TNPSC Thervupettagam

நவதாராளமயத்தால் அதானி குழுமம் அசுர வளர்ச்சி

February 24 , 2023 449 days 249 0
  • குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் அதானி நிறுவனத்தின் உள்விவகாரங்களை ஆராய்ந்து அம்பலப்படுத்திய அமெரிக்காவின் பங்கு விற்பனை நிறுவனம் ‘ஹிண்டன்பர்க்’ குறுகிய காலத்தில் அதானி நிறுவனம் ஈட்டிய சொத்து மதிப்பை வெகு வேகமாக சரித்துவிட்டது; பங்குச் சந்தையில் அதானி நிறுவனத்தின் ஏழு குழுமங்களின் மதிப்பு சரிந்ததால் மட்டும் 10,000 கோடி டாலர் மதிப்புக்கு வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. அதற்குப் பிறகு, 250 கோடி டாலர்கள் மதிப்புக்கு புதிதாக விற்பதற்கு வெளியிட்ட பங்குகளை, முதலீட்டாளர்களுக்கு வழங்காமல் அதானி நிறுவனமே நிறுத்திவைத்ததுடன் முதலீட்டாளர்கள் செலுத்திய தொகையைத் திரும்பத் தந்துவிட்டது.

தடுக்க முடியாத வளர்ச்சி

  • மிகு மூலதனம் தேவைப்பட்ட துறைகளில் அசுர வளர்ச்சி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றிய கதையாடலுக்கும் அதானி குழுமத்தின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் என்ன தொடர்பு என்று அனைவரின் கவனமும் இதன் மீது திரும்பி இருக்கிறது. அதானி தொழில் நிறுவனத்தின் இரண்டு அம்சங்கள் இங்கே குறிப்பிடத்தக்கவை.
  • அதானி குழும நிறுவனங்களின் பங்குகளுடைய விலை சந்தையில் தொடர்ந்து ஏறிக்கொண்டே வந்தனவே தவிர, இறங்குமுகமாகவே இல்லை என்பதுடன் அந்நிறுவனத்தின் நிரந்தர அசையா சொத்துகளும் பெருகிக்கொண்டே வந்தன. (நிலம், கட்டிடம், இயந்திரங்கள் போன்ற அனைத்தும் அசையாத சொத்துகளாகும்). அதேசமயம், இந்தியத் தொழில் துறையில் இருந்த பிற தொழில் நிறுவனங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு அதானி குழுமம் மிகக் குறுகிய காலத்தில் முன்னேறிக்கொண்டே இருந்தது.
  • இப்படிப்பட்ட அசுர வளர்ச்சி அதே குஜராத்தைச் சேர்ந்த இன்னொரு தொழிலதிபரான திருபாய் அம்பானி காலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் நிகழ்ந்தது. அந்தச் சம்பவத்தைப் போலவே இதிலும், ஒரு நிறுவனம் மட்டும் திடீரென்று வளர்ச்சி பெறுவதை ஆட்சியாளர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை!
  • இரண்டாவது முக்கிய அம்சம், மூலதனம் அதிகம் தேவைப்படும் அடித்தளக் கட்டமைப்புத் துறைகளில்தான் அதானி குழும நிறுவனங்கள் அசுர வளர்ச்சி கண்டன. மின்சார உற்பத்தி, துறைமுகங்களை நிறுவுதல் – விரிவுபடுத்தல், விமான நிலையங்களை நிர்மாணித்தல், நெடுஞ்சாலைகளை அமைத்தல், உலோக உற்பத்தி, கனிம வள அகழ்வு ஆகிய முக்கிய துறைகளில் கோடிக்கணக்கான ரூபாய்களை அதானி குழுமம் முதலீடு செய்தது.
  • ஒன்றிய அரசு புதிய தாராளமயக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்குவதற்கு முன்னால் இந்தத் துறைகளில் எல்லாம் அரசுத் துறை (பொதுத் துறை) நிறுவனங்கள்தான் ஏகபோகமாக முதலீடு செய்தன. அரசின் கொள்கை காரணமாக மட்டுமல்ல, அரசே அனுமதித்தாலும் இந்தத் துறைகளில் அதிகம் முதலீடு செய்ய தனியார் துறை முன்வந்ததே கிடையாது.
  • அதற்கு முக்கியமான காரணம் இந்தத் துறைகளுக்கு பெருமளவில் முதலீடு தேவை, திட்டம் முழுமையாக நிறைவேறி பலன் கொடுக்க அதிக ஆண்டுகள் பிடிக்கும், அப்படிக் கிடைக்கும் வருமானம் அல்லது லாபமும் சிறுகச் சிறுகத்தான் சேரும். எனவே, இதில் பெரும் பணத்தை முதலீடு செய்துவிட்டு அது முழுமை பெறாமல் தடங்கல்கள் ஏற்பட்டாலோ, சந்தையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டாலோ முதலீட்டாளர்களுக்கு எல்லா வகையிலும் பண இழப்பும் நிம்மதிக் குலைவும் ஏற்படும். எந்தத் தனியாரிடமும் முதலீட்டுக்குத் தேவையான நிதி அபரிமிதமாகச் சேரவும் இல்லை, வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களும் கடன் தராது.
  • எனவே, தனியார் துறையினர் இப்படி மூலதனம் அதிகம் தேவைப்படும் பெரிய திட்டங்களில் முதலீடு செய்வதில்லை. மற்றொரு முக்கிய அம்சம், விலையை நிர்ணயிக்கும் அரசின் கொள்கை. இம்மாதிரியான திட்டங்களில் உற்பத்தியாகும் பொருள்களுக்கு விலை அல்லது சேவைகளுக்கான கட்டணங்களை அரசும் அரசுத் துறை நிறுவனங்களும் குறைவாகத்தான் நிர்ணயிக்கும், அதனால் முதலீட்டாளர்களுக்கு, செலுத்திய முதலீட்டுக்கேற்ற வருமானம் அல்லது லாபம் கிடைக்காது. இதையே அவர்கள் மற்ற துறைகளில் முதலீடு செய்தால் மிகக் குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதித்துவிட முடியும்.

அதீத முதலீடுகள்

  • அடுத்ததாக, அதிக மூலதனம் தேவைப்படும் அடித்தளக் கட்டமைப்புத் துறையில் எந்த நிறுவனமும் தன்னுடைய செயல்பாட்டால் ஆதிக்கம் செலுத்திவிட முடியாது. கணினித் துறையில் மென்பொருள் தயாரிப்பு போன்றவற்றில் ஈடுபடும் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்குச் செய்யும் ஏற்றுமதி மூலம் மிகப் பெரிய சந்தையைப் பிடித்து பெயரெடுக்கவும் முடியும் செல்வாக்கு செலுத்தவும் முடியும்.
  • மென்பொருள் ஏற்றுமதியில் ஈடுபட்ட இந்திய நிறுவனங்கள் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டியதும் ஏராளமான கோடீஸ்வரர்களை உருவாக்கியதும் மிகவும் அண்மைக்கால வரலாறு. அடித்தளக் கட்டமைப்புத் துறைக்கு கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு அவசியம், அப்படியே அதில் வருமானம் கிடைத்தாலும் லாப விகிதம் மிகவும் குறைவு. அடித்தளக் கட்டமைப்புத் துறையில் தனியார் நிறுவனம் ஈடுபட முடிவு செய்தால், தேவைப்படும் நிதியில் சிறிதளவைத்தான் அதனால் தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து பயன்படுத்த முடியும். எஞ்சிய தொகையைக் கடன் வாங்கியோ, பொதுப் பங்குகளைச் சந்தையில் விற்றோதான் திரட்ட முடியும்.
  • கௌதம் அதானி அடித்தளக் கட்டமைப்பின் ஒரேயொரு திட்டத்தில் மட்டுமல்ல பல திட்டங்களில் ஒரே சமயத்தில் முதலீடு செய்தார்; அது மட்டுமல்லாமல் கிரீன்ஃபீல்டு திட்டங்கள் என்று அழைக்கப்படும் – அடிப்படையாகக்கூட ஏதும் செய்யாமலிருக்கும் இடங்களிலும் புதிய திட்டங்களைத் தொடங்குவதையும் மேற்கொண்டார்; ஏற்கெனவே செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிறுவனங்களை நல்ல விலை கொடுத்து வாங்கி, அத்துறையில் தன்னுடைய நிறுவனத்தைப் பெரிதாக விரிவுபடுத்தினார். அவருடைய சாமர்த்தியம் எல்லாம், ‘மிகவும் கடினம்’ என்று மற்றவர்கள் ஒதுங்கும் துறைகளில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டைத் திரட்டியதுதான்!

அதானிக்கு சாதகங்கள்

  • மலை உச்சியில் ஏறத் தொடங்கியவருக்கு சாதகமான உதவிகள் கிடைப்பதைப் போல, அதானியின் தொழில் முயற்சிகளுக்கு சாதகமாக அரசின் புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கை பேருதவி புரிந்தது. புதிய பொருளாதாரக் கொள்கை காரணமாக நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) 2003-04 தொடங்கி 2011-12 வரையில் ஆண்டுக்கு சராசரியாக 8%ஆக இருந்தது. இந்தியாவின் வெற்றி எதில் என்றால், புதிய பொருளாதாரக் கொள்கை அமலுக்குப் பிறகு, குறிப்பாக 2003இல் இந்தியாவின் பங்குச் சந்தையிலும் கடன் பத்திரச் சந்தையிலும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களிடமிருந்தும் தனி முதலீட்டாளர்களிடமிருந்தும் கோடிக்கணக்கான டாலர்களை ஈர்க்க முடிந்ததுதான். இதனால் இந்திய வங்கிகளிடம் நிரந்தர வைப்புகளும் கோடிக்கணக்கில் திரண்டு ரொக்கக் கையிருப்பு மிதமிஞ்சி புரளத் தொடங்கியது. 
  • தங்களிடம் குவிந்துவிட்ட டெபாசிட்டுகளைப் போட்டி போட்டுக்கொண்டு எல்லாவிதக் கடன்களுக்கும் வழங்கும் போக்கு வங்கிகளிடையே ஏற்பட்டது. அதுவரை வங்கிகள் அடித்தளக் கட்டமைப்புத் துறைகளுக்குக் கடன் தர மிகுந்த தயக்கம் காட்டின அல்லது கொடுக்காமலேயே ஒதுங்கி இருந்தன.
  • அடித்தளக் கட்டமைப்புத் துறைகளில் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்க அரசு மேற்கொண்ட வரி ஊக்குவிப்பு திட்டத்தாலும், கையில் மிதமிஞ்சி இருக்கும் ரொக்கக் கையிருப்பைக் கடன் கொடுத்து கரைத்தால்தான் லாபம் கிடைக்கும் என்பதாலும் அடித்தளக் கட்டமைப்பில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களுக்குக் கடன் தர அரசுத் துறை வங்கிகள் முதல்முறையாக முன்வந்தன.

என்ன சொல்கிறது ஹிண்டன்பர்க் அறிக்கை?

  • புதிய வளர்ச்சி உத்தியில் அரசு எடுத்த, ஒன்றுக்கொன்று முரண்பட்ட முடிவுகளும் இதற்குக் காரணங்களாக அமைந்தன. அடித்தளக் கட்டமைப்புத் துறையில் முதலீட்டைப் பெருக்க வேண்டும், அதில் ஈடுபடும் தனியார் துறைக்கு ஊக்குவிப்புகளைத் தர வேண்டும் என்று தீர்மானித்த அரசு, அரசின் வருவாய்க்கும் செலவுக்குமான நிதி பற்றாக்குறையை குறிப்பிட்ட வரம்புக்குள் வைத்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்தது. இதனால் கடன் பத்திர விற்பனை மூலம் நிதி திரட்டி அதைத் திட்டங்களுக்குச் செலவிடக்கூடாது என்ற முடிவையும் எடுத்தது.
  • அடித்தளக் கட்டமைப்புத் துறையில் அரசு முதலீடு செய்யாவிட்டால் யார் அதைச் செய்வது என்ற கேள்வி அடுத்து எழுந்தது. இனி தனியார் துறையும் செய்யட்டும் என்று அரசு தீர்மானித்தது. புதிய தாராளமயக் கொள்கையைக் கொண்டுவந்த அரசு, தனியார் துறை ஈடுபட இதற்காக மூன்று முக்கிய உறுதிமொழிகளை அளித்தது. தேவைப்படும் நிதியைத் தனியார் திரட்ட அரசு உதவிகளைச் செய்யும், அந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் வருவாய் இழப்பையும் பிற பிரச்சினைகளால் உண்டாகும் இடர்களையும் ‘தக்க வகையில்’ அரசு தீர்த்து வைக்கும் என்று உறுதி கூறப்பட்டது.
  • அது மட்டுமல்லாமல், நிறுவனத்தின் பொருள்களுக்கு அல்லது சேவைக்கு விலை நிர்ணயம் செய்வதிலும் நீக்குப்போக்குடன் நடந்துகொள்ளும் – அதாவது லாபத்தைக் கட்டுப்படுத்தாது என்று உறுதியளிக்கப்பட்டது; நிதி மூதலீடு போதாமல் பற்றாக்குறை ஏற்பட்டால் அந்த ‘இடைவெளியை இட்டு நிரப்பவும்’ அரசு உதவும் என்றும் உறுதிகள் அளிக்கப்பட்டன. அந்தச் செயல்திட்டத்தில் முக்கியமான ஒரு உறுதிமொழி, அரசுத் துறை வங்களிடம் உபரியாக கையிருப்பில் உள்ள ரொக்கம், அடித்தளக் கட்டமைப்புத் துறை முதலீடுகளுக்குக் கடனாக தரப்படும் என்பதாகும்.
  • ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கைகளைப் பார்க்கும்போது அரசின் நவதாராளமயக் கொள்கை (புதிய பொருளாதாரக் கொள்கை) காரணமாக, மிதமிஞ்சிய அளவுக்கு அதானி குழுமம் பலன் அடைந்திருப்பது தெரியவருகிறது. மிகக் குறுகிய காலத்துக்குள்ளேயே அரசுத் துறை வங்கிகளிடமிருந்து கோடிக்கணக்கில் கடன் பெற்றதுடன், தன்னுடைய நிறுவனப் பங்குகளை எல்ஐசி போன்ற அரசுத் துறை நிறுவனங்களுக்கும் விற்று பணம் திரட்டியுள்ளது. அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை மட்டுமல்ல, அரசிடமிருந்து கிடைத்த வேறு சில உதவிகளும், அனுமதிகளும்கூட அதானி குழுமத்தின் அசுர வளர்ச்சிக்கு உதவி இருக்கின்றன. திட்டம் தொடங்க அதானி குழுமங்களுக்கு உடனுக்குடன் அனுமதி வழங்கப்பட்டது, ஒப்புதல்கள் அளிக்கப்பட்டன, சுற்றுச்சூழல் துறையிடமிருந்து ஆட்சேபம் ஏதுமில்லை என்ற சான்றிதழ்கள் விரைவாகக் கிடைத்தன.
  • தொழிற்சாலை அல்லது துறைமுகம் அல்லது விமான நிலையம் நிறுவ விரைவாக நிலத்தைக் கையகப்படுத்த முடிந்திருக்கிறது, அதிலிருந்து சிக்கல்கள் விரைவாகத் தீர்க்கப்பட்டுள்ளன. ‘அதானி குழுமம் மிகவும் முக்கியமானது, அதன் தொழில் வளர்ச்சித் திட்டங்களுக்கு யாரும் குறுக்கே வரக் கூடாது’ என்ற உணர்வு ஆட்சியாளர்களால் அனைத்துத் தரப்புக்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தொழில் குழுமத்தின் தலைவர் கௌதம் அதானிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இருக்கும் தனிப்பட்ட நட்பு காரணமாக இப்படியொரு வளர்ச்சி இந்த நிறுவனத்துக்கு சாத்தியமாகி இருக்கிறது.
  • தனியார் துறையை ஊக்குவிக்க வேண்டும் என்று அரசு எடுத்த கொள்கை முடிவால்தான் அந்த நிறுவனம் உதவிகளைப் பெற்றது என்பது ஒரு சமாதானமாகக் கூறப்படலாம். நவதாராளமயக் கொள்கையால் நாட்டுக்கு நல்லது என்று வாதிடுவோர் கூறுவதற்கு முரணாக, சந்தை நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை அதிகம் இருப்பதில்லை என்பதுடன் அரசின் ஆதரவு சில நிறுவனங்களுக்கு சார்பாகவும் சில நிறுவனங்களுக்கு எதிராகவும் போனதும் வெளிப்படை.

அடக்கி வாசித்த நெறியாளர்கள்

  • ஆள்வோருக்கு நெருக்கமான நிறுவனம்தான் அதானி குழுமம் என்பது பங்குச் சந்தை வட்டாரங்களுக்குத் தெரியவந்த பிறகு, வெளிநாடுகளைச் சேர்ந்த கடன் பத்திர, பங்கு முதலீட்டாளர்கள் அந்த நிறுவனப் பங்குகளில் அதிகம் முதலீடு செய்து குறுகிய காலத்தில் நிறைய லாபம் பெற முயல்வது இயல்பு. மூலதனம் அதிகம் தேவைப்படும் அடித்தளக் கட்டமைப்புத் துறை நிறுவனங்கள் மீது தன்னுடைய கட்டுப்பாடு முழுமையாக இருக்க வேண்டும் என்று விரும்பிய அதானி, கடன் பத்திர விற்பனை மூலம் அதை சாதித்துக்கொண்டார்.
  • தன்னுடைய நிறுவனங்களின் பங்கு விலை சந்தையில் ஏகமாக உயர்ந்தபோது அவற்றை விற்றுக் கிடைத்த பணத்தில், கடன் பத்திரங்களை வாங்கி அதை முதலீட்டுக்குப் பயன்படுத்தினார். தன்னுடைய நிறுவனப் பங்குகளை நிறுவனச் சட்டப்படி குறிப்பிட்ட அளவுக்குத்தான் தன்னால் வைத்துக்கொள்ள முடியும் என்பதால், பங்குகளை விற்கும்போதே வரி ஏய்ப்புக்குச் சாதகமாக உதவும் வெளிநாடுகளில் முகமூடி முதலீட்டு நிறுவனங்களைத் தொடங்கினார்; அந்த நிறுவனங்கள் மூலம் தன்னுடைய நிறுவனப் பங்குகளை சந்தையில் நிலவிய உயர் மதிப்புக்கு விற்று கிடைத்த பணத்தைக் கடன் பத்திரத்தில் முதலீடு செய்தார். இரு வகையிலும் அவருக்கு லாபம்.
  • செயற்கையாக சந்தையில் அதிகரித்த விலைக்கு பங்குகளை விற்பதால் அபரிமிதமான பணம் கிடைக்கிறது. அதையே கடன்பத்திரம் மூலம் பெறுவதால் கடன் பத்திர உரிமையாளர் என்ற வகையில் நிறுவனத்தின் மீதான உரிமை அதிகமாகிவிடுகிறது. பங்குச் சந்தையில் அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு அளவுக்கு அதிகமாக உயர்ந்தபோதும், அவற்றின் பரிமாற்றங்கள் கேள்விக்குரியதாகத் தொடர்ந்தபோதும் பங்குச் சந்தையைக் கட்டுப்படுத்த வேண்டிய ‘செபி’ உள்ளிட்ட நெறியமைப்புகள் எதுவும் பெரிதாகத் தலையிடவுமில்லை, விசாரித்தாகவும் தெரியவில்லை. அதானி நிறுவனத்துக்கு அரசின் ஆதரவானது கடன் வழங்குவது, நிலங்களைக் கையகப்படுத்த உதவுவது என்பதோடு நில்லாமல், நெறிப்படுத்த வேண்டிய நிறுவனங்களின் திட்டமிட்ட பாராமுகத்திலும் வெளிப்பட்டிருக்கிறது என்று ஐயப்பட நேர்கிறது.
  • நிறுவனங்களின் பங்கு மதிப்பு சந்தையில் மிதமிஞ்சிய அளவுக்கு உயர்ந்ததால், அவருடைய சொத்து மதிப்பும் உலக அளவில் உயர்ந்தது. இப்படி ஊதிப்பெருக்கிய பங்கு மதிப்பால், அவற்றை ஈடாக அடைமானம் வைத்து அதிக அளவு நிதியைக் கடனாகவும் பெற முடிந்திருக்கிறது. தொழில் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த நிதியைப் பெறுவதில் அதானி குழுமத்துக்குச் சிறிதளவும் தடையே இல்லாமல் இருந்தது - ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் புலனாய்வு அறிக்கை வெளியாகும் வரையில்!
  • ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை கூறுவது உண்மையல்ல என்று கூறி நிராகரித்தது அதானி குழுமம். ‘இது தங்களுடைய நிறுவனத்தின் மீதான தனிப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல, வளர்ச்சி காணும் இந்திய நிறுவனங்கள் தொடர்பாக உலக அளவில் சந்தேகத்தை ஏற்படுத்தி இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வதைத் தடுக்கும் முயற்சி’ என்றும் அது குற்றஞ்சாட்டியது. பங்குச் சந்தை விவகாரங்களில் ஊறியவர்களுக்கு அதானி குழும பதில்கள் நம்பிக்கை அளிக்கவில்லை. சந்தையில் பங்கு விலைகள் தொடர்ந்து மளமளவென்று சரிந்தன.
  • எனவே, அதானி குழுமப் பங்குகளை ஈடாகப் பெற்று கடன் கொடுத்திருந்த நிறுவனங்கள், பங்கின் சந்தை மதிப்பில் ஏற்பட்ட சரிவுக்கேற்ப, கூடுதல் பணத்தை உடனே செலுத்தி கடனை புதுப்பிக்குமாறு முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தன. தன்னுடைய நிறுவன நிதிநிலைமை நன்றாகத்தான் இருக்கிறது என்று காட்ட 100 கோடி டாலருக்கும் மேல் மதிப்புள்ள கடன் தொகையை, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலத்துக்கு முன்னரே அடைத்துவிடவும் தயார் என்று அதானி குழுமம் அறிவித்துள்ளது.
  • அத்துடன் குழும நிறுவனங்களின் அடகு வைக்கப்பட்ட பங்குகளை மீட்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. அதானி குழுமம் பற்றிய கதைகள் இத்துடன் முழுமை அடையவில்லை. இந்த விவகாரத்தில் முக்கியமாகத் தெரிய வேண்டிய படிப்பினை என்னவென்றால், நவதாராளமயம் என்பது பங்குச் சந்தையில் உண்மையான போட்டியை அனுமதிக்கவோ, வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யவோ உதவவில்லை என்பதுதான்;
  • ஒரு குழுமம் அல்லது ஒரு பெருமுதலாளி தன்னுடைய செல்வத்தைக் குறுகிய காலத்தில் அபரிமிதமாகப் பெருக்கிக்கொள்ளவும், பலருக்குச் சேர வேண்டிய சொத்து ஒரே ஒருவரிடமோ அல்லது மிகச் சிலரிடமோ குவியவோ உதவுகிறது நவதாராளமயம் என்பதும் இப்போது அம்பலமாகி இருக்கிறது.

நன்றி: அருஞ்சொல் (24 – 02 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories