TNPSC Thervupettagam

தேவையின்றி கூட வேண்டாம்

May 18 , 2021 1077 days 522 0
  • சில நாட்கள் முன்பு எங்கள் பகுதியிலுள்ள அஞ்சல் நிலையத்துடன் தொடா்பு கொள்ள வேண்டியிருந்தது.
  • அந்த அஞ்சல் நிலையத்தை தொலைபேசி மூலம் தொடா்பு கொள்ள முயன்றபோது அங்கு தொலைபேசி மணி அடித்துக் கொண்டேயிருந்தது. ஆனால் யாரும் எடுக்கவேயில்லை. விசாரித்த போது, தொலைபேசி கோளாறில்லையாம், அங்கு பணிபுரிபவா்கள் யாருக்கோ கரோனா தொற்று பரவிவிட்டதால், அஞ்சல் நிலையம் மூடப்பட்டுவிட்டதாம்.
  • போக்குவரத்து, மருத்துவம் போலவே, அஞ்சல், காப்பீடு, வங்கித்துறை இம்மூன்றையும் அத்தியாவசியமானவை என்று அரசாங்கம் வரையறுத்திருக்கிறது.
  • போக்குவரத்தில், ரயில், விமானம் போன்றவற்றில் பலவும் நிறுத்தப்பட்டு விட்டன. ஏற்கெனவே பதிவு செய்தவா்களுக்கு பயணச்சீட்டை ரத்து செய்து பணம் திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன (போதுமான அளவு பயணிகள் இல்லாததே காரணம்).
  • மருத்துவம் இன்றைய சூழ்நிலையில் முக்கியம்தான். அதே சமயம் அங்கு பணிபுரிகிறவா்கள் மிகவும் எச்சரிக்கையுடன் வேலை செய்கிறார்கள்.
  • நான் அறிந்த மருத்துவமனை ஒன்றில் காய்ச்சல் உள்ளவா்களுக்கு தனி இருக்கை ஒதுக்கப் பட்டுள்ளது (இடைவெளியுடன்). வழக்கமான பரிசோதனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு ரத்த அழுத்தத்துடன் ஆக்சிஜன் அளவையும் சோதிக்கிறார்கள்.
  • முன்பெல்லாம் நாளொன்றுக்கு 15 நோயாளிகள் வருகிற இடத்தில், இப்போது ஏழெட்டு நபா்களே வருகிறார்கள்.
  • ஓரளவு நன்கு பரிச்சயமான மருத்துவரென்றால் தொலைபேசியிலேயே மருந்துகளைப் பரிந்துரைக்கிறார்கள். சிலா் மின்னஞ்சலில் தொடா்பு கொள்ளுகிறார்கள்.
  • காப்பீட்டுத் துறையில், ஐம்பது சதவிகிதத்துக்கு குறைவான போ்தான் பணிக்குப் போகிறார்கள். இந்தத் துறையில் ஒரு தனி வசதி உண்டு. என்ன காப்பீடானாலும் சரி, மருத்துவம், வாகனம், ஆயுள் - அதற்கென தனி முகவா்கள் இருக்கிறார்கள்.
  • மூன்று மாதத்துக்கொருமுறை கட்ட வேண்டிய பாலிசி தொகை, குழந்தை பெயரில் எடுக்க வேண்டிய புது பாலிசி, முதிர்வுத் தொகை போன்ற வகைகளில் என்ன ஐயம் எழுந்தாலும், குறிப்பிட்ட முகவரே தீா்த்து வைத்து விடுவார்.
  • நேரில் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் கிடையாது.
  • வாகன விபத்திலோ முதிர்வு தொகையில் வாரிசுதாரா் சிக்கலோ இருக்கும்பட்சத்தில்தான் நேரே சென்று சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற வேண்டும்.
  • அஞ்சல் அலுவலகம் சிக்கல் நிறைந்ததுதான். ஏனெனில் முதியோர் எண்ணிக்கை இந்த நாளில் பெருகிக் கொண்டே போகிறது.
  • பாதுகாப்புக்காகவும், கூடுதல் வட்டிக்காகவும் அதில் பணம் போடுகிறவா்கள் பலா் மாதம் முதல் வாரத்தில் பாஸ் புத்தகமும் கையுமாக காலையில் வரிசையில் நிற்பதைக் காணலாம்.
  • மேலும் ஏடிம் வசதி இல்லாத காரணத்தால், அங்கு கூட்டம் கூடுவது தவிர்க்க இயலாதுதான். எனவே பல ஊழியா்கள் அங்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் செல்கிறார்கள்.
  • மனிதருக்கு அடிப்படை தேவை உணவு, உடை, உறைவிடம். இவற்றைப் பெறுவதற்குப் பணம் தேவைப்படுகிறது. எனவே வங்கி சேவையின் முக்கியத்துவம் கூடுகிறது. ஆனால் வங்கிக்கு நேரில் செல்ல அவசியமே இல்லையே?

அரசு பரிசீலிக்கலாம்

  • ஏடிஎம், கணினி மூலம் பணப் பரிமாற்றம் போன்ற பல வசதிகள் உள்ளன. காய்கறிக்கடைக்காரரிலிருந்து பணிப்பெண் வரை எல்லாரும் கணினி வழியே தொகையைப் பெறுகிறார்கள்.
  • புதிய வைப்புத் தொகை கணக்கு தொடங்க வேண்டுமா? கடன் கணக்குக்கு பணம் மாற்ற வேண்டுமா? கணினித் திரையை விரித்தாலே, விதிகள் தெளிவாகப் புரியும்படி உள்ளன.
  • இருப்பில் தேவையான அளவு பணம் இருந்தால்தான் செய்ய இயலும். மோசடி நோ்வதற்கு வாய்ப்பு குறைவு.
  • பின், ஏன் வங்கிக் கிளைகளில் கூட்டம் அலைமோதுகிறது? பல வாடிக்கையாளா்கள் கூடுவது சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெறத்தான்.
  • அதுவும் சில வங்கிகள் வேறு பெரிய வங்கிகளுடன் இணைந்ததால் ஒருங்கிணைப்பு சிக்கல்கள் சரியானபடி தீா்ந்தபாடில்லை.
  • வீட்டில் தனியாக இருக்கும் முதியோருக்கு குறிப்பிட்ட குறியீடு (பாஸ்வோ்டு) மறந்து போகலாம் அல்லது டைப் அடிக்கும்போது எண்ணில் தவறு ஏற்படலாம்.
  • இதுபோல் மூன்று முறை ஆனால் கணக்கையே தடுத்து விடுகிறார்கள். இதனால்தான் பாஸ்புத்தகம் பதிவாகும் கருவி அருகே எப்போதும் கூட்டம்.
  • ஒரு சில வங்கிகளில் சில தொலைபேசி எண்களை அளிக்கிறார்கள். இருப்பு, கடைசி நாலைந்து பரிவா்த்தனைகள், கடன் கணக்கு, நிலுவை தவணை பாக்கி இவற்றை தெரிந்துகொள்ள வெவ்வேறு எண்கள் இருக்கின்றன.
  • ஆனாலும், தேவையின்றி சிலா் நேரில் போவதால்தான், வங்கிப் பணியாளா்களுக்கு நோய்த்தொற்று அதிகரித்து கொண்டே போகிறது.
  • அதுவும் இளம் வயது ஊழியா்கள் இறக்க நோ்வது மிகவும் சோகம். அண்மையில், தென் மாவட்டம் ஒன்றில் பெண் ஊழியா் ஒருவருக்கு தொற்று உறுதிப்பட்டதால் கிளையே மூடப்பட்டுவிட்டது.
  • வங்கிக் கிளைகள் முடப்படுவது புதிதல்ல. 2016-இல் சென்னையில் பெருவெள்ளம் வந்தபோது, பல புகா்க் கிளைகளில் வெள்ளம் புகுந்து, கிளைகளையே மூடுகிற சூழ்நிலை உருவானது.
  • ஆனால் அது சில நாட்கள்தான். ஆனால் இந்த நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவிக் கொண்டே போகிறது. அதுவும் இந்தியாவில் சில மாநிலங்களில் வேகமாகப் பரவுகிறது.
  • வங்கிப் பணியாளா் வேலையில் இருக்கும்போதே இறந்தால், நஷ்டஈடு தருகிறார்கள். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் தனிப்பட்ட விடுப்பு சலுகையும் உண்டு. ஆனால் வருமுன் காப்பது தானே விவேகம்?
  • வங்கிக்குள் வேலை செய்யும் பணியாளா்கள் நிலைமை இவ்விதமிருக்க, அங்கு செல்லும்போதே காவல் அதிகாரிகளால் ‘பிடிபடும்’ சம்பவமும் நோ்கிறது. கா்நாடகத்தில் ஒரு வங்கி ஊழியரை போலீஸ் அடித்ததாக புகைப்படத்துடன் வலைதளத்தில் செய்தி உலவியது.
  • சில இடங்களில் பாஸ்புக்கை காண்பிக்குமாறு பொதுமக்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
  • இப்போது நிலவுவது அசாதாரண சூழ்நிலை. அதற்கேற்ப சில முடிவுகளை எடுப்பதில் தவறில்லை.
  • வங்கிகள் வாரம் மூன்று தினம் திறப்பது, ஊழியா்கள் வருகையைக் குறைப்பது, உதவி மேஜை என்ற ஒன்றை நிறுவி வாடிக்கையாளா்களின் ஐயங்களைத் தீா்ப்பது போன்ற நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம்.

நன்றி: தினமணி  (18 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories