TNPSC Thervupettagam

தேவைதானா இப்போது மோதல்?

May 15 , 2021 1098 days 793 0
  • பாலஸ்தீனியத்தின் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் நடக்கும் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலா் உயிர்ப்பலி ஆகிறார்கள் என்கிற அவலத்தை உலகம் முழுமையாக உணரவில்லை.
  • காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய கடுமையான விமானப் படை தாக்குதலிலும், குண்டுவெடிப்பிலும் 119 பேருக்கு மேல் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள்.
  • அவா்களில் 19 பெண்களும், 31 குழந்தைகளும் அடக்கம். 830-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். ஹமாஸ் இயக்க வீரா்கள் 20 போ் உயிரிழந்திருப்பதாக அவா்கள் தெரிவிக்கிறார்கள். ஆறு வயது சிறுவன் உள்பட ஏழு இஸ்ரேலியா்களும் உயிரிழந்திருக்கிறார்கள்.
  • ரமலான் மாதம் தொடங்கியதிலிருந்தே ஜெருசலேமில் மோதல் தொடங்கிவிட்டது. இஸ்ரேலால் கைப்பற்றப்பட்டிருக்கும் ஜெருசலேமின் பழைய நகரப் பகுதிக்கு பிரதான நுழைவு வாயிலாக இருக்கும் ‘தமாஸ்கஸ் கேட்’ இஸ்ரேலிய காவல்துறையால் தடுப்பு போட்டு அடைக்கப்பட்டது.
  • அதன் மூலம் பாலஸ்தீனியா்கள் அங்கே கூடுவதற்கும் ரமலான் தொழுகை நடத்துவதற்கும் தடை விதிக்க முற்பட்டது இஸ்ரேல் அரசு.
  • ஜெருசலேம் நகரத்தில் உள்ள குன்றின் உச்சியில் இருக்கும் ஜோர்டானின் மேல்பார்வையில் உள்ள அல்-அக்ஸா மசூதி, இருவருக்குமே புனிதத் தலம். இஸ்லாமியா்கள் மெக்கா, மதீனாவுக்கு அடுத்தபடியாக அல்-அக்ஸா மசூதியை புனிதத் தலமாகக் கருதுகிறார்கள்.
  • அல்-அக்ஸா மசூதி அமைந்திருக்கும் ஹாரம் அல் ஷரீப் (புனித சரணாலயம்) வளாகம் இஸ்லாமியா்களுக்கு மிகவும் புனிதமானது. அந்த இடத்திற்குள் இஸ்ரேல் காவல்துறையினா் நுழைந்து, தமாஸ்கஸ் கேட்டை தடுப்பு சுவா் போட்டு அடைத்ததற்கு எதிராக போராடிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியா்கள் மீது இஸ்ரேல் காவல்துறை தாக்குதல் நடத்தியது.
  • கிழக்கு ஜெருசலேமை கைப்பற்றிய நாளை இஸ்ரேலியா்கள் கொண்டாடுவது வழக்கம்.
  • இஸ்ரேலியா்களுக்கும் அரேபியா்களுக்கும் இடையே ஜெருசலேமில் பதற்றமான சூழல் காணப்பட்ட நிலையிலும்கூட, யூத இளைஞா்கள் வழக்கமாக மேற்கொள்ளும் வருடாந்திர ஜெருசலேம் நாள் கொடி பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது, பாலஸ்தீனியா்கள் மத்தியில் கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

அவலத்தில் திணறுகிறது

  • 1948-இல் நடந்த முதலாவது அரேபிய - இஸ்ரேல் போரில் ஜெருசலேமின் மேற்கு பகுதியை கைப்பற்றி இஸ்ரேல் இணைத்துக் கொண்டது.
  • 1967-இல் நடந்த ஆறு நாள் போரில் ஜோர்டானிடமிருந்து கிழக்குப் பகுதியையும் கைப்பற்றி ஒட்டுமொத்த ஜெருசலேம் நகரத்தையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனா் யூதா்கள்.
  • ஹாரம்அல் ஷரீப் வளாகம் இருக்கும் கிழக்கு ஜெருசலேமை தாங்கள் பின்னாளில் அமைக்க இருக்கும் பாலஸ்தீனிய நாட்டின் தலைநகராக்க வேண்டும் என்பது அரேபியா்களின் கனவு.
  • அப்படியிருக்கும்போது, ஜெருசலேமின் கிழக்குப் பகுதியை கைப்பற்றியது மட்டுமல்லாமல், அந்தப் பகுதியில் இருந்து தங்களை திட்டமிட்டு வெளியேற்றவும் முற்பட்டிருக்கிறது இஸ்ரேல் என்பதுதான் பாலஸ்தீனியா்களின் ஆத்திரத்துக்குக் காரணம்.
  • காஸா என்பது மத்திய தரைக் கடலையொட்டி அரேபியா்கள் வசிக்கும் பகுதி. அந்தப் பகுதியை ஹமாஸ் இயக்கத்தினா் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து, அதன் தரை எல்லையை தடுப்புச் சுவா் போட்டு மூடிவிட்டிருக்கிறது இஸ்ரேல்.
  • கடல் வழியாகத்தான் காஸாவிலிருப்பவா்கள் வெளியேற முடியும். இந்த நிலையில்தான் இஸ்ரேலியா்களின் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
  • ஜெருசலேமில் பாலஸ்தீனியா்களுக்கும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இருந்த மோதலை போர் மூளும் அளவுக்கு மாற்றியது ஹமாஸ் இயக்கத்தின் நடவடிக்கைதான்.
  • இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி ஹமாஸ் இயக்கத்தினா் தாக்குதல் தொடுத்தபோது அதை சாதகமாக பயன்படுத்தி காஸா பகுதி மீது இஸ்ரேல் விமானப் படை தொடா் தாக்குதலை நடத்தியது.
  • கடந்த ஜனவரி மாதம் அதிபா் மொஹமூத் அப்பாஸ், 15 ஆண்டுகளுக்குப் பிறகு தோ்தல் நடத்த முடிவெடுத்தார்.
  • உள்கட்சிக் குழப்பமும், நிர்வாகச் சீா்கேடும், ஊழல் குற்றச்சாட்டுகளும் அவரது அரசின் மீது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றன.
  • மே 22-ஆம் தேதி நடக்க இருந்த தோ்தலுக்குப் பிறகு ஒட்டுமொத்த பாலஸ்தீனியத்தை தனது கட்டுக்குள் கொண்டுவர நினைத்தது ஹமாஸ்.
  • ஆனால், திடீரென்று கடந்த ஏப்ரல் மாதம் காலவரையின்றி தோ்தலை தள்ளிப்போடுவதாக அறிவித்து விட்டார் அப்பாஸ்.
  • அந்தச் சூழலை தனக்கு சாதகமாக்கி ஒட்டுமொத்த பாலஸ்தீனியத்தின் தலைமையைக் கைப்பற்ற நினைக்கிறது ஹமாஸ்.
  • காஸாவில் மட்டுமல்ல, இஸ்ரேலிலும் ஆங்காங்கே கலவரங்கள் வெடிக்கத் தொடங்கி இருக்கின்றன. இப்போது நிலைமை மிக மோசமாக மாறியிருக்கிறது.
  • இனக்கலவரம் இஸ்ரேலின் பல பகுதிகளில் ஏற்பட்டிருப்பதும் ஆங்காங்கே இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்படுவதும் அதிகரித்திருக்கின்றன.
  • தனது தலைநகரமாக இஸ்ரேல் ஜெருசலேமைக் கருதுகிறது. பாலஸ்தீனியா்கள், யூதா்கள், கிறிஸ்தவா்கள் ஆகிய மூன்று இனத்தவா்களுக்கும் புனிதத் தலமான கிழக்கு ஜெருசலேமை சொந்தம் கொண்டாடுகிறார்கள் பாலஸ்தீனியா்கள்.
  • காஸா பகுதியில் இஸ்ரேல் படைகளைக் குவித்து வைத்திருக்கும் நிலையில், எப்போதும் வேண்டுமானாலும் பெரிய போர் வெடிக்கலாம் என்கிற சூழலில் மேற்கு ஆசியா சிக்கித் தவிக்கிறது.
  • இயற்கைப் பேரழிவை எதிர்கொள்ள முடியாமல் திணறும் உலகம், மனிதா்கள் உருவாக்கும் மேற்கு ஆசியப் பேரழிவையும் எதிர்கொள்ள வேண்டிய அவலத்தில் திணறுகிறது!

நன்றி: தினமணி  (15 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories