TNPSC Thervupettagam

தொல்லியல் படிப்புகள்: ஆதரிக்குமா அரசு?

August 30 , 2021 979 days 569 0
  • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் அளித்த வரலாறு மற்றும் தொல்லியல் என்ற முதுகலைப் பட்டப்படிப்பு, முதுகலை வரலாற்றுக்கு இணை இல்லை என்று 2013-ல் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின் வாயிலாக முடிவெடுக்கப்பட்டது.
  • இதனால், இங்கு படித்த மாணவர்கள் பல விதத்தில் அல்லலுற்றும், அரசுக்குப் பல முறையீடுகளை வைத்தபோதும் ஒன்றும் நடக்கவில்லை.
  • பின்னர், 2020-ல் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் தமிழ்நாடு தொல்லியல் துறைக்குத் தேர்வு செய்யப்பட்ட தொல்லியல் அலுவலர்கள் பதவிக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் தொல்லியல் படித்த மாணவர்களுக்கு, தேர்வு எழுதி மதிப்பெண் பெற்றும், வாய்ப்பு மறுக்கப்பட்டது.
  • தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள், இந்திய அரசுத் தொல்லியல் துறையில் பணி புரியும் போது, ஏன் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையில் பணிபுரிய இயலாது என்பது விளங்கவில்லை.
  • இத்தகைய சூழலுக்கு அறிவுப் புலங்களுக்கிடையேயான அரசியலும் ஒரு காரணமாகும். சில சூழல்களில் வரலாற்றுப் பாடத்தில் தொல்லியலுக்கு உரிய இடம் அளிப்பதில்லை.
  • சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டபோது, அங்கு பட்டம் பெற்ற மாணவர்களும் பல நிறுவனங்களில் பணிக்குச் சேர இயலாமல் அல்லலுற்றார்கள்.
  • தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், மாணவர்கள் புலிமான்கோம்பை நடுகற் கல்வெட்டைக் கண்டுபிடித்ததன் வாயிலாகவும், கொடுமணல் அகழாய்வின் வாயிலாகவும் பல தமிழி எழுத்துக்கான சான்றுகள் வெளிவந்துள்ளன.
  • தமிழுக்குச் செம்மொழித் தகுதி வருவதற்கும் இத்தகைய கண்டுபிடிப்புகள் உதவியுள்ளன. தொல்லியலை முறையான பாடமாக இளங்கலையில் கற்பிக்கும்போதுதான் திறன்மிக்க ஆய்வாளர்களை உருவாக்க இயலும்.

சமூகக் கடமைகள்

  • தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் பல வரலாற்றுத் துறைகள் உள்ளன. இவற்றில் பல இடங்களில் தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் பாடங்கள் நடத்தப்படுவதில்லை. தொல்லியல் படித்தவர்கள் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்படுவதில்லை.
  • சிலர் நவீன கால, அமெரிக்க வரலாறுதான் வேண்டும் என்பார்கள். உலக வரலாறு, அமெரிக்க வரலாற்றுடன் இந்திய, தமிழ்நாடு வரலாறும், தொல்லியலும், கல்வெட்டியலும் மாணவர்களுக்குப் பாடங்களாக நடத்தப்பட வேண்டும்.
  • மாணவர்கள் உலக வரலாற்றுடன், தமிழ்நாட்டுத் தொல்லியலையும், கல்வெட்டியலையும், நாணயவியலையும் படிப்பது மிகவும் அவசியமாகும்.
  • இதற்காகத் தொல்லியல் பாடத்தைப் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் உள்ள வரலாற்றுத் துறைகளில் சில பணியிடங்களை ஒதுக்க வேண்டும்.
  • தொல்லியல் வேறு, வரலாறு வேறு என்ற குறுகிய மனப்பான்மை ஆய்வாளர்களிடையே வரக் கூடாது. வரலாறும் தொல்லியலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்போல.
  • முறையாகப் பயிற்சிபெற்ற தொல்லியல் ஆய்வாளர்கள் தொல்லியல் பாடங்களை நடத்துவது மிகவும் அவசியமாகும். தமிழக அரசு இதற்கான நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும்.
  • தொல்லியல் என்றால், ஒருசில தொல்பொருள்களைக் கண்டுபிடித்து வெளியிடுவது மட்டும் அல்ல. முறையான கோட்பாடுகளின் அடிப்படையிலும், அறிவியல் அணுகுமுறைகளின் அடிப்படையிலும் ஆய்வுகள் நடத்தப்பெற வேண்டும்.
  • தற்காலத் தொல்லியல் ஆய்வுகள் டி.என்.ஏ. ஆய்வுகள், அறிவியல் பகுப்பாய்வுகள் என வளர்ந்து வருகின்றன. எனவே, முறையான தொல்லியல் ஆய்வுகளை ஊக்குவிக்க வேண்டும்.
  • தொல்லியல் ஆய்வுக்கென ஆய்வுத் துறைகள் புதியதாக உருவாக்கப்பட வேண்டும். ஏனெனில், தமிழ்நாட்டின் பண்பாட்டு வளர்ச்சிகளை முழுமையாக ஆய்வுசெய்ய ஒருசில தொல்லியல் துறைகளால் மட்டும் இயலாது. பல தொல்லியல் இடங்கள் வேகமாக அழிந்து வருகின்றன.
  • தொல்லியல் அகழாய்வு செய்து அறிக்கைகளை வெளியிடுவது என்பது சாதாரணப் பணியல்ல. இத்தகைய ஆய்வுகளைத் தொடர, தமிழ்நாட்டின் மேலும் இரு பல்கலைக் கழகங்களில் (மேற்கு, தென்தமிழ்நாட்டுப் பகுதிகளில்) தொல்லியல் துறை தொடங்குவது அவசியமாகும்.
  • மேலும், வளர்ச்சித் திட்டங்களினால் அழியும் தொல்லியல் சின்னங்களைப் பதிவுசெய்யக் கவனம் செலுத்த வேண்டும். அறிவியல் ஆய்வுகளை ஊக்குவிக்கும் வகையில் பல்கலைக் கழகத் தொல்லியல் துறைகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
  • தற்போதுள்ள தொல்லியல் துறைகளில் ஓரிரு ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள்.
  • ஒருகாலத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையில் ஏழு பேராசிரியர்கள் பணிபுரிந்தனர். எனவே, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை முறையாக நிரப்புவதும் அவசியமாகும்.
  • சமூக ஊடகங்களின் வழி தவறான செய்திகளும், கட்டுக்கதைகளும் பரவும் சூழலில், முறையாகப் பயிற்சி பெற்ற தொல்லியல் ஆய்வாளர்கள் வழியாகப் பல துறை ஆய்வுகளை (தொல்விலங்கியல், தொல்தாவரவியல்) ஊக்கப்படுத்துவது அவசியமாகும்.
  • புனேவில் உள்ள தக்காணக் கல்லூரியில் 20-ம் நூற்றாண்டில் பேராசிரியர் எச்.டி.சங்காலியாவால் பல்துறை சார் ஆய்வுக்கூடங்கள் உருவாக்கப்பட்டன.
  • அதுபோலத் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் பல்துறைசார் ஆய்வுக்கூடங்கள் அமைத்து, முறையான தொல்லியல் ஆய்வுகளை ஊக்கப்படுத்த வேண்டும்.
  • செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் நல்கைகள் தமிழ்ப் பாடத்தில் படித்தவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகின்றன. தொல்லியல், கல்வெட்டியல் சார்ந்த ஆய்வாளர்களை இத்தகைய நிறுவனங்களில் நியமிக்க வேண்டும். தொல்லியல் வரலாறு, பண்பாட்டு ஆய்வு செய்யும் பலர் தமிழில் ஆய்வுசெய்கின்றனர்.
  • இவர்களுக்கும் குறிப்பிட்ட அளவில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்கான நல்கைகள் வழங்கப்பட வேண்டும்.
  • தொல்லியலுக்கும், தொல்லியல் படித்தவர்களுக்கும் பல கல்வி நிலையங்களில் உரிய மதிப்பு கிடைப்பதில்லை. தொல்லியல் பாடம் விளிம்பில் வைக்கப்பட்டிருக்கிறது.
  • இதையும், ஏனைய அறிவுப்புலங்களையும் பிணைத்துள்ள தளைகளை அவிழ்ப்பதும், கட்டுக்கதை உருவாக்கும் அணுகுமுறைகளை விடுத்து, அறிவியல்பூர்வமான ஆய்வை மேற்கொள்வதும், தமிழ்ச் சமூகத்தின் வேரைத் தேடும் முயற்சியை முடுக்கிவிடுவதும் சமூகக் கடமைகளாகும்.

நன்றி: இந்து தமிழ் திசை (30 - 08 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories