TNPSC Thervupettagam

தொழில் துறையினரின் புரிந்துணர்வு உடன்பாடுகள் முதலீடுகளாக மாறுமா?

November 30 , 2021 902 days 452 0
  • தமிழ்நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகத் தொழில் துறையை வளர்த்தெடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
  • கோவையில், சமீபத்தில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.35,208 கோடி மதிப்பிலான 59 திட்டங்களுக்குப் புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்தாகியுள்ளன.
  • இந்தத் திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டால் 76,795 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, சென்னையில் கடந்த ஜூலை, செப்டம்பர் மாதங்களில் முதலீட்டாளர் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. ‘ஒரு ட்ரில்லியன் முதலீடு’ என்ற இலக்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • நிதித் துறைத் தொழில்நுட்பங்களை வளர்ந்துவரும் புதிய தொழில்துறையாக அடையாளம் கண்டுள்ள தமிழ்நாடு அரசு, அத்துறையை வளர்த்தெடுப்பதற்கான தொழிற்கொள்கை ஒன்றையும் வகுத்துள்ளது பாராட்டத்தக்கது.
  • இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் இத்தொழிலைத் தொடங்குவோருக்கு ஊக்கத்தொகைகள் அளிக்கப்படும் என்ற அறிவிப்பு, தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கு இடையிலான சமச்சீர் வளர்ச்சிக்கும் உதவக்கூடும்.
  • பெருமளவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்குத் தொழில் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதே முதன்மையான வழிமுறையாக இருந்துவருகிறது.
  • அதற்கான முயற்சிகள் அரசால் எவ்வளவு தீவிரமாக எடுக்கப்பட்டாலும் அவை அனைத்துமே திட்டமிட்ட கால அளவுக்குள் செயல்வடிவம் பெறுவதில்லை என்பதையும் கணக்கில்கொள்ள வேண்டும்.
  • முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, பழனிசாமி காலங்களில் முதலீட்டாளர் மாநாடுகளில் எட்டப்பட்ட உடன்பாடுகளில் கணிசமானவை இன்னமும்கூட நடைமுறைக்கு வரவில்லை.
  • 2015-ல் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில், பல்வேறு தொழிற்துறைகளில் 98 புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்தாகின.
  • குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் 10,073 புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்தாகின.
  • இவற்றின் மூலமாக, ரூ. 2,42,160 கோடி முதலீடு செய்யப்படும் என்றும் 4.70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2021 ஜூலை நிலவரப் படி பெறப்பட்ட முதலீடு ரூ.73,711 கோடி மட்டுமே.
  • 2019-ல் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3,00,501 கோடி மதிப்பிலான 304 உடன்பாடுகள் எட்டப்பட்டாலும் 2021 ஜூலை நிலவரப்படி ரூ.24,492 கோடி மதிப்பிலான 81 திட்டங்களே செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
  • முதலாண்டிலேயே, உற்பத்தியைத் தொடங்கிய திட்டங்கள் 27% மட்டுமே என்று பழனிசாமியே தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
  • ரூ.2.20 லட்சம் கோடி முதலீட்டில் 5.33 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதியளித்த சுமார் 191 திட்டங்கள் முன்னேற்ற நிலையிலேயே உள்ளன.
  • முதலீட்டாளர் மாநாடுகளில் எட்டப்பட்ட முந்தைய உடன்பாடுகள் செயல்வடிவம் பெறுவதற்கான தாமதங்கள் அடையாளம் காணப்பட்டுச் சரிசெய்யப்பட வேண்டிய தேவையும் உள்ளது.
  • திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவும் மின்னுற்பத்தி, பாசனம் தொடர்பிலான பெருந்திட்டங்களைத் தொடர்வதில் கட்சிபேதம் பாராட்டுவதில்லை.
  • முதலீட்டாளர்களை ஈர்ப்பதிலும், கையெழுத்தான உடன்பாடுகளைச் செயல்படுத்துவதிலும்கூட கட்சிபேதம் பாராத அந்த அணுகுமுறை தொடர வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (30 - 11 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories