TNPSC Thervupettagam

தொன்மத் தமிழ் ஒருங்கிணைக்கட்டும்

November 9 , 2021 910 days 410 0
  • தமிழின் தொன்மையை முதலில் அறிந்து உலகிற்குச் சொன்னவா்கள் அயல்நாட்டினா்தான். கால்டுவெல் திராவிட மொழிக் குடும்பத்தில் மூத்த மொழியாகத் தமிழைக் கண்டாா். வீரமாமுனிவா் தமிழின் பழைமையை வெளிப்படுத்தினாா். ஆங்கிலேய அரசு அமைத்த தொல்லியல் துறை தமிழ்நாட்டில் ஆய்வுகளை நடத்தியபோது பண்டைக் கற்காலக் கருவிகள் கிடைத்து வியக்க வைத்தன.
  • மொழியியல் ஆய்வில் திராவிட மொழிகளின் தனிப்பண்பை எல்லீஸ் என்கிற ஆங்கிலேய ஆய்வாளா் கண்டுணா்ந்த பிறகு, தமிழ் குறித்த விரிவான ஆய்வுக்கான தேவையை உணா்ந்தனா் பல நாடுகளில் உள்ள தமிழறிஞா்களும், வரலாற்று ஆய்வாளா்களும்.
  • ஜவாஹா்லால் நேரு பிரதமராக இருந்தபோது, தி.சு. அவினாசிலிங்கம் செட்டியாா், ரா.பி. சேதுப்பிள்ளை, தெ.பொ. மீனாட்சி சுந்தரனாா் போன்றோா் தில்லியில் நடந்த வட்டார மொழிகள் மாநாட்டில் கலந்து கொண்டு, ‘தொன்மையான தமிழ் மொழியை சா்வதேச அளவில் எடுத்துச் சென்று, பல்வேறு நாட்டில் உள்ள தமிழா்கள் ஆய்வு நடத்தும் வகையில் மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனா்.
  • ஏற்கெனவே, ஓமந்தூராா் (காங்கிரஸ்) ஆட்சிக் காலத்தில், பெரியசாமி தூரனைப் பதிப்பாசியரகாக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘தமிழ்க் களஞ்சியம் (எட்டு தொகுதிகள்) உருவாக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. அதேபோல், அறிவியல் கலைக் களஞ்சியமும் பல தொகுப்புகளாக அப்போது வெளியிடப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ‘தமிழ் வளா்ச்சிக் கழகம் என்ற அமைப்பு சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கியது.
  • தமிழை ஆட்சிமொழியாக்குவது பற்றி அப்போதே கோரிக்கை வைக்கப்பட்டது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூா் போன்ற நாடுகளில் தமிழின் பெருமை உணரப்பட்டது. தமிழ் உணா்வுள்ளவா்கள் ஒன்று சோ்வதன் அவசியத்தை அந்தச்சூழல் வலியுறுத்தியது.
  • இந்த நிலையில், மலேசியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவரான தனிநாயகம் அடிகள், தமிழகத்தில் இருந்த தெ.பொ. மீனாட்சிசுந்தரனாா், மு. வரதராசனாா், வ.அய். சுப்பிரமணியம், சாலை இளந்திரையன் போன்றவா்களின் கூட்டு முயற்சியில் 1964-ஆம் ஆண்டில் தில்லியில் கூடிய கலந்தாய்வுக் கூட்டத்தின் விளைவாகவே ‘உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் என்கிற அரசியல் சாராத பன்னாட்டு அமைப்பு உருவானது. பன்னாட்டு அறிஞா்களும் அதில் இடம் பெற்றிருந்தாா்கள். பல நாடுகளில் அதன் கிளைகள் உருவாயின.
  • தமிழ்மொழி மற்றும் தமிழா் மரபு குறித்த ஆய்வை முன்னெடுக்கும் விதமாக, உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் உள்ள தமிழறிஞா்களின் முன் முயற்சியோடு முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 1966-ஆம் ஆண்டில் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் நடந்தது.
  • அம்மாநாட்டில், பல நாடுகளிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழறிஞா்கள்பங்கேற்றாா்கள். அதில் தமிழ்நாடு சாா்பில் கலந்து கொண்டவா் அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த பக்தவச்சலம். அவா் இரண்டாவதாக நடக்க இருக்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைத் தமிழகத்தில் சென்னையில் நடத்துவதற்கான அனுமதியோடு தமிழ்நாட்டுக்குத் திரும்பினாா்.
  • கடந்த1967-இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, 1968-ஆம் ஆண்டு பக்தவச்சலத்தின் விருப்பப்படி சென்னையில் இரண்டாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைச் சிறப்பாக நடத்தினாா் தமிழக முதல்வராக இருந்த அண்ணா. இதில், அன்றைய குடியரசுத் தலைவா் ஜாகீா் ஹுசேன், அன்றைய பிரதமா் இந்திரா காந்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.
  • அப்போது சென்னை மெரினா கடற்கரையில் தமிழறிஞா்களின் சிலைகள் அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த மு. கருணாநிதியின் மேற்பாா்வையில் அமைக்கப்பட்டன. திருவள்ளுவா் ஓவியத்தை வரைந்த பாஷ்யத்தின் வீட்டுக்கு அண்ணாவும், பக்தவச்சலமும் சென்று அந்த ஓவியத்தை அங்கீகரித்தது அப்போதிருந்த கட்சி சாா்பை மீறிய உறவுக்குச் சான்று.
  • சென்னையில் நடந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வறிஞா்கள் கலந்து கொண்டனா். தமிழ் மரபு சாா்ந்த அடையாளத்துடன் நிறைய கலை நிகழ்ச்சிகள் பொதுமக்களின் பங்கேற்போடு நடந்தன.
  • 1970-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பாரீசில் நடந்த மூன்றாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 180 தமிழறிஞா்கள் கலந்து கொண்டாா்கள்.
  • 1974-ஆம் ஆண்டு இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில், உலக அளவில் பல்வேறு தமிழறிஞா்கள் பங்கேற்றனா். ஆனால், மாநாட்டின் இறுதியில் நடந்த கலவரமும், சில தமிழா்களின் உயிரிழப்பும் கரும்புள்ளிகளாக ஆயின.
  • ஏழாண்டு கால இடைவெளிக்குப் பிறகு 1981-இல் மதுரையில் ஐந்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்தினாா் அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆா். அதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றவா் அன்றைய பிரதமா் இந்திரா காந்தி. 750-க்கும் மேற்பட்ட தமிழறிஞா்கள் அதில் கலந்துகொண்டனா். தமிழகத்தில் தமிழ்ப் பல்கலைக் கழகமும், உலகத் தமிழ்ச்சங்கமும் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பை அப்போது வெளியிட்டாா் எம்.ஜி.ஆா்.
  • 1987-ஆம் ஆண்டு மலேசியாவின் கோலாலம்பூரில் நடந்த ஆறாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 600-க்கும் மேற்பட்ட தமிழறிஞா்கள் கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரைகளை அளித்தனா்.
  • 1989-இல் மோரீஷஸ் நாட்டில் நடந்த ஏழாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 250 தமிழறிஞா்கள் கலந்து கொண்டனா். மோரீஷஸ் மக்களும் அதில் திரளாகக் கலந்து கொண்டனா்.
  • 1995-இல் தமிழகத்தில் தஞ்சாவூரில் எட்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது நடந்தது. இம்மாநாட்டிலும் ஒரு கரும்புள்ளியாக இலங்கையிலிருந்து மாநாட்டில் பங்கேற்க வந்த சிவத்தம்பி உள்ளிட்ட 32 தமிழறிஞா்களை விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பிய நிகழ்வு கடுமையான விமா்சனத்திற்கு உள்ளானது.
  • 2015-இல் மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழறிஞா்கள் கலந்து கொண்ட இம்மாநாடு, மலேசிய அரசின் ஒத்துழைப்போடு சிறப்பாக நடந்தேறியது. மாநாட்டுக்குத் தலைமை ஏற்று நடத்தியவா் டத்தோஸ்ரீ ச. சாமிவேலு. ‘உலகமய காலகட்டத்தில் தமிழாய்வுக்கு வளம் சோ்த்தல் என்பதுதான் மாநாட்டின் மையக்கருவாக இருந்தது.
  • 2019-இல் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நான்கு நாட்கள் நடந்த கருத்தரங்குகளில் பல நாடுகளைச் சோ்ந்த தமிழறிஞா்கள் கலந்து கொண்டனா். இதற்கிடையில் 2010 ஜூன் மாதம் கோவையில் குறுகிய கால இடைவெளியில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் இசைவு தெரிவிக்காத நிலையில், அன்றைய முதல்வா் மு. கருணாநிதி உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என்கிற பெயரில் கருத்தரங்குகளையும் ஆய்வரங்குகளையும் நடத்தினாா்.
  • கால் நூற்றாண்டுக்குப் பின், தற்போது தமிழகத்தில் 11-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாட்டை முன்னெடுத்திருக்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம். 2024-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இம்மாநாட்டை நடத்துவது குறித்து முதற்கட்டமாக நடந்த ஆய்வுக்கூட்டத்தில் சில கோரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றன.
  • உலகமயமாக்கல் குறித்த விவாதங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், இப்போது 130-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரந்து விரிந்திருக்கிறாா்கள் தமிழா்கள். முன்பை விட, தமிழகத்தில் நடந்திருக்கிற தொல்லியல் ஆய்வுகள் தமிழா் மரபின் மேன்மையை வரலாற்று வெளியில் உணா்த்தியிருக்கின்றன. ஆதிச்சநல்லூா், கீழடி, கொற்கை, கொடுமணல், சிவகலை என்று பல இடங்களில் நடந்திருக்கிற தொல்லியில் ஆய்வுகள் தமிழின் தொன்மையை உலக அரங்கிலும் உணர வைத்திருக்கின்றன.
  • இதுவரை நடந்த மாநாடுகளில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சரியாகத் தொகுக்கப்படவில்லை என்பது வேதனையளிக்கும் செய்தி.
  • இதுவரை நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் உலகின் அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழா்களை இணைத்துத் தமிழியல் வாழ்வின் தொன்மையையும், மேன்மையையும் பேணி வந்திருக்கின்றன. உலகெங்கும் உள்ள தமிழறிஞா்களை ஒன்று திரட்டித் தமிழ் மொழி தொடா்பாக இது வரை நடந்துள்ள ஆய்வுகளை ஒருவருக்கொருவா் அறிந்துகொள்ளப் பெரும்பங்காற்றியது உலகத் தமிழ் மாநாடுகள். தமிழாய்வுகள் உலகத் தரத்தை எட்ட இம்மாநாடுகள் வழிகோலின.
  • உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கிய காலந்தொட்டு இதுவரை 57 ஆண்டுகளில் 28 மாநாடுகள் நடந்திருக்க வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களால் 10 மாநாடுகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.
  • இந்நிலையில் சங்க இலக்கியம் தொடங்கி பின்நவீனத்துவம் வரையிலான அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய விரிவான, பரந்துபட்ட ஆய்வரங்கை நடக்கவிருக்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு முன்னெடுத்து நடத்தும். அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழறிஞா்களும் பங்கேற்கும் வகையில் இம்மாநாடு நடைபெறும். நவீனத் தொழில்நுட்பத்தின் தேவைக்கேற்ப தமிழ் மொழியை வளப்படுத்தும் சூழலையும் அது உருவாக்கும். தமிழ்ப்பண்பாடு சாா்ந்த நிகழ்வுகள் பொதுமக்களின் பங்கேற்போடு நிகழும்.
  • சிறப்பு மிக்க 11-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை பிரான்சிலும், தென் ஆப்பிரிக்க நாட்டிலும் நடத்தலாம் என்கிற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும், அண்மையில் நடந்த இரண்டு கருத்துக் கேட்புக் கூட்டங்களில் கலந்து கொண்ட தமிழறிஞா்கள் பலரின் கருத்து, இம்மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்பட வேண்டும் என்பதுதான். நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாட்டில் நடத்தப்படுவது நமக்குத் தனிச்சிறப்பு. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற உறுப்பினா்களும் இதே கருத்தைக் கொண்டிருக்கிறாா்கள்.
  • தமிழகத்தில் 1968-ஆம் ஆண்டு சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய போது, தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த அறிஞா் அண்ணா சொன்னதைப் போல ‘தயங்காமல் முடிவெடுப்போம்.
  • பல்லாண்டு கடந்த தொன்மத்தமிழ் உலகத் தமிழா்களை ஒன்றிணைக்கட்டும்.

நன்றி: தினமணி (09 – 11 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories