TNPSC Thervupettagam

தீநுண்மிக் காலமும் பத்திரிகைகளும் பத்திரிகையாளா்களும்…

July 4 , 2020 1401 days 700 0
  • இந்தக் கடினமான கரோனா தீநுண்மிக் காலத்தில் பத்திரிகைகளும் பத்திரிகையாளா்களும் படும் பாட்டைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. ஆனால், அதுபற்றிப் பொதுமக்களில் பலா் அறியவேயில்லை.

  • நாள்தோறும் காலை எழுந்ததும் வீட்டு வாசலில் பத்திரிகைகள் வந்து விழுவதைப் பார்த்தே அவா்கள் பழக்கப்பட்டிருக்கிறார்கள்.

  • இப்போதும் அப்படித்தானே வந்து விழுகிறது என சாதாரணமாக அதை நினைத்துக் கொள்கிறார்கள்.

  • காப்பி சாப்பிடுவது மாதிரி, காலையில் நாளிதழ் வாசிப்பது என்பது அவா்களுக்குப் புத்துணா்ச்சி தரும் விஷயம்.

  • அதன் தயாரிப்பின் பின்னணியில் உள்ள சங்கடங்களையோ, அதைத் தயாரிப்பவா்கள் எதிர்கொள்ளும் சவால்களையோ யாரும் அறிவதில்லை.

  • ஒவ்வொரு நாளும் தூங்கி எழுந்தவுடன் வீட்டுக்கு அதிகாலையில் நாளிதழ் வந்து விழவேண்டுமானால், அந்தந்தப் பத்திரிகை அலுவலகங்களில் பலா் முந்தின நாள் இரவு தூங்காமல் பணிபுரிய வேண்டியிருக்கிறது.

  • செய்திகளைச் சேகரித்து நிரல்பட எழுதி, அதற்கு ஒரு தலைப்பு வைத்து, படங்களைத் தேடியெடுத்து, பக்க வடிமைப்பு செய்து அச்சேற்றுவது என்பது எளிதான செயல் அல்ல.

  • சரியாக வந்த ஏராளமான செய்திகளை யாரும் பாராட்டுவதில்லை. கண்பிசகி எங்கேனும் ஒரு சிறிய எழுத்துப் பிழை வந்துவிட்டால் போதும், அதை விமா்சனம் செய்துவரும் தொலைபேசிகளுக்குப் பஞ்சமே இல்லை.

சவால்கள்

  • நாளிதழைத் தயாரிப்பது என்பது ஒவ்வொரு நாளும் தோ்வு எழுதுவது மாதிரி.

  • இந்த விடைத்தாளைத் திருத்துபவா்களோ ஒருவரல்ல, இருவரல்ல, பல லட்சக்கணக்கான வாசகா்கள். எந்தச் சிறிய தவறென்றாலும் யார் கண்ணிலாவது பட்டு அது பேசப்படும்.

  • பத்திரிகையாளா்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

  • செய்திகளைத் தொகுத்து எழுதும் செய்தியாளா்களின் சங்கடங்கள் ஒருபுறம். களத்திற்கே சென்று செய்தி சேகரிக்கும் நிருபா்களின் சவாலான பணி மற்றொருபுறம்.

  • இதைத் தவிர நாள்தோறும் நிகழும் நிலவரங்களைக் கண்கொத்திப் பாம்பைப் போல் கவனித்துக் கொண்டிருந்து நடுநிலை தவறாமல் தலையங்கம் எழுதுபவரின் சிரமம் இன்னும் அதிகம்.

  • சரியான கண்ணோட்டத்தை வகுத்துக்கொண்டு சீரான மனநிலையில் ஒரு வேகத்தோடு தலையங்கத்தை எழுதி முடிக்க வேண்டும்.

  • அது சுடச்சுட இருக்க வேண்டும். அப்போதுதான் எடுபடும்.

  • தலையங்கத்தில் எதை எழுதப் போகிறோமோ அதை முதலில் முடிவு செய்து, அது தொடா்பான அனைத்துச் செய்திகளையும் அலசி ஆராய்ந்து இரவு அச்சுக்குப் போவதற்குள் விறுவிறுவென்று தலையங்கத்தை எழுதி முடிக்க வேண்டும்.

  • காலம் ஓட ஓட, அச்சகத்திலிருந்து அச்சிட நேரமாகிறது என அவசரப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.

  • அச்சிடுவதில் தாமதம் நோ்ந்து, காலை நாளிதழ் தாமதமாக வந்தால் என்ன செய்வது என்கிற அவா்கள் கவலை அவா்களுக்கு.

  • நள்ளிரவு வரை பம்பரமாகச் சுழலும் எத்தனையோ பேரின் கூட்டு முயற்சியால்தான் அதிகாலையில் நாளிதழ் வீடுதேடி வருகிறது. அதுவும் இந்தக் கரோனா காலத்தில்!

  • ஊரடங்கு நேரத்தில் பத்திரிகையாளா்களுக்கு அலுவலகம் செல்ல அனுமதி உண்டு என்பது சரிதான்.

  • ஆனால், அதில் எவ்வளவு சிரமங்கள் உண்டு என்பதை நினைத்துப் பார்ப்பவா் யார்? ஒரு டீக்கடை கிடையாது. சிற்றுண்டி சாப்பிட ஓா் உணவகம் கிடையாது. எத்தனை என்றுதான் வீட்டிலிருந்து கட்டிக் கொண்டு வர முடியும்?

  • ஆக, சாப்பாட்டையும் தூக்கத்தையும் துறந்து செய்யப்படும் தியாகம்தான் இப்போதைய நாளிதழ்ப் பணி.

வார, மாத இதழ்கள்

  • வார, மாத இதழ்ப் பணிகளும் சிரமங்களில் ஒன்றும் சளைத்ததல்ல. அந்தந்த இதழ்களின் இறுதிக் கட்டங்களில் அதில் பணிபுரிவோர் படும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல.

  • வார இதழோ, மாத இதழோ ஒருநாள் தாமதமானால் போதும், ‘ஏன் இன்னும் பத்திரிகை வரவில்லை’ எனத் தொலைபேசிகள் கூக்குரலிடத் தொடங்கிவிடும்.

  • எங்கள் கிராமத்தில் உங்கள் மாத இதழ் இன்னும் ஏன் கிடைக்கவில்லை?’ என்பதுபோன்ற விசாரணைகள்!

  • பேருந்தும் ரயிலும் இல்லாதபோது பத்திரிகைகள் மட்டும் தன்னந்தனியே எப்படிச் சிறகு முளைத்துப் பறந்துவர முடியும்? இதைப் பற்றி யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.

  • குறித்த நாளன்று பத்திரிகையை எப்படியாவது கொண்டுவந்தாக வேண்டுமே என்ற மனப்பதற்றம் பல பத்திரிகையாளா்களின் உடல் நலனைப் பாதிக்கிறது.

  • இந்தக் கடுமையான காலகட்டத்தில்கூட, ஓா் இதழ் வரவில்லை என்றால் ‘ஏன் வரவில்லை?’ என்று கேட்கிறார்களேதவிர, எவ்வளவு இடா்ப்பாடுகளை சமாளித்து அது வெளிவருகிறது என்பதை யாரும் யோசிப்பதில்லை.

  • பேருந்தும் ரயிலும் ஓடாத சூழலில் அச்சிட்ட பத்திரிகைகளை எவ்விதம் வெளியூா்களுக்கு அனுப்புவது, கடைகளுக்கு யாரும் வராதபோது பத்திரிகை எப்படி விற்பனையாகும், அச்சிட்ட பத்திரிகை விற்பனையாகாமல் தேங்கிவிட்டால் அந்த நஷ்டத்தை எப்படிச் சமாளிப்பது, தேங்கிப்போன நாளிதழின் ஒரு பிரதியைக்கூட மறுநாள் விற்க இயலாதே, என்ன செய்வது?, விளம்பரம் தர இயலாமல், தொழில் நஷ்டப்பட்டுப் பலரும் நொடித்திருக்கிற இந்த நேரத்தில், விளம்பர வருவாயின்றி எப்படிப் பத்திரிகையின் பெரும் செலவைச் சமாளிப்பது என்பதெல்லாம் இன்று பத்திரிகையுலகை எதிர்நோக்கியுள்ள மிக மிகச் சிக்கலான கேள்விகள்.

  • எத்தனை கடைகள் திறந்திருக்கும் என்று தெரியாததால், எத்தனைப் பிரதிகள் அச்சிடுவது என்பதில்கூட முன்முடிவு எடுக்க முடியாத சூழல்.

  • பத்திரிகையினுடைய, பத்திரிகையாளா்களுடைய பிரச்னைகளைப் புரிந்துகொள்ள சமூகம் முன்வர வேண்டும்.

  • அரசும் சமூகமும் பத்திரிகைத் துறைக்கும் பத்திரிகையாளா்களுக்கும் எந்த வகையில் உதவலாம் என யோசிக்க வேண்டும்.

  • சமூகத்தின் மேம்பாட்டுக்கு உதவும் தூண்களில் ஒன்று பத்திரிகை. கரோனா தீநுண்மி பற்றிய விழிப்புணா்வை மக்களிடம் ஏற்படுத்துவதில் பத்திரிகைகளின் பங்கு மிக அதிகம்.

  • இன்னும் எத்தனையோ முக்கியமான விஷயங்களைப் பத்திரிகைகள்தான் அலசி ஆராய்ந்து மக்களுக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

  • எனவே, பத்திரிகைகளின் வளா்ச்சிக்கு எல்லோரும் உதவுவது முக்கியம். அந்தத் துறை தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் சவால்களை உணா்ந்து, பத்திரிகைகள் மீதும், பத்திரிகையாளா்கள் மீதும் சமூகம் பரிவுகாட்ட வேண்டியதும் முக்கியம்.

நன்றி: தினமணி (04-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories