TNPSC Thervupettagam

நகர்ப்புற, ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த தலையங்கம்

March 13 , 2022 798 days 838 0
  • தமிழகத்தில் 21 மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத் தலைவர் ஆகியோரைத் தேர்வு செய்யும் மறைமுகத் தேர்தல் நடைபெற்று முடிந்து அவர்கள் பொறுப்பும் ஏற்றுள்ளனர்.
  • சென்னை மாநகராட்சியின் 3-ஆவது பெண் மேயராகவும், பட்டியலினத்தைச் சேர்ந்த முதல் பெண் மேயராகவும் ஆர்.பிரியா, கும்பகோணம் மாநகராட்சி மேயராக ஆட்டோ ஓட்டுநர் சரவணன், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவராக தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளி அந்தோணியம்மாள் உள்ளிட்ட சொற்பமான தேர்வுகள் உள்ளாட்சியின் பெருமையை, அது வழங்கும் வாய்ப்புகளைப் பறைசாற்றுகின்றன. 
  • உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு என்பது மிகச் சிறப்பானது. ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது உள்ளாட்சிகளில் அரசியல் கட்சிகளின் செல்வாக்கை விஞ்சி சாமானியர்களுக்கான அங்கீகாரம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.
  • இந்தியாவில் 'அரசியலமைப்பு (74-ஆவது திருத்தம்) சட்டம் 1992' -அதாவது பரவலாக 'நகர் பாலிகா சட்டம்' என அழைக்கப்படும் சட்டத்திருத்தம் 1993, ஜூன் மாதம் அமலுக்கு வந்தது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரத்தை வழங்கி, அவற்றை அரசியலமைப்பின் நியாயமான பகுதியின் கீழ் கொண்டு வந்தது. 
  • இதை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ஆம் ஆண்டு இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது. உள்ளாட்சிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அவற்றின் பதவிக் காலம் முடிவதற்கு முன்பாக தேர்தல், ஒவ்வோர் உள்ளாட்சி அமைப்பிலும் பட்டியலினத்தவர், பழங்குடியினர் விகிதாசாரத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு, மொத்த பதவிகள் மற்றும் தலைமைப் பதவியிடங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு சுழற்சி முறையுடன்கூடிய இட ஒதுக்கீடு, மாநில அரசின் நிதி ஆதாரங்களை ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்தளித்திட பரிந்துரை செய்யும் வகையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில நிதி ஆணையத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல விஷயங்கள் இந்தச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன.
  • நகரமைப்பு, நில பயன்பாடு, கட்டடங்கள் கட்டுவதை முறைப்படுத்துதல், பொருளாதார, சமூக மேம்பாட்டுக்குத் திட்டமிடுதல், சாலைகள், பாலங்கள் அமைத்தல், குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, வறுமை ஒழிப்பு, பூங்கா, விளையாட்டு மைதானங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்கின்றன. 
  • வரி வசூல்தான் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதான வருவாய் வாய்ப்பாகும். முழுவதும் மாநில அரசின் சட்டத்துக்கு உள்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் மத்திய அரசு தலையிட முடியாது என்பது தனிச்சிறப்பு.
  • பொதுவாக, உள்ளாட்சி அமைப்புகளின் நோக்கமே உள்ளாட்சி அமைப்புகளை அந்தந்தப் பகுதி மக்களே நிர்வகிக்க வேண்டும் என்பதுதான். ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் அரசியல் கட்சிகளின் ஆதிக்கம் தொடங்கி பல ஆண்டுகளாகிவிட்டது. 
  • நடைபெற்று முடிந்த தேர்தலில், அரசியல் கட்சிகளைச் சார்ந்து அல்லாமல் சுயேச்சையாக வெற்றி பெற்றவர்கள் என்று பார்த்தால், சராசரியாக 10 சதவீதம்கூட இல்லை. மொத்தமுள்ள மாநகராட்சி உறுப்பினர்களுக்கான 1,374 வார்டுகளில் 73-லும், நகராட்சி உறுப்பினர்களுக்கான 3,843 வார்டுகளில் 381-லும், பேரூராட்சி உறுப்பினர்களுக்கான 7,621 வார்டுகளில் 981-லும் மட்டுமே சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.
  • மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள அனைத்து தலைவர், துணைத் தலைவர் பதவிகளையுமே அரசியல் கட்சிகள்தான் கைப்பற்றியுள்ளன. அரசியல் கட்சிகளின் ஆதிக்கம் அதிகரிக்க அதிகரிக்க உள்ளாட்சிக்கான தனித்துவம் குறைந்து வருகிறது என்பதைக் குறிப்பிடாமலும் இருக்க முடியாது.
  • வார்டு உறுப்பினர்கள் தேர்தலும் சரி, உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலும் சரி... சட்டப்பேரவை, மக்களவை பொதுத் தேர்தலைப் போலவே பல இடங்களில் பிரம்மாண்ட பிரசாரங்கள், பொதுக்கூட்டங்களுடன் நடைபெற்றன. தேர்தல் முடிவுகள் வெளியானபோது, பண பலம்ஆள் பலத்தின் முன் உண்மையாக சேவை செய்யும் நோக்கத்துடன் தேர்தல் களம் கண்ட சாமானியர்கள் பலர் காணாமல் போகும் நிலை உருவானது.
  • ஊரக உள்ளாட்சி அமைப்புகளைப் பொருத்தவரை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மட்டுமின்றி, ஊராட்சித் தலைவரும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் தேர்தல் நடைபெறுகிறது. ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கான தலைவருக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.
  • ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடும்போது அவர்களுக்கு கட்சி சின்னங்கள் ஒதுக்கப்படுவதில்லை. அங்கும் அரசியல் கட்சிகளின் பின்னணியிலேயே வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் ஓரளவு கட்சிகளின் ஆதிக்கம் தடுக்கப்படுகிறது.
  • ஆனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நிலைமை அவ்வாறு இல்லை. அரசியல் கட்சி சின்னங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதையும் மீறி சுயேச்சையாக நிற்பவர்களிலும் பலர் அரசியல் கட்சிகளின் பின்னணியைக் கொண்டவராகவே உள்ளனர்.
  • எனவே, உள்ளாட்சிகளில் அந்தப் பகுதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதைவிட கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆட்சியே நடைபெறுகிறது. உள்ளாட்சிகளில் சாமானியர்களுக்கும் இடம் வேண்டுமென்றால் உள்ளாட்சி சட்டங்களில் இன்னும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

நன்றி: தினமணி (13 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories