TNPSC Thervupettagam

நகைச்சுவையாக மாறிவரும் வாக்கு சேகரிப்பு

February 23 , 2023 450 days 332 0
  • மக்களாட்சியில் மகத்தான சக்தி தேர்தல். தம்மை ஆளுவதற்குத் தகுதியானவர்களை ரகசியமாகத் தேர்ந்தெடுப்பதற்கு மக்களுக்குக் கிடைத்த உரிமையே வாக்கு. பல கட்சிகள் இருக்கும் நாட்டில் தேர்தல் நடத்துவது என்பதே ஒரு சாதனைதான். அப்படிப்பட்ட நம் நாட்டில் தொடர்ந்து பல தேர்தல்களை சிறப்பாக நடத்தி, சாதனை படைத்து உலகளாவிய மதிப்பைப் பெற்றுள்ளோம்.
  • ஒரு தொகுதியில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டு கடுமையான போட்டி நிலவும்போது தேர்தல் பரப்புரையும் வாக்கு சேகரிப்பும் அவசியமாகிறது. கட்சியின் கொள்கைகளையும் வேட்பாளரின் தகுதியையும் வாக்காளர்கள் தெரிந்து கொண்டு, வாக்களிப்பதற்கு இவை பெரிதும் உதவுகின்றன.
  • தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேடை பல நல்ல பேச்சாளர்களையும் சிறந்த தலைவர்களையும் உருவாக்கியுள்ளது என்பது வரலாற்று உண்மை. அந்த அளவுக்குத் தேர்தல் பிரசார மேடையின் தாக்கம் இருந்தது. முன்பெல்லாம் தேர்தல் பிரசாரக் கூட்டம் என்றால் அங்கு மக்கள் தாமாகக் கூடிவிடுவர். எந்தக் கட்சி மேடை போட்டாலும் அங்கே மக்கள் கூட்டம் அலைமோதும்.
  • மாற்றுக் கட்சிக் கூட்டமாக இருந்தாலும் கூட, தலைவர்களின் பேச்சைக் கேட்க பலர் கூடுவர். என்ன பேசுகிறார்கள் என்பதைக் கேட்பதில் அப்படி ஒரு ஆர்வம் அவர்களுக்கு. பேச்சாளர்களும் நாட்டின் நடப்பைச் சொல்லி, தங்கள் எதிர்காலத் திட்டங்களைக் கூறித் தம் கட்சிக் கொள்கைகளை விளக்கிப் பேசுவர்.
  • இப்போதெல்லாம் அப்படியில்லை. அடுத்தவர்களைத் தாழ்த்திப் பேசுவதே வழக்கமாகிவிட்டது. கொள்கையை ஒதுக்கிவிட்டு வெற்றுக் கூச்சல் போடுவதே பிரதானமாகிவிட்டது. கூட்டத்திற்கு வரும் மக்களும் தாமாக விரும்பி வருவதில்லை. பணம் கொடுத்து ஆள் திரட்டும் காலம் ஆகிவிட்டது. "எவ்வளவு தருவீர்கள்' என்று பேரம் பேசும் தைரியம் வந்துவிட்டது. பணம் தருகிறேன் என்று சொல்லிக் கூட்டிவந்து பாதிவழியில் பரிதவிக்கவிடுவதும் இப்போது இயல்பாகிவிட்டது.
  • முன்பெல்லாம் கட்சி விசுவாசிகள், வீடு வீடாகச் சென்று உறவு முறை பேசி உரிமையோடு வாக்கு கேட்பர். இப்போதெல்லாம் அப்படியில்லை. பல இடங்களில் இருந்து கட்சி தொண்டர்கள் என்ற பெயரில் அடியாட்கள் வருகின்றனர். வாடகைக்கு இடம்பிடித்து ஓரிடத்தில் தங்கியிருந்து, கை நிறையப் பணம் வாங்கி, கறிச்சோறு தின்று வாக்கு சேகரிக்கச் செல்கின்றனர். இது அவர்களுக்கு தேர்தல்காலப் பிழைப்பு. அவர்கள் வாக்கு சேகரிக்கும் விதம் உள்ளூர்வாசிகளை மிரட்டும் தொனியில் உள்ளது.
  • வாக்களிப்பது தங்களின் ஜனநாயகக் கடமை என்ற எண்ணம் மக்கள் மனத்தில் முன்பு இருந்தது. அதனால் ஊரில் இருக்கும் பெரிய மனிதர் கைகாட்டும் வேட்பாளருக்கு வாக்களித்தனர். அதனால் ஊரிலிருக்கும் பெரிய மனிதரைப் பார்த்தால் போதும் என்ற நிலை வேட்பாளருக்கு இருந்தது. அவரும் ஊருக்குச் செய்ய வேண்டிய வசதி பற்றி வேட்பாளரிடம் கோரிக்கை வைப்பார்.
  • இப்போது எல்லோரும் பெரிய மனிதர் ஆகிவிட்டனர். யார் சொல்லியும் யாரும் கேட்பதில்லை. "பணம் தந்தால் வோட்டு போடுவோம்' என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். அந்த அளவிற்குப் பணத்தைக் கொடுத்து ஜனநாயகத்தைப் பணநாயகமாக மாற்றிவிட்டனர் இன்றைய அரசியல்வாதிகள். "அந்த ஊர் பார்முலா', "இந்த ஊர் பார்முலா' என்று அதனைப் பெருமையாகப் பேசும் வழக்கமும் உருவாகிவிட்டது.
  • இதனால் தேர்தல் கூட்டத்திற்குச் செய்யும் செலவை வாக்காளர்களுக்குக் கொடுத்தால் போதும் என்ற விபரீத எண்ணம் கட்சிக்கும் வேட்பாளர்களுக்கும் வந்துவிட்டது. எனவே பணப் பட்டுவாடா செய்யும் வேலையைத் தீவிரமாகச் செய்யத் தொடங்கிவிட்டனர். தேர்தல் ஆணையம் எவ்வளவு விழிப்புடன் இருந்தாலும் பணப் பட்டுவாடாவை செய்யும் வழியைக் கண்டு பிடித்தனர்.
  • தேர்தல் பரப்புரையில் தொய்வு விழுந்து, பணப் பட்டுவாடா வீறு பெற்றுவிட்ட வாக்குச் சேகரிப்பில் இப்போது ஒரு புதிய அணுகுமுறை உருவாகியுள்ளது. அது தான் வாக்காளர்களைக் கவரவேண்டும் என்பதற்காக வித்தியாசமாகச் செயல்படுவது. இதனை ஒரு அதிசயச் செயல்முறை என்றும் கூறலாம்.
  • வீட்டுக்கு வீடு பால் போடுவது, கோழிக்கறி கொடுப்பது என்று நடக்கும் நிகழ்வைச் சொல்லவில்லை. முன்பு கம்மல் கொடுத்தார்கள், இப்போது கோழிக்கறி கொடுக்கிறார்கள் என்று இதனை விட்டு விடலாம். இதை விடவும் ஒருபடி மேலே சென்றுவிட்டது அண்மைக்கால வாக்கு சேகரிப்பு நிகழ்வு.
  • வாக்கு சேகரிக்கச் செல்லும் வேட்பாளர்கள் அத்தந்தப் பகுதிக்கு ஏற்ப நடந்து கொள்வது விநோதமாக இருக்கிறது. ஒரு வேட்பாளர் ஹோட்டலில் பரோட்டா வீசுகிறார், ஒருவர் பரிமாறுகிறார், ஒருவர் பாத்திரம் கழுவுகிறார், ஒருவர் மீன் கழுவுகிறார், இன்னொருவர் துணி அலசுகிறார், மற்றொருவர் மேளம் அடிக்கிறார், இன்னொருவர் கரகாட்டக்காரர்களோடு சேர்ந்து குத்தாட்டம் போடுகிறார். இப்படி ஆளாளுக்குப் போட்டி போட்டுக் கொண்டு விதவிதமாகச் செயல்பட்டு வாக்கு சேகரிக்கின்றனர்.
  • அவர்கள் செய்யும் செயல்களை எல்லாம் மக்கள் வேடிக்கை பார்த்து ரசிக்கின்றனர். இந்த ரசனையெல்லாம் வாக்காக மாறும் என்று வேட்பாளர்கள் நினைக்கின்றனர். வாக்காளர்கள் இதற்கெல்லாம் மசிவதாகத் தெரியவில்லை. கொடுக்கும் பணத்திற்கும் அள்ளி வீசும் இலவசத்திற்கும்தான் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்பது கடந்த தேர்தல்களில் நிரூபிக்கப்பட்ட உண்மை. எனவே, வேட்பாளர்கள் இப்படி பலவாறு நடித்து வாக்கு சேகரிப்பதை நகைச்சுவையாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

நன்றி: தினமணி (23 – 02 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories