TNPSC Thervupettagam

நதிகள் இணைப்பு காலத்தின் கட்டாயம்!

May 18 , 2022 709 days 490 0
  • இந்தியாவில் தேசிய நதிகளை இணைக்க பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே திட்டமிடப் பட்டது. ரயில் தண்டவாளங்கள் அமைக்கும்போதே ஆங்கிலேயர் நீர்வழிப் போக்குவரத்து, நதிநீர் இணைப்பு குறித்தும் ஆய்வு நடத்தினர். ஆர்தர் கார்ட்டர் இதை முன்னெடுத்தார்.
  • இந்திய விடுதலைக்குப் பின் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அன்றைய மத்திய அமைச்சர் கே.எல். ராவ், கங்கை, மகாநதி, கோதாவரி, காவிரி ஆகிய நதிகளை இணைக்க திட்டம் தீட்டினார். இந்திரா காந்தி ஆட்சிக்குப் பின்னர் அமைந்த ஜனதா ஆட்சிக் காலத்தில் கேப்டன் தஸ்தூர் "பூமாலைத் திட்டம்' என்ற பெயரில் நதிநீர் இணைப்பு அறிக்கையை வழங்கினார். பின்பு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது சுரேஷ் பிரபு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, முதலில் ஹிமாலய நதிகள், தீபகற்ப நதிகளை இணைத்து, பின் இந்த இரண்டையும் சேர்த்து இந்திய நதிகளை இணைப்பதற்கு ஆய்வு நடத்தப்பட்டது.
  • கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளில் உள்ள உபரி நீரை கிழக்கு முகமாக தமிழகத்துக்குத் திருப்ப வேண்டும், கேரள அச்சன்கோவில், பம்பை ஆற்றுப் படுகையை சாத்தூர் வைப்பாற்றோடு இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளோடு முப்பது ஆண்டு காலம் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிய என்னுடைய வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 2012-இல் தீர்ப்பு வழங்கியது.
  • அந்தத் தீர்ப்பில், எனது கோரிக்கைகள் நியாயமானவை, அவசியம் கவனிக்கப்பட வேண்டியவை என்று குறிப்பிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தென்பெண்ணை - பாலாறு இணைப்பு, காவிரி - குண்டாறு இணைப்பு, தாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு இணைப்பு ஆகியவற்றுக்கான செயல் திட்டங்கள் உள்ளன.
  • கென் - பெட்வா நதிகள் இணைப்புத் திட்டம் 44,605 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என்று 2022-23ஆம்ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவ்விரு நதிகளையும் இணைக்கும் திட்டத்தின் மூலம் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், அதன் அண்டை மாநிலங்களில் 9.8 லட்சம் ஹெக்டேர் பாசன வசதியும், 62 லட்சம் மக்களுக்குக் குடிநீர் வசதியும், 103 மெகாவாட் நீர் மின் உற்பத்தியும், 27 மெகாவாட் சூரியமின் உற்பத்தியும் உறுதிப்படுத்தப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • மேலும், தமங்கங்கா - பிஞ்சல், பார் - தாபி - நர்மதா - கோதாவரி - கிருஷ்ணா, கிருஷ்ணா - பெண்ணாறு, பெண்ணாறு - காவிரி ஆகிய நதி இணைப்புகளின் வரைவுத் திட்டம் இறுதி செய்யப் பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தால் பயன் அடையும் மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டவுடன் இந்நதி இணைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகளால் பல ஆண்டுகளுக்குப் பிறகு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
  • இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் கென் - பெட்வா நதிநீர் இணைப்புத் திட்டக் கனவு இப்போது நிறைவேறியுள்ளது. யமுனை ஆற்றின் துணை நதிகளான கென் நதியிலிருந்து பெட்வா நதிக்குத் தண்ணீரை எடுத்துச்செல்ல இத்திட்டத்தில் வழிவகை செய்யப் பட்டுள்ளது. இதில் இரண்டு கிலோ மீட்டர் நீளச் சுரங்கப்பாதையுடன், மொத்தம் 221 கி.மீ. நீளக் கால்வாய்கள் இருக்கும். நீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்கள் இத்திட்டத்தால் பயன் அடையும். குறிப்பாக, உத்தர பிரதேசத்தில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள புந்டேல்கண்ட் பகுதி இத்திட்டத்தால் மிகுந்த பயன் அடையும்.
  • தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்த நதிநீர் இணைப்பை காவிரி வரை இல்லாமல் வைகை, தாமிரபரணி, குமரி மாவட்டம் நெய்யாற்றுடன் இணைக்க வேண்டும். அதாவது கங்கை, குமரியைத் தொட வேண்டும். தென்தமிழகம் முழுமையாகப் பயன் பெறும் வகையில் திட்டங்கள் வர வேண்டும். காவிரி, கல்லணை என்றில்லாமல் தமிழகத்தின் தென்முனை வரை இத்திட்டங்கள் நீட்டிக்கப்பட வேண்டும்.
  • 1980-இல் நீர்வளங்களை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கான தேசிய நீர்வள முன்னோக்குத் திட்டத்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் வகுத்தது. இதன்படி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இமயமலை நதிகள், அதாவது வடபுலத்திலே 14 நதிகளை இணைத்து, தென்னிந்திய தீபகற்ப நதிகள் 16-ஐயும் இணைத்து இந்த இரண்டு இணைப்பையும் ஒன்றிணைப்பது என்று திட்டமிடப்பட்டது.
  • இத்திட்டத்தின் கீழ் 2000-ஆவது ஆண்டில் கென் பெட்வா நதிநீர் இணைப்புக்காக அன்றைய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி தொடக்கப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தமிழகத்தைப் பொறுத்தவரை பாசன வசதி இருக்கும் பல பகுதிகளில் நீர் வசதி இல்லை. குடிநீருக்கும் வசதி இல்லை. ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டம் தென்பகுதி, சிவகங்கை மாவட்டம், விருதுநகர் மாவட்டம், கரிசல் பூமியான தூத்துக்குடி மாவட்டம், தென்காசி மாவட்டத்தின் கீழ்ப்பகுதியான சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், திருவேங்கடம் போன்ற வட்டங்கள் மட்டுமில்லாமல் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர் பகுதிகளும் பயன்படும் வகையில் இந்த இணைப்புத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
  • கோவை மாவட்டம் கௌசிகா நதியால், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், திண்டுக்கல் மாவட்டம் கிழக்குப் பகுதி, வடமதுரை, திருச்சி மாவட்டம் மணப்பாறை ஆகிய பகுதிகளில் விவசாயம் சிறக்கும் வகையில் நீர்ப்பாசன திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
  • தமிழகத்தைப் பொறுத்தவரை ஜூன் முதல் செப்டம்பர் வரைதான் மழைநீர் கிடைக்கின்றது. எனவே, அது மட்டுமே இன்று போதுமானதாக இல்லை. தேவைக்கேற்ப நீரில்லாததால் பயிர்கள் காய்ந்து விடுகின்றன. மேலும், குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கவும், உணவு தானியங்களைப் பெருக்கவும் நீர் ஆதாரம் தேவை. இதை உறுதிப்படுத்த நீர் ஆதாரத் திட்டங்கள் முக்கியமாகும்.
  • ஐ.நா. சபையின் அறிக்கையிலேயே தமிழகம் நீராதாரங்கள் இல்லாமல் பாலைவனமாகக் கூடும் என்று குறிப்பிடப்பட்டது நினைவுக்கு வருகிறது. மக்கள்தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு வருகின்றது. எதிர்வரும் 2050-ஆம் ஆண்டில் மக்கள்தொகை 150 கோடியாக உயர்ந்தால், அப்போது தேவைப்படும் உணவு தானியங்கள் 4,500 லட்சம் டன் ஆகும். இந்த அளவு உணவு தானியங்களைப் பெருக்க வேண்டும் என்றால் 2050-க்குள் விவசாயம் செய்யும் நிலப்பரப்பை 1,600 லட்சம் ஹெக்டேராகக் கூட்ட வேண்டும்.
  • நிலத்தடி நீரும் குறைந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் வெள்ளப் பெருக்கெடுத்து வடக்கே செல்லும் நதிகளைத் தெற்கு முகமாகத் திருப்புவதுதான் ஒரே வழி. அதுவும் சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் திட்டங்கள் தீட்ட வேண்டும். வடக்கே வெள்ளம், தெற்கே வறட்சி என்பதை மாற்றி நதிநீரைச் சமமாகப் பயன்படுத்தும் நிலை வர வேண்டும். கங்கை, பிரம்மபுத்ரா, மேக்னாம் ஆறுகளில் எப்போதும் வெள்ளம். உத்தர பிரதேசம், பிகார், அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் மழைக்காலங்களில் வெள்ளக் காடாக இருப்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.
  • ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களோடு தமிழகமும் நீர் பற்றாக்குறையால் வறட்சியைத்தான் சந்தித்து வருகின்றன. 1960-லிருந்து இன்றுவரை நமக்குத் தேவையான நீர் சரியாகக் கிடைக்க வில்லை என்பதுதான் எதார்த்தம். நதிநீர் இணைப்பு, நீர்ப்பாசனத் திட்டங்களை, குறிப்பாக, தென் மாநிலங்களில் சீராகத் திட்டமிட்டால் ஏறத்தாழ 35 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலம் பாசன வசதி பெறும்.
  • நீதி ஆயோக் 2018-இல் வெளியிட்ட நீர் மேலாண்மைக் குறியீட்டு அறிக்கை, 6 ஆயிரம் லட்சம் இந்தியர்கள் தண்ணீருக்காகப் போராடி வருகிறார்கள்; சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் 2 லட்சம் பேர் இந்தியாவில் நோயால் இறக்கின்றனர் என்று கூறுகிறது. நதிநீர் இணைப்பால் விவசாயம் செழிக்கும்; குடிநீர் தட்டுப்பாடும் தீரும். மேலும், ஏறத்தாழ 34 ஜிகாவாட் நீர் மின்சாரத்தையும் கூடுதலாகப் பெருக்கலாம்.
  • நதிகளை இணைப்பதால் வெள்ளத்தையும் வறட்சியையும் எதிர்கொண்டு இயற்கையை சமப்படுத்த முடியும்; விவசாய நிலங்களுக்குப் பாசன வசதி கிடைக்கும்; பல லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாறும்; குடிநீர் ஆதாரம் பெருகும்; நீர் மின் உற்பத்தி, சோலார் மின் உற்பத்தியைக் கூடுதலாக்கலாம்; உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தைப் பெருக்க முடியும்; நதியின் கரையோரம் உள்ள பகுதிகள் வளர்ச்சி பெறும்; சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறும்; தொழில், வணிகம் பெருகி வேலைவாய்ப்பு பெருகும்; உள்நாட்டு மீன்பிடித் தொழில் வளர்ச்சி அடையும்.
  • இப்படி பல பயன்பாடுகள் உள்ள தேசிய நதிகள் இணைப்பை, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் செயல்படுத்துவது கடினம். அணைகள் கட்டுவதும், மின் உற்பத்தி செய்வதும் தேவையானது. அதைப் புரிந்து கொண்டு சுற்றுச்சூழல் பிரச்னைகளை முடிந்த அளவு தீர்த்து இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது காலத்தின் கட்டாயம்.
  • நதிநீர் இணைப்புத் திட்டம் என்பது நாட்டு மக்களுக்கான திட்டம். எதிர்காலத்தில் தண்ணீர் இல்லாமல் எதுவும் இல்லை என்ற நிலை வரும்போது சமன்பாடாக தண்ணீர் வரத்துகள் சீராகவும், செம்மையாகவும் வெள்ளத்தையும், வறட்சியையும் முறியடிக்கக் கூடிய வகையில் நடைமுறைப்படுத்துவதுதான் நதிநீர் இணைப்பு. இந்த வகையில் பிரம்மபுத்ரா, கங்கை, நர்மதா, தபதி, மகாநதி, துங்கபத்ரா, கோதாவரி, பாலாறு, தென்பெண்ணையாறு, காவிரி, வைகை, தாமிரபரணி ஆகிய நதிகள், தென்குமரியில் உள்ள நெய்யாற்றோடு இணையட்டும்.
  • தமிழகத்தில், தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்டம் ஒரு புறம் நடக்கின்றது. இதில் எந்த சிக்கலும் இல்லை. ஏனெனில், தாமிரபரணி தமிழ்நாட்டில் பொதிகை மலையில் உருவாகி தமிழ்நாட்டிலேயே புன்னக்காயலில் கடலில் சேர்வதால் வேறு மாநிலம் இதில் சம்பந்தப்படவில்லை. தற்போது காவிரி - வைகை - குண்டாறு இணைப்புப் பணிகள் தொடங்க இருக்கின்றன. இந்த சமயத்தில் தேவையில்லாமல் கர்நாடக மாநிலத்திலிருந்து இந்தத் திட்டத்தை எதிர்த்து குரல் எழுகிறது.
  • இதே போலவே, எதிர்காலத்தில் தமிழகம் திட்டமிட்டுள்ள தென்பெண்ணை - பாலாறு நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு ஆந்திர மாநிலம் பிரச்னையை உருவாக்கலாம். நதிகள் ஒருமைப்பாடு பன்மையில் ஒருமையை வளர்க்கும். நதிநீர் இணைப்பை முன்னெடுக்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல, அவசரமும்கூட.

நன்றி: தினமணி (18 – 05 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories