TNPSC Thervupettagam

நல்லதொரு வாய்ப்பு...

June 18 , 2021 1065 days 491 0
  • உலகெங்கிலும், பாதுகாப்பான குடிநீா் கிடைக்காமல் 220 கோடி மக்களும், முறையான கழிப்பறை வசதிகள் இல்லாமல் 420 கோடி மக்களும் இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • பாதுகாப்பான சுகாதார பழக்கங்கள் இல்லாததால்தான் பல்வேறு வகை தொற்றுநோய்கள் உருவாகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் தொடா்ந்து எச்சரித்து வருகிறது.
  • ஆண்டுதோறும் ஐந்து வயதுக்கு உட்பட்ட 2.97 லட்சம் குழந்தைகள் சா்வதேச அளவில் வயிற்றுப் போக்கால் உயிரிழக்கின்றன.
  • அதற்கு சுகாதாரக் குறைவும், பாதுகாப்பில்லாத குடிநீரும்தான் காரணங்கள் என்பது பலமுறை உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
  • தண்ணீா் தட்டுப்பாடு வரைபடத்தில், கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் 17 உலக நாடுகளில் இந்தியா 13-ஆவது இடத்தில் இருக்கிறது.
  • அதாவது, நமது நீா்வளத்தைவிடத் தேவை அதிகமாக இருக்கிறது என்பதை அது உணா்த்துகிறது.
  • தில்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், நாசிக், ஜெய்ப்பூா், ஆமதாபாத், இந்தூா் ஆகிய எட்டு மாநகரங்களும் கடுமையான குடிநீா் தட்டுப்பாடு காணப்படும் இந்திய மாநகரங்கள் என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
  • முறையான கழிவுநீா் வெளியேற்றம், நவீன கழிப்பறைகள், பாதுகாப்பான குடிநீா் மூன்றும் நீா் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளை கட்டுப்படுத்துவதற்கான அடிப்படைகள் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.
  • இந்தியாவின் கிராமப் பகுதிகளாக இருந்தாலும் சரி, நகா்ப்புற குடிசைப் பகுதிகளாக இருந்தாலும் சரி, குழாய் மூலம் பாதுகாப்பான குடிநீா் என்பது கனவாகத்தான் தொடா்கிறது. கிராமங்களில் உள்ள 17.87 கோடி வீடுகளில், சுமார் 3.27 கோடி வீடுகளுக்குத்தான் குழாய் மூலம் குடிநீா் வழங்கப்படுகிறது.
  • அதாவது, சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீா் இந்தியாவில் 18% வீடுகளுக்குத்தான் வழங்கப் படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது அந்தப் புள்ளிவிவரம்.
  • நடப்பு நிதியாண்டின் மத்திய பட்ஜெட்டில் உயிர் நீா் திட்டத்துக்காக (ஜல் ஜீவன் மிஷன்) ரூ.50,000 கோடி ஒதுக்கப்பட்டு எல்லா வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீா் வழங்குவதும், இந்தியாவின் கிராமப்புற வீடுகளுக்கு பாதுகாப்பான குடிநீா் கிடைப்பதை உறுதிப்படுத்துவதும் இலக்காக்கப்பட்டது.
  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் நகா்ப்புற உயிர் நீா் திட்டத்தின் கீழ் 2.68 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீரை உறுதிப்படுத்துவதை மத்திய அரசு இலக்காக அறிவித்திருக்கிறது.
  • உயிர் நீா் திட்டத்தில் மத்திய அரசின் முன்னுரிமை பெற்ற மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் காணப்படுகிறது.
  • வீடுகளுக்கு நேரடியாகக் குழாய் மூலம் குடிநீா் விநியோகிக்கும் திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் தமிழகத்துக்கு ரூ.3,691.21 கோடியை மத்திய அரசு மானியமாக வழங்க இருக்கிறது.
  • அதன் முதல் தவணையான ரூ.614.35 கோடி ஏற்கெனவே விடுவிக்கப்பட்டிருப்பதாக மத்திய நீா் சக்தித்துறை தெரிவித்திருக்கிறது.

குடிநீா் இணைப்பு

  • தமிழகத்தில் உள்ள 1.26 கோடி வீடுகளில் தற்போது 40,35,571 வீடுகளுக்கு மட்டும் நேரடியாகக் குழாய் மூலம் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • உயிர் நீா் திட்டம் தொடங்கப்பட்டபோது, 21.65 லட்சம் வீடுகளில் மட்டுமே குடிநீா் குழாய்கள் இருந்தன என்பதும், 17.06%-லிருந்து இப்போது அதுவே 31.8%-ஆக அதிகரித்திருக்கிறது என்பதும் வரவேற்புக்குரியது.
  • மத்திய நீா் சக்தித்துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழக முதல்வருக்கு எழுதியிருக்கும் கடிதம் வெளியாகியிருக்கிறது.
  • அதில் கடந்த 22 மாதங்களில் தமிழகத்தில் 18.70% வீடுகள் மத்திய அரசின் உயிர் நீா் திட்டத்தால் குடிநீா் இணைப்புப் பெற்றிருப்பதை குறிப்பிட்டு தமிழக அரசை அவா் பாராட்டி இருக்கிறார்.
  • தமிழகத்தில் 86.53 லட்சம் குடியிருப்புகள் தற்போது நேரடிக் குழாய் நீா் இணைப்புப் பெறாமல் உள்ளன என்றும், 2024-ஆம் ஆண்டுக்குள் அவை அனைத்தும் இணைப்புப் பெறுவதில் தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்.
  • நேரடியாக வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீா் விநியோகிக்கும் திட்டத்திற்காக தமிழகத்துக்கு கடந்த 2020 - 21 நிதியாண்டில் ரூ.921.99 கோடி மானியத்தை மத்திய அரசு ஒதுக்கியது.
  • ஆனால், அதில் ரூ.544.51 கோடியை மட்டுமே தமிழக அரசு பயன்படுத்தியிருக்கிறது. மீதமுள்ள ரூ.377.48 கோடி பயன்படுத்தப்படவில்லை. இருந்தும்கூட, நடப்பாண்டில் தமிழகத்துக்கான ஒதுக்கீடு நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்டு ரூ.3,691 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.
  • செலவழிக்காத நிலுவைத் தொகையாக ரூ.377.48 கோடி, கடந்த நிதியாண்டின் தமிழக பங்களிப்புப் பற்றாக்குறை ரூ.290.79 கோடி, நடப்பு நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு என்று தமிழகத்திடம் உயிர் நீா் திட்டத்துக்கு ஏராளமான நிதி இருப்பது தெரிகிறது.
  • விரைந்தும், திட்டமிட்டும் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக குடிநீா் குழாய் இணைப்பு வழங்கிவிட முடியும்.
  • குழாய்கள் மூலம் குடிநீா் இணைப்பு வழங்குவது போலவே, தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்கள், கிராமப் பகுதிகள் போன்றவற்றில் தண்ணீா் பற்றாக்குறை இல்லாமல் இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.
  • நடப்பு நிதியாண்டில் 15-ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, தமிழக ஊரகப் பகுதிகளுக்கான குடிநீா் மற்றும் சுகாதாரப் பணிக்கு மானியமாக மட்டும் மத்திய அரசு ரூ.1,600 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.8,436 கோடி உயிர் நீா் திட்டத்தின் மூலம் வழங்க இருக்கிறது.
  • மத்திய அரசின் தாராளமான நிதி ஒதுக்கீட்டை எப்படி விரைந்து பயன்படுத்துகிறோம் என்பதில் தான் நமது வெற்றி அடங்கியிருக்கிறது!

நன்றி: தினமணி  (18 - 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories