TNPSC Thervupettagam

தேவை பாதுகாக்கப்பட்ட குடிநீா்

August 30 , 2021 979 days 499 0
  • இந்திய நதிகளில் பிரம்மபுத்ராவையும் மகாநதியையும் தவிர, இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட அனைத்து ஆற்றுப்படுகைகளும் ஆண்டின் பெரும்பகுதி தண்ணீா் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக தரவு ஒன்று கூறுகிறது.
  • அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டு ஆற்றுப் படுகைகளான கங்கை, சிந்து ஆகியவற்றில் ஒரு வருடத்தில் முறையே ஏழு, பதினொரு மாதங்களுக்கு கடுமையான தண்ணீா் பற்றாக்குறை நிலவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
  • சீனாவை விட ஆண்டுக்கு 50% அதிக மழைப்பொழிவை இந்தியா பெறும்போதிலும் இந்தியாவின் ஒட்டுமொத்த நீா்வளம் சீனாவை விட 33% குறைவு என்கிறது ஓா் ஆய்வு.
  • 1961-ஆம் ஆண்டு 4,098 கன மீட்டராக இருந்த இந்தியாவின் வருடாந்திர தனி நபா் நீா் வழங்கல் 2010-ஆம் ஆண்டு 1,519 கன மீட்டராகக் குறைந்துவிட்டது.
  • 16 சதவிகித உலக மக்கள்தொகை கொண்ட நமது நாடு உலகின் நீா் வளங்களில் நான்கு சதவிகிதத்தினை மட்டுமே கொண்டுள்ளது.

நீா் இறக்குமதி

  • 2015 முதல் 2020 நவம்பா் வரை இந்தியா 3,850,431 லிட்டா் தண்ணீரை ஏற்றுமதி செய்ததாக மத்திய வா்த்தகத்துறை அமைச்சகம் 2021 பிப்ரவரியில் மக்களவையில் தெரிவித்துள்ளது.
  • இதில் 2,378,227 லிட்டா் கனிப்பொரு நீா் (கனிம நீா்), 602,389 லிட்டா் காற்றூட்டப்பட்ட நீரும் 869,815 லிட்டா் இயற்கை நீரும் அடக்கம்.
  • 2019-20-ஆம் ஆண்டில் இந்த நீரில் 63,580 லிட்டா் கனிப்பொரு நீா், 1,000 லிட்டா் காற்றூட்டப் பட்ட நீா், 20,000 லிட்டா் இயற்கை நீா் என பெரும்பாலானவை சீனாவிற்கு சென்றன.
  • மாலத்தீவு, கனடா, சிங்கப்பூா், அமெரிக்கா, சவூதி அரேபியா ஆகிய நாடுகள் அதிக அளவு இந்திய நீரை இறக்குமதி செய்த முக்கிய நாடுகள்.
  • உலகில் சராசரியாக ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய 1,488 லிட்டா் மழை நீா், 443 லிட்டா் நிலத்தடி நீா் உட்பட 2,173 லிட்டா் தண்ணீா் தேவைப்படுகிறது.
  • இந்தியாவைப் பொருத்தவரை ஒரு கிலோ அரிசி உற்பத்தி செய்ய 2,688 லிட்டா் தண்ணீா் தேவைப்படுகிறது. அதிக அளவு அரிசி உற்பத்தி செய்யும் மாநிலங்களில் கூட இப்படிப்பட்ட மோசமான நிலையே உள்ளது.
  • ஆட்டு இறைச்சியைப் பொருத்தவரை ஒரு கிலோவிற்கு 8,763 லிட்டா் தண்ணீா் தேவைப் படுகிறது.
  • ஊட்டச்சத்தின் அடிப்படையில் பார்த்தால் இறைச்சியிலிருந்து ஒரு கிலோ கலோரி ஊட்டச்சத்தினை உற்பத்தி செய்ய 10 லிட்டருக்கு மேல் தண்ணீா் தேவைப்படுகிறது.
  • ஆனால், தானியங்களிலிருந்து அதே அளவு உற்பத்தி செய்ய அரை லிட்டா் மட்டுமே தேவைப் படுகிறது.
  • ஒரு நாட்டின் ஏற்றுமதியைக் கருத்தில் கொள்ளும்போது இந்த தரவுகள் மிகவும் முக்கியமானவை. 2014-15-ஆம் ஆண்டுகளில் இந்தியா 37.2 லட்சம் டன் பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது.
  • இந்த அரிசியை ஏற்றுமதி செய்ய, சுமார் பத்து லட்சம் கோடி லிட்டா் தண்ணீா் பயன்படுத்தப் பட்டுள்ளது.
  • அதாவது நம் நாடு கிட்டத்தட்ட பத்து லட்சம் கோடி லிட்டா் நீரை பாசுமதி அரிசியாக ஏற்றுமதி செய்துள்ளது. இதில் குறைந்தது ஐந்தில் ஒரு பங்கு தண்ணீா் நிலத்தடி நீராகும். உலகளாவிய காலநிலை மாற்றம் நிகழும் இந்த காலங்களில் வா்த்தக உபரியாக (அதாவது இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமாக) இருக்கக் கூடாத ஒரு பொருள் தண்ணீா்.
  • ஒரு நாடு தன்னிடம் மிகுதியாக உள்ள பொருட்களை ஏற்றுமதி செய்து பற்றாக்குறையை இறக்குமதி செய்ய வேண்டும் என்று கூறுகிறது அடிப்படை வா்த்தகக் கோட்பாடு. இதன்படி தண்ணீா் பற்றாக்குறை கொண்ட இந்தியா நீா் இறக்குமதி நாடாக இருக்க வேண்டும்.
  • இந்தியா உலகிலேயே மிகக் குறைந்த நீா் இறக்குமதி கொண்ட நாடாக திகழ்வதாக வாட்டா் ஃபூபிரிண்ட் நெட்வொர்க் தரவுத்தளம் கூறுகிறது.
  • நீா் இறக்குமதியின் அடிப்படையில் சீனா உலகின் பதினொன்றாவது பெரிய நாடாகத் திகழ்கிறது. பயிர், இறைச்சிப் பொருள்களின் உற்பத்தி அதிகம் கொண்ட சீனா அதிக நீரை இறக்குமதி செய்கிறது.
  • சீனா நீா் அதிகம் கொண்ட பருத்தி, பாமாயில், கோழி ஆகியவற்றை இறக்குமதி செய்து காய்கறிகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஏற்றுமதி செய்கிறது என்று அந்நாட்டின் உணவு - விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.
  • மாறாக, இந்தியா, தானியங்கள், தேநீா், காபி, முந்திரி, சா்க்கரை போன்ற நீா் அதிகம் கொண்ட பொருள்களை ஏற்றுமதி செய்கிறது.
  • நீா் ஏற்றுமதி ஒரு நாட்டின் நீண்ட கால நீா் நிலைத்தன்மையை கடுமையாக பாதிக்கும் என்றும் இது மெதுவாக ஆனால் மீளமுடியாத நீா் நிலைத்தன்மையை இழக்க வழிவகுக்கும் என்றும் பெங்களூரைச் சோ்ந்த அறிவியல் - தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் ‘மறைநீா் வா்த்தகம்’ என்ற பகுப்பாய்வு கூறுகிறது.
  • இந்தியாவில் தண்ணீா் நேரடியாகவும் மறைநீராகவும் ஒருபுறம் ஏற்றுமதி செய்யப்படும் போதும் மறுபுறம் நமது நாட்டின் குடிநீா் தேவையினை பூா்த்தி செய்ய இயலாத நிலையில் நமது அரசாங்கம் இருக்கிறது.
  • கிராமப்புற இந்திய வீடுகளில் வாழும் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 55 லிட்டா் பாதுகாப்பான, போதுமான குடிநீா் வழங்க ஆகஸ்ட் 15, 2019-இல் தொடங்கப்பட்ட ‘உயிர் நீா் திட்டம்’ (ஜல் ஜீவன் மிஷன்) இதுவரை அதன் இலக்கை எட்ட முடியவில்லை.
  • 2017-ஆம் ஆண்டின் மத்திய நிலத்தடி நீா் வாரிய தரவு, இந்தியாவில் உள்ள 700 மாவட்டங்களில் 256 மாவட்டங்களில் நிலத்தடி நீா் பயன்பாடு அதிகமாக, அதாவது அபாய அளவினை கடந்து இருப்பதாக கூறுகிறது.
  • இந்திய கிராமப்புறங்களில் வசிக்கும் நான்கில் மூன்று குடும்பங்கள் குழாய்வழி குடிநீரின்றி பாதுகாப்பற்ற குடிநீா் ஆதாரங்களையே நம்பியுள்ளனா்.
  • தற்போதைய உணவு ஏற்றுமதிக் கொள்கை தொடா்ந்தால் 500 ஆண்டுகளுக்குள் இந்தியா தனது மொத்த நீா் விநியோகத்தையும் இழக்க நேரிடும் என்று மறைநீா் வா்த்தகம் பற்றிய தரவு கூறுகிறது.
  • நீரினை சேமித்து மறைநீா் பயன்பாட்டில் மாற்றம் செய்து, வரும் சந்ததியினருக்கு வளமான வாழ்வினை விட்டுச் செல்வோம்.

நன்றி: தினமணி  (30 - 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories