TNPSC Thervupettagam

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்

September 27 , 2023 222 days 217 0
  • நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் 22 வரை நடைபெறும் என ஆகஸ்ட் மாத இறுதியில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ‘ஒரே நாடு.. ஒரே தேர்தல்’, இந்தியாவுக்கு ‘பாரத்’ எனப் பெயர் மாற்றம் ஆகியவை குறித்தான விவாதக் கூட்டமாக இந்தச் சிறப்புக் கூட்டத்தொடர் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
  • இந்தக் கூட்டத்தொடர் குறித்து அரசு வெளிப்படைத்தன்மையுடன் இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. இந்நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றத்துடன் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றம் எப்போது கூட்டப்படுகிறது

  • அரசமைப்பின் படி நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு அழைப்புவிடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. அமைச்சரவைக் குழுவால் கூட்டத்தொடர் தொடர்பாக முடிவெடுக்கப்பட்டு, அது குடியரசுத் தலைவரால் முறைப்படுத்தப்படும்; பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தொடருக்கு அழைக்கப்படுகிறார்கள். அரசமைப்பின் 85ஆவது கூறு, நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது / கலைப்பது பற்றி விவரிக்கிறது.
  • அரசமைப்பில் நாடாளுமன்றக் கூட்டங்களுக்கு என்று நிலையான கால அட்டவணை எதுவும் இல்லை. இருப்பினும் குடியரசுத் தலைவர் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது நாடாளு மன்ற அவைகளைக் கூட்ட வேண்டும் என்று அரசமைப்பு விதிகள் குறிப்பிடுகின்றன. அதன்படி ஆண்டுக்கு இரண்டு முறையாவது நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.

பரிசீலனைகள்

  • 1949இல், அரசமைப்புச் சட்டப் பிரிவு 69 வரைவு, பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மக்களின் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கக் கூடுதல் நேரம் ஒதுக்க நாடாளு மன்றத்தின் கூட்டங்களுக்கு இடையிலான இடைவெளியை மூன்று மாதங்களாக மாற்ற முன்மொழியப்பட்டது. “ஆங்கிலேயர் காலத்தில் இருந்த காலச் சூழலின் அடிப்படையில்தான் நாடாளுமன்றத்துக்கான வரைவுச் சட்டங்கள் அமைக்கப்பட்டன.
  • நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான நிதி அனுமதி பெறுவதற்காக மட்டுமே சபைகள் அப்போது அழைக்கப்பட்டன. ஆனால் நாட்டின் வளர்ச்சி, எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கான சட்டங்களைப் பரிசீலனை செய்வதற்கும் விவாதிப்பதற்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர்கள் முக்கியமானவை.
  • இதில் சரியான பரிசீலனையை அனுமதிப்பதற்கு நேரமும் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. எனவே, நாடாளுமன்றக் கூட்டங்களுக்கு இடையேயான இடைவெளி மூன்று மாதங்களுக்கு மிகாமல் இருக்கப் பரிந்துரைக்கிறேன்” என நாடாளுமன்றக் கூட்டத்தொடர்கள் போதிய இடைவெளியுடன் ஆண்டு முழுவதும் நடைபெற வேண்டியதன் அவசியம் குறித்து, மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பேராசிரியருமான கே.டி.ஷா கூறினார்.
  • மறைந்த மற்றுமொரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஹெச்.வி.காமத், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளைச் சுட்டிக்காட்டி, நாடாளுமன்றக் கூட்டத்தொடர்கள் நீண்ட காலம் நடைபெறுவதற்கு வலியுறுத்தினார். எனினும், இவர்களது பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை. “அரசமைப்பு விதிகள் நாடாளுமன்றம் அவ்வப்போது கூட்டப்படுவதைத் தடுக்காது.
  • எனினும், கூட்டத்தொடர்கள் அடிக்கடி நடக்கும்போது உறுப்பினர்கள் சோர்வடைந்து விடுவார்கள் என்பதே அச்சம்” என அம்பேத்கர் கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது. இந்தப் பரிசீலனைகளின் இறுதியில், நாடாளுமன்றத்தின் இரண்டு கூட்டத்தொடர்களுக்கு இடையே ஆறு மாத இடைவெளி இருப்பதே முடிவாகத் தக்கவைக்கப்பட்டது.

நிலையான கால அட்டவணை உள்ளதா

  • நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களுக்கு நிலையான கால அட்டவணை கிடையாது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் மூன்று முறை நாடாளுமன்றக் கூட்டத்தொடர்கள் நடத்தப் படுகின்றன. அவை நிதிநிலை (பட்ஜெட்), மழைக்கால, குளிர்காலக் கூட்டத்தொடர்கள். இதில் நிதிநிலைக் கூட்டத்தொடர் நீண்ட நாள்கள் நடைபெறுவது; அது ஜனவரி இறுதியில் தொடங்கி ஏப்ரல் இறுதிக்குள் முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலையில் தொடங்கி ஆகஸ்ட்டில் நிறைவடைகிறது. குளிர்காலக் கூட்டத்தொடர் பொதுவாக நவம்பர் முதல் டிசம்பர் வரை நடைபெறும்.

சிறப்புக் கூட்டத்தொடர் எப்போது நடத்தப்படுகிறது

  • சிறப்புக் கூட்டத்தொடர் என்கிற சொல், அரசமைப்புச் சட்டத்திலோ நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் விதிப் புத்தகங்களிலோ வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை. அத்தகைய சிறப்புக் கூட்டத்தொடரை எப்படி, எப்போது கூட்டலாம் என்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களும் அரசமைப்பில் இல்லை.
  • எனினும், நெருக்கடிநிலைப் பிரகடனத்தைக் கையாளும் சட்டக்கூறு 352, நாடாளுமன்ற அவையின் சிறப்புக் கூட்டத்தொடர் குறித்துக் குறிப்பிடுகிறது. மேலும், நாட்டின் நலனுக்காக நள்ளிரவுக் கூட்டத்தொடர் உள்பட பல சிறப்புக் கூட்டத்தொடர்கள் கூட்டப்படுகின்றன.

கடந்த காலங்கள்

  • 1947இல் சுதந்திர நாளன்று ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதைக் குறிக்கும் வகையில், நாட்டின் முதல் சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 1962இல் இந்திய-சீனப் போரின்போது சீன ஆக்கிரமிப்பு குறித்து விவாதிக்கச் சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற்றது.
  • சுதந்திரம் அடைந்து 25 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 1972இல், அன்றைய அரசு சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டியது. 1977இல், தமிழ்நாடு, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிப்பதற்காகவும் 1991இல் ஹரியாணாவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் அளிக்கவும் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டது.
  • ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் 50ஆம் ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், 1992இல் நள்ளிரவு சிறப்புக் கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், 1997 ஆகஸ்ட் மாதம் ஆறு நாள் சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற்றது. 2008இல், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து இடதுசாரிகள் வெளியேறியதை அடுத்து, மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்காகச் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டது.
  • சமீபத்திய ஆண்டுகளில் 2017 ஜூன் மாதத்தில் பாஜக தலைமையிலான அரசு, சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்த நாடாளுமன்றத்தில் நள்ளிரவுக் கூட்டத்தொடரைக் கூட்டியது. 2023 செப்டம்பர் 18 முதல் 22 வரை நடைபெற்ற கூட்டத்தொடர், பாஜக அரசு கூட்டிய இரண்டாவது சிறப்புக் கூட்டத்தொடர் ஆகும். இந்தக் கூட்டத்தொடர் கேள்வி நேரம், பூஜ்ய நேரம் இல்லாமல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories