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
  • மூன்றாவது முறையாக பிப்ரவரி 6-ஆம் தேதி மேயரை தேர்ந்தெடுப்பதற்காக அவை கூடியது. மீண்டும் கூச்சல் குழப்பத்துடன் மேயர் தேர்ந்தெடுக்கப்படாமல் அவை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இப்படியே தொடர்ந்து மேயர் தேர்ந்தெடுக்கப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்படுமானால், தில்லி மாநகராட்சி கலைக்கப்படும் நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதுடன், மிகப் பெரிய அரசியல் சாசன சிக்கலும் எழுக்கூடும்.
  • பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் மேயர் தலைமையில் புதிய நிர்வாகம் அமைந்தால்தான், மாநகராட்சியின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும். தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டப்படி, பதவியேற்றுக்கொண்ட 30 நாட்களில் உறுப்பினர்கள் அனைவரும் தங்களது சொத்துகள், தகவல்களை தேர்ந்தெடுக்கப்படும் மேயரிடம் சமர்ப்பித்தாக வேண்டும். பிப்ரவரி 24-ஆம் தேதிக்கு மேல் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் தங்களது பதவியை இழக்க வேண்டிய கட்டாயம் ஏறப்படும்.
  • இதே நிலைமை தொடர்ந்தால், மாநகராட்சி நிர்வாகத்தின் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும். சிறப்பு அலுவலர் மூலம் பிப்ரவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு பட்ஜெட்டை தாக்கல் செய்வதிலும் பிரச்னை இருக்கிறது. தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் திருத்தச் சட்டம் 2022-இன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட அவையின் முதல் கூட்டம் கூடும்போதே சிறப்பு அலுவலரின் பதவிக்காலம் முடிந்துவிடுகிறது. மேயர் தேர்ந்தெடுக்கப்படுவது வரை, அவர் பதவியில் தொடரலாம் என்று இப்போது புதிய விளக்கம் தரப்பட்டாலும், அது எந்த அளவுக்கு நீதிமன்ற அனுமதி பெறும் என்பதைக் கூற முடியாது.
  • தில்லி மாநகராட்சி 1958-இல் உருவாக்கப்பட்டது. எல்.கே. அத்வானி உள்பட பல பிரமுகர்கள் அந்த அமைப்பின் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். 2012-இல் மாநகராட்சி மூன்றாகப் பிரிக்கப்பட்டு தனித்தனி மேயர்களின் கீழ் நிர்வாகம் நடைபெற்றது. மூன்று மாநகராட்சிகளும் பாஜகவின் கட்டுப்பாட்டிலும், தில்லி மாநில அரசு ஆம் ஆத்மி கட்சியின் வசமும் இருந்தது. ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் விதமாக வடக்கு, தெற்கு, கிழக்கு என்றிருந்த மூன்று மாநகராட்சிகளையும் 2022-இல் இணைத்து தேர்தலுக்கு வழிகோலியது மத்திய அரசு.
  • 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தில்லி முழுமைக்குமான தில்லி மாநகராட்சியைத் தேர்ந்தெடுக்க புதிய சட்டம் வழிகோலியது. பாஜகவின் எதிர்பார்ப்புக்கு மாறாக, மாநகராட்சி நிர்வாகம் கைநழுவி ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை பலம் பெற்றுவிட்ட நிலையில், இப்போது பிரச்னைக்கு உள்ளாகியிருக்கிறது தில்லி மாநகராட்சி. ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்கள் யாரும் கட்சி மாறத் தயாராகஇல்லை என்பதுதான் மேயர் தேர்தல் நடத்தப்படாமல் குழப்பம் தொடர்வதற்குக் காரணம்.
  • அவையில் பெரும்பான்மை பலம் பெற்றும்கூட, நிர்வாகம் ஆம் ஆத்மி கட்சியின் தரப்படாமல் தடுக்கப்படுவது நியாயமல்ல. மேயர், துணை மேயர் தேர்தல் நடக்காமல் இருப்பதும், தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம் 1957-க்கு மாறாக, "ஆல்டர்மேன்' நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதும் சரியல்ல.
  • மாற்று அரசியலை முன்வைக்கிறோம் என்று முழுங்கிய பாரதிய ஜனதா கட்சி, முந்தைய காங்கிரஸுக்கு மாற்றாக மாறிவரும் அவலத்தின் அடையாளம்தான் தில்லி மாநகராட்சியின் இன்றைய குழப்பம்!

நன்றி: தினமணி (08 – 02 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories