TNPSC Thervupettagam

துருக்கி விடுக்கும் எச்சரிக்கை

February 17 , 2023 456 days 293 0
  • அண்மையில் (பிப்ரவரி 6) துருக்கி நிலநடுக்கத்தால் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அரை லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டாக நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது.
  • 7.8 ரிக்டர் அளவிலான துருக்கி நிலநடுக்கம் இந்த நூற்றாண்டு சந்தித்த சமீபத்திய நிலநடுக்கம். இதற்கு முன்பு 2004-இல் சுமத்ரா கடற்கரையோரம் ஏற்பட்ட 9.1 ரிக்டர் நிலநடுக்கத்தில் 2.3 லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டன. 50 அடி உயர ஆழிப்பேரலை இந்தியா உள்பட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியது. 2001-இல் குஜராத் மாநிலம் புஜ்ஜில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும், 2005-இல் காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கமும் இன்னும் நினைவைவிட்டு அகலவில்லை.
  • சிறிதும் பெரிதுமாக பல நிலநடுக்கங்கள் இந்தியாவைத் தொடர்ந்து தாக்கியிருக்கின்றன. லாத்தூர் (1993), ஜபல்பூர் (1997), ஷமோலி (1999), புஜ் (2001), காஷ்மீர் (2005), சிக்கிம் (2011), மணிப்பூர் (2016) என்று தொடர்ந்து இயற்கை தனது சீற்றத்தை வெளிப்படுத்தி வருகிறது. அண்டை நாடுகளான நேபாளமும் (2015), பாகிஸ்தானும் (2017, 2019, 2021) இதற்கு விதிவிலக்கல்ல.
  • நிலநடுக்கங்கள் உயிரிழப்புக்குக் காரணமல்ல; ஆனால், நிலநடுக்கத்தால் ஏற்படும் கட்டட இடிபாடுகள்தான் உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன என்பதை எல்லா நிலநடுக்கங்களும் உறுதிப்படுத்துகின்றன. சமீபத்திய துருக்கி நிலநடுக்கமும் அதைத்தான் காட்டுகிறது.
  • ஆட்சியாளர்களுக்கு எதிராக துருக்கி தலைநகர் அங்கராவில் மக்கள் கொதித்தெழும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவுகின்றன. இன்னும்கூட கட்டட இடிபாடுகளில் இருந்து உயிரிழந்த சடலங்களையும், குற்றுயிரும் குலையுயிருமாகப் போராடும் உயிர்களையும் தேடும் பணி தொடர்கிறது.
  • துருக்கியில் இந்த அளவுக்கு உயிரிழப்புகள் நேர்ந்ததன் பின்னணியில் கட்டட விதிமுறை மீறல்கள் சுட்டிக்காட்டப்படுகிறது. விதிமுறை மீறல்களை முறைப்படுத்தும் துருக்கி ஆட்சியாளர்களின் போக்கு கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. துருக்கியில் பலமுறை அரசியல், பொருளாதார காரணங்களுக்காக கட்டட விதிமீறல்கள் முறைப்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதைப் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
  • 2018 அதிபர் தேர்தலின்போது தற்போதைய துருக்கி அதிபர் ரெசப் தயீப் எர்டோகன், ஆட்சிக்கு வந்தால் விதிமுறை மீறல்களை முறைப்படுத்துவதாக வாக்களித்தார். ஆட்சிக்கு வந்ததும் 70 லட்சத்துக்கும் அதிகமான கட்டடங்கள் முறைப்படுத்தப்பட்டன. அவற்றில் 58 லட்சம் கட்டடங்கள் குடியிருப்புகள். விதிமுறை மீறல் கட்டடங்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் முறைப்படுத்தியதால்தான், நிலநடுக்கம் ஏற்பட்டபோது அவையெல்லாம் சீட்டுக்கட்டுகள் போல தகர்ந்து விழுந்து இந்த அளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன.
  • கட்டட விதிமுறை மீறல்களை அதிலும் குறிப்பாக, கடற்கரையோரப் பகுதிகளிலும், நிலநடுக்க வாய்ப்பு உள்ள பகுதிகளிலும் அபராதம் பெற்றுக்கொண்டு முறைப்படுத்துவதில் இருக்கும் ஆபத்தை துருக்கி நிலநடுக்கம் உணர்த்துகிறது. இதிலிருந்து பாடம் படிப்பதற்கு இந்தியாவுக்கு நிறையவே இருக்கிறது. இந்தியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 90%-க்கும் அதிகமான உயிரிழப்புகளுக்கு கட்டடங்கள் இடிந்ததுதான் காரணம்.
  • இந்திய தீபகற்பத்தின் 59% பகுதிகள் நிலநடுக்க சாத்தியம் உள்ளவை என்று கருதப்படுகிறது. அதை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். மிகமிக அதிக பாதிப்புக்குள்ளாகும் மண்டலம் 5-இல் 11% பகுதிகளும் (காஷ்மீர் பள்ளத்தாக்கு, கிழக்கு உத்தரகண்ட், மேற்கு ஹிமாசல பிரதேசம், வடகிழக்கு இந்தியா, குஜராத்தின் கட்ச் பகுதி), அதிக பாதிப்புக்குள்ளாகும் மண்டலம் 4-இல் 18% பகுதிகளும் (தில்லி, உத்தர பிரதேசம், பிகார், ஹரியாணா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம்). பாதிப்பு சாத்தியம் அதிகமுள்ள மண்டலம் 3-இல் 30% பகுதிகளும் (லட்சத்தீவு, கோவா, கேரளம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட்) சேர்க்கப்பட்டிருக்கின்றன.
  • இதுபோன்று புவியியல் ரீதியில் மண்டலங்கள் பிரிக்கப்பட்டு அவற்றில் நிலநடுக்கத்தை எதிர் கொள்ளும் வகையிலான கட்டடங்கள் மட்டுமே அமைக்கப்பட வேண்டும் என்கிறது 2016-இல் அறிவிக்கப்பட்ட தேசிய கட்டட விதிமுறை. ஆனால், அந்த பாதுகாப்புகளையோ, விதிமுறையையோ பின்பற்றியாக வேண்டும் என்று கட்டுமான நிறுவனங்களை எந்தச் சட்டமும் கட்டுப்படுத்துவதில்லை. விதிமுறை மீறல் கட்டடங்கள் குறித்த முறையான ஆய்வோ, அவற்றை அகற்றும் முயற்சியோ மேற்கொள்ளப்படவும் இல்லை.
  • இந்தியத் தலைநகர் தில்லியையே எடுத்துக்கொண்டால் பலமான நிலநடுக்கத்தில் 90% கட்டடங்கள் இடிந்துவிடும் ஆபத்து காணப்படுகிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையை எடுத்துக் கொண்டால் விதிமுறை மீறல் கட்டடங்கள் இடிக்கப்படாமல் முறைப்படுத்துவதில் தான் ஆட்சியாளர்கள் முனைப்பு காட்டுகிறார்கள்.
  • துருக்கி அதிபர் எர்டோகனைப் போலவே இந்தியாவிலும் அரசியல் கட்சிகளும், ஆட்சியாளர்களும் தொலைநோக்குப் பார்வையில்லாமல் தேர்தல் வெற்றிக்காக விதிமுறை மீறல்களை அங்கீகரிப்பதில்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். நிலநடுக்கத்தைவிட அதிகமான பாதிப்பை ஏற்படுத்துவது விதிமுறை மீறல்கள்தான் என்பதை யாரும் உணர்வதாகத் தெரியவில்லை.
  • நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் அளவிலான கட்டட உறுதிப்பாடுகளை மேற்கொள்ள மூன்று விழுக்காடு அதிகமான செலவு ஏற்படலாம். ஆனால், அதன் மூலம் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும் என்கிற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது அவசியம்.

நன்றி: தினமணி (17 – 02 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories