TNPSC Thervupettagam

தேவைதான் மறு ஆய்வு

May 13 , 2022 708 days 408 0
  • தேசத் துரோக சட்டப் பிரிவை மத்திய அரசு மறுஆய்வு செய்யும் வரை, இந்தப் பிரிவின் கீழ் புதிதாக வழக்குப் பதிவு செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஏற்கெனவே இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவா்கள் பிணை கோரி மனு தாக்கல் செய்யலாம் என்றும் அந்த உத்தரவில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்றதிலிருந்து இந்திய தண்டனை சட்டங்களில் (ஐபிசி) திருத்தங்கள் செய்யப்பட்டு, வழக்கொழிந்த 1,500-க்கும் மேற்பட்ட சட்டங்கள் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டிருக்கின்றன. அப்படி நீக்கப்படாத சட்டங்களில் தேசத் துரோக சட்டப் பிரிவும் ஒன்று. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1860-ஆம் ஆண்டு தேசத் துரோக சட்டம் கொண்டு வரப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியாளா்களுக்கு எதிராகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரா்களை ஒடுக்குவதற்காக, பிணையில் வர முடியாத இந்தக் கடுமையான சட்டம் அமல்படுத்தப்பட்டது.
  • இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, காலனிய ஆதிக்க காலத்திய தேசத் துரோக சட்டப் பிரிவு 124 ஏ நீடிக்க வேண்டுமா என்ற வாதம் எழுந்தது. அந்த சட்டம் தொடரவேண்டுமென்று அன்றைய பிரதமா் பண்டித ஜவாஹா்லால் நேருவும், டாக்டா் அம்பேத்கா் தலைமையிலான அரசியல் சாசன அமா்வின் உறுப்பினா்களும் முடிவெடுத்தனா்.
  • இந்திய அரசியல் சட்டத்தின் 19 (1) (ஏ) பிரிவில், பேச்சுரிமை, கருத்து தெரிவிக்கும் உரிமை இரண்டும் அடிப்படை உரிமை என வரையறுக்கப்பட்டுள்ளன. அதனால், ஜனநாயக நாடான இந்தியாவில் தேசத் துரோக சட்டம் நீடிப்பது சரியல்ல என தாரா சிங் கோபிசந்த் என்பவா் தொடுத்த வழக்கில், பஞ்சாப் உயா்நீதிமன்றம் அதைக் ஏற்றுக்கொண்டு தீா்ப்பளித்தது.
  • 1962-ஆம் ஆண்டு கேதாா்நாத் என்பவா் தொடுத்த வழக்கில், தேசத் துரோக சட்டம், அரசியல் சட்டத்தின் 19 (1) (ஏ) பிரிவுக்கு எதிரானது அல்ல என உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வு அந்தத் தீா்ப்பை நிராகரித்தது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமையும், கருத்துரிமையும் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை என்றும், பொது அமைதியைப் பேணிப் பாதுகாக்க தேசத் துரோக சட்டத்தின் கீழ் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
  • இத்தகைய பின்னணியில், கடந்த 1962-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வால் செல்லத்தக்கது என தீா்ப்பளிக்கப்பட்ட தேசத் துரோக சட்டத்தை மறுஆய்வு செய்து ஒட்டுமொத்தமாக நீக்க வேண்டும் என்று கோரி, இந்திய பத்திரிகை ஆசிரியா்கள் அமைப்பு (எடிட்டா்ஸ் கில்டு ஆஃப் இந்தியா) உட்பட பல்வேறு தரப்பினா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமா்வு தற்போது விசாரித்து வருகிறது.
  • நமது நாட்டின் பாதுகாப்புக்கோ இறையாண்மைக்கோ ஊறு விளைவிப்பவா்கள் மட்டுமல்லாது, ஆட்சியாளா்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவா்களும் சமூகச் செயற்பாட்டாளா்களும்கூட இந்தக் கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனா். மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ள பாஜக அரசுகள்தான் இந்த சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக பரவலாகக் குற்றஞ்சாட்டப்படுவது முழுமையான உண்மையல்ல. முந்தைய காங்கிரஸ் அரசும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுகளும் இந்த வழிமுறையைக் கையாண்டன என்பதுதான் உண்மை. பாஜக, காங்கிரஸ், பிற கட்சிகள் என்கிற வேறுபாடில்லாமல் அனைத்து மாநில ஆட்சியாளா்களாலும் இந்த சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
  • தேசத் துரோக சட்டத்தின் கீழ், 2014 முதல் 2019 வரை மொத்தம் 326 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவற்றில் ஆறு வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனா். நாட்டிலேயே அதிகபட்சமாக அஸ்ஸாம் மாநிலத்தில் 2014 முதல் 2019 வரை இந்த சட்டத்தின் கீழ் 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக ஜாா்க்கண்டில் 40, ஹரியாணாவில் 31, பிகாா், ஜம்மு-காஷ்மீா், கேரளத்தில் தலா 25, கா்நாடகத்தில் 21, உத்தர பிரதேசத்தில் 17, மேற்கு வங்கத்தில் 8 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
  • இந்தியாவில் சட்டபூா்வமாக அமைந்துள்ள அரசுக்கு எதிரான கருத்துகளை எழுத்து, பேச்சு, கருத்துப்படம் மூலமாகத் தெரிவிப்பது தேசத் துரோகக் குற்றமாகும் என ஐபிசி 124 ஏ பிரிவு வரையறை செய்கிறது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவருக்கு எதிரான குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் அபாரதமும் விதிக்க முடியும். ஆனால், பெரும்பாலான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் படாமலும், விசாரணை முடியாமலும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளதால், குற்றஞ் சாட்டப்பட்டவா்கள் பிணையில் வர முடியாமல் சிறைகளில் அவதிப் பட்டு வருகின்றனா்.
  • சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் பிரதமா் மோடி உறுதியாக உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்தக் கடுமையான சட்டத்தை மறு ஆய்வு செய்து நீக்குவது குறித்து மத்திய அரசு திறந்த மனதுடன் செயல்படும் என நம்புவோம். அதே நேரத்தில், இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், பிரிவினை வாத சக்திகளை ஒடுக்கவும் ஏற்கெனவே இருக்கும் சட்டங்களை கடுமையாக்குவதில் தவறில்லை!

நன்றி: தினமணி (13 – 05 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories