TNPSC Thervupettagam

தொடரும் வேளாண் சட்ட அபாயம்

November 28 , 2021 903 days 568 0
  • மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுதல் – சரியான முடிவு - ஆனால், மிகத் தாமதமான முடிவு. மேலும், சட்டங்களைத் திரும்பப் பெற்றுவிட்டதாலேயே இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாகச் சொல்லிவிட முடியாது. விவசாயிகள் பிரச்சினை சார்ந்து தீர்க்கமான ஒரு பார்வையை இந்த அரசும் நம் சமூகமும் பெற வேண்டியுள்ளது.
  • ஒரு ஆண்டுக்கு முன்பே உழவர்களுடன் கலந்தாலோசித்து, அனைத்துத் தரப்புக்கும் பலன் தரும் வகையில் இந்தச் சட்டங்களை  மாற்றியமைத்திருக்க முடியும். 700-க்கும் மேற்பட்ட உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். நாடாளுமன்றத்தில், இதுகுறித்து ஆழமாக விவாதிக்கவும், சிறப்புக்குழு அமைத்து ஆராயவும் எதிர்க்கட்சிகள் வைத்த வேண்டுகோள் மறுக்கப்பட்டு, அவசர கதியில், மேலவையில் தந்திரமான முறையில் இச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
  • பிரதமர் மோடியின் அறிவிப்பால் இப்போது இந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்படுகின்றன என்றாலும், இன்னமும் இவை வேறு வடிவில் மீண்டும் கொண்டுவரப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. “மிக முக்கியமான சீர்திருத்தச் சட்டங்கள் இவை; விவசாயிகளின் அச்சுறுத்தலுக்கு மோடி அரசு அடிபணிந்துவிட்டது” என்றும், “சட்டங்கள் அமலாக்கப்பட்ட விதம்தான் தவறு; சட்டங்களை மீண்டும் கலந்தாய்ந்து கொண்டுவர வேண்டும்” என்றும் பேசும் குரல்கள் இப்போதும் ஓங்கி ஒலிக்கின்றன. ஆகையால், இந்தச் சட்டங்களைப் பற்றி மீண்டும் ஒருமுறை நாம் பேசுவது அவசியம் ஆகிறது. 

இந்த மூன்று சட்டங்களும் என்ன சொல்ல வருகின்றன?

  • முதல் சட்டம், வேளாண் விலை பொருட்கள், ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில்தான் விற்கப்பட வேண்டும் என்னும் தற்போதைய நிலையை மாற்றி, வேளாண் விலை பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம் எனவும், உழவர்கள் தங்கள் பொருட்களை மாநில எல்லைகளைத் தாண்டியும் கொண்டுசென்று விற்கலாம் எனவும் சொல்கிறது.
  • வேளாண்மை, மாநிலப் பொறுப்பின் கீழ் வருவதால், மாநிலத்துக்கு மாநிலம் வேளாண் விற்பனைச் சட்டங்கள் மாறுபடுகின்றன. ஆனால், பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில், வேளாண் பொருட்கள், குறிப்பாக உணவு தானியங்கள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாகவே விற்கப்படுகின்றன. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள வணிகர்கள் வழியேதான் தற்போதைய விற்பனை  நிகழ்கிறது.
  • அரசு கொண்டுவந்துள்ள இந்தச் சட்டத்தின் மூலம், உழவர், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்குக் கொண்டுசெல்லாமல், நேரிடையாகவே எவருக்கும் விற்க முடியும். தனியார் வணிகர்கள், உழவர்களின் நிலத்திற்கே சென்று கொள்முதல் செய்துகொள்ள முடியும்.
  • இரண்டாவது சட்டம், உழவர்கள், தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்த முறை மூலமாக, வேளாண் பொருட்களை உற்பத்திசெய்வதை அனுமதிக்கிறது. இது ஏற்கனவே கரும்புப் பயிரில் நடைமுறையில் இருக்கும் ஒரு முறைதான். ஆனால், இந்தச் சட்டத்தில் உள்ள மாற்றம் என்னவெனில், இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் பிரச்சினைகள் இருந்தால், நீதிமன்றங்களுக்குப் பதிலாக, மாவட்ட ஆட்சியரைத் தான் அணுக வேண்டியிருக்கும் என்னும் புதிய விதி.
  • மூன்றாவது சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் முதலியவை பற்றியது.  உணவு தானியங்கள், பருப்பு, எண்ணெய் வித்துகள், வெங்காயம், உருளைக்கிழங்கு முதலியவை அத்தியாவசியப் பொருட்களாக அறிவிக்கப்பட்டு, அவற்றை கொள்முதல் செய்து சேமித்து வைக்கும் அளவுகளுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள் இல்லையெனில், வேளாண் பொருட்வரத்து காலத்தில், வணிகர்கள் அதிகமாகக் கொள்முதல் செய்து பதுக்கி வைத்து, பின்னர் லாபம் சம்பாதிக்கக் கூடும், இது தடுக்கப்பட வேண்டும் என்பது அரசின் கொள்கையாக இருந்தது. இந்தக் கட்டுப்பாடு விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது. வேளாண் பொருட்களின் சில்லறை விலை 50% அதிகரித்தால் மட்டுமே, இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று சட்ட விதி சொல்கிறது.

மொத்த சித்திரம் என்ன?

  • இந்த மூன்று சட்டங்களையும் ஒன்றுடன் ஒன்று பொருத்திப் பார்க்கையில், நமக்குப் புலப்படும் சித்திரம் என்ன?
  • விடுதலை பெற்ற காலத்தில், வெள்ளைச் சர்க்கரைத் தொழிலை ஊக்குவிக்க நினைத்த அரசுஅந்தத் தொழிலுக்கு பல்வேறு மானியங்களை அளித்தது. ஒவ்வொரு சர்க்கரை ஆலைக்கும் கொள்முதல் நிலப்பரப்பைப் பிரித்து அளித்தது.  கரும்பு உற்பத்தி நிதி என ஒன்றை உருவாக்கி, ஊரகச் சாலைகள், மானியங்கள் என அளித்து, உற்பத்தி, கொள்முதல், விநியோகம் என்னும் ஒரு முறையை அரசு உருவாக்கியது. 
  • இதன் மிக முக்கிய அம்சம், கரும்பின் கொள்முதல் விலையை அரசு நிர்ணயம் செய்வதுதான். மத்திய அரசு, குறைந்தபட்சக் கொள்முதல் விலையை அறிவிக்கும். பல மாநில அரசுகள், மாநில அரசின் ஆலோசனை விலை என, மத்திய அரசு அறிவிக்கும் விலையை விடக் கொஞ்சம் கூடுதலாக அறிவிக்கும். இந்த விலையில்தான், சர்க்கரை ஆலைகளில் கொள்முதல் நடக்க வேண்டும்.
  • இந்த முறையில், உழவர்களுக்கு, தங்கள் உற்பத்திக்கான ஓரளவு நியாயமான விலை கிடைக்கும் நிலை ஏற்படுகிறது. 1950-களில் 50 மில்லியன் டன்னாக இருந்த கரும்பு உற்பத்தி இன்று 250-280 மில்லியன் டன் என உயர்ந்துள்ளது. ஆனால், இந்தத் தொழில் முறையில் உள்ள சிக்கல்கள் காரணமாக, பல சர்க்கரை ஆலைகள், உழவர்களிடம் இருந்தது கொள்முதல்செய்த கரும்புக்குப் பணம் கொடுப்பதைத் தாமதப்படுத்திவருகின்றன. கரும்பு உற்பத்தியில், உழவர்கள் சந்திக்கும் பெரும் பிரச்சினை இதுதான்.
  • மத்திய அரசு, உணவு தானியங்கள், பருப்பு, எண்ணெய் வித்துக்கள் முதலிய துறைகளிலும், இம்முறையை உருவாக்கி, தனியார் முதலீட்டை இதில் கொண்டுவர உத்தேசிக்கிறது. மேலெழுந்தவாரியாகப் பார்க்கையில், இது நல்ல திட்டம் எனத் தோன்றினாலும், இதில் முக்கியமான சிக்கல் ஒன்று உள்ளது.
  • உழவர்கள், கொள்முதல் செய்யப்படும் பொருட்களுக்கு, எம்.எஸ்.ஸ்வாமிநாதன் கமிட்டி பரிந்துரையின்படி, குறைந்தபட்ச விலையில் கொள்முதல் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் எனக் கேட்கிறார்கள். அரசு, குறைந்தபட்ச விலையும், அரசு கொள்முதலும் தொடரும் எனச் சொன்னாலும், அதை இந்தச் சட்டங்களின் ஒரு பகுதியாக மாற்றத் தயங்குகிறது. 

மேற்சொன்ன சிக்கல்கள் தீர்க்கப்படாமல், புதுச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் என்ன ஆகும்?  

  • பெரும் சர்க்கரை ஆலைகள்போல, உணவு தானியம், பருப்பு, எண்ணெய் வித்துக்கள் போன்ற துறைகளில், பெரும் வணிகர்கள் உள்ளே வருவர். அவர்களின் கட்டற்ற நிதியாதாரத்தின் காரணமாக, உழவர் நலன்களுக்குப் பாதகமான வகையில் ஒப்பந்தங்கள் உருவாக்கப்படும்.  அந்தக் காலகட்டத்தில், ஒருவேளை அரசு, தனது கொள்முதலைக் கைவிட்டால், அது உழவர்களின் நலன்களுக்கு எதிரானதாக இருக்கும்.  எனவே, கரும்பு கொள்முதலில் இருப்பது போலவே, ஒரு குறைந்தபட்ச விலையை அரசு நிர்ணையிக்க வேண்டும் என உழவர்கள் சந்தேகப்படுகிறார்கள்.
  • இந்தச் சட்டங்களைத் தாண்டி, இந்தத் துறையைப் பற்றிப் பேசாப்பொருள் உண்டு. அது இந்தத் துறையின் லாபமின்மை.  எம்.எஸ்.ஸ்வாமிநாதன் கமிட்டி அமைத்திருக்கும் குறைந்தபட்ச விலை என்பதே, நாட்டில் உள்ள எல்லா விவசாயிகளுக்கும் கிடைப்பதில்லை. எடுத்துக்காட்டாக, பஞ்சாப் மாநிலத்தில், ஒன்றிய அரசு, குறைந்தபட்சக் கொள்முதல் விலை கிலோ 19.25 கொடுத்துக் கொள்முதல் செய்கிறது. ஆனால், சீர்திருத்தம் என்னும் பெயரில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை மூடிவிட்ட, பீஹாரில் நெல் கிலோ 10 ரூபாய்க்கும் குறைவான விலையில் தனியார் வணிகர்களால் கொள்முதல் செய்யப்படுகிறது.
  • ஒன்றிய அரசு, தனது பெரும்பான்மையான கொள்முதலை, பஞ்சாப், ஹரியான, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் மட்டுமே செய்கிறது. மற்ற மாநிலங்களுக்கு நிகழும் அநீதி இது. குறைந்தபட்சக் கொள்முதல் விலை என்பதே மற்ற தொழில்கள், வேலைகளை ஒப்பிடுகையில், மிகக் குறைவான லாபம் கொண்டது என்பது வேளாண் துறை சந்திக்கும் அடுத்த பெரும் சவால். 

வேளாண்மையின் முக்கியத்துவம்

  • இந்தியாவின் 50% மக்கள் - 65 கோடிப் பேர் - வேளாண்மையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களது சராசரி நில அலகு 2.5 ஏக்கர் மட்டுமே. சுதந்திரச் சந்தை நிபுணர்கள் நம்புவது போல, 65 கோடி மக்களில், பெரும்பாலானோர் கல்வி பெற்று தனியார் துறைக்கு வேலைக்குப் போவது சாத்தியமேயில்லை. இந்தியாவின் மரபான தனியார் துறை 1.25 கோடிப் பேர்களுக்கு மட்டுமே வேலை தருகிறது. இந்தியாவில், 90% தொழிலாளர்கள் முறை சாராத் தொழில்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். எனவே, கல்வியும் தொழில்மயமாதலும் மட்டும் இந்தியாவில் எல்லோருக்கும் வேலை தந்திடும் தீர்வல்ல.
  • உலகெங்கும் வேளாண் பொருளாதாரம், உற்பத்தி மற்றும் நுகர்வு மானியங்களால் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. மேற்கத்திய நாடுகளில், வேளாண்மையில் ஈடுபட்டிருக்கும் மக்கள் தொகை குறைவாதலால், அவர்களுக்கு மானிய உதவி வழங்குதல் இந்தியாவை ஒப்பிடுகையில் சுலபமாக உள்ளது. 
  • அரசின் கொள்கை வகுக்கும் தரப்பு, வேளாண் துறையில் தனியார் முதலீடு என்பது வேளாண் சிக்கலைத் தீர்த்துவிடும் என்னும் எளிமையான நம்பிக்கையில், இந்தச் சட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறது. வேளாண் துறையில் தனியார் முதலீடு, பெரும் பண்ணைகள், நவீன தொழில்நுட்பம் போன்றவை, மேற்கத்திய நாடுகளிலிலும், வேளாண் உற்பத்தியைப் பெருக்கியுள்ளதே தவிர, உழவர்களின் லாபத்தை அதிகரிக்கவில்லை. மேலைநாடுகளிலும் உழவர்களின் கடன், தற்கொலை போன்றவை பெரும் பிரச்சினைகளாக உள்ளன. இத்தகு சூழலில்தான் வேளாண் சட்டங்கள் உள்ளார்ந்து கொண்டிருக்கும் பண்பை சந்தேகத்துடனும், அபாயமாகவும் பார்த்திட வேண்டியிருக்கிறது.
  • ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு – தி எலிபன்ட் இன் தி ரூம் (The elephant in the room) – அப்படி நம் வீட்டின் முன்னறையின் அமர்ந்திருக்கும் பெரும் பிரச்சினை, வேளாண் துறையின் லாபமின்மை. இங்கு மட்டுமல்ல. உலகெங்கும். எனவே, இந்தியாவில் சராசரியாக 2.5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் உழவரின் வாழ்க்கையை எப்படி மேம்படுத்த முடியும் என்னும் புள்ளியிலிருந்து அரசின் பொதுநலத் திட்டங்களும், கொள்கைகளும் வகுக்கப்பட வேண்டும். அதற்கான உத்வேகப் புள்ளியை உழவர்களின் இந்தப் போராட்டம் இந்திய அரசுக்கும், பொதுச் சமூகத்துக்கும் தருகிறது!

நன்றி: அருஞ்சொல் (28 – 11 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories