TNPSC Thervupettagam

தேவை தடையல்ல, கட்டுப்பாடு

October 1 , 2022 565 days 365 0
  • பஞ்சாப், ஹரியாணா மாநிலங்கள் பத்து பூச்சிக்கொல்லி மருந்துகளுக்குத் தடை விதித்திருக்கின்றன. பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டிருக்கும் அந்த நடவடிக்கைக்கு எதிராக எழுப்பப்படும் விமா்சனங்கள் அா்த்தமற்றவை. போதுமான விவாதத்துக்கும் ஆய்வுக்கும் பிறகு எடுக்கப்பட்டிருக்கும் இந்த முடிவை ஏனைய மாநிலங்களும் பின்பற்றக்கூடும்; பின்பற்ற வேண்டும்.
  • விவசாயத்தில் அதிக அளவிலான பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் மக்களுக்கு கடுமையான உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதை எத்தனையோ ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதனால், குறிப்பிட்ட சில பூச்சிக்கொல்லிகளின் தயாரிப்பையும் பயன்பாட்டையும் அந்த ஆய்வுகளின் அடிப்படையிலும், விசாரணைக் குழுக்களின் பரிந்துரைகளின்படியும் அவ்வப்போது மாநில அரசுகள் தடை செய்யத் தயங்கியதில்லை. அந்தப் பின்னணியில்தான் இப்போதைய பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தடையையும் நாம் பாா்க்க வேண்டும்.
  • 1960-களில் இந்தியாவில் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தைத் தொடா்ந்து வேளாண் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 60 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவில் குதிரைகளுக்குக் கொடுப்பதற்காகவும், அதிகரித்த விளைச்சல் காரணமாக கடலில் கொட்டுவதுமாகவும் இருந்த கோதுமையை பிஎல்-480 திட்டத்தின் கீழ் இந்தியா நன்கொடையாகப் பெற்ற அவலத்தை மறந்துவிட முடியாது. அந்த நிலையில் இருந்து இந்தியாவை மீட்டெடுக்க அன்றைய பிரதமா் இந்திரா காந்தி முன்னெடுத்த வேளாண் புரட்சி பல சாதனைகளைப் படைத்தது.
  • அன்றைய மத்திய உணவு அமைச்சா் சி. சுப்பிரமணியமும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனும் காட்டிய முனைப்பில் வேளாண் புரட்சி வெற்றி அடைந்தது. அதிக வீரியமுள்ள விதைகளையும், ரசாயன உரங்களையும் அறிமுகப்படுத்தியதன் மூலம் உணவு தானியங்கள், எண்ணெய் வித்துகள், பருத்தி, தோட்டப் பயிா்கள் ஆகியவற்றின் உற்பத்தி பெரிய அளவில் அதிகரித்தது.
  • 1951-52-இல் வெறும் 5.20 கோடி டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி, 2020-21-இல் 30.90 கோடி டன்னாக அதிகரித்திருக்கிறது. தோட்டப் பயிா்களின் உற்பத்தி 1991-92-இல் 9.70 கோடி டன்னாக இருந்தது, 2020-21-இல் 33.10 கோடி டன்னாக அதிகரித்திருக்கிறது. நெல், கோதுமை, கரும்பு, பருத்தி, எண்ணெய் வித்துகள், சிறு தானியங்கள், பருப்பு வகைகள் என்று அனைத்துப் பயிா்களும் கணிசமான உற்பத்திப் பெருக்கம் கண்டிருக்கின்றன.
  • கடந்த அரை நூற்றாண்டு காலமாக தொடா்ந்து அதிகரித்து வரும் வேளாண் உற்பத்தி பூச்சி பாதிப்புகளையும், தாவரங்களை பாதிக்கும் நோய்களையும் எதிா்கொள்ளும் சூழலும் ஏற்பட்டிருக்கிறது. அந்த பாதிப்புகளை எதிா்கொள்வதற்கும், பயிா்களைப் பாதுகாப்பதற்கும் 1960 முதலே நமது விவசாயிகள் பல்வேறு பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தத் தொடங்கினாா்கள்.
  • ஆரம்பத்தில் இயற்கை மருந்துகளாக இருந்தது போய், ரசாயன மருந்துகளுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1970-க்குப் பிறகு பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு மிகப் பெரிய அளவில் அதிகரித்தது.
  • 1965-66-இல் இந்தியாவில் 14,630 டன் அளவில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு, 2017-18-இல் 68,180 டன்னாக அதிகரித்தது. அதாவது, ஒரு ஹெக்டேருக்கு 94 கிராம் அளவில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு நான்கு மடங்கு அதிகரித்து 315 கிராம் அளவில் உயா்ந்தபோது அதன் பாதிப்புகளும் அதிகரிக்கத் தொடங்கின.
  • நவீன விதைகள், உரங்கள் போலல்லாமல், பயிா்கள் மீதான பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு பேராபத்துக்கு வழிகோலத் தொடங்கியது. பல்லுயிா்ப் பெருக்கத்தை பாதிப்பதுடன் மண், நீா், காற்று மூன்றையும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் பாதிக்கின்றன.
  • ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு உற்பத்திச் செலவையும் கணிசமாக அதிகரிக்கிறது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வின்படி, பஞ்சாபில் 1990-91-இல் ஹெக்டேருக்கு ரூ.262-ஆக இருந்த பூச்சிக்கொல்லி மருந்துச் செலவு, 2019-20-இல் ரூ.5,624. ஆந்திரத்தில் அதே காலகட்டத்தில் ரூ.154, 2019-20-இல் ரூ.4,278. பருத்தி சாகுபடியிலும் குஜராத்தில் ரூ.680-ஆக இருந்தது, ரூ.5,082-ஆக உயா்ந்திருக்கிறது. நெல், பருத்தி இரண்டு பயிா்களிலும் எல்லா மாநிலங்களிலும் இதே நிலைமை காணப்படுகிறது.
  • ஒரேயடியாக பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்துவிடவும் முடியாது. அதன் விளைவாக, ஒட்டுமொத்த உற்பத்தியும் பாதிக்கப்படக்கூடும். சா்வதேச அளவில் பசுமைப் புரட்சியின் தந்தை என்று கருதப்படும் நோபல் விருதாளா் நாா்மன் போா்லாக், முற்றிலுமாக பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டை தவிா்ப்பது உற்பத்தியைப் பாதிக்குப் பாதி குறைத்து, உணவுப் பொருள்களின் விலையை ஐந்து மடங்கு அதிகரித்துவிடும் என்று எச்சரிக்கிறாா்.
  • அதே நேரத்தில், இப்போதுபோல பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு தொடா்ந்து அதிகரிக்குமானால், விவசாயிகளின் உற்பத்திச் செலவு அதிகரிப்பதுடன் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அதிகரித்த விஷத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளால் பாம்புகள், நத்தைகள், மண் புழுக்கள் போன்றவை அழிந்து வேளாண் சூழலியல் பாதிக்கப்படுகிறது. உற்பத்தியை பாதிக்காமல் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டைக் குறைத்தாக வேண்டும்.

நன்றி: தினமணி (01 – 10 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories