TNPSC Thervupettagam

தொடரக் கூடாது முதல்வர் - ஆளுநர் முரண்பாடு

November 3 , 2023 198 days 275 0
  • மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் இன்றைக்கு முக்கியச் செய்தியாகிவிட்டன. மக்கள் நலனை மனதில் வைத்து இரு தரப்பும் இதைக் கைவிட்டால் தான், மாநில அரசுடன் ஆளுநரும் சுமுகமாக இருக்க முடியும். முதல்வர் - ஆளுநர் ஒருமித்த கருத்து மட்டுமே மாநில வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக இல்லாத மோதல் போக்கு சமீபகாலமாக அதிகரித்துவருவதை நாம் பார்க்கிறோம். குறிப்பாக, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மாநில அரசு - ஆளுநர் மோதல் அதிகரித்துள்ளது. இதற்குத் தீர்வு என்ன?

ஆளுநர் என்பவர் யார்

  • ஒரு மாநிலத்தின் முதல் குடிமகன் ஆளுநர்தான். மாநிலத்தின் பிரதிநிதி என்பதால் எல்லோருக்கும் பொதுவானவராக ஆளுநரின் நடவடிக்கை இருக்க வேண்டும். மாநில அரசுடன் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால், முதல்வர் அல்லது அமைச்சரை நேரில் அழைத்துப் பேசிச் சரிசெய்ய வேண்டியது ஆளுநரின் கடமை.
  • மாநில அரசு வேறு, மாநில ஆளுநர் வேறு என்ற எண்ணம் மக்கள் மனதில் எப்போதும் வரக் கூடாது. ஆளுநர் ஒரு கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஆளுநராக நியமிக்கப்பட்டதும் அவர் கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிடக் காரணம், இனி அவர் நியமிக்கப்படும் மாநிலத்தின் பிரதிநிதி மட்டுமே என்பதை உணர்த்தத்தான்.
  • மக்களாட்சியில் மாநில ஆளுநர் தேவையில்லை என்ற கருத்தைச் சொல்வோரும் உண்டு. ஒரு வாகனத்துக்கு ஐந்தாவது சக்கரம்போல் ஒரு மாநிலத்துக்கு ஆளுநர் என்பது அவர்கள் வாதம். அமெரிக்காவில் மாநில முதல்வர்கள் இல்லை. அங்கு மாநில நிர்வாகம், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆளுநரால்தான் நடத்தப்படுகிறது.
  • ஆனால், இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மாநில ஆளுநர்கள் அந்த நாட்டின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களால் நியமிக்கப்படுகிறார்கள். ஆளுநரும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரும் இணைந்து மாநிலத்தை நடத்த வேண்டும் என்றுதான் இந்திய அரசமைப்புச் சட்டக்கூறுகள் 153, 154இல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • ஆளுநரின் அதிகாரம் பற்றி 1949இல் அரசியல் நிர்ணய அவைக் கூட்டத்தில் நீண்ட விவாதம் நடந்தது. அப்போது சென்னை மாகாணம் சார்பாக அதில் பேசிய டி.டி.கிருஷ்ணமாச்சாரியார், “ஆளுநருக்கு அளவு கடந்த அதிகாரம் உண்டா அல்லது சட்டத்துக்கு உட்பட்டு அவரது அதிகாரம் கட்டுப்படுத்தப்படுமா?” என்கிற கேள்வியை எழுப்பினார்.
  • விவாதத்தில் பேசிய அன்றைய சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர், ஆளுநரின் அதிகாரம் பற்றிய நடைமுறையைப் பொறுத்தவரை கனடா, ஆஸ்திரேலியா நாடுகளின் ஆளுநர்களுக்கு உள்ள அதிகாரங்களை நாம் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
  • ஐபிஎஸ் அதிகாரி வேண்டாம்
  • ஆளுநருக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைத்தான் இந்திய அரசமைப்புச் சட்டம் அளித்துள்ளது. ஒரு மாநில வளர்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ள அதே பொறுப்பும் அக்கறையும் ஆளுநருக்கும் இருக்க வேண்டும். மத்திய அரசு யாரை ஆளுநராக நியமனம் செய்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய விஷயம்.
  • அதுவும், ஒரு மாநிலத்தில் மாறுபட்ட கட்சி ஆட்சியில் இருக்கும்போது ஆளுநராக யாரை மத்திய அரசு நியமிக்கிறது என்பது அதைவிட மிக முக்கியம். மத்திய அரசு, மாநில அரசைக் கலந்து ஆலோசித்து அவர்கள் கருத்தையும் அறிந்துகொண்டு ஆளுநரை நியமிப்பது இரண்டு அரசுகளுக்குமே நல்லது.
  • உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். 1971இல் தமிழ்நாட்டுக்குப் புதிய ஆளுநரை நியமிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மத்திய உள்துறைச் செயலாளராக இருந்து அடுத்த சில மாதங்களில் பணி ஓய்வுபெற இருந்த எல்.பி.சிங் என்ற ஐபிஎஸ் அதிகாரியைத் தமிழக ஆளுநராக நியமிக்க, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி முடிவுசெய்திருந்தார். எனக்கு அப்போது பிரதமர் அலுவலகத்தில் நெருங்கிய தொடர்பு இருந்ததால், இந்தத் தகவலைத் தெரிந்துகொண்டேன்.
  • நான் உடனே அன்றைய முதல்வர் மு.கருணாநிதியைத் தொடர்புகொண்டு இந்தத் தகவலைத் தெரிவித்தேன். அப்போது, “ஒரு ஐபிஎஸ் அதிகாரி நம் மாநிலத்துக்கு ஆளுநராக வருவது சரியாக இருக்காது. அரசியல்வாதி ஆளுநராக வரட்டும்” என்று அவர் என்னிடம் சொன்னார். பின்னர், அவர் டெல்லியில் தொடர்புகொண்டு என்னிடம் சொன்ன அதே கருத்தை வலியுறுத்தவே, ஐபிஎஸ் அதிகாரியை ஆளுநராக நியமிக்கும் முயற்சியை இந்திரா காந்தி கைவிட்டார்.
  • அதன் பிறகு, மத்தியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த கே.கே.ஷா-வைத் தமிழக ஆளுநராக நியமிக்க முடிவுசெய்தார் இந்திரா காந்தி. இந்தத் தகவலும் பிரதமர் அலுவலகம் மூலம் முதலில் எனக்குத் தெரிந்தது. இதையும் முதல்வர் மு.கருணாநிதியிடம் தெரிவித்தேன். கே.கே.ஷா-வைத்தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்தேன்.

மத்திய - மாநில அரசுகளின் பொறுப்பு

  • ஒரு கூட்டாட்சியில், அதுவும் பல கட்சிகள் வலிமையுடன் இருந்துவரும் சூழ்நிலையில், மத்தியிலும் மாநிலத்திலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. இப்படிப்பட்ட அரசியல் சூழ்நிலையில் ஒரு நிதானப் போக்கைக் கடைப்பிடித்து மக்கள் நலன் பற்றி யோசித்து முடிவுசெய்யும் ஒருவரை மாநிலத்தின் ஆளுநராக நியமிப்பதுதான் சரியாக இருக்கும்.
  • நம் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கட்சிகள் ஆட்சி செய்கின்றன. மத்தியில் ஆட்சிசெய்யும் கட்சிக்கு முரணான கொள்கைகளைக் கொண்டிருக்கும் கட்சிகள் சில மாநிலங்களில் ஆட்சி செய்கின்றன. இத்தகைய சூழலில், மாநில ஆளுநரை நியமிப்பதில் மத்திய அரசுக்குக் கூடுதல் பொறுப்பும் கவனமும் அவசியம். மறுபுறம், மாநிலத்தில் ஆளும் அரசியல் கட்சியும், மாநில நலன் சார்ந்து மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். இதில் மாநில அரசு தனது கடமையைத் தட்டிக்கழிக்க முடியாது.

எதிர்மறையான விளைவுகள்

  • அரசியல் கட்சிகளுக்குஇடையே கருத்து வேறுபாடுகள் என்பது சகஜம்தான். ஆனால், ஆளுநருக்கும் அமைச்சரவைக்கும் இடையேகருத்து வேறுபாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஓரிரு மாநிலங்களில் ஆளுநரும் முதல்வரும் பேசிக்கொள்வதே இல்லை. இது மக்களாட்சித் தத்துவத்துக்கும் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் முற்றிலும் விரோதமானது. இப்படிப்பட்ட மோதல்கள் மாநில வளர்ச்சியை நிச்சயம் பாதிக்கும்.
  • மாநில அரசு இயற்றும் சட்டங்களுக்குச் சில ஆளுநர்கள் ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டுவிடுகிறார்கள். சில நியமனப் பதவிகளுக்கும் ஆளுநர் ஒப்புதல் தராமல், அந்தக் கோப்புகளைத் திருப்பி அனுப்புகிறார். இதன் காரணமாக அரசுப் பல்கலைக்கழகங்களில் குழப்பம் அதிகரித்துவிட்டது. பல்கலைக்கழகங்கள் அலைக்கழிக்கப்படுகின்றன. இது மாநிலத்தின் கல்வி வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கிறது.
  • இதனால், மாநில அரசு உச்ச நீதிமன்ற உதவியை நாட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்த முரண்பாடுகளுக்கு நீதிமன்றம் சரியான தீர்வு தருமா என்பதை அனுமானிக்க முடியவில்லை. மக்களாட்சியில் கூட்டாட்சித் தத்துவத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு குடியரசுத் தலைவருக்கு உண்டு. எனவே, குடியரசுத் தலைவர் தலையிட்டு இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.
  • ஆளுநரை நியமனம் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே உண்டு. அதேபோல் ஆளுநரைத் திரும்ப அழைப்பது அல்லது பதவிநீக்கம் செய்வதற்கான அதிகாரமும் அவருக்கு மட்டுமே உண்டு. எனவே, குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சரோடு கலந்து பேசி இந்த மோதல் போக்கு உள்ள மாநிலங்களில் நிலைமை சீராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories