TNPSC Thervupettagam

நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தல்

June 15 , 2022 698 days 451 0
  • நடந்து முடிந்திருக்கும் மாநிலங்களவைக்கான தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற எண்ணிக்கை பலத்தில் பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. அதே நேரத்தில், இந்திய ஜனநாயகத்தின் பலவீனத்தை வெளிப்படுத்தும் விதத்திலான நிகழ்வுகள் காணப்பட்டதை வருத்தத்துடன் பதிவு செய்யாமல் இருக்கவும் முடியவில்லை. நமது அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் அவர்களுக்கு மரியாதை தேடித்தருவதாக இல்லை.
  •  தேர்தலுக்குப் பிறகு மாநிலங்களவையின் 245 உறுப்பினர்களில் ஆளும் பாஜகவுக்கு 92 பேரும், காங்கிரஸுக்கு 31 பேரும் இருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் (13), திமுக (10), பிஜு ஜனதா தளம் (9), ஆம் ஆத்மி (8) என்று கட்சிகளின் எண்ணிக்கை பலம் தொடர்கிறது. பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து மூன்று உறுப்பினர்கள் மட்டுமே இருந்த ஆம் ஆத்மி கட்சியின் எண்ணிக்கை பலம், அடுத்த மாதம் பஞ்சாபிலிருந்து மேலும் இரண்டு உறுப்பினர்கள் ஓய்வு பெறும்போது, 10-ஆக உயரும்.
  •  மாநிலங்களவைத் தேர்தல் நடந்த 57 இடங்களில் 41 இடங்களுக்கான தேர்தல், போட்டி எதுவும் இல்லாமலேயே முடிந்துவிட்டது. ஏனைய 16 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் எதிர்பார்த்தது போலவே, கட்சி மாறி வாக்களித்தல், திரை மறைவு குதிரைப் பேரங்கள் என்று ஜனநாயகத்தில் என்னவெல்லாம் நடக்கக்கூடாதோ அவையெல்லாம் நடந்தன.
  •  மகாராஷ்டிரம், ராஜஸ்தான், கர்நாடகம், ஹரியாணா ஆகிய நான்கு மாநிலங்களிலும் காணப்பட்ட பரபரப்பும், அரசியல் உஷ்ணமும் இந்திய அரசியலின் எதார்த்த நிலையை படம் பிடித்துக் காட்டின. சுயேச்சைகள், சிறிய கட்சிகள் ஆகியவற்றின் ஆதரவை ஒருங்கிணைத்து இரண்டாவது தேர்வு வாக்கின் அடிப்படையில் மகாராஷ்டிரத்திலிருந்து பாஜகவின் மூன்றாவது வேட்பாளர் வெற்றி பெற முன்னாள் முதல்வர் பட்னவீஸ் வியூகம் வகுத்தார்.
  •  பாஜக-வுக்குக் கிடைத்த இன்னொரு வெற்றி, கர்நாடகத்தில் இருந்தான மூன்றாவது இடம். காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் உடன்பாட்டுக்கு வராததால், கர்நாடகத்திலிருந்தான மூன்றாவது இடத்தை பாஜக கைப்பற்றியது.
  •  மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு உற்சாகம் அளிப்பதாக இருந்தனவே தவிர, எண்ணிக்கை பலத்தை அதிகரிக்க உதவவில்லை. காங்கிரஸின் எண்ணிக்கை பலம் அதிகரித்தாலும்கூட, முடிவுகள் கட்சியின் கட்டமைப்பு சீர்குலைந்திருப்பதை வெளிப்படுத்தி மிகப் பெரிய சோர்வை அளித்திருக்கிறது.
  •  அஜய் மாக்கனின் தோல்வி காங்கிரஸ் தலைமைக்கு ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய பின்னடைவு. அஜய் மாக்கன், தில்லி மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர். அவர் மாநிலங்களவைக்கு ஹரியாணா மாநிலத்தில் நிறுத்தப்பட்டார். ஹரியாணா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முக்கியத் தலைவருமான பூபேந்தர்சிங் ஹூடாவின் ஒப்புதல் இல்லாமல் அவர் நிறுத்தப்பட்டிருக்க மாட்டார் என்று நம்பலாம். அப்படியிருந்தும் அவர் தோல்வியைத் தழுவியிருப்பது மாக்கனின் தோல்வி என்பதைவிட, கட்சித் தலைமையின் தோல்வி என்றுதான் கூற வேண்டும்.
  •  பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரான கார்த்திகேய சர்மாவுக்கு கட்சிக் கட்டுப்பாட்டை மீறி வாக்களித்த காங்கிரஸ் உறுப்பினர் குல்தீப் பிஷ்னோய் கட்சியின் எல்லா பொறுப்புகளில் இருந்தும் அகற்றப்பட்டிருக்கிறார். வெளிமாநிலத்தவரை வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்கிற பிஷ்னோயின் குரல், பெரும்பாலான ஹரியாணா சட்டப்பேரவை உறுப்பினர்களின் குரல் என்பதை காங்கிரஸ் தலைமை உணரவில்லை.
  •  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை மாநிலங்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோதும், வாக்கெடுப்புக்கு முன்பும் காங்கிரஸின் சட்டப்பேரவை உறுப்பினரான பிஷ்னோய் சந்திக்க அனுமதி கேட்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. ஹூடாவின் மறைமுக ஒப்புதலுடன்தான் அஜய் மாக்கான் தோற்கடிக்கப்பட்டார் என்பதுதான் பரவலான நம்பிக்கை.
  •  ராஜஸ்தானில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் தனது கட்சி எம்எல்ஏ-க்கள் விலை போய்விடக் கூடாது என்பதற்காக அவர்களை உதய்பூரிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் ஒருவாரம் தங்க வைத்திருந்தது. அவர்களுடைய கைப்பேசிகள் உள்பட அனைத்துத் தொடர்புகளையும் முடக்கி, பலத்த கண்காணிப்புடன் பாதுகாத்த நடைமுறை கேலிக்குரியதாகி இருக்கிறது. அவரவர் கட்சி எம்பி-க்களையும், எம்எல்ஏ-க்களையும் கட்சித் தலைமை நம்ப முடியாதபோது, தங்களது வருங்காலம் அவர்கள் ஆட்சியில் பாதுகாப்பாக இருக்கும் என்று மக்கள் நம்ப வேண்டும் என்று நினைப்பது வேடிக்கை.
  •  ராஜஸ்தானில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மூன்று பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது முதல்வர் கெலாட்டுக்கும், காங்கிரஸ் தலைமைக்கும் ஆறுதலாக இருக்கலாம். சொகுசுப் பேருந்துகளில் கட்சி எம்எல்ஏ-க்களை உதய்பூருக்கு அழைத்துச் சென்று ஒருவாரம் தங்க வைத்ததன் செலவை கட்சி ஏற்றுக்கொண்டதா, அரசு ஏற்றுக்கொண்டதா அல்லது யாராவது தனி நபர் ஏற்றுக்கொண்டார்களா என்பதை யாரிடம் போய் கேட்பது? இந்தக் கேள்விக்கு கட்சித் தலைமை மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறது.
  •  மாற்றுக் கட்சி மக்கள் பிரதிநிதிகளை விலைபேசும், கவர்ந்திழுக்கும் ஒழுங்கீனமான நடைமுறை இதோடு முடிந்துவிடப் போவதில்லை. நம்பிக்கையில்லா தீர்மானங்கள், அவை பெரும்பான்மையின்மை, உட்கட்சி அதிகாரப் போட்டி உள்ளிட்ட ஒவ்வொரு நிகழ்விலும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும், நடைபெற இருக்கும் இந்த ஜனநாயக விரோத செயல்பாடு தொடரும் வரை, உலகிலேயே பெரிய ஜனநாயகம் இந்தியா என்று நாம் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது.

நன்றி: தினமணி (15 – 06 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories