TNPSC Thervupettagam

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை குறித்த தலையங்கம்

February 17 , 2022 822 days 399 0
  • நிரம்பி வழியும் சிறைச்சாலைகளுக்கு விடிவுகாலமே கிடையாது என்று தோன்றுகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கை மகிழ்ச்சி தருவதாக இல்லை.
  • பல மாநிலங்களில் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை வெளிப்படுத்துகிறது அந்த அறிக்கை.
  • கடந்த பத்து ஆண்டுகளில் மிக அதிக அளவு விசாரணைக் கைதிகள் சென்ற ஆண்டில் இருந்தது தெரிய வந்திருக்கிறது.
  • கடந்த மார்ச் 2020-இல், கொள்ளை நோய்த்தொற்றின் முதலாவது அலை பரவத் தொடங்கியபோது, உச்சநீதிமன்றம் தானே முன்வந்து சிறைச்சாலைகளில் காணப்படும் கைதிகளின் நெருக்கடியைக் குறைக்க முற்பட்டது.
  • அதற்கான குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைக் கைதிகளில் பலர் இடைக்காலப் பிணையிலும், பரோலிலும் விடுவிக்கப்பட்டனர்.
  • கைதிகளுக்கான மருத்துவ வசதிகளை உறுதிப்படுத்தவும், காணொலி காட்சி மூலம் விசாரணையை நடத்தவும் வழிகோலப்பட்டன.

இந்திய சிறைச்சாலை புள்ளிவிவரம்

  • பிகார் அரசுக்கு எதிரான அருணேஷ் குமார் வழக்கில், ஏழு ஆண்டுகளுக்கும் கீழான தண்டனைக்குரிய குற்றங்களில் பிணை வழங்கப்பட வேண்டும் என்கிற 2014 தீர்ப்பு அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது.
  • கைது என்பது விதிவிலக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று அந்த வழிகாட்டுதலில் கூறப்பட்டாலும், காவல்துறையினராலும், கீழமை நீதிமன்றங்களாலும் அது பின்பற்றப் படுவதில்லை.
  • அதை உறுதிப்படுத்துவதாக அமைகிறது இப்போது வெளியாகியிருக்கும் அறிக்கை.
  • எந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது என்பதை இந்திய சிறைச்சாலை புள்ளி விவரங்கள் - 2020 வெளிச்சம் போடுகிறது.
  • சிறைச்சாலைகளில் நெரிசல் குறைப்பு, மருத்துவப் பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தப்படவில்லை என்று அது தெரிவிக்கிறது.
  • டிசம்பர் 2019-க்கும் டிசம்பர் 2020-க்கும் இடையே கைதிகளின் எண்ணிக்கை விகிதம் 120%-லிருந்து 118%-ஆகக் குறைந்திருக்கிறது.
  • பலரையும் நோய்த்தொற்று காலத்தில் பிணையில் விடுவித்தும்கூட பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் இருப்பது புருவம் உயர்த்த வைக்கிறது.
  • அதற்குக் காரணம், கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் மட்டும் ஒன்பது லட்சம் பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்கிற அதிர்ச்சியான தகவல்.
  • இந்திய சிறைச்சாலைகளில் டிசம்பர் 2019-ஐவிட, டிசம்பர் 2020-இல் 7,124 கைதிகள் அதிகமாகக் காணப்பட்டனர் என்கிறது அந்த அறிக்கை.
  • 17 மாநிலங்களில், 2019-க்கும், 2021-க்கும் இடையில் கைதிகளின் எண்ணிக்கை 23% அதிகரித்திருக்கிறது. முந்தைய ஆண்டுகளில் இதுவே 2% முதல் 4% வரைதான் இருந்தது.
  • மிக அதிகமாக கைதிகளின் எண்ணிக்கை சிறைச்சாலைகளில் அதிகரித்த உத்தர பிரதேசம், சிக்கிம், உத்தரகண்ட் மாநிலங்களில் ஏற்கெனவே ஏறத்தாழ 170% அளவில் கைதிகள் நிறைந்து காணப்படுகிறார்கள்.
  • இந்திய சிறைச்சாலை புள்ளிவிவரம் - 2020 அறிக்கையின்படி, இதுவரை இல்லாத அளவு விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
  • 2019 டிசம்பரில் 69%-ஆக இருந்தது 2020 டிசம்பரில் 79%-ஆக அதிகரித்திருக்கிறது. சில மாநிலங்கள் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 100%-க்கும் கீழே குறைத்திருக்கின்றன என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
  • கேரளம், பஞ்சாப், ஹரியாணா, கர்நாடகம், அருணாசல பிரதேசம், மிúஸாரம் உள்ளிட்ட மாநிலங்கள் இதில் அடங்கும்.
  • காணொலி விசாரணை, தேவையில்லாமல் கைதிகள் அலைக்கழிக்கப்படுவதைத் தவிர்க்கிறது. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கைதிகள் நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்பது சட்டம். இதற்காக காவல்துறையினரின் நேரமும் வீணாகிறது.
  • 2019-இல் 60%-ஆக இருந்த சிறைச்சாலை காணொலி விசாரணை வசதி, இப்போது 69%-ஆக அதிகரித்திருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்னும்கூட எல்லா சிறைச்சாலைகளும் காணொலி விசாரணை வசதியால் இணைக்கப்படவில்லை என்பதையும் அறிக்கை தெரிவிக்கிறது.
  • அதேபோல கொள்ளை நோய்த்தொற்று பரவத் தொடங்கியபோதுதான் சிறைக் கைதிகளின் மருத்துவ பாதுகாப்பு போதிய கவனம் பெற்றது. உச்சநீதிமன்றமே இது குறித்து கவலையெழுப்பி போதுமான மருத்துவ கண்காணிப்புக்கு உத்தரவிட்டது.
  • அப்போதுதான் எந்த அளவுக்கு சிறைச்சாலைகளில் மருத்துவ வசதிக் குறைபாடு காணப்படுகிறது என்பது பொதுவெளியில் தெரிய வந்தது.
  • மருத்துவர்கள், மருந்து கையாள்பவர்கள், பரிசோதனைக்கூட ஊழியர்கள், கடைநிலைப் பணியாளர்கள் ஆகியோர் மிகக் குறைந்த அளவில்தான் காணப்படுகின்றனர் என்பதும் தெரிய வந்தது. பல பணியிடங்கள் நிரப்பப்படாமலே இருந்தன.
  • கோவாவில் 84.6%, கர்நாடகத்தில் 67.1%, ஜார்க்கண்டில் 59.2% என்று மிக அதிகமான மருத்துவப் பணியாளர்களின் காலியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கின்றன.
  • கோவா மாநிலத்தில் 500-க்கும் அதிகமான சிறைவாசிகளுக்கு இரண்டு மருத்துவ ஊழியர்கள்தான் இருக்கிறார்கள்.
  • 14,308 கைதிகளுக்கு கர்நாடகத்தில் சிறைச்சாலை மருத்துவப் பிரிவில் 26 பணியாளர்கள் மட்டுமே காணப்படுகின்றனர்.
  • கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்தது என்றால், மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்ததாக தெரிவிக்கிறது அந்த அறிக்கை.
  • இந்திய சிறைச்சாலைகள் இப்போதும்கூட அடிப்படை வசதிகளோ, இயற்கை நீதியோ கிடைக்காத விசாரணைக் கைதிகளால் நிரம்பி வழிகின்றன.
  • தமிழகத்தில் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்பது மட்டும் தான் இந்திய சிறைச்சாலை புள்ளிவிவரம் - 2020 தரும் ஒரேயொரு ஆறுதல்.

நன்றி: தினமணி (17 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories