TNPSC Thervupettagam

நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் எப்போது?

March 3 , 2022 797 days 1521 0
  • ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், அடுத்துவரும் 2022-23 நிதியாண்டுக்கான மாநில நிதிநிலை அறிக்கையில், நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளார்.
  • ஊரகங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் செயல் படுத்தப்பட்டு வரும் நிலையில், நகர்ப்புறங்களில் உள்ள ஏழை எளியவர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் திட்டங்கள் எதுவும் இதுவரையில் இல்லை.
  • பெருந்தொற்றின் காரணமாக உருவான பொருளாதார நெருக்கடியை ஊரகங்கள், நகரங்கள் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவருமே எதிர்கொண்டுள்ளனர்.
  • இந்நிலையில், நடைபாதைகளில் கடைகளை நடத்திவந்த சிறுவியாபாரிகள், உணவகங்களில் பணியாற்றியவர்கள் போன்ற நகர்ப்புறங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும்நோக்கத்தில், ஆண்டுக்கு நூறு நாட்கள் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் இந்திரா காந்தி நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைத் தொடங்கியுள்ளார் அசோக் கெலாட்.
  • இத்திட்டத்தால், அடுத்துவரும் நிதியாண்டில் கூடுதலாக ரூ.800 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்தத் திட்டம் எப்படிச் செயல்படுத்தப்படவிருக்கிறது என்பது குறித்து இன்னும் விரிவான விவரங்கள் வெளியாகவில்லை.
  • நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கான தேவை முன்பு எப்போதைக் காட்டிலும் பெருந்தொற்றுக் காலத்தில் அதிகரித்துள்ளது.
  • தொழிலாளர் நலம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழு, பெருந்தொற்றின் காரணமாக வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவருவது குறித்து அளித்துள்ள அறிக்கையில், ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் எடுத்துக்கொள்ளப்பட்டுவரும் கவனம், நகர்ப்புற ஏழைகளின் மீது காட்டப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது.
  • நகர்ப்புறங்களில் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், நீர்நிலைகள், குறுக்குச் சாலைகள் உள்ளிட்ட பணிகளில் போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று நிலைக் குழுவின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
  • ஊரகப் பகுதிகளைப் போலவே நகர்ப்புறங்களிலும் வேலைவாய்ப்பைச் சட்டரீதியாக உறுதிப் படுத்த வேண்டும் என்ற கருத்தையும் அக்குழு வலியுறுத்தியுள்ளது.
  • பெருந்தொற்றின் காரணமாக உருவான பாதிப்புகளிலிருந்து தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்க முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு, கடந்த 2020-ல் அளித்த அறிக்கையிலும் நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற பரிந்துரை இடம்பெற்றிருந்தது.
  • ஆனாலும், இதுவரையில் தமிழ்நாட்டில் அத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
  • ஊரகங்களைப் போல, நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு இல்லாதவர்களைக் கண்டறிவது எளிதானதாகவும் இருக்காது. அதுபோலவே, ஊரக வேலைவாய்ப்பு என்பது பெரிதும் தொழில்திறனற்ற பணிகளாகவே இருக்கின்றன.
  • நகர்ப்புறங்களைப் பொறுத்தவரை, தொழில்திறன் உள்ள பணிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கும். நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று மேம்பாட்டுப் பொருளியல் அறிஞரான ழீன் தெரசே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
  • ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை வடிவமைத்தவர்களுள் ஒருவரான அவர் ‘பரவலாக்கப் பட்ட நகர்ப்புற வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி’ (டூயட்) என்ற திட்டத்துக்கான மாதிரியை முன்மொழிந்துள்ளார்.
  • தமிழ்நாட்டின் பொருளாதார ஆலோசனைக் குழுவிலும் ழீன் தெரசே தற்போது அங்கம் வகிக்கிறார். ராஜஸ்தான் போலவே, தமிழ்நாட்டிலும் நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கான தேவை உள்ளது.

நன்றி: தி இந்து (03 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories